இந்தியாவில் விளிம்பு நிலை மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி தமிழ்
சராசரியாக இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தை 69 வருடங்கள் வரை உயிர் வாழும். இது உலக சராசரியை காட்டிலும் மூன்று வருடங்கள் குறைவு.
ஆனால் இந்தியாவில் உள்ள மனிதர்களின் ஆயுட்காலம் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே மாறுபட்டதாக உள்ளது என்கின்றன இரண்டு புதிய ஆய்வுகள்.
இந்தியாவில் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடியின மக்கள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள், சாதி இந்துக்களைக் காட்டிலும் இளம் வயதில் உயிரிழக்கின்றனர் என சங்கிதா வ்யாஸ், பாயல் ஹாதி மற்றும் ஆஷிஷ் குப்தா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வாளர்கள் ஒன்பது இந்திய மாநிலங்களிலிருந்து இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின் சுகாதார கணக்கெடுப்பை ஆராய்ந்தனர். பின் சாதி இந்துக்களின் ஆயுட்காலத்துடன் ஒப்பிடும்போது பழங்குடியின மக்களின் ஆயுட்காலம் நான்கு வருடங்கள் குறைவாகவும், தலித்துகளின் ஆயுட்காலம் மூன்று வருடங்கள் குறைவாகவும் உள்ளது. இதுவே முஸ்லிம்களின் ஆயுட்காலம் ஒரு வருடகாலம் குறைவாகவுள்ளது என கண்டறிந்தனர்.
சரி இதை பாலின ரீதியாக ஆராய்வோம்.
பழங்குடியின பெண்களின் ஆயுட்காலம் 62.8 வருடங்கள், தலித் பெண்களின் ஆயுட்காலம் - 63.3 வருடங்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆயுட்காலம் 65.7. இதுவே சாதி இந்து பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 66.5 வருடங்களாக உள்ளது.

பட மூலாதாரம், AFP
ஆண்களுக்கென பார்த்தால், பழங்குடியின ஆண்கள் - 60 வருடங்கள், தலித்துகள் - 61.3 வருடங்கள், முஸ்லிம்கள் - 63.8 வருடங்கள். ஆனால், சாதி இந்து ஆணின் சராசரி ஆயுட்காலம் 64.9 வருடங்களாக உள்ளது.
ஆயுட்காலத்தில் உள்ள இந்த இடைவெளியை, அமெரிக்காவில் வெள்ளை மற்றும் கருப்பின மக்களுக்கு இடையே உள்ள ஆயுட்கால இடைவெளியோடு ஒப்பீடு செய்யலாம்.
மருத்துவ வசதிகள், சுத்தம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய காரணங்களால் இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் கூடியுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 50களில் இருந்த ஆயுட்காலம் இப்போது 20 வருடங்கள் கூடியுள்ளன.
ஆனால் இதில் வருத்ததிற்குரிய செய்தி என்னவென்றால், அனைத்து சமூக மக்களின் ஆயுட்காலமும் அதிகரித்திருந்தாலும், வெவ்வேறு சமூக மக்களின் ஆயுட்காலத்தில் உள்ள வித்தியாசம் அதிகரித்துள்ளது என்கிறது ஆஷிஷ் குப்தா மற்றும் நிகில் சுதர்சனம் ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு.
தலித் ஆண் மற்றும் சாதி இந்து ஆணின் ஆயுட்காலத்தில் உள்ள இடைவெளி 90களின் பிற்பகுதியிலிருந்து 2010ஆம் ஆண்டின் இடைக்கால பகுதி வரை அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் ஆயுட்காலம் என்று வந்தால், 1997 - 2000 கால கட்டத்தில் குறைந்து இருந்த ஆயுட்கால வித்தியாசம், கடந்த 20 வருடங்களில் அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் சமூக ரீதியாக அதிகப்படியான விளிம்புநிலை மக்கள் வாழ்கின்றனர். இங்கு 12 கோடி பழங்குடியின மக்கள், இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் மோசமான வறுமையில் வாழ்கின்றனர். அரசியல் மற்றும் சமூக ரீதியாக மேம்பட்டுள்ள சமயத்திலும் 23 கோடி தலித்துகள் இன்னும் தீண்டாமையை எதிர்கொண்டு வருகிறார்கள். அதேபோல 20 கோடி முஸ்லிம்கள் வகுப்புவாத கலவரங்களில் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
இதற்கான காரணங்கள் என்ன?
இதை ஆராய்ந்தபோது சில சுவாரஸ்யமான காரணங்கள் வெளிவந்துள்ளன. ஒருவர் எங்கு வாழ்கிறார், அவரின் சொத்து என்ன, எந்த சூழலில் வசிக்கிறார் ஆகிய காரணங்கள் இந்த இடைவெளியில் பாதிக்கும் குறைந்த அளவில்தான் உள்ளது.
சொத்தின் அடிப்படையில் பார்த்தால் சாதி இந்துக்களை காட்டிலும் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் குறைந்த ஆண்டுகளே வாழ்கின்றனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இறப்பு விகிதத்தில் தீண்டாமை எவ்வாறு பங்காற்றுகிறது என்பதை கண்டறிய இந்தியாவில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இருப்பினும் சில ஆதாரங்கள் நமக்கு இதுகுறித்து விளக்குகின்றன. முஸ்லிம்கள், ஆதிவாசி மற்றும் தலித்துகளை காட்டிலும் அதிக நாட்கள் வாழ்கின்றனர். இது அவர்களின் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் சூழலில் இல்லாத நிலை, பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் விகிதம் குறைவு, குறைந்த அளவிலான மதுபான பழக்கம் மற்றும் தற்கொலை சூழல்கள் குறைவு ஆகிய காரணங்கள் இதற்கு பங்களிக்கின்றன.
அதேபோல பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் பாகுபாட்டை சந்திக்கும் மக்களின் உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் மன அழுத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. அதேபோல தரமான சுகாதார வசதி மற்றும் கல்வி ஆகியவை குறைந்த அளவில் கிடைப்பதும் ஒரு காரணம்.
விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள்தான் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு பணி காரணமாக நோய் ஏற்படக் கூடிய சூழல் அதிகம் ஏற்படுகிறது. பொருளாதார சமமின்மையை மட்டும் நீக்குவது இதில் போதாது. சமூக பாதகங்களை களையும் தீவிர சுகாதார தலையீடுகளும் வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயுட்காலத்தில் வித்தியாசங்கள் இருப்பது இந்தியாவில் மட்டுமல்ல. இந்த நிலை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனிலும் உள்ளது.
ஆனால் இந்தியாவை பொறுத்த வரை தீண்டாமை உடல்நலத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய மேலும் தரவுகள் வேண்டும். ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கும் 1 கோடி பேரில் 70 லட்சம் பேருக்கு மருத்துவ ரீதியிலான சான்றிதழ்கள் இல்லை. அதேபோல 30 லட்சம் பேரின் இறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. அதேபோல சுகாதார அமைப்புகளுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும். அதேபோல விளிம்புநிலை மக்களுக்கான சுகாதார சேவையை மேம்படுத்த வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












