"கேம் ஆஃப் த்ரோன்ஸ்" தொலைக்காட்சி தொடர் கசிவு: மும்பையில் நால்வர் கைது

ஹெச்பிஓ

பட மூலாதாரம், HBO

மிகவும் பிரபலான "கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சி தொடரின் ஒரு கதையை அது ஒளிபரப்பாகும் முன்பே கசிந்தது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் நான்கு பேரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேர், மும்பையில் உள்ள "ப்ரைம் ஃபோகஸ் டெக்னாலஜி" என்ற நிறுவனத்தின் ஊழியர்கள். மற்றொரு நபர் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல தொடர் கதைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பதிவு செய்துப் பராமரித்து, "ஹைட் ஸ்டார்" என்ற இணையதளம் மூலம் "ப்ரைம் ஃபோகஸ் டெக்னாலஜி" நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த நிறுவனம் அளித்த புகாரின்பேரில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்கள் வரலாற்றிலேயே, அதிகமாகத் திருடி வெளியிடப்படும் தொடராக "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" ஏற்கெனவே உள்ளது.

அந்த தொடரின் ஏழாவது சீசனின் நான்காவது கதை, உலக அளவில் அது ஒளிபரப்பாகும் முன்பே கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி கசிந்தது.

"ஹெச்பிஓ" தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள அந்த தொடர் முந்தைய ஆண்டுகளிலும் பல முறை ஒளிபரப்புக்கு முன்பே கசிந்துள்ளது.

அண்மையில் ஒரு ஹேக்கர்கள் குழு, பால்லர்ஸ், ரூம் 104 உள்ளிட்ட தொடர்கள் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர்களின் வசனங்கள் ஆகியவை அடங்கிய 1.5 டெர்ரா பைட்ஸ் அளவு தரவுகளை திருடியதாகக் கூறியிருந்தது.

அந்த குழுவினர், அதில் ஒளிபரப்பாகாத சில பகுதிகளையும் நேற்று கசியவிட்டனர்.

PRESS ASSOCIATION

பட மூலாதாரம், PRESS ASSOCIATION

இந்நிலையில், திங்கள்கிழமை மும்பையில் கைதான நால்வர் விவகாரம் ஹெச்பிஓ தொடர் கசிவு தொடர்பானது என்றும், அண்மையில் நடந்த ஹேக்கர்களின் திருட்டுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது பற்றி ஏஎஃபி செய்தி நிறுவனத்திடம் மும்பை நகர காவல்துறை துணை ஆணையர் அக்பர் பதான் கூறுகையில், "அனுமதியற்ற முறையில் கேம் ஆஃப் த்ரேன்ஸ் தொடரின் ஏழாவது சீசனின் நான்காவது கதையை கசிய விட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் புகார் அளித்தது. அதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் நான்கு தனி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

குற்றவியல் நம்பிக்கை துரோகம் மற்றும் கணினி சார்ந்த குற்றங்கள் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரும் வரும் 21-ஆம் தேதிவரை காவலில் வைக்கப்பட்டிருப்பர் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :