ஜெயலலிதா மரணம்: சசிகலா மீது ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா?

சசிகலா
    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா, அப்படி முடிவு செய்தால் நேரடியாக நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? நடவடிக்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்?

"விசாரணை ஆணையத்தின் அறிக்கையை நீதிமன்ற உத்தரவுபோல எடுத்துக் கொள்ளக்கூடாது" என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.

"வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது" என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் தவிர, "டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் மும்பை, பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்றும் ஆணையம் குறிப்பிடுகிறது.

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோர் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமா?

ஆனால், "உண்மை கண்டறிவதற்காக அமைக்கப்படும் ஒரு அமைப்பின் அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளலாம், அல்லது ஏற்க மறுக்கலாம். அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை." என்கிறார் வழக்கறிஞர் தமிழ்மணி.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"ஜல்லிக்கட்டு தொடர்பான ராஜேஸ்வரன் ஆணையத்தின் அறிக்கை அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை விரைவிலேயே சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது." என்று அவர் குறிப்பிட்டார்.

கற்பகவிநாயகம்

பட மூலாதாரம், Karpagavinayagam

படக்குறிப்பு, முன்னாள் நீதிபதி கற்பகவிநாயகம்

ஆயினும், "விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் முடிவுகள் வெறும் பரிந்துரைகள் மாத்திரமே. அது எந்த வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கட்டுப்படுத்தாது." என்கிறார் அவர்.

விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யலாமா?

"அதில் எந்தத் தவறும் இல்லை" என்கிறார் தமிழ்மணி.

அதே நேரத்தில், விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும் ஆணையமே அவர்களை விசாரித்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, "விசாரணை ஆணையத்துக்கு சில அதிகார எல்லைகள் இருக்கின்றன. மேலும் உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் இடைக்காலத் தடை விதித்ததன் காரணமாக, நிதி விரயம் என்ற கெட்டபெயர் ஆணையத்துக்கு வரத் தொடங்கியது. அதனால் விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆணையத்துக்கு ஏற்பட்டிருந்தது. அதனால்தான் விசாரணையை அரசிடம் ஆணையம் ஒப்படைத்திருக்கிறது" என்கிறார் தமிழ்மணி.

அடுத்து என்ன நடக்கும்?

அரசின் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்பது சட்ட நிபுணர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

"குற்றம் செய்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய அரசு உத்தரவிட முடியும்" என்கிறார் தமிழ்மணி.

"முதலமைச்சரின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுப்பது பற்றி தொடர்புடைய துறைகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும். அனேகமாக சிபிசிஐடிக்கு விசாரணை நடத்த உத்தரவிடலாம். அவர்கள் வழக்குப் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களின் அலட்சியம், நோக்கம் ஆகியவை குறித்த தகவல்களை அவர்கள் திரட்டுவார்கள். அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். தேவைப்பட்டால் கைதுகூட செய்யலாம்" என்கிறார் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

அரிபரந்தாமன்

பட மூலாதாரம், AriParanthaman

படக்குறிப்பு, முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

ஆணைய அறிக்கையை அரசு கிடப்பில் போட வாய்ப்பிருக்கிறதா?

விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் பெரும்பாலும் 'தோல்வியாகவே' முடிந்திருப்பதாக நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். "விவகாரத்தின் சூட்டைத் தணிப்பதற்காகவே விசாரணை ஆணையங்கள் வழக்கமாக அமைக்கப்படுகின்றன. மிகவும் அரிதாகவே அவை பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன" என்கிறார் அவர்.

1980-களில் திருச்செந்தூர் கோயில் அதிகாரி கொலை வழக்கில் நீதிபதி பால் ஆணைய அறிக்கை போன்ற மிகச்சில விசாரணை அறிக்கைகள் மீதுதான் அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்று அரிபரந்தாமன் குறிப்பிட்டார். 1980-களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, பால் ஆணைய அறிக்கையின் நகலை வெளியிட்டதன் காரணமாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் "அரசு கிடப்பில் போட முடிவெடுத்திருந்தால் அதை சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்" என்கிறார் கற்பக விநாயகம். தற்போது அறிக்கை வெளியாகிவிட்ட நிலையில் அரசு தயக்கம் காட்டினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார்கள்.

அறிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியுமா?

ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை எதிர்த்து அதில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தை நாடலாமா என்று கேட்டபோது, "அவை வெறும் பரிந்துரைகள்தான்; உத்தரவு அல்ல என்பதால் யாரும் நீதிமன்றத்தை நாட மாட்டார்கள்" என்கிறார் அரிபரந்தாமன்.

ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடரும் பட்சத்தில் நீதிமன்றங்கள் அதை ஏற்பதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறார் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

சசிகலா வழக்கறிஞரின் விளக்கம்

விசாரணை அறிக்கையில் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருப்பதாக ஆணையத்தில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகிறார்.

ராஜா செந்தூர் பாண்டியன்
படக்குறிப்பு, என். ராஜா செந்தூர் பாண்டியன், வழக்கறிஞர்

"அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யார் மீது குற்றம் என்பது குறித்து முடிவு செய்யக்கூடாது. சிகிச்சையில் குறைபாடு இருக்கிறதா என்பதை மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. அதை மீறி ஆறுமுகசாமி ஆணையம் செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே கடைசிவரை விசாரிக்கப்படவே இல்லை என்பதும் சந்தேகத்துக்கு உரியது," என்று கூறுகிறார் ராஜா செந்தூர்பாண்டியன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: