உலக மலேரியா தினம்: கொடிய நோய்க்கு எதிரான போராட்டத்தை காலநிலை மாற்றம் மட்டுப்படுத்துகிறதா?

கானாவில் உள்ள ஒரு குழந்தைக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கானாவில் உள்ள ஒரு குழந்தைக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240 மில்லியனாக இருக்கிறது. இது 60 நாடுகளில், 4 லட்சம் பேருக்கு மேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இன்று (ஏப்ரல் 25) உலக மலேரியா தினம். உலகம் முழுவதும் இந்த நோயில் இருந்து விடுபட கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் ஏற்படுத்துகிறது.

உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்த மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி, இந்த போராட்டத்தை எதிர்கொள்ள உதவியது. ஆனால், காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் காரணமாக, இந்த கொடிய நோய் இதுவரை பாதிக்காத புதிய பகுதிகளிலும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது.

பரவும் கொடிய நோய்

"வெப்பநிலை அதிகரிப்பு, நோயை உண்டாக்கும் மலேரியா ஒட்டுண்ணியைச் சுமக்கும் கொசுக்களின் திறனை அதிகரிக்கிறது," என்கிறார் வெல்கம் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தில் அறிவியலுக்கான தொழில்நுட்ப மேலாளரான டாக்டர் இசபெல் பிளெட்சர்.

"உலகின் பல பகுதிகளை மலேரியாவை பரப்பும் கொசுக்களுக்கு மிகவும் பொருத்தமானதாக காலநிலை மாற்றம் உருவாக்க போகிறது. உலகம் வெப்பமடைவதால், மலேரியா புதிய மலைப்பகுதிகளுக்கு பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இத்தகைய மலைப்பகுதிகள், மலேரியா பரவுவதற்கு மிகவும் குளிரான பகுதிகளாக இருக்கலாம்," என்று அவர் எச்சரிக்கிறார்.

ஐ.நாவின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC- Intergovernmental Panel on Climate Change) கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை அரசுகள் செயல்படுத்திய கார்பனைக் குறைக்கும் கொள்கைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும், இந்த நூற்றாண்டில் உலகம் அப்போதும் 3.2 செல்சியஸ் வெப்பமாகவே இருக்கும். கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் வெப்பநிலை அதிகரிப்பை, 1.5 செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக வைத்திருப்பதே உலகளாவிய நோக்கமாகும்.

தோல் மஞ்சள் நிறமாக மாறுவதும் மலேரியாவின் அறிகுறியே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தோல் மஞ்சள் நிறமாக மாறுவதும் மலேரியாவின் அறிகுறியே

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், இந்த நோய் பரவாத இடங்களில்கூட, மழைப்பொழிவு, ஈரப்பதம் மற்றும் வறட்சி நிலை காரணமாக மலேரியாவை பரப்பும் கொசுக்களின் வளர்ச்சி விரைவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

"கரீபியன் நாடுகளிலும் பிரேசிலிலும் வறட்சிக் காலத்தில், மக்கள் அதிகமாக தண்ணீரை சேமித்து வைப்பார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அது கொசுக்களுக்கு ஒரு நல்ல வாழ்விடத்தை உருவாக்குகிறது. அதனால்தான் வறட்சியான சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவக்கூடும்," என்று டாக்டர் பிளெட்சர் கூறுகிறார்.

டெங்கு காய்ச்சல் இவ்வாறு தாக்கும் எனில், மலேரியாவும் இத்தகைய சூழ்நிலையில் தாக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, சில பகுதிகளில் சூழ்நிலை சரியாக இருக்கும் பட்சத்தில், மலேரியா பரவுவதைக் குறைக்கலாம். வெப்பநிலை மாறுதல் மூலம் ஏற்படும் தாக்கத்தை பற்றி ஆழ்ந்து புரிந்து கொள்வது, இந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் முக்கியம் என்று டாக்டர் பிளெட்சர் கருதுகிறார்.

"எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்து குறித்து சிந்திப்பதன் மூலம், பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் மக்களை நாம் அடையாளம் காண முடியும். அதற்கேற்ப நாம் இடையூறுகளை குறிவைக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

line

மலேரியாவின் அறிகுறிகள் என்ன?

