மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?

தீப்தி சர்மா

பட மூலாதாரம், DEEPTI SHARMA

படக்குறிப்பு, தீப்தி சர்மா (கோப்புப்படம்)
    • எழுதியவர், மரிய மைக்கேல்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்குகிறது.

நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரோடு சேர்த்து நடத்தப்பட்ட மகளிர் உலகக் கோப்பை தொடர் முதல்முறையாக தனியாக மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்படுகிறது.

அணி கேப்டன் ஹர்மான்பிரீத்

பட மூலாதாரம், Facebook/Harmanpreet Kaur

படக்குறிப்பு, அணி கேப்டன் ஹர்மான்பிரீத்

கயானா நகரில் இன்று தொடங்கும் போட்டியில் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது.

50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் பெரிதாக இதுவரை சாதிக்கவில்லை.

இந்நிலையில், இன்று தொடங்குகின்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பற்றி பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட முன்னாள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சாந்தா ரங்கசாமி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நுழைந்ததால், இந்த போட்டியில் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

மகளிர் கிரிக்கெட்

பட மூலாதாரம், BCCI

அதேவேளையில், வீராங்கனைகளின் விளையாட்டு திறன்களும் அதிகரித்துள்ளன. நடப்பு சாம்பியனாக விளங்கும் மேற்கிந்திய தீவுகள் அணியை பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய மகளிர் கிரிகெட் அணி தோல்வியடைய செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளையும் சமீபத்தில் வென்றுள்ளனர். அதனால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

மித்தாலி, ஹர்மான்பிரீத், ஸ்மிரிதி, ஜெமிமா போன்ற வீராங்கனைகளால் இந்திய மகளிர் அணியின் பேட்டிங் சிறப்பாக இருப்பதால் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறலாம் என்கிறார் அவர்.

பூனம் ரவுர்

பட மூலாதாரம், POONAM RAUR

படக்குறிப்பு, பூனம் ரவுர்

இந்திய அணியின் டி20 போட்டியின் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் விளையாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்துபவர். தன்னுடைய வலுவான பேட்டிங் திறனாலும், தடுத்து, அடித்து ஆடுவதாலும் எதிர்தரப்பு பந்து வீச்சாளர்களின் பந்துகளை தும்சம் செய்யும் திறன் கொண்டவர் ஹர்மான்பிரீத் என்று சாந்தா கூறினார்.

சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவரது தருணங்கள் சற்று குறைவாக இருந்தாலும், மித்தாலி, ஸ்மிரிதி தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மித்தாலியின் அருமையான தலைமை பண்பும், பேட்டிங் அனுபவமும் இந்த போட்டிக்கும் சிறப்பு அம்சமாக இருக்கும். இந்த உலக கோப்பை ஆட்டங்களில் சிறந்த பங்களிப்பை அவர் வழங்குவார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

டி20 கிரிக்கெட்டில் வெற்றியை கணிப்பது சற்று கடினமானது. இந்த போட்டி நடத்தப்படும் வடிவமே இதற்கு காரணம். டி20 விளையாட்டு வரலாற்றில் இந்திய பெண்கள் அணி இதுவரை சிறப்பாக ஆடாவிட்டாலும், தற்போதைய இந்திய அணியின் திறன் மேம்பாட்டையும், இதில் உள்ள வீராங்கனைகளையும் பார்த்து வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சாந்தா கூறுகிறார்.

மகளிர் டி20 கிரிக்கெட் உலக கோப்பையை ஆடவர் டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியோடு சேர்த்து நடத்தாமல் இந்த ஆண்டு தனியாக நடத்துவதால் மகளிர் கிரிக்கெட் ஆட்டத்திற்கு அதிக கவனம் குவியும் என்கிறார் அவர்.

ஆடவர் கிரிக்கெட் போட்டிக்கு கிடைக்கும் பிரபலம் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு இதுவரை கிடைக்காத நிலையில், மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தனியாக நடத்தப்படுவது, அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று சாந்தா ரங்கசாமி தெரிவித்தார்.

இலங்கை
இலங்கை

சிறந்த தயாரிப்போடு இந்தியா இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. ஆனால், போட்டியின்போது காட்டப்படும் ஆட்டத்திறன்தான் மிகவும் முக்கியமானது. தென்னாப்பிரிக்க அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவோடு மோதும் நியூசிலாந்து சமீப காலமாக நன்றாகவே விளையாடி வருகிறது. ஆனால், இந்திய மகளிர் அணியின் திறனும் மேம்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பால்.

மகளிர் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

டி20 விளையாட்டு போட்டியில் சிறந்த வரலாறு இந்திய மகளிர் அணிக்கு இல்லாமல் இருந்தலும், இந்த முறை இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாகவே இருக்குமென நம்புவதாக தெரிவிக்கிறார் அவர்.

முன்பு அதிக பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுவதில்லை. இப்போது அதிக போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவங்களை பெற்றுள்ள வீராங்கனைகள் இந்திய அணியில் உள்ளனர்.

தேசிய அளவில் சிறப்பாக ஆடிவரும் ஹர்மான்பிரீத் மற்றும் ஸ்மிரிதி போன்ற வீராங்கனைகளால் இந்திய அணி சிறந்த பயிற்சியோடு இந்த போட்டிக்கு தயாராகியுள்ளதாக அவர் கூறினார்.

மித்தாலி சிறந்த தலைவர். அவர் பிறருக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறார். அவரது நீண்ட அனுபவம் அவருக்கு மட்டுமல்ல, பிறருக்கும் உதவும். இந்த போட்டியில் மித்தாலி விளையாடுவது இந்திய அணிக்கு மிக முக்கியமாக அமைகிறது என்று விஜய் லோக்பால் தெரிவித்தார்.

பூனம் ரவுர்

பட மூலாதாரம், POONAM RAUT

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி ஆண்களின் போட்டியோடு நடத்தப்பட்டால் பெரியதாக எடுத்துகொள்ளப்படுவதில்லை. அதிக ரசிகர்களை கவர முடியவதில்லை. தனியாக இந்த போட்டி நடைபெறுவதால் அவர்களுக்கு என்று ஓர் அடையாளம் கிடைக்கிறது. மகளிர் கிரிக்கெட் அணியின் பிரபலம் வளர்ந்து ரசிகர்கள் அதிகம் வருகிறார்கள்.

எனவே, மகளிர் கிரிக்கெட்டை தனிப்பட்டதொரு விளையாட்டுப் போட்டியாக உருவாக்க எண்ணி இப்போது தனியாக நடத்துகிறார்கள். மகளிர் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்கள் உருவாக இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான சுமதி ஐயரிடம் கருத்து கேட்டபோது, 2017 ஒரு நாள் உலக கோப்பையில் இறுதி வரை சென்று தோல்வியடைந்ததில் இருந்து அதிக பாடங்களை இந்திய வீராங்கனைகள் கற்றிருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்து கவனத்தை ஒருமுகப்படுத்தி விளையாட வேண்டுமென உணர்ந்திருக்கிறார்கள். எனவே வெற்றிபெறும் நேர்மறை நம்பிக்கையோடு சென்றிருக்கிறார்கள். இந்தியர்களின் ஆதரவு இதனை சாதிக்க அவர்களுக்கு உதவும் என்று கூறினார்.

பிரான் வில்சன்

பட மூலாதாரம், Reuters

அணியிலுள்ள வீராங்கனைகள் அனைவரும் இணைந்து அளிக்கும் பங்களிப்புதான் இந்த போட்டியில் ஆட்டத்திறனை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

மூத்த மற்றும் இளைய வீராங்கனைகள் இணைந்து சிறந்த அணியாக உருவாகியுள்ளனர் என்றார் அவர்.

கடைசியாக நடைபெற்ற 3 தொடர்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் மகளிர் உலக கோப்பையையும், 2009ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையும் வெற்றி பெற்ற இங்கிலாந்து இப்போதும் வெற்றியைச் சுவைக்கும் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது.

10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

வாழ்நாள் சாதனையாளர் - சாந்தா ரங்கசாமி

பட மூலாதாரம், SHANTHA RANGASWAMY/FACEBOOK

படக்குறிப்பு, பிசிசிஐ வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற முதல் வீராங்கனை சாந்தா ரங்கசாமி.

ஏ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்க தேசம் ஆகியவை இடம் பெறுகின்றன.

பி பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: