முஸ்லிம்கள் வீடுகளை மத்தியப் பிரதேச அரசாங்கம் அப்பட்டமாக இடிப்பது ஏன்?

பட மூலாதாரம், Madhya Pradesh police via Twitter
- எழுதியவர், ஸோயா மட்டீன்
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
அவரது வீட்டை இடிப்பதற்கு அதிகாலையில் ஆட்கள் வந்ததாக 72 வயதான ஷேக் முகமது ரஃபீக் நினைவு கூர்ந்தார்.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குளிர்பானங்களை விற்பனை செய்யும் ரஃபீக்கும் அவரது மகன்களும் ஒரு நெடிய இரவைக் கடந்திருக்கின்றனர்.
"இது ரம்ஜான் காலம். ஆகவே எங்கள் வியாபாரம் பொதுவாக மாலையில்தான் தொடங்குகிறது" என்று அவர் கூறினார்.
திங்கள்கிழமை அதிகாலை காவல்துறையினர் முதலில் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தபோது, அவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
"ஆனால், பலத்த சத்தம் கேட்டபோது, யாரோ கேட்டின் ஷட்டர்களை உடைப்பதை உணர்ந்தோம்'' என்றார் ரஃபீக்.
வெளியே, புல்டோசர்களுடன் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் அவரது வீட்டைச் சுற்றி நின்றனர். கர்கோன் நகரில் ஒரு சிறிய முஸ்லீம் பகுதியில் அவரது வீடு அமைந்துள்ளது. வீடு இடிக்கப்படுவதை பலரும் தடுக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. சற்று நேரத்தில் எஞ்சியிருந்தது இடிபாடுகள் மட்டுமே.
"நாங்கள் மிகவும் பயந்துபோனோம், நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை - அவர்கள் எல்லாவற்றையும் இடிப்பதை அமைதியாகப் பார்த்தோம்."
ராம நவமி நாளான ஏப்ரல் 10-ஆம் தேதி வெடித்த மத வன்முறையைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் பல முஸ்லிம் வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுகின்றன.
பெரிய மஞ்சள் நிற புல்டோசர்கள் சுற்று வட்டாரங்களில் கட்டடங்களை இடிப்பதையும் குடும்பங்கள் அழுதபடி ஆதரவற்ற நிலையில் அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பதையும் காட்டும் துயரமான படங்களால் சமூக வலைத்தளங்கள் நிரம்பி வழிகின்றன.
இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவின் 20 கோடி முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளும் மறைமுக முயற்சி என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் மாநில அரசு முஸ்லிம்கள் மீது வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளது "முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினால், அவர்கள் நீதியை எதிர்பார்க்கக்கூடாது," என்று உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா என்டிடிவி செய்தி தொலைக்காட்சியிடம் கூறினார்.
இந்த இடிப்புகள் "அப்பட்டமாக" மேற்கொள்ளப்பட்டிருப்பது கவலைகளை எழுப்பியுள்ளது. இப்படிச் செய்ய சட்டப்பூர்வமான எந்த நியாயமும் இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். சிலர் இதை முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டுத் தண்டனைக்கு ஓர் உதாரணம் என்று கூறியுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"ஒரு சமூக மக்களை நீங்கள் எந்த விதமான நடைமுறையையும் பின்பற்றாமல் தண்டிக்கிறீர்கள். இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, ஆபத்தான முன்னுதாரணமும் கூட" என்கிறார் இந்தூர் நகரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஷ்ஹர் வார்சி.
"அவர்கள் கூறும் செய்தி என்னவென்றால், நீங்கள் எங்களை ஏதேனும் கேள்வி கேட்டால் அல்லது எதிர்ப்புத் தெரிவித்தால், நாங்கள் வருவோம், உங்கள் வீடுகளையும், உங்கள் வாழ்வாதாரங்களையும் அழித்து உங்களை வீழ்த்துவோம்."
பெரும் சத்தத்துடன் இசைத்தபடி இந்துக்களின் நீண்ட ஊர்வலங்கள் முஸ்லிம் பகுதிகளில் மசூதிகளைக் கடந்து சென்றபோதுதான் முதலில் வன்முறை தொடங்கியது. ஒரு சில இடங்களில், சில இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
அப்போது இந்து கும்பல் தங்களை தாக்குவதை காவல்துறை வேடிக்கை பார்த்ததாக முஸ்லிம்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிலர் ஆவேசமாக மசூதிகளை நோக்கி வாள்களைக் காட்டும் காணொளிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கற்கள் வந்த வீடுகள், கற்களின் குவியலாக மாறும் - அமைச்சர் மிஸ்ரா
கர்கோனிலிருந்து சுமார் 137 கிமீ தொலைவில் உள்ள சென்த்வா நகரில் உள்ள மசூதியின் மினாராக்களை இந்துக்கள் உடைத்ததாகவும், முஸ்லிம்களை கற்களை வீசி துரத்தியதாகவும் 28 வயதான ஷாபாஸ் கான் குற்றம் சாட்டினார்.
ஆனால் அடுத்த நாள் அதிகாரிகள் திடீரென வந்து அவரது வீட்டை இடித்தபோதுதான் "உண்மையான திகில்" வந்தது என்று அவர் கூறினார்.
