மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - 4வது அலையின் அறிகுறியா ? விஞ்ஞானிகள் தரும் விளக்கம்

கொரோனா பரவல்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நாளிதழ் மற்றும் இணையதள பக்கங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்த் வழங்கியுள்ளோம்.

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், ''நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்கும் மாநிலங்களில் தலைநகர் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 1, 009 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகினர். முந்தைய தினத்தை விட 60 சதவீதம் அதிகம் ஆகும். இது மாநில அரசுக்கும், சுகாதார துறையினருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2.12 வகை தொற்று பாதித்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே, தற்போதைய தொற்று பரவலுக்கு இந்த ஒமைக்ரான் மாறுபாடே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தவிர ஒமைக்ரானின் மற்றொரு வழித்தோன்றலான பிஏ.2.12.1 வகை தொற்றும் சிலரிடம் கண்டறியப்பட்டு இருப்பதாக இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

எனினும் இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதை உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் பிஏ.2.12 மற்றும் பிஏ.2.10 ஆகிய 2 துணை மாறுபாடுகள் மட்டும் 60 சதவீதத்துக்கும் அதிகமான மாதிரிகளில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இவை வேகமாக பரவுவது தெரியவந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மாறுபாடுகள் டெல்லியில் மட்டுமின்றி ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் டெல்லியை ஒட்டியுள்ள பகுதிகளில் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

டெல்லியின் தொற்று அதிகரிப்பு குறித்து மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'ஒமைக்ரானின் இனப்பெருக்க எண் 10 ஆக உள்ளது. இது அதிகம் பரவக்கூடிய அளவைக் கொண்டுள்ளது, எனவே அதன் வழித்தோன்றல்களும், துணை மாறுபாடுகளும் அதே வேகத்தைக் கொண்டிருக்கும்' என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

1.5 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யும் தமிழ்நாடு

நிலக்கரி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மின் வெட்டு பிரச்னை மீண்டும் எழுந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு, குஜராத் உட்பட மூன்று மாநிலங்கள் 10.5 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளனர்.

இது குறித்து தி இந்து தமிழ் திசை நாளியில் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள் மொத்தமாக 10.5 மில்லியன் டன் அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் அதிக பட்சமாக 8 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளது. தமிழ்நாடு 1.5 மில்லியன் டன்னும், குஜராத் 1 மில்லியன் டன் நிலக்கரியும் இறக்குமதி செய்ய உள்ளன.

ரஷ்யா - யுக்ரேன் போர் காரணமாக நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்ய உள்ள நிலையில் நிலக்கரியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.'' இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரிடம் பணம் பறிக்க முயன்றதாக பெண் கைது

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், ''மும்பை மலபார் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சர் தன்ஞ்சய முண்டே அளித்த புகாரில், ரேணு சர்மா(40) என்பவர் தன்னிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார். கொடுக்கவில்லையென்றால் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிப்பேன் என்று மிரட்டுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்த ரேணுகா சர்மாவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் ரூ. 5 கோடி ரொக்கம், ரூ. 5 கோடி மதிப்பிலான வணிக வளாகம், செல்போன் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களைக் கேட்டுள்ளார். இல்லையெனில் அவா் மீது பாலியல் வன்கொடுமை புகாா் அளித்து அவரது நற்பெயரைக் கெடுத்துவிடுவேன் என மிரட்டியுள்ளாா்.

அதன்படி, தனஞ்சய் முண்டே ஆரம்பத்தில் ரூ.3 லட்சத்தையும், ரூ.1.42 லட்சம் மதிப்பிலான கைப்பேசியையும் வேறொரு நபா் வாயிலாக அந்தப் பெண்ணிடம் வழங்கியுள்ளாா்..'' என்றனா்.

கடந்த ஆண்டு அமைச்சா் தனஞ்சய் முண்டேயின் இரண்டாவது மனைவிதான் ரேணு சா்மா என கருணா சா்மா என்பவா் குற்றம்சாட்டியிருந்தாா். அந்த கருணா சா்மாவின் சகோதரிதான் ரேணு சா்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விளக்கம்

இதனிடையே, தனஞ்சய் முண்டே செய்தியாளா்களிடம் கூறுகையில்., 'சுமாா் 2 ஆண்டுகளாக அந்தப் பெண் எனக்கு தொல்லை கொடுத்தாா். இதற்கு முன்பும் அவா் என் மீது போலீஸில் புகாா் அளித்து பின்னா் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டாா்.

அவரது தொல்லையை சகிக்க முடியாமல்தான் தற்போது போலீஸில் புகாா் அளித்தேன். புகாா் மனுவுடன் என்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சமா்ப்பித்துள்ளேன். இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்றாா்.

காணொளிக் குறிப்பு, கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் திருவிழாவின் வரலாறு என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: