கோத்ரா ரெயில் எரிப்பு: தலைமறைவாக இருந்த சந்தேக நபர் கைது
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையத்தில் நடந்த சபர்மதி விரைவு ரயில் பெட்டி எரிப்பினில் தொடர்புடையதாக கூறப்படும் இம்ரான் பாடுக் என்று நபரை குஜராத் மாநில போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

பட மூலாதாரம், ankur jain
2002-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியன்று, கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் எஸ்-6 என்ற பெட்டிக்கு தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில், 14 வருடங்களாக தலைமறைவாக இருந்த இம்ரான் பாடுக்கும் அடங்குவார் என்று குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 59 பேரில், பெரும்பாலானோர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்யாவுக்கு சென்று தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்களே ஆவர்.
இதனை தொடர்ந்து பரவலாக ஏற்பட்ட வன்முறை, மாநிலமெங்கும் இனக்கலவரத்தை தூண்டியது குறிப்பிடத்தக்கது.
இம்ரானின் கைது குறித்து கருத்து தெரிவித்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ''கோத்ரா படுகொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இம்ரானின் பெயர் ஒரு முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.