"எங்களின் பொருட்களை எடுத்துக் கொள்கிறோம், குறைந்த பட்சம் குரானையாவது வீட்டில் இருந்து வெளியே எடுக்க விடுங்கள் என்று என் மனைவியும் சகோதரியும் கெஞ்சினர், ஆனால் அவர்கள் கேட்கவில்லை" என்று தற்போது தஞ்சமடைந்திருக்கும் மசூதியில் இருந்து ஷாபாஸ் பேசினார்.
"எங்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நாங்கள் காவல் நிலையத்திற்குச் செல்லும் போது, அவர்கள் எங்களை விரட்டி அடிப்பார்கள்."

பட மூலாதாரம், Madhya Pradesh police via Twitter
கல் எறிதல் மற்றும் தீவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோருக்கு விதிக்கப்படும் தண்டனையின் ஒரு வடிவம்தான் இத்தகையை இடிப்புகள் என்று மாநில அரசு கூறுகிறது. "கற்கள் வந்த வீடுகளே கற்களின் குவியலாக மாறும்" என்று மிஸ்ரா சமீபத்தில் கூறினார்.
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதாக காவல்துறை கூறுகிறது.
"குற்றவாளிகளை ஒவ்வொருவராக கண்டுபிடிக்க தாமதம் ஆகும்"
கர்கோன் மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா, "இது இரண்டும் சேர்ந்த கலவை" என்கிறார்.
"குற்றவாளிகளை ஒவ்வொருவராகக் கண்டுபிடிப்பதற்கு கால தாமதமாகும். எனவே நாங்கள் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்த்து, கலவரக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் இடித்தோம்" என்று அவர் விளக்கினார்.
ஆனால் தனது பகுதியில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று ரஃபீக் கூறுகிறார். "இது சட்டவிரோதமானது அல்ல என்பதை நிரூபிப்பதற்கு தேவையான அனைத்து சொத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.
வல்லுநர்கள் அரசின் வாதம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர். ஒரு குற்றத்துக்காக வேறொரு சட்டத்தைப் பயன்படுத்தி தண்டிப்பது அர்த்தமற்றது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
"சட்டம் ஒரு மறைப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மத ஊர்வலங்களுக்கு முன்பே இந்த வீடுகள் இருந்தது சட்ட விரோதமாகத்தான். பழிவாங்கும் நடவடிக்கையை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது. ஏனெனில் அது அனைத்து நடைமுறைகளையும் மீறுவதாகும்" என்று அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா கூறுகிறார்.
"அரசு பழிவாங்கும் மனப்பான்மையுடன் செயல்படுகிறது"
"சட்டவிரோத கட்டடங்களை இடிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. ஆனால் பல்வேறு படிநிலைகள் உள்ளன. உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்புதல், அவர்களுக்கு பதிலளிக்க அல்லது நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்குதல் போன்றவை பின்பற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறப்படும் நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் பிபிசி பேசிய குறைந்தது மூன்று குடும்பங்களாவது இதை மறுத்துள்ளன.
"மாநிலச் சட்டத்தின் கீழ் (மத்தியப் பிரதேச முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1956) பிற விதிகள் உள்ளன, குற்றம் சாட்டப்பட்டவர்களை அபராதம் கட்டச் சொல்வது போன்றவற்றை அதிகாரிகள் முதலில் பயன்படுத்தியிருக்கலாம்" என வார்சி மேலும் கூறுகிறார்.
"கட்டடங்களை இடிப்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்."
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அரசு, இந்த முறையை நீதி வழங்குவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் வீடுகளை அரசு இடித்துள்ளது.
புல்டோசர் பாபாவும், புல்டோசர் மாமாவும்
"உத்தரப்பிரதேச அரசியலை நாங்கள் இங்கு காண்கிறோம் - உ.பி. மாடல் என்று அழைக்கப்படுகிறது - இப்போது மற்ற மாநிலங்களில் அது தென்படுகிறது" என்று வர்மா கூறுகிறார்.
"பாஜகவின் அடிப்படை இந்துத்துவ வாக்கு தளத்தை திருப்திப்படுத்துவதே இதன் நோக்கம்."
காவியுடை அணிந்த இந்து தேசியவாதியான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தில் குற்றங்களை ஒழிக்கும் பணியில் தன்னை ஒரு கடும்போக்கு துறவியாக காட்டிக் கொண்டார்.
அவரது அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளை இடித்துத் தள்ளுகிறது - அதனால் அவரை "புல்டோசர் பாபா" என்று கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
சவுகானின் ஆதரவாளர்களும் சமீப காலமாக அவரை "புல்டோசர் மாமா" அல்லது புல்டோசர் அங்கிள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இரு மாநிலங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் மதங்களுக்கு இடையேயான காதலுக்கு எதிரான சட்டமும் போராட்டக்காரர்களிடம் இருந்து சேதமடைந்த சொத்துக்களுக்கான பணத்தை மீட்கும் சர்ச்சைக்குரிய சட்டமும் அடங்கும்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்போருக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டம் சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் இது நிறைவேற்றப்பட்டபோது "போராட்டம், வேலைநிறுத்தம் அல்லது கலவரத்தின் போது அரசு அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய எவருக்கும் எதிராக இது பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்" என்று மிஸ்ரா கூறினார்.
ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கு, முன்னறிவிப்பின்றி, வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கு எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதிகாரிகள் "சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொண்டனர்" மாநில அரசாங்கத்தின் செயல்களால் முஸ்லிம்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என வார்சி கூறினார்.
"அரசு இதை செய்யவதற்கான ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது போல் உள்ளது."
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












