ஜஹாங்கிர்புரி: வீடுகளையும் கனவுகளையும் அழித்த வகுப்புவாத வன்முறை

வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
    • எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
    • பதவி, பிபிசி இந்தி

வகுப்புவாத வன்முறை நிகழ்ந்து வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்ட நிலையில் டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் பதற்றம் நீடித்து வருகிறது.

சனிக்கிழமையன்று இந்து மத ஊர்வலம் ஒரு மசூதியை கடந்து சென்றபோது அப்பகுதியில் வன்முறை வெடித்தது.

மோதல்களை தூண்டியதாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவர் மற்றவரை குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வன்முறையில் ஏழு போலீசார் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் புதன்கிழமை "ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கை" நடைபெற்றது.

உள்ளூர் நகராட்சி அமைப்பு, அப்பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டதாகக் கூறியது.

ஆனால் தங்கள் சொத்துக்கள் குறிவைக்கப்பட்டதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர். மேலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரம் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இடிப்பை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கிய பின்னரும் ஒரு மணி நேரத்திற்கு இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

வியாழனன்று உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு உத்தரவு, அப்பகுதியில் "நடப்பு நிலையை" தொடருமாறு அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தியது.

பாஜக ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த சம்பவமும் டெல்லியில் நடந்த சம்பவமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. மாநிலத்தின் கர்கோன் நகரில் இந்து ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து, தங்கள் வீடுகள் குறிவைக்கப்பட்டதாக அங்குள்ள முஸ்லிம்கள் கூறினார்கள்.

தாங்கள் எஸ்கவேட்டர் இயந்திரங்களைக் கண்டு வியப்படைந்ததாகவும், ஏனெனில் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து தங்களுக்கு இதுவரை எந்த நோட்டீஸும் அளிக்கப்படவில்லை என்றும் ஜஹாங்கிர்புரியில் உள்ள குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். ஏழு எஸ்கவேட்டர் டிரக்குகள் அக்கம்பக்கத்தின் குறுகிய பாதைகளுக்குள் நுழைந்தபோது, நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய போலீஸார், கலகத் தடுப்புக் கவசத்தில் பாதுகாப்பு வளையத்தை வழங்கினர். ஒப்பீட்டளவில் ஏழ்மையான இந்த சுற்றுப்புறத்தில் பெங்காலி மொழி பேசும் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனர். கூடவே பெங்காலி இந்து வீடுகளும், சிறிய கோயில்களும் இங்கு உள்ளன.

தங்கள் உடமைகள் பறிபோனதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்கள் உடமைகள் பறிபோனதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நடவடிக்கையால், உள்ளூர்வாசிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் உடமைகளை இழந்து புலம்புகின்றனர்.42 வயதான குஃப்ரான், ஜஹாங்கிர்புரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே இடிபாடுகளின் குவியலில் பழைய நோட்டுப் புத்தகத்தைத் தேடினார்.

"நான் பலருக்கு கொடுக்க வேண்டிய பணத்தின் பதிவுகள் அதில் உள்ளன. என் கடையின் எல்லா பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டதால், அது எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. அதை நான் காப்பாற்ற முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்," என்று பழைய சாமான்கள் வாங்கி விற்கும் வியாபாரியான அவர் கூறினார்.

தேடுதலில் அவரது குடும்பத்தினரும் சேர்ந்துகொண்டபோது, ஒரு எஸ்கவேட்டர் டிரக் அருகிலுள்ள மசூதியின் வெளிப்புறத்தை இடித்தது.

இதே மசூதிக்கு அருகில்தான் அனுமன் ஜெயந்தி அன்று இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்துக்கள் தங்கள் கடவுளான அனுமனின் பிறப்பைக் குறிக்கும் நாளாக அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்..

புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றுவரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், மசூதியின் மேற்கூரையில் அமர்ந்து, மசூதியின் வெளிப்புறம் இடிக்கப்படுவதை திகிலுடன் பார்த்தனர்.

கடந்த 32 ஆண்டுகளாக மசூதிக்குப் பின்னால் வசிக்கும் சபீனா பேகம் தனது மருமகளின் கையைப் பற்றிக்கொண்டு கண்ணீர்விட்டார்.

"எங்கள் பகுதி ஒருபோதும் முன்பு போல இருக்காது. இது வெளியாட்களின் வேலை, அவர்களின் தவறான செயல்களுக்கு நாங்கள் பெரும் விலையைக் கொடுத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வளையத்தை வழங்கினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வளையத்தை வழங்கினர்

பொது அல்லது அரசு சொத்தில் கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டமைப்புகள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்று அவற்றை ஒவ்வொன்றாக இடித்தனர்.

54 வயதான கணேஷ் குப்தா, தனக்கு சிறிது கால அவகாசம் தருமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினார். ஆனால் எஸ்கவேட்டர் அவரது பழச்சாறு கடையை அகற்றியது.

"இது வெட்கக்கேடானது," என்று அவர் குரலை உயர்த்தி கத்தினார். "என் அப்பா இந்தக் கடையை நடத்தினார். என்னிடம் சட்டப்பூர்வ ஆவணங்கள் உள்ளன. அவர்கள் ஏன் எங்களுக்கு முன்னரே நோட்டீஸ் கொடுக்கவில்லை?"என்று அவர் கேட்டார்.

அரசு சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு நேரில் சென்று 5 நாள் கால அவகாசம் அளிக்கும் நோட்டீஸ் வழங்கப்படவேண்டும் என்று டெல்லி நகராட்சி சட்டங்கள் கூறுகின்றன.

இடிப்பதற்கு முன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் இடிப்புக்கு எதிரான மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை இரண்டு வாரத்தில் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :