மாதவிடாய்: நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌமியா குணசேகரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெண்ணின் வாழ்நாளில் சராசரியாக 400 முறை வரை மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்துதும் சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு ஒரு தீர்வாக மென்ஸ்ட்ருவல் கப் எனப்படும் மாதவிடாய் கப் இருக்கும் என நம்புகிறார்கள்.
மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவே. நாப்கின் மற்றும் டாம்பான் பயன்படுத்துவதை விட மென்ஸ்ட்ருவல் கப் பயன் படுத்துவது சிறந்த முறை என்றாலும் இதை பயன்படுத்துவதற்கு பெரும்பாலான பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதை எவ்வாறு பயன்படுத்துவது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளும் குழப்பங்களும் அவர்கள் மனதில் எழுகின்றன. எனவே அவர்களின் சந்தேகத்தினைப் போக்கும் வகையில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாடு குறித்த பல கேள்விகளுக்கு பெண்ணியல் மருத்துவ வல்லுநர், டாக்டர் திருமகள் அளித்துள்ள விரிவான விளக்கத்தைப் பார்க்கலாம்.
கேள்வி: மென்ஸ்ட்ருவல் கப் என்றால் என்ன?
பதில்: மென்ஸ்ட்ருவல் கப் என்பது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அவர்களின் கருப்பை வாய்ப்பகுதியின் உட்புறத்தில் பொறுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்ட சிறிய அளவிலான கப் ஆகும். பெண்களின் மாதவிடாய் குருதி இந்த கப்பில் சேரும்.
மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிலிகான் எனும் பொருளால் இந்த கப்கள் செய்யப்படுகின்றன. இதில் எந்த திரவத்தை ஊற்றினாலும் அதனை இந்த கப் உரிஞ்சாது, வினைபுரியாது. எனவே இது பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். ஒரு கப் வாங்கிவிட்டால் அதை பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். சுத்தப் படுத்துவதும் மிக எளிது. மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாட்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.
நாப்கினை விட மென்ஸ்ட்ருவல் கப் எந்தவகையில் சிறந்தது ?
பதில்: நாப்கின்கள் பயன்படுத்துவதை விட மென்ஸ்ட்ருவல் கப் பயன் படுத்துவது பல்வேறு வழிகளில் மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் நாப்கின் பயன்படுத்தினால், அதிக உதிரப் போக்கு ஏற்படும் பொழுது, உள்ளாடை மற்றும் ஆடைகளில் கறை ஏற்படும். நாப்கினில் நறுமணத்துக்காக சேர்க்கப்படும் வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றாலும், நடக்கும் போதும் மற்ற வேலைகள் செய்யும்போதும் தோலின் மீது நாப்கின் உரசுவதாலும், பிறப்புறுப்பு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அரிப்பு மற்றும் சிறு பருக்கள், கொப்பளங்கள் ஏற்படுகின்றன.
ஆனால் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும்போது, இந்த சிக்கல்களைத் தவிர்க்க முடியும். ரத்தம் வெளியேறாமல் உள்ளேயே இருப்பதால் திரவ நிலையிலேயே இருக்கும் துர்நாற்றமும் வீசாது. ஒரு முறை வாங்கிய கப்பை பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால் மாதம் தோறும் நாப்கின்கள் வாங்கும் செலவினையும் குறைக்க இயலும்.
பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இந்த கப்கள் சிலிக்கானில் செய்யப்படுவதால் மென்மையாகவும், வளையும் தன்மையுடனும் இருக்கும். கைகளை சுத்தமாக கழுவிவிட்டு சுத்தம் செய்த கப்பை "சி" வடிவத்தில் வளைத்து மடித்து கர்பப்பை வாய் பகுதியின் உட்புறத்தில் செலுத்த வேண்டும். செலுத்திய பிறகு தானாகவே மென்ஸ்ட்ருவல் கப் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
எட்டு மணி நேரத்துக்குப் பிறகு வெளியில் எடுக்கும்போது கப்பின் கீழ் பகுதியில் உள்ள சிறிய கூம்பு பகுதியை பிடித்து இழுக்கக் கூடாது. மாறாக உட்புறம் செலுத்தும் பொழுது சி வடிவத்தில் வளைத்தது போன்று கப்பின் அடிப்பகுதியை அழுத்தி அதன் வாய் பகுதியை சிறியதாக மாற்றி எளிமையாக வெளியில் எடுக்க முடியும்.
மென்ஸ்ட்ருவல் கப் பராமரிப்பது எப்படி ?
மாதவிடாய் சுழற்சி ஆரம்பத்தில் முதல் முறை பயன்படுத்தும் பொழுது, சூடான நீரில் போட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க வைத்து, சுத்தம் செய்து பின்பு பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கு பின்பும் வெளியில் எடுத்து சாதாரண நீரில் கழுவிவிட்டு மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். தூய்மையான நீரில் கழுவுவது மிகவும் அவசியம்.
வெளியில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மென்ஸ்ட்ருவல் கப்பை கழுவும் நீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாதவிடாய் முடிந்த பின்பு சூடான நீரில் ஐந்து நிமிடம் வரை போட்டு கொதிக்க வைத்து, சுத்தப் படுத்தி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
மென்ஸ்ட்ருவல் கப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ?
மென்ஸ்ட்ருவல் கப்கள் சிறியவை, நடுத்தரம், மற்றும் பெரியவை என பல அளவுகளில் கிடைக்கின்றன இதில் சரியான அளவை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் ஆகும். இதை பயன்படுத்திப் பார்த்துமட்டுமே தங்களுக்கான சரியான அளவை கண்டறிய முடியும்.
முதல் முறை மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும் போது, சிறிய அளவிலான கப்பை பயன்படுத்திப் பார்க்கலாம். குழந்தை பெற்றவர்கள் நடுத்தர அளவினையும் , சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப் பெற்றவர்கள் பெரிய அளவையும் பயன்படுத்திப் பார்க்கலாம். இந்த அளவு தனி நபர்களை பொருத்து மாறுபடும்.

கேள்வி: மென்ஸ்ட்ருவல் கப் பொருத்தும்போது வலி ஏற்படுமா ?
முதல் முறை பயன்படுத்தும்போது பயம் காரணமாக சிறிது அசௌகரியமாக இருக்கும். பெரிய அளவு வலி ஏதும் ஏற்படாது. ஓரிரண்டு முறை பயன் படுத்திய பிறகு மிகவும் சாதாரண விஷயமாக மாறிவிடும். சிலர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு இது தங்களுக்கு சரிவராது என நினைத்துவிடுவதும் வழக்கம். ஆகவே சில முறை பயன்படுத்திப் பார்க்க வேண்டியதும் அவசியம். அப்படி ஆரம்ப காலத்தில் மென்ஸ்ட்ருவல் கப்பை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டால் தண்ணீர் கொண்டு செய்யப்பட்ட களிம்பு (water based lubricant gel) தடவிப் பயன்படுத்தினால் எளிமையாக இருக்கும்.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை அதிகப்படுத்துமா?
மாதவிடாய் காலத்தில் அடி வயிற்றில் சிலருக்கு வலி ஏற்படும், இது பொதுவானது. மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிற்று வலிக்கும் மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாட்டிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுபவர்கள், ஏற்படாதவர்கள் என அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்.
கருப்பை இறக்கத்திற்கு வழிவகுக்குமா?
மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவதன் மூலம் கருப்பை இறக்கம் ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி அந்த பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும்.
கேள்வி: காப்பர் டீ எனப்படும் கருத்தடை சாதனம் பொருத்தியவர்கள் பயன்படுத்தலாமா?
காப்பர் டீ எனப்படும் கருத்தடை சாதனம் பொருத்திக் கொண்டவர்கள் இதனை தாராளமாக பயன்படுத்தலாம். காப்பர் டீ கருத்தடை சாதனத்தின் கீழ்ப்பகுதில் இரண்டு சிறிய அளவிலான நைலான் கயிறு போன்ற நூல் இருக்கும் அதை மட்டும் பிடித்து இழுத்து விட கூடாது. மற்றபடி சரியாக பயன்படுத்தினால் எதற்கும் பயப்பட தேவையில்லை.
மென்ஸ்ட்ருவல் கப்பை கன்னிப் பெண்கள் பயன்படுதலாமா?
பெரும்பாலான பெண்கள் இதை நாங்கள் பயன்படுத்தலாமா ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு இதனால் கிழிந்து விடுமா என கேட்கின்றனர். கன்னிப் பெண்களும் தாராளமாக பயன்படுத்தலாம் ஹைமன் என்பது மெல்லிய சவ்வு ஆகும். பெரும்பாலானோர் அது ஒரு திரை முழுமையாக மூடி இருக்கும் என நினைக்கின்றனர் இது ஒரு தவறான கருத்து ஆகும். கன்னிச்சவ்வில் சிறிய வளையம் போன்ற அளவு துளை இருக்கும். அப்படி இல்லை எனில் மாதவிடாய் ரத்தம் எப்படி வெளியேறும்? திருமணம் ஆகி குழந்தை பெற்றவர்களுக்கு கூட இந்த சவ்வு இருக்கும்.
விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தலாமா ?

பட மூலாதாரம், Getty Images
விளையாட்டு வீரர்கள், நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்கள், முதல் அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் மென்ஸ்ட்ருவல் கப் பொருத்திக் கொண்டபிறகு நடக்கலாம் , ஓடலாம், தூங்கலாம், தங்களுடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்யலாம். அதிகபட்சம் 12 மணி நேரம் அதற்கு முன்பு சுத்தப் படுத்திவிட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டியது அவசியம். என்கிறார் மருத்துவர் திருமகள்.
கருத்தில் கொள்ள வேண்டியவை
இந்த கப்பினை பயன்படுத்துவோர் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி கேட்டபோது, "சரியான அளவுடைய கப்பை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் பொறுத்த வேண்டும். உடலின் உட்புறம் செலுத்தப்படுவது என்பதால் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் வெளிப்புற கிருமிகள் உடலின் உட்புறம் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
பொருத்தும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கை விரல்களில் நீளமான நகங்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், நகம் பட்டு புண் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக இது மிகவும் சௌகரியமாக இருப்பதால் மென்ஸ்ட்ருவல் கப் உட்புறம் இருப்பதையே மறந்து விடும் நிலை சில சமயங்களில் ஏற்படும். எனவே சரியான நேரத்தில் சுத்தம் செய்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.'' என்கிறார் டாக்டர் திருமகள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













