ஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்: விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள் உருக்கம்!

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்

பட மூலாதாரம், Getty Images

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வீரியமடைந்துள்ள நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

காவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பகுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை உலக பிரபலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டங்களை நடத்தினர்.

முதலில் பத்து, இருபது பேருடன் தொடங்கிய போராட்டம் நேரம் செல்ல செல்ல வீரியமடைந்தது. பல சோதனைகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தின் உள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும், மைதானத்தின் உள்ளேயும் சில போராட்டங்கள் நடந்தன.

பல்வேறு கட்சியினர்களின் கோஷங்கள் அந்தப் பகுதியில் எதிரொலித்து கொண்டிருந்த போது, ஐ.பி.எல் மேட்ச்சை காண மஞ்சள் நிற ஜெர்ஸியில் வந்த ரசிகர்களும் தாக்கப்பட்டனர். சில ரசிகர்களின் மஞ்சள் நிற ஜெர்ஸியை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றினர். அவர்கள் போலீஸிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்

பட மூலாதாரம், Saravanan Hari

போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் மைதானத்திற்குள் ஷூ வீசப்பட பதற்றம் அதிகரித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் சி.எஸ்.கே அணி திரில் வெற்றியை பெற்றது. இச்சூழலில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளை புனேவுக்கு பிசிசிஐ நிர்வாகம் மாற்றியுள்ளது.

இந்த மாற்றம் குறித்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் பல வீரர்கள் தங்கள் ஆதங்கங்களை ட்விட்டரில் கொட்டித் தீர்த்துள்ளனர்.

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்

பட மூலாதாரம், Harbhajan Turbanator

சேப்பாக்கத்திலிருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்ற முடிவு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், தாக்குதலுக்குள்ளான ரசிகர் விரைவில் குணம்பெற்று அனைத்து பிரச்சனைகளும் தீர்வை எட்டவேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்கஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் விளையாட முடியாமல் போனதால் மனம் உடைந்தது என்று கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும் நேசமும் துளியும் குறையாது என்றும், மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்றும் உருக்கமாக பதிந்துள்ளார்.

சென்னையிலிருந்து விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள்; ட்விட்டரில் உருக்கம்

பட மூலாதாரம், Russell

படக்குறிப்பு, விமான நிலையத்தில் டோனி மற்றும் அவரது குடும்பத்தினர்

ஆதரவு அளித்ததற்காக சி.எஸ்.கே ரசிகர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ள மைக் ஹஸி, பிற போட்டிகளை சென்னையை விட்டு ஆட வேண்டும் என்பது கஷ்டமாக இருப்பதாகவும், தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதி மற்றும் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபெளெம்பிங், ''இன்று சென்னையைவிட்டு செல்வது வருத்தமளிக்கிறது. மீண்டும் சென்னைக்காக விளையாடியதும், தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் அன்பு மற்றும் பாசத்தை மீண்டும் அனுபவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிய வேண்டும்.'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தஹிர், சென்னையைவிட்டு செல்வது வருத்தமளிக்கிறது என்றும், அடுத்த ஆண்டு வரும்போது பிரச்சனைகள் முடிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னா

பட மூலாதாரம், Chennai Super Kings

படக்குறிப்பு, புனே விமான நிலையத்தில் சுரேஷ் ரெய்னா

தனது வருத்தங்களை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், கடைசியாக நடைபெற்ற போட்டியின் சூழல் அபாரமாக இருந்ததாகவும், தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் விரைவாக தீர்வை எட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் விளையாட இருந்த தருணங்களை நிச்சயம் தவறவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, சி.எஸ்.கே ரசிகர்கள் எப்போது எங்கள் இதயத்தில் இருக்கிறார்கள் என்றும், தற்போது புனேவுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: