பரபரப்பான 1 ரன் வெற்றி: மும்பை அணிக்கு ஐபிஎல் கோப்பை சாத்தியமானது எப்படி?
ஐதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமைநடந்த 10-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 1 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை வென்றது.

பட மூலாதாரம், TWITTER/MUMBAI INDIANS
மும்பை அணியை சேர்ந்த குர்னால் பாண்ட்யா 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற பெரிதும் உதவினார்.
தான் ஆட்டநாயகனாக தேந்தெடுக்கப்பட்டது குறித்து குர்னால் பாண்ட்யா கூறுகையில், ''இறுதியாட்டத்தில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு கனவு. எதிர்பாராத இந்த கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டார்.
மும்பை அணியில் பல அனுபவம் மிகுந்த வீரர்கள் இருந்த போதிலும், குர்னால் பாண்ட்யாவின் பேட்டிங் மற்றும் நிதானம் மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தது.

பட மூலாதாரம், TWITTER/MUMBAI INDIANS
இறுதியாட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 41 ரன்களை மட்டும் இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது, குர்னால் பாண்ட்யா பேட்டிங் செய்ய களத்தில் நுழைந்தார். அடுத்த 38 ரன்களை சேர்ப்பதற்க்குள் மும்பை அணி மேலும் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
ஆனால், இறுதி பந்து வரை களத்தில் இருந்த குர்னால் பாண்ட்யா 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி மும்பை அணி 129 ரன்கள் எடுக்க பெரிதும் உதவினார்.
இதே போல், மும்பை அணி பந்துவீசும்போது அந்த அணியின் ஜஸ்ப்ரீத் பூம்ரா மற்றும் மிட்சைல் ஜான்ஸன் ஆகியோரின் பங்கு அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தது.

பட மூலாதாரம், TWITTER/MUMABI INDIANS
சிக்கனமாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பூம்ரா இரண்டு விக்கெட்டுக்களை எடுக்க, மிகவும் பரபரப்பான இறுதி ஓவரை நேர்த்தியாக வீசிய அனுபவம் மிகுந்த மிட்சைல் ஜான்ஸன் மூன்று விக்கெட்டுக்களை எடுத்தார்.
தான் பேட்டிங் செய்யும் போது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ராயுடு புனே அணியின் கேப்டன் ஸ்மித் அடித்த பந்தை அற்புதமாக பிடித்ததால், 51 ரன்களை எடுத்த ஸ்மித் ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஆட்டத்தின் போக்கே மாறியது.

பட மூலாதாரம், TWITTER/MUMABI INDIANS
பின் வரிசை வீரர்கள் சரிவர ஆடாததால், புனே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மும்பை அணி, 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இது தொடர்பான செய்திகள்:
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












