இலங்கையில் சிறிசேன முன்னிலையில் அழிக்கப்பட்ட 10,935 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கொகைன்

இலங்கையில் கடந்த மூன்று வருட காலங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 765 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய கொகைன் போதைப்பொருள் அழிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இந்த கொகைன் போதைப்பொருள் இன்று அழிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளே இன்று அழிக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
களனி - சபுகஸ்கந்த - கோனவல பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் திண்ம நிலையில் காணப்படும் கொகைன் போதைப்பொருள் இரசாயனம் சேர்க்கப்பட்டு, அவை திரவமாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, திரவமாக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு புத்தளத்திலுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவை அழிக்கப்படவுள்ளன.
சுமார் 1800 - 2000 செல்சியஸ் வெப்பநிலையில், இந்த கொகைன் போதைப்பொருள் அழிக்கப்படுவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டது.
இன்சி எக்கோ சைக்கிள் நிறுவனத்தினால் இந்த கொகைன் போதைப்பொருள் அழிக்கப்படுகின்றது.
நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட கொகைன் போதைப்பொருளே இன்று அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, அபாயகர ஓளடதங்கள் அதிகார சபை மற்றும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் ஆகியன இணைந்தே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இதற்கு முன்னர், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் தடவையாக 928 கிலோகிராம் கொகைன் போதைப்பொருள் இதேபோன்று அழிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், இலங்கையில் கைப்பற்றப்பட்ட ஏனைய கொகைன் போதைப்பொருளையும் அழிப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உறுதியளித்தார்.
இன்றைய தினம் அழிக்கப்பட்ட கொகைன் போதைப்பொருளின் பெறுமதி 10,935 மில்லியன் ரூபாய் என போலீஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தது.
இலங்கை போதைப்பொருள் வர்த்தகம்

இலங்கையில் இடம்பெறுகின்ற சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்திருந்தார்.
இதன்படி, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, போதைப்பொருள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டது.
இலங்கையின் சட்டவிரோத போதைப்பொருள் வரத்தகத்தின் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த மாகந்துரே மதுஷ், கஞ்சியானி இம்ரான் உள்ளிட்ட பலர் துபாயில் கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட 6 பேர் இலங்கைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்டனர்.
எனினும், முக்கிய சந்தேகநபராக தேடப்பட்டு வந்த மாகந்ரே மதுஷ் இதுவரை நாடு கடத்தப்படாத நிலையில், துபாயில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கான தண்டனை

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலங்களில் அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து, இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மரண தண்டனையை நிறைவேற்றும் நபர்களை (அலுகோசு) நியமிப்பதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலத்தை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












