ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்?
பாரீஸ் நகரில் ஞாயிறுக்கிழமை நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ஸ்டான் வாவ்ரின்காவை தோற்கடித்து ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters
2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வென்ற 15-ஆவது பட்டம் இதுவாகும். அசாத்திய சாதனை புரிந்த நடாலின் சில சிறப்பம்சங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
- 2014-ஆம் ஆண்டில் நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம்தான் நடால் வென்ற கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதன் பிறகு சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, தனது இருப்பை நடால் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
- தனது 17-ஆவது வயதில், அதாவது 2003-ஆம் ஆண்டிலேயே காயம் காரணமாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து பங்கேற்காமல் விலகினார். மீண்டுமொரு முறை அவரால் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அனைத்து கேள்விகளையும் தகர்த்து இன்று 10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று நடால் சாதனை படைத்துள்ளார்.
- தனது சகவீரர்களான பெடரர், ஜோகோவிச் போன்றவர்களை போல் சிறந்த 'சர்வ்' போடும் திறமை நடாலுக்கு இல்லையெனினும், ஓவ்வொரு பாயிண்டுக்கும் நடால் செலவழிக்கும் அசாத்திய உழைப்பு அவரது எதிராளிகளையும் வியக்க வைத்துள்ளது.
- க்ளே கோர்ட் என்றழைக்கப்படும் களிமண் தரையில் நடாலின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். அதனால் அவர் 'க்ளே கிங்' என்றழைக்கப்படுகிறார்.
- 18-ஆவது வயதில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நடால், 31-ஆவது வயதில் 15-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
- நடாலின் சக வீரர்கள் பலர், முன்னாள் முன்னணி டென்னிஸ் வீரர்களை தங்களின் பயிற்சியாளர்களாக நியமிப்பதில் ஆர்வம் காட்டினர். அதற்காக ஏரளாமான நேரம், பணம் செலவழிக்கவும் தயாராக இருந்தனர். ஆனால், தனது மாமாவையே பயிற்சியாளராக பல ஆண்டுகள் நடால் கொண்டிருந்தார்.
- 'ஓவ்வொரு பாயிண்ட்டும் முக்கியம். ஓவ்வொரு போட்டியும் முக்கியம். அதே போல், ஓவ்வொரு எதிராளியும் முக்கியமானவர், பலமானவர்' - இதுவே நடாலின் தாரக மந்திரம். நடால் எப்போதும் தனது சகவீரர்களை, அவர்கள் தரவரிசையில் பெற்றுள்ள இடத்தை வைத்தோ, அவர்களின் முந்தைய வெற்றிகளை கொண்டோ எடை போடாமல், ஓவ்வொரு வீரரையும் மதிப்புமிக்கவராகவே கருதி எதிர்கொள்வார்.
- ஏரளாமான காயங்கள், எண்ணற்ற மாதங்கள் நடால் விளையாடவில்லை. இனி நடால் அவ்வளவுதான்; முடிந்துவிட்டது அவரது விளையாட்டு சகாப்தம் என்று எண்ணற்ற முறைகள் விமர்சர்களால் முடித்து வைக்கப்பட்ட நடாலின் கதை மீண்டும் அவரது போராட்ட குணத்தால் தொடர் கதையாகி உள்ளது.
- 15-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் வென்றுள்ளார். பீட் சாம்ப்ராஸ் மற்றும் ரோஸ்வால் போன்ற ஒரு சில வீரர்களே நடாலை போல் தங்களது டீன் பருவம், 20 மற்றும் 30 வயதுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், EPA
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












