பரபரப்பு செய்திகளுக்கு இடையில் இந்த 5 இந்திய சாதனையாளர்களை கவனித்தீர்களா?

கிரிக்கெட் மீது பித்துப்பிடித்து அலையும் தேசம் இந்தியா. மற்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் சாதிப்பது மிக அரிது என்பது பொதுவானதொரு கருத்தாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் மீதும் கவனம் குவிந்திருக்கிறது; இந்தியர்கள் சாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

எங்கே ஆதாரம் என்கிறீர்களா? பொறுமையாக இந்த கட்டுரையை படியுங்கள். ஜகாட்டாவில் நடந்துவரும் 2018 ஆசிய கோப்பை போட்டிகளில் தடகளத்தில் இந்திய வீரர்கள் சாதித்து வருகிறார்கள். விளையாட்டுகளுக்கான எழுத்தாளர் சுப்ரிதா தாஸ் அவர்களில் ஐந்து பேரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வப்னா பர்மன்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஸ்வப்னா பர்மன்

ஸ்வப்னா பர்மன், ஹெப்டத்லான்

ஸ்வப்னாவுக்கு வயது 21 தான். ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய மங்கை இவர். மிக கடினமான விளையாட்டு பிரிவு இது. ஹெப்டத்லானில் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என ஏழு விதமான சவால்களை முடித்து காட்ட வேண்டும்.

இத்தனை சவால்களோடு கடுமையான பல்வலியோடு சாதித்துக்காட்டிதான் தங்கம் வென்றிருக்கிறார் ஸ்வப்னா. வலியை குறைப்பதற்காக தாடையில் வலுவாக பிளாஸ்திரி பட்டை போடப்பட்ட நிலையில்தான் ஆசிய விளையாட்டுகளுக்கான விளையாட்டரங்கில் இவர் நுழைந்தார்.

இடுக்கண்ணால் கடுமையாக பாதிப்புக்குள்ளானவர் ஸ்வப்னா. இரண்டு பாதங்களிலும் ஆறு விரல்களோடு பிறந்தவர். மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் ரிக்ஷா ஓட்டுநரின் மகளாக பிறந்த ஸ்வப்னாவுக்கு அவரது தாய் தந்தையரால் நாளொன்றுக்கு இரண்டு வேலை உணவளிக்குமளவுக்கு வருவாய் இல்லை. இந்நிலையில், அப்பெண்ணின் தடகள வாழ்க்கைக்கு பெற்றோர்கள் தேவையான நிதி தருவது சாத்தியமே இல்லாதவொன்றாகவே இருந்துவந்தது.

ஷூ அணியும்போது மிகவும் சிரமப்படுவார். ஐந்து விரல்களுக்கானதாகத் தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஹெப்டத்லான் விளையாட்டை பொருத்தவரையில் வீரருக்கு கடுமையான சூழலை தாங்கும் வண்ணம் உடல்உறுதி வேண்டும். வலுவான ஓட்டத்திறன், நன்றாக எறியும் திறன், தாண்டும் திறன்கள் வேண்டும்.

ஸ்வப்னா பர்மனுக்கு ஒவ்வொருமுறை உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் கலந்து கொள்ளும்போதும் பாதத்தில் கடுமையான வலி ஏற்படும். இவை தடகள வீரரின் வேகத்தை பாதிக்கும். ஆனால் ஸ்வப்னா முயற்சியை கைவிடவில்லை. ஆசிய விளையாட்டில் அவர் தங்கம் வென்ற விதம் நாடு முழுவதும் புகழ் சேர்த்துள்ளது. நிறைய பேரிடம் இருந்து இனி நிதி உதவி கிடைக்கும் எனும் நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் இனியாவது அவருக்கான பாதத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படும் ஷூவை அவர் அணியமுடியும்.

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார் நீரஜ். கடந்த 2016-ல் போலந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில் இருந்து அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். திறன் பேசி வழியாகத்தான் ஈட்டி எறிதல் காணொளிகளை பார்த்து எப்படி ஈட்டி ஏறிய வேண்டும் என்பதை கற்றுக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் அவர் பெரும்பாதையை கடந்து வந்திருக்கிறார்.

முன்பெல்லாம் தனது பயிற்சி வகுப்புக்குச் செல்வதற்கு மலிவான விலையை கொண்டிருக்கும் பயணச் சீட்டு எது என்பதை தேடிக்கண்டுபிடித்து அப்பேருந்துகளில் பயணம் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போது உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்கிறார்.

முன்னதாக சைவ உணவு மட்டுமே உண்டு வந்த நீரஜ், வேண்டுமென்றே கோழிக்கறி உண்ணத் துவங்கினார். அதற்கு காரணம், அவரது உடலுக்கு அதிக புரதச் சத்து தேவைப்படுகிறது.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அவர் செல்வார். தடகளத்தில் வேறு எந்த இந்திய வீரரும் ஒலிம்பிக் பதக்கம் வென்றதில்லை. நீண்ட கால எதிர்பார்ப்பை சோப்ரா பூர்த்தி செய்யக்கூடும்.

