டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையில் தொடர்புடையதாக 14 பேர் கைது - போலீஸ் பெருமளவில் குவிப்பு

டெல்லி ஜஹாங்கீர்புரி

பட மூலாதாரம், MONEY SHARMA/Getty Images

படக்குறிப்பு, ஜஹாங்கிர்புரி வன்முறைக்குப் பிறகு அங்கு குவிக்கப்பட்ட போலீஸார்

டெல்லி ஜஹாங்கிர்புரியில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 14 பேரை இரு வாரங்களுக்கு ரோஹிணி நீதிமன்ற காவலில் வைக்க உள்ளூர் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தீபேந்தர் பதக் தெரிவித்தார்.

அந்த வன்முறை சம்பவத்தில் காயமடைந்த போலீஸ் உதவி ஆய்வாளர் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் தோட்டா துளைத்து காயமடைந்த அந்த அதிகாரியின் பெயர் மேதா லால், வன்முறையின் போது, சி-பிளாக் பக்கத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

ஜஹாங்கிர்புரியில் நடந்த மோதல்கள் குறித்த விவரங்களை செய்தி முகமையான ஏஎன்ஐயிடம் அளித்த மேத்தா லால், "சனிக்கிழமை அப்பகுதியில் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் மசூதி அருகே சென்றபோது, இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல் வீச்சு நடந்தது. ஆனால் இரு குழுக்களும் அங்கிருந்து சென்றுவிட்டன," என்றார்.

டெல்லி ஜஹாங்கீர்புரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லி போலீஸ் உதவி ஆய்வாளர் மேதா லால் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயம் அடைந்தார்

"ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஊர்வலத்தில் ஒரு குழு ஜி-பிளாக் நோக்கியும், மசூதிக்கு அருகில் இருந்த மற்றொரு குழு சி-பிளாக் நோக்கியும் சென்றன. அதன் பிறகு சி-பிளாக் பக்கத்திலிருந்து கல் எறிதல் ஆரம்பித்தது. பின்னர் அங்கிருந்து துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதையடுத்து சிலர் நீளமான வாள்களுடன் சி-ப்ளாக் நோக்கி வந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் என் மீது தோட்டா பாய்ந்தது. உடனடியாக காவல் கட்டுப்பாட்டு வேனில் நான் மருத்துவமனைக்கு சென்றேன்," என்று மேதா லால் கூறினார்.

துப்பாக்கிச் சூடு குறித்த விவரங்களை மேதா லால் தெரிவித்தாலும், அதற்கான காரணத்தை அவரால் விளக்க முடியவில்லை. எதற்காக துப்பாக்கிச்சூடு நடந்தது என்று தெரியவில்லை என்கிறார் அவர்.

"நான் தற்போது நன்றாக இருக்கிறேன். எனது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது. ஊர்வலத்தின் போது நான் அங்கு இருந்தேன். அதற்குப் பிறகும் அவசரகால பணியில் நான் அங்கு ஈடுபட்டிருந்தேன். முன்னதாக இரண்டு ஊர்வலங்கள் அமைதியாக நடந்தன" என்று மேதா லால் கூறினார்.

வன்முறையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு இருந்தனர். ஒரு போலீஸ் படையும் இருந்தது. கல் வீச்சில் ஏராளமான போலீசார் காயமடைந்தனர் என்று லால் குறிப்பிட்டார்.

அமித் ஷா நிலைமையை ஆய்வு செய்தார்

டெல்லி ஜஹாங்கீர்புரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜஹாங்கிபூர் வன்முறைக்குப் பிறகு சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

வன்முறைச் செய்திகளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி போலீஸ் ஆணையர் ராகேஷ் அஸ்தானா மற்றும் சிறப்பு ஆணையர் தீபேந்தர் பதக் ஆகியோரிடம் பேசினார். சம்பவ பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவர் அறிவுறுத்தினார் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வன்முறையை அடுத்து ஜஹாங்கிர்புரி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

"டெல்லியில் நடந்த இந்த பரபரப்பான சம்பவத்திற்குப் பிறகு, மக்கள் மத்தியில் பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக அப்பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தியது. அமைதியைப் பேணுமாறும், வதந்திகளைப் புறக்கணிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்,"என்று டெல்லி காவல்துறை இணை ஆணையர் லவ் குமார் கூறினார்.

டெல்லி ஜஹாங்கீர்புரி

பட மூலாதாரம், Getty Images

நடுநிலையான விசாரணைக்கு காவல்துறை உறுதி

ஜஹாங்கிர்புரியில் நடந்த வன்முறை தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி காவல்துறை உறுதியளித்துள்ளது. மேலும் எந்த வதந்திகளையும் தவறான தகவல்களையும் உடனடியாக புறக்கணிக்குமாறும், சமூக விரோதிகளின் சந்தேகத்திற்குரிய செயல்பாடு குறித்து காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டது.

தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை மூலம் தொழில்முறையிலான நடுநிலையான விசாரணை நடத்தப்படும் என்று டிசிபி உஷா ரங்னானி உறுதி அளித்துள்ளார்.

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் சனிக்கிழமை மாலை ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அமைதிக் குழுக் கூட்டத்தை நடத்தியது.

வடமேற்கு டெல்லி டிசிபி உஷா ரங்னானி ஜஹாங்கிர்புரி, மகேந்திரா பார்க் மற்றும் ஆதர்ஷ் நகர் காவல் நிலையங்களின் அமைதிக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்போது, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு குழுவின் அனைத்து உறுப்பினர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லி ஜஹாங்கீர்புரி

பட மூலாதாரம், Getty Images

வன்முறையில் காயமடைந்த ஒன்பது பேரில் 8 பேர் போலீசார்

இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் 8 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உஷா ரங்னானி தெரிவித்தார்.

ஊர்வலம் அமைதியாக நடந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் ஊர்வலம் சி-பிளாக் மசூதி அருகே சென்றவுடன், 4 முதல் 5 பேர் ஊர்வலத்தில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் இதன் போது இரு தரப்பிலிருந்தும் கல் வீச்சு தொடங்கியது என்றும் ஜஹாங்கிர்புரி காவல் நிலைய பகுதியில் பணியில் இருந்த ஆய்வாளர் ராஜீவ் ரஞ்சன் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக போலீசார் சமய ஊர்வலத்தின் இரண்டு குழுக்களை அமைத்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து இரு சமூகத்தினரிடையே மோதல்கள் தொடங்கியது.

ஹனுமன் ஜெயந்தியின் போது கற்களை வீசி வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ராஜீவ் ரஞ்சன் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2020இல் டெல்லியில் நடந்த வன்முறையை விவரிக்கும் காணொளி

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :