நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது ரகசியமாக கண்காணிக்கப்பட வாய்ப்பு?

பட மூலாதாரம், BBC Sport
தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து விலக முயற்சி செய்யும் நபர்கள் சற்று கவனமாக இருங்கள்.
ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறுவதற்கு சமூக வலைதளமான லிங்க்டின் (LinkedIn) தளத்தில் நீங்கள் பதிந்துள்ள தரவுகளை, புதிய பணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்றும் நீங்கள் சிந்திப்பீர்கள் அல்லவா?
ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் இந்த மாற்றங்களை கண்காணித்து நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்திற்கு இந்தத் தகவல்களை ஒரு சில வலைதளங்கள் அளித்து வருகின்றன.
இவற்றை முடிந்த அளவிற்கு தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக லிங்க்டின் தெரிவித்துள்ளது.
ஆனால், சான் ஃப்ரான்சிஸ்கோவை சேர்ந்த ஒரு நீதிபதி, லிங்க்டின் தளத்தில் உள்ள பெருமளவு பயனாளர்களின் தரவுகளை வேறு நபர்கள் பெற்றுக்கொள்வதை தடுத்து நிறுத்தக்கூடாது என்றும், சிறிதளவு மட்டும் தான் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.
பயனாளர்களின் தரவுகளை மூன்றாம் நபர்கள் கண்காணிப்பதற்கு லிங்க்டுஇன் மேற்கொண்டுள்ள தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், லிங்க்டுஇன் இந்த தீர்ப்பை எதிர்த்து மெல்முறையீடு செய்வதை கருத்தில் எடுத்துக் கொள்ளும் என பிபிசி நம்புகிறது.
"நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது" என அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. பயனாளர்கள் எங்களது தளத்தில் பதிந்துள்ள தகவல்களை அவர்கள் மட்டுமே கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான தரவுகள் :
இணையதளத்தில் நீங்கள் பதிவிடும் உங்கள் தரவுகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த முன்னுதாரனமாக இருக்கிறது.
தங்கள் தளத்தில் உள்ள பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை கண்காணிப்பதை நிறுத்துமாறு HiQ லேப்ஸ் எனப்படும் வலைதள நிறுவனத்திற்கு லிங்க்டின் கடந்த மே மாதம் கடிதம் அனுப்பியதில் இருந்து இந்த பிரச்சனை வெடித்துள்ளது.

பட மூலாதாரம், HIQ LABS
லின்க்டின் பயனாளர்கள் அனைவரின் தகவல்களையும் HiQ லேப்ஸ் கண்காணிப்பதில்லை. தங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் தரவுகள் மட்டும் தான் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பயனாளர் மேற்கொள்ளும் மாற்றங்களை அவர் தற்போது பணிபுரியும் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கும் சேவைகளை நாங்கள் செய்வதில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு பணியாளர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து விலகவுள்ளாரா என்பதை அவர்கள் அளிக்கும் தகவல்களை வைத்து முன்னரே அறிந்துகொள்ளும் இது போன்ற செயல்கள் லின்க்டுஇன் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கு எதிரானது என்றும் லிங்க்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று" என லிங்க்டின் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
லின்க்டின் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள HiQ லேப்ஸ், பயனாளர்கள் வெளியிட்டுள்ள தரவுகள் அனைத்தும் இணையதளத்தில் பொதுவான தரவுகளாகவே இருக்கிறது என்றும் அதை யாராலும் அனுக முடியும் என்பதால், இது முறைகேடு என்று கூறக்கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும், லின்க்டின் தளத்தில் உள்ள தனிப்பட்ட தரவுகளை நாங்கள் கண்காணிக்கவில்லை என்றும் HiQ லேப்ஸ் கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல், எடுக்கப்படும் தரவுகளை நாங்கள் விற்பதில்லை என்றும் பகுப்பாய்வு செய்து நிறுவனங்களுக்கு அனுப்புவோம் என்றும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இணையதளத்தில் பொதுவெளியில் ஒரு நபர் பதிவிடும் தரவுகளை மற்றொருவர் கண்காணிப்பதை ஒரளவிற்கு தான் தடுக்க முடியும். முழுவதுமாக தடுக்க முடியாது என்பதுதான் சட்டத்தின் கூற்றாக இருக்கிறது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












