பி.வி.சிந்து : ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக உயர்ந்தது எப்படி?
அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை குறித்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் இருப்பது உங்களுக்கு எந்தவித ஆச்சர்யத்தையும் அளிக்காமல் இருக்கலாம். ஆனால் இப்பட்டியலில் ஏழாவதாக இடம்பிடித்துள்ள பெண் யார் என கவனித்தீர்களா? அவர் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவைச் சேர்ந்த புசர்லா வெங்கட சிந்து 23 வயது பேட்மின்டன் வீராங்கனை. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர். கடந்த வருடம் அவர் பேட்மின்டன் களத்தில் விளையாடி அதன் மூலம் சம்பாதித்தது சுமார் ஐந்து லட்சம் டாலர்கள் (சுமார் 3.48 கோடி ருபாய்). ஆனால் விளம்பரங்கள் மூலம் சிந்து சம்பாதித்த தொகை சுமார் 80 லட்சம் டாலர்கள் (சுமார் 55.82 கோடி ரூபாய்) அதாவது வார வருவாய் சுமார் 1,63,000 டாலர்கள்.
தற்போதைய நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையும், 2015 அமெரிக்க ஓபனில் டாப் சீடிங்கில்(seed) இருப்பவருமான சிமோனா ஹலீப்பை விட சிந்து சம்பாதிக்கும் தொகை அதிகமாகும்.

விளையாட்டை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் சிந்து. அவரது பெற்றோர் தேசிய அளவில் கூடைப்பந்து விளையாடியவர்கள். ஆனால் சிந்து தனது ஆறாவது வயதிலேயே பேட்மின்டன் மட்டையை பிடித்தார். 2001-ல் அனைத்து இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டைட்டில் வென்ற புல்லேலா கோபிசந்த் சிந்துவை சிறுவயதில் ஈர்த்தவர்.
2016 ஒலிம்பிக்கில் அவரது வாழ்க்கை மாறியது. ஒலிம்பிக்கில் கடைசி 16 சுற்றில் சைனீஸ் தைபய் வீராங்கனை தை ட்சு-யிங்கை வென்றார். காலிறுதியில் சீனாவின் வாங் இஹானை ஜெயித்தார். அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஓகுஹாராவை தோற்கடித்தார்.
ஆனால் இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா மரினிடம் தோற்றார்.
சிந்துவின் வணிக விருப்பங்களை கவனித்துக் கொள்ளும் பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துஹின் மிஸ்ரா 2017-ல் சிஎன்பிசி நிறுவனத்துக்கு கொடுத்த ஒரு பேட்டியில், ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நாங்கள் ஸ்பான்சர் செய்பவர்களை அணுகியபோது ''யார் சிந்து ?'' என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்வோம். நிறுவனங்களை பொறுத்தவரையில் அவர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் இணையவே விரும்புவர்'' என கூறியிருந்தார்.
இந்தியா இதுவரை ஒட்டுமொத்தமாக 28 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. அதில் ஐந்தை வீராங்கனைகள் வென்றனர். எந்தவொரு இந்திய வீராங்கனையும் இதுவரை தங்கம் வென்றதில்லை. வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்துதான்.

பட மூலாதாரம், Narendra Modi
அவர் இந்தியாவுக்குத் திரும்பியதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து பரிசுகளை பெற்றார். இதன் மதிப்பு சுமார் 13 கோடி. அதே சமயம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மரின் தனது சாதனைக்காக ஸ்பெயின் அரசிடம் இருந்து 70 லட்சம் பரிசு பெற்றிருந்தார்.
சிந்துவுக்கு ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா அரசுகள் குறிப்பிட்ட அளவு நிலத்தை பரிசாக வழங்கின. ஐதராபாத் பேட்மின்டன் அமைப்பு தந்த பிஎம்டபிள்யு காரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

பட மூலாதாரம், Sachin Tendulkar
அதன்பிறகு, சிந்துவுடன் இணைய பல்வேறு நிறுவனங்கள் வரிசைகட்டி நின்றன. விராட் கோலியை தவிர, பல இந்திய கிரிக்கெட் வீரர்களை விடவும் அவரது விளம்பர வருவாய் அதிகரித்தது .
பிரிட்ஜெஸ்டோன் டயர்ஸ், கடோரடே, வலி நிவாரணி மருந்து மூவ், ஆன்லைன் பேஷன் ஸ்டோரான மிந்த்ரா, நோக்கியா, பேனாசோனிக், தேன் தயாரிப்பாளர் ஏபிஐஎஸ் ஹிமாலயா, மூலிகை சத்து பான நிறுவனம், பேங்க் ஆஃப் பரோடா போன்ற நிறுவனங்கள் சிந்துவுடன் கை கோர்த்தன. மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் விசாக் ஸ்டீல் ஆகியவற்றுக்கு விளம்பரத் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு புகழ் பரவியது பல்வேறு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அவருக்கு பிரம்மாண்டமான வெற்றி கிடைத்தபோதிலும் அவரது பணிவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
விளையாட்டிலும் அவரது வெற்றி தொடர்ந்தது. 2017 மற்றும் 2018 உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவில் நடந்த 2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் அவர் வெள்ளி வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தங்கம் வெல்ல உதவினார்.
தற்போது ஆசிய போட்டிகளில் விளையாடி வருகிறார். கடைசியாக ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் 1982-ல் ஆண்களுக்கான தனிப்பிரிவில் சையத் மோடி வெண்கலம் வென்றிருந்தார். சிந்து இம்முறை பதக்கம் வென்றால், ஆசிய விளையாட்டில் பேட்மின்டன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெறுவார்.
அவர் சாதிக்கும் பட்சத்தில், வணிகச் சந்தையில் விளம்பர மதிப்பு இன்னும் எகிறும், இன்னும் பல்வேறு நிறுவனங்கள் விளம்பரத்துக்காக அணுகுவார்கள். இதன் விளைவாக ஃபோர்ப்ஸ் பட்டியல் 2019-ல் அவர் இன்னும் சில இடங்கள் முன்னேறிச் செல்லக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












