ஐபிஎல் 2019: சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி - தோனியின் அதிரடி மற்றும் பிராவோ-தாஹீர் இணையின் அபாரம்

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
- பதவி, பிபிசி
கடந்த ஆண்டின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டை போலவே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அணியின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமுள்ள 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது.
பிராவோ வீசிய பரபரப்பான அந்த ஓவரின் முதல் பந்தை பென் ஸ்டோக்ஸ் தூக்கி அடிக்க, சுரேஷ் ரெய்னா அதனை லாவகமாக பிடித்தார்.

பட மூலாதாரம், ARUN SANKAR
உடனே போட்டி சென்னை அணியின் ஆதிக்கத்துக்கு வந்தது. புதிய பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் கோபாலால் அடுத்த பந்தில் ரன் எடுக்கமுடியவில்லை.
மூன்றாவது பந்தில் ஒரு லெக்-பை ரன் எடுக்கப்பட்டது. மீண்டும் ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த ஷ்ரேயாஸ் கோபால் இம்முறை தூக்கி அடிக்க இம்ரான் தாஹீர் அதனை பிடித்தார்.
இதன் மூலம் ஆட்டம் முற்றிலும் சென்னை அணியின் வசமானது.
ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேனான ஆர்ச்சர் 24 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் எடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹீர் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

பட மூலாதாரம், ARUN SANKAR
தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக, முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், பிராவோவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் துணையுடன் 46 பந்துகளில் தோனி 75 ரன்கள் எடுத்தார்.
பிற செய்திகள்:
- கோவை சிறுமி கொலை - "பாட்டி இறப்பை வைத்து நடித்த குற்றவாளி கைது"
- ஐபிஎல்: தோனி அதிரடி ஆட்டம் - ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு
- கொடுங்கையூர் குப்பைமேடு: 269 ஏக்கர், 2800 டன் - மலைக்க வைக்கும் கதை
- 'இந்தியாவில் கருத்துக்கணிப்பு செய்வதற்கு கடினமான மாநிலம் தமிழ்நாடு'
- விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் - வெளியான ரகசியம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












