நீட் தேர்வு தொடர்பான அவசரச் சட்டம் போதுமானதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கே. முரளிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக தேசிய தகுதித் தேர்விலிருந்து (நீட்) இந்த ஆண்டு மட்டும் விலக்களிக்கக்கூடிய அவசரச் சட்டம் தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தமாக நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை என்ற குரல் வலுவாக ஒலிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வை மத்திய அரசு நடத்திவருகிறது. ஆனால், பெரும் எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் தமிழ்நாடு இந்தத் தேர்வை எதிர்த்துவருகிறது.
12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நடத்தவேண்டுமென தமிழகம் கூறிவருகிறது.
இந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் இரண்டு சட்டங்கள் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
இதற்கிடையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் அரசாணையையும் நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது.
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் அவசரச் சட்டம் கொண்டுவந்தால்,
அதற்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து, இதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்தார். இதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த அவசரச் சட்டத்தால் பலனேதும் இருக்காது; நிரந்தரமாக விலக்குக் கோர வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கின்றன.
"தமிழ்நாட்டில் சுமார் 2400 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. இதனைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நிரந்தமாக இதிலிருந்து விலக்கு வேண்டும். இப்போது மாணவர்கள் யாராவது இந்த ஒராண்டு விலக்கை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், நீதிமன்றம் இந்த அவசரச் சட்டத்தை ரத்துசெய்யும் அபாயம் இருக்கிறது" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.
நீதிமன்றத்திடமே எல்லா கொள்கை முடிவுகளையும் கொடுத்தால், அது தமிழகத்திற்குப் பாதகமாக முடியும் என்கிறார் ரவீந்திரநாத்.
"சட்டரீதியாகப் பார்த்தால், தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ஒருவர் எதிர்த்து வழக்குத் தொடர முடியும்" என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன்.
கல்வி என்பது மத்திய - மாநில அரசுகளின் பட்டியலில் இருந்தாலும், நீட் தேர்வு முழுக்க முழுக்க மத்திய அரசின் பட்டியலில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இதில் சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசின் வசமே உள்ளது. இப்போது மாநில அரசு சட்டம் இயற்றினால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்கிறார்கள்.
மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள விவகாரத்தில் மாநில அரசு எப்படி சட்டம் இயற்ற முடியும் என்று கேள்வியெழுப்புகிறார் விஜயன். கடந்த ஆண்டைப் போல அரசியல்சாச னத்தின் பிரிவு 123ன் கீழ் சட்டம் இயற்றுவதே இதற்கு சரியாக இருக்க முடியும்; கடந்த ஆண்டு அப்படித்தான் செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் விஜயன்.
மாநில அரசின் சட்டத்தை எதிர்த்து யாராவது நீதிமன்றத்திற்குச் செல்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அப்படி யாராவது சென்றால், நீதிமன்றம் இந்தச் சட்டத்தை செல்லாததாக்க முடியும் என்கிறார் விஜயன்.

"பொது சுகாதாரத் துறையை மாநிலத்திற்கும் மருத்துவக் கல்வியை மத்திய - மாநில அரசுகளின் பட்டியலிலும் வைத்திருப்பதே அபத்தம். கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டுமென சரியாக முடிவெடுத்திருந்தார் அம்பேத்கர்.
ஆனால், நெருக்கடி நிலையின்போது கல்வி உள்ளிட்ட ஐந்து துறைகள் மத்திய - மாநில அரசுகளின் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அதற்குப் பிறகு அதை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம்" என்கிறார் மருத்துவர் எழிலன்.
"நீட் தேர்விலிருந்து எய்ம்ஸ் மருத்துவ மனைகள், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய மருத்துவமனைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தகுதியைப் பற்றிப் பேசும்போது, அங்கு மட்டும் தகுதி தேவையில்லையா? நீட் தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் உள்ளே வருவது தடுக்கப்படுகிறது''என்று கூறினார் எழிலன்.
"முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு, மாநில அரசின் இடஒதுக்கீடு குலைக்கப்படுவதால், மாநில அரசின் சிறப்புப் பிரிவுகளில் இனி மருத்துவர்கள் சேர்வது இல்லாமல்போகும்" என்று மேலும் தெரிவித்தார் எழிலன்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலுமே மருத்துவக் கல்லூரிகளை அரசு ஏற்படுத்தி, அதற்கென பெரிய அளவில் நிதிஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில், நீட் தேர்வு அந்தக் கட்டமைப்பைக் குலைக்கும். சிறப்புப் படிப்புகளில் நீட் தேர்வின் அடிப்படையில் சேரும் மாணவர்கள், இனி மாநில அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயமில்லை. இது மாநிலத்தின் ஏழைகள் சிறப்பு சிகிச்சை பெறுவதைத் தடுக்கும் என்கிறார் எழிலன்.
மாநில அரசு நடத்தும் மருத்துவமனை சேர்க்கை குறித்து, நீங்கள் சட்டம் இயற்றுங்கள், பார்க்கலாம் என மத்திய அரசு சொல்வதே அராஜகம். நீட் தேர்விலிருந்து மாநில அரசுக்கு முழுமையாக விலக்கு வேண்டும் என்கிறார் மருத்துவர் எழிலன்.
தமிழகத்தில் 2655 எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் பதினைந்து சதவீதம் மத்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படுகிறது. அதேபோல 1603 மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன. இதில் பாதி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன.
மீதி இருக்கும் இடங்களில் பாதி இடங்கள் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












