"நேரு மிகப்பெரியவர் என்றால் குடும்பப் பெயரில் சேர்க்க அஞ்சுவது ஏன்?"

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Sansad TV Rajya Sabha

"நேரு மற்றும் காந்தி" என்ற பெயரில் காங்கிரஸ் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்திய போதிலும், அவர்களில் யாரும் நேரு குடும்பப்பெயரை ஏன் பயன்படுத்தவில்லை என்று காந்தி குடும்பத்தினரை கடுமையாகச் சாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோதி பதிலளித்தார். அப்போது அவர், நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸ் டோக்கனிசத்தை மட்டுமே கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.

"சிலருக்கு அரசின் திட்டங்களின் பெயர்கள் மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளின் பெயர்களில் சிக்கல்கள் உள்ளன. ஆனால், 600 அரசு திட்டங்கள் காந்தி-நேரு குடும்பத்தின் பெயரில் இருப்பதாக ஒரு அறிக்கையில் படித்தேன். நேரு இத்தனை பெரிய நபராக இருந்தால், அவரது குடும்பப்பெயரை ஏன் பயன்படுத்த காங்கிரஸ் அஞ்சுகிறது?" என்று மோதி கேள்வி எழுப்பினார்.

மோதி இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மோதி-அதானி பாய் பாய் (மோதி, அதானி சகோதரர்கள்), ஜேபிசி விசாரணை வேண்டும் என்று குரல் எழுப்பியபடி இருந்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் அதானி குழுமம் பங்குகளை கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம்சாட்டிய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

இந்த விவகாரத்தில் அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. மேலும், ஹிண்டன்பர்க் மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், அது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியோ அவரது அரசின் அமைச்சர்களோ என்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவுில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோதி மாநிலங்களவையில் இன்று பேசும்போது, காங்கிரஸுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்ய அரசியலமைப்பின் 356வது பிரிவை 50 முறை "தவறாகப் பயன்படுத்தினார்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

"ஆட்சியில் இருந்த எந்த கட்சி 356வது சட்டப்பிரிவை தவறாகப் பயன்படுத்தியது தெரியுமா? அந்த கட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை 90 முறை கலைத்துள்ளது. அதைச் செய்தவர்கள் யார் தெரியுமா? அதிலும் ஒரு பிரதமர் 356 சட்டப்பிரிவை ஐம்பது முறை பயன்படுத்தினார், அவர் பெயர் இந்திரா காந்தி. கேரளாவில், ஒரு கம்யூனிஸ்ட் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதை பண்டிட் நேரு கலைத்தார்" என்று பிரதமர் மோதி கூறினார்.

"தமிழ்நாட்டிலும் கூட எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களின் அரசுகள் காங்கிரஸால் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. மகாராஷ்டிராவில் சரத்பவாரின் ஆட்சியும் கவிழ்ந்தது. என்.டி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது என்ன நடந்தது? அவரது அரசைக் கவிழ்க்க முயற்சிகள் நடந்ததை நாங்கள் பார்த்தோம். இப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் எல்லாம் மாநிலத்தில் தங்களுடைய ஆட்சியை இதே காங்கிரஸால் இழந்தன" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: