ஐபிஎல் 2019: 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் - டெல்லி அணி வீழ்ந்த கதை

பட மூலாதாரம், Reuters
12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் திங்கள்கிழமையன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரெயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே. எல். ராகுல் மற்றும் கரண் ஆகிய இருவரும் தொடங்கம் முதலே அதிரடி பாணியை கடைபிடித்தனர்.
ராகுல் 15 ரன்களும், கரண் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இளமை வீரரான மாயங்க் அகர்வால் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடி வீரர் மில்லர் 30 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதுவே பஞ்சாப் அணிய வீரர்களில் அதிகபட்ச ரன்னாகும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் அதிர்ச்சியை சந்தித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பின்னர் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பொறுப்புடன் நிதானமாகவும், வாய்ப்பு கிடைக்கும்போது அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். ரிஷப் பந்த் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
16.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களுக்கு என்று வலுவாக இருந்த டெல்லி அணி அடுத்த 7 விக்கெட்டுகளை 8 ரன்களுக்கு இழந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
எளிதாக வென்று இருக்கவேண்டிய டெல்லி அணி 19.2 ஓவரில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை தோல்வியை சந்தித்தது.
ஆட்டத்தின் இறுதி தருணங்களில் பஞ்சாப் அணியின் சாம் கரண் ஹாட்ரிக் எடுத்தார். அவர் மொத்தம் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