மலேரியா என்பது கொசுக்களால் பரவும் ஒரு தீவிர நோய் தொற்று. இது விரைவாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணம் கூட ஏற்படலாம்.

அதன் அறிகுறிகள்:

  • உடல் வெப்பநிலை அதிகரிப்பு, வியர்வை மற்றும் குளிர்
  • தலைவலி மற்றும் குழப்பமான மனநிலை
  • மிகவும் சோர்வாகவும் தூக்க கலக்கமாகவும் உணர்வது (குறிப்பாக குழந்தைகளுக்கு)
  • உடல்நிலை சரியில்லாமல் உணர்வது, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு
  • பசியின்மை
  • தசை வலி
  • கண்களில் உள்ள வெள்ளை பகுதி அல்லது தோல் மஞ்சள் நிறமாக மாறுவது
  • தொண்டை புண், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுவது

ஆதாரம்: என்.ஹெச்.எஸ்

line

தடுப்பூசிகள் மூலம் கிடைத்த வெற்றி

ஆனால், காலநிலை மாற்றம் மலேரியாவிற்கு எதிரான போராட்டத்தை சிக்கலாக்கி அச்சுறுத்துவதால், நோய்க்கு எதிராக புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இப்போது உலகின் முதல் மலேரியா தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்கள் செலுத்தி கொண்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஐ.நா அமைப்பின் ஒருங்கிணைந்த சோதனைத் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

2019 ஆம் ஆண்டு மலாவி அரசு முதன்முதலில் தொடங்கப்பட்ட மலேரியா தடுப்பூசி சோதனை திட்டம், ஆர்.டி.எஸ், எஸ்/ஏஎஸ்01 (ஆர்டிஎஸ், எஸ்) RTS,S/AS01 (RTS,S) தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், அதனை வழங்குவது சாத்தியமானது எனவும் காட்டியது. மேலும், இது தீவிரமான மலேரியாவை கணிசமாகக் குறைக்கிறது என்பதையும் காட்டுகிறது.

இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் தான், மிதமான மற்றும் அதிக மலேரியா பரவும் சஹாரா கீழ்மை ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளிலும், தடுப்பூசிகளின் பரவலான பயன்பாட்டை அங்கீகரிக்க உலக சுகாதார நிறுவனம் வழிவகுத்தது.

உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்த முதல் மலேரியா தடுப்பூசி ஆர்.டி.எஸ்/எஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்த முதல் மலேரியா தடுப்பூசி ஆர்.டி.எஸ்/எஸ்
line

மலேரியாவைத் தடுக்க உலக சுகாதார நிறுவனத்தின் உத்திகள் என்ன?

இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலக சுகாதார நிறுவனம், சில வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் நோக்கங்கள் பின்வருமாறு:

  • 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோயின் தாக்கத்தை குறைந்தபட்சம் 90% குறைப்பது
  • 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியா இறப்பு விகிதத்தை குறைந்தபட்சம் 90% குறைப்பது
  • 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 35 நாடுகளில் மலேரியாவை ஒழிப்பது
  • மலேரியா இல்லாத அனைத்து நாடுகளிலும் மலேரியா மீண்டும் ஏற்படாமல் தடுப்பது.

ஆதாரம்: உலக சுகாதார நிறுவனம்

line

தடுப்பூசிகள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 40,000 முதல் 80,000 ஆப்பிரிக்க குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுகிறது என்று இந்த நிறுவனம் கணித்துள்ளது.

"இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பூசிகளின் தாக்கத்தையும், பாதுகாப்பு விவரத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது. தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும், நன்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்", என்று உலக சுகாதார நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசி செயல்படுத்தும் திட்டத்தை வழிநடத்தும் டாக்டர் மேரி ஹேமல் கூறுகிறார்.

"தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல் இரண்டு ஆண்டுகளில், உயிருக்கு ஆபத்தான கடுமையான மலேரியாவிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது." என்கிறார் டாக்டர் ஹேமல்.

ஆர்.டி.எஸ், எஸ் தடுப்பூசியுடன், மற்ற மலேரியா தடுப்பூசி வகைகளும் உள்ளன. ஆர்21/ மாட்ரிஸ் - எம் (R21/Matrix-M) ஆரம்பகால மருத்துவ வளர்ச்சியில் உள்ளவற்றில் ஒன்றாகும்.

பார்மா நிறுவனமான பயோஎன்டெக் தனது கோவிட்-19 தடுப்பூசியில் முதல் முறையாக பொதுவெளியில் பயன்படுத்தப்பட்ட அதே அதிநவீன எம்ஆர்என்ஏ (mRNA) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலேரியா தடுப்பூசியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது? போதுமான அளவில் அதற்கான ஏற்பாடுகள் உள்ளனவா?

உலக மலேரியா தினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இப்போது உலகின் முதல் மலேரியா தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்கள் செலுத்தி கொண்டுள்ளனர்

மலேரியா என்பது ஓர் ஒட்டுண்ணி. இது மனிதர்களின் ரத்த அணுக்களில் ஊடுருவி, அதனை அழிக்கிறது.இந்த நோய் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களின் கடியால் பரவுகிறது.

தற்போதுள்ள ஆர்.டி.எஸ், எஸ் (RTS,S) தடுப்பூசி ஆப்பிரிக்காவில் மிகவும் கொடிய, பொதுவான ஒட்டுண்ணியை குறிவைக்கிறது: அது பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம். (Plasmodium falciparum).

ஒருவரை கொசு கடிக்கும் போது, இந்த ஒட்டுண்ணி ரத்த ஓட்டத்தில் நுழைந்து கல்லீரல் செல்களை பாதிக்கிறது. அங்கு அது முதிர்ச்சியடைந்து, பெருக்கி, மீண்டும் ரத்த ஓட்டத்தில் நுழைந்து ரத்த சிவப்பணுக்களை பாதித்து, நோய் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இந்த தடுப்பூசி கல்லீரலில் ஒட்டுண்ணி பாதிக்காமல் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி திறம்பட செயல்பட நான்கு டோஸ்கள் தேவை. ஒரு குழந்தைக்கு முதல் மூன்று டோஸ்கள் ஐந்து, ஆறு மற்றும் ஏழு மாதங்கள் என ஒரு மாத இடைவெளியில் செலுத்தப்படும். இறுதியில் பூஸ்டர் டோஸ் 18 மாதங்களில் செலுத்தப்படும்.

நோய்த் தொற்றைத் தடுப்பதற்கும் நோய் பரவுவதைக் குறைப்பதற்கும் பல உத்திகளும், தடுப்பூசி பயன்பாடும் தேவை என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.

தடுப்பூசிகளுக்கான தேவை, குறிப்பாக சஹாரா கீழ்மை ஆப்ரிக்காவில், ஆண்டுக்கு 80 மில்லியன் டோஸ்களை தாண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இத்தகைய அதிகமான தேவை அதன் சவால்களுடனே வருகிறது.

"அதன் உற்பத்தியாளர் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து வருவதால், விநியோகம் விரைவாக தேவையை விட அதிகமாக இருக்கும்," என்று டாக்டர் ஹேமல் விளக்குகிறார்.

தற்போது க்ளாக்ஸோ ஸ்மித் க்லைன் ( GlaxoSmithKline - GSK) என்ற ஒரே ஒரு உற்பத்தி நிறுவனம் மட்டுமே இருக்கிறது.

"ஜி.எஸ்.கே மூலம் ஆண்டுக்கு 15 மில்லியன் டோஸ்களை வரை உற்பத்தி செய்வதே திட்டம்," என்கிறார் டாக்டர் ஹேமல்.

"நாம் உண்மையில் அர்ப்பணிப்புடன், கடுமையான இந்த மலேரியா அபாயத்தில் உள்ள இந்த குழந்தைகளுக்கு போதுமான தடுப்பூசி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்." என்கிறார் டாக்டர் ஹேமல்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :