பெண்களுக்கான ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் - 9 ருசிகர தகவல்கள்
- எழுதியவர், ஆதேஷ் குமார் குப்தா
- பதவி, பிபிசி, ஹிந்தி
ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் துவங்கியிருக்கிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் இந்தியாவும் மோதுகின்றன. இன்னொரு ஆட்டத்தில் இலங்கையுடன் நியுஜிலாந்து மோதுகிறது. இந் நிலையில், பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்த 9 ருசிகர தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், POONAM RAUR
1. ஆண்கள் உலகக்கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மகளிர் உலகக் கோப்பை விளையாடப்பட்டது. இது 1973-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது. 1975- ஆம் ஆண்டில்தான் ஆண்களுக்கான உலகக் கோப்பை இங்கிலாந்தில் விளையாடப்பட்டது.
2.1973-ல் வெளியேற்றும் சுற்றுகள் எதுவும் இல்லை. தொடரில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து அணி ஆறில் ஐந்து போட்டிகளில் வென்றது. இந்திய அணி பெண்களுக்கான முதல் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கவில்லை.
3.இரண்டாவது பெண்களுக்கான உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது . இது ஒரு ருசிகரமான செய்தி. ஏனெனில் இந்தியா ஆண்களுக்கான உலகக்கோப்பையை 1987-ல்தான் நடத்தியது.

பட மூலாதாரம், DEEPTI SHARMA
4.1982-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிக்கி பேர்ட் நடுவராக இருந்தார். இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு உலகக்கோப்பை இறுதியாட்டங்களிலும் நடுவராக செயல்பட்ட முதல் நடுவரானார்.
5.ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க், ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்த சாதனைக்குச் சொந்தக்காரர். அவர், இந்தியாவில் 1997-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 229 ஓட்டங்கள் எடுத்தார்.
6. ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் பெலிண்டா கிளார்க் இரட்டை சதமடித்தார். ஆண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடித்த முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் அவர் 200 ஓட்டங்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், POONAM RAUT
7. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணியாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 1997-ல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலியா 412 ஓட்டங்கள் எடுத்தது.
8.பெண்களுக்கான உலகக்கோப்பை போட்டியில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணியாக பாகிஸ்தான் உள்ளது. 1997 உலகக்கோப்பைப் போட்டியில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெறும் 27 ஓட்டங்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.
9.இதுவரை ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 3 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் பெண்களுக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