டூட்டி சந்த்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, டூட்டி சந்த்

டூட்டி சந்த்

நூறு மீட்டர் மற்றும் இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டிலும் வெள்ளி வென்றுள்ளார்.

தனது தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும் கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கநினைத்த ஒரு விஷயத்தில் இருந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்தநிலையில் இந்த வெற்றியைச் சுவைத்திருக்கிறார் டூட்டி சந்த்.

2014 காமன்வெல்த் போட்டிகள் நடப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஹார்மோன் பரிசோதனையில் அவர் தோல்வியுற்றதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வழக்கு தொடர்ந்தார். தடகளத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு இயல்பாகவே டெஸ்டோஸ்டீரோன் அதிகம் இருக்கும்நிலையில் பாலின பரிசோதனை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஒரிசாவில் நெசவாளர்கள் குடும்பத்தில் பிறந்த இப்பெண், கடந்த நான்கு வருடங்களாக விளையாட்டு வீரர்களுக்கான பரிசோதனை குறித்த விவாதம் எழும்போதெல்லாம் மையப்புள்ளியாக இருந்தார்.

இவர் ஒரு பெண்ணாக கருதப்படாததால் 2014-ல் அவர் பெண்கள் பிரிவில் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை ஆனால் தற்போது இந்தோனீஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டில் தோட்டா போல ஒடிய டூட்டி சந்த், தேசிய அளவைத் தாண்டியும் பல சாதனைகளை படைத்துள்ளார்.

ஷர்துல் விஹான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷர்துல் விஹான்

ஷர்துல் விஹான் மற்றும் சௌரப் சவுதாரி, துப்பாக்கிச் சுடுதல்

ஷர்துல் விகான் மது அருந்தவோ, சுயமாக சாலையில் வாகனம் ஓட்டவோ,வாகனம் ஓட்டுவதற்கோ தேவையான வயதை எட்டவில்லை.

அவருக்கு வயது 15. ஆனால் அவரை விட இரண்டு மடங்கு அதிக வயது கொண்ட அனுபவம் வாய்ந்த வீரர்களை வென்று வருகிறார்.

துப்பாக்கிசுடுதலில் ஆண்கள் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள அவரது கிராமத்தில் உலகத்தர வசதிகள் இல்லை. பெரும்பாலான நாட்களில் காலை நான்கு மணிக்கு எழுந்துவிடுவார்.

அவரது கிராமத்திலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள டெல்லிக்கு பயணம் செய்துதான் தனது பயிற்சியாளரிடம் சென்று பயிற்சி எடுத்துவந்தார்.

தனது நேரத்தை பயிற்சி எடுத்துக்கொள்வதற்கும், பள்ளிக்குச் செல்வதற்கும், தனது தந்தைக்கு வயல் வேலையில் உதவுவதற்கும் பிரித்துக்கொண்டார்.

சௌரப் சவுதாரி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சௌரப் சவுதாரி

பதினாறு வயதாகும் சௌரப் சவுதாரியின் கதை சற்றே வித்தியாசமானது. அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார். அவர் துப்பாக்கிசுடுதலில் பங்கேற்க துவங்கியபோது போதுமான வசதிகள் இல்லை.

பின்பு அவரது குடும்பம் வீட்டுக்குள்ளேயே அவர் பயிற்சி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தது. வீட்டில் இலக்கின் சுற்றுப்புற சுவர்கள் கடுமையாக சேதாரமடைந்தன. ஆனால் சௌரப்பின் திறன்களை போட்டிகளில் பார்த்தபிறகு அவரது பெற்றோர்கள் குறை ஏதும் சொல்லவில்லை.

காணொளிக் குறிப்பு, பதக்கம் வென்று தந்த 'வூசூ': தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

இவ்விரண்டு பேரிடமும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறுதிப் போட்டிக்கு முந்தைய தினம் ''படுக்கைக்கு சீக்கிரம் சென்றுவிடு மேலும் வீடியோ கேம்ஸ் பக்கமே போகாதே '' என பயிற்சியாளர் விகாஸிடம் கூறியுள்ளார். 15 வயது விகாஸ் துப்பாக்கி சுடுதல் அணியின் 'டார்லிங்'. இவரது கன்னத்தை இழுத்து விளையாடுவது அவர்களுக்கு பிடித்தமானது.

மற்றொரு பக்கம் சவுதாரி ஒரு துறவி போல இருப்பார். கைப்பேசிகளை அவர் பெரும்பாலான நேரங்களில் புறம் தள்ளுவார். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரரானதன் பிறகு பதக்க மேடையில் அவர் சிறு சிரிப்பை மட்டுமே உதிர்த்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :