ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஊடகங்களில் கசிந்த விசாரணை ஆணைய அறிக்கை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். ஆர். ஷோபனா
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே 18ம் தேதியன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இந்த ஒருநபர் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை 2022 மே,18 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நான்கு தொகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,'ஃப்ரன்ட் லைன்' என்ற ஆங்கில இதழ், 3000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின்படி, "இந்த துப்பாக்கிச்சூடுக்கு காரணமாக தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன், உதவி எஸ்.பி லிங்க திருமாறன் மூன்று இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை காவலர், ஏழு காவலர்கள், இவர்களுக்கு துணை போன தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகள் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன." என்று தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், FACEBOOK/GETTY IMAGES
மேலும், இந்த சம்பவம் எந்த பின்னணியில் நடந்தது என்பது பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விவரங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பொதுமக்களின் கூட்டத்தை கையாளுவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யாருடைய உத்தரவும், துண்டுதலுமின்றி துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
தப்பி ஓடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. தங்களிடம் இருந்து மிகவும் தொலைவில் இருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மறைந்து இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல் துப்பாக்கிச் சூட்டில், காவல்துறையினர் ஆட்சியர் வளாகத்தில் உள்ள பூங்காவில் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிக்கை கூறுகிறது. இதில் போராட்டக்காரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். காவல் நிலையாணைகளின் படி, கூட்டத்தை கலைக்க, போலீசார் எச்சரிக்கை செய்தல், தண்ணீர் பாய்ச்சி அடித்தல், வானத்தை நோக்கி சுடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை ஏதும் செய்யவில்லை.
இதற்கு, உயர் காவல்துறை அதிகாரிகள் காரணம் என்று ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. அவர்கள் 'தங்களது வரம்பை மீறி விட்டார்கள்' என்று கூறி, "குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு" அறிக்கை பரிந்துரைக்கிறது.
அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த என்.வெங்கடேஷ், தனது பொறுப்பில் இருந்து செயல்படாமல் இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக அலட்சியமாக இருந்ததாகவும், தவறான முடிவுகள் எடுத்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
"காவல்துறை அதிகாரிகளை ஒழுங்காக வழிநடத்துவதிலும், கட்டளைகளை திறம்பட வழங்குவதிலும் காவல்துறை உயரதிகாரிகள் தரப்பு தோல்வி அடைந்துள்ளது." மேலும், "பதவி படிநிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடையே முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை" என்றும் அறிக்கை கூறுகிறது.
"இந்த சம்பவத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சத்திலிருந்து 50 லட்சமாகவும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாகவும் இழப்பீட்டை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்." என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை பிரத்யேகமாக வெளியிட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நடந்ததால், அவர்கள் இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஆணையம் ஓர் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இது இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு குறித்து மட்டுமே இருந்தது.
ஏனென்றால், அதிமுக ஆட்சியில் இருந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைவான இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகு, அவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும், அரசுப் பணிக்கு பரிந்துரைக்கவும் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு முழு அறிக்கையும் மே 18ம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது," என்றார்.
இந்த அறிக்கையை அரசு பொதுவெளியில் வெளியிடாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆணையத்தின் விதிகளின்படி, ஓர் ஆணையத்தின் அறிக்கையை பெற்றவுடன், எந்த அரசும் சட்டமன்றத்தில், அதுதொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அதிகபட்சம் ஆறு மாதத்திற்குள் தாக்கல் செய்யவேண்டும். அந்த வகையில், இந்த அறிக்கையை அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக ஞாயிற்றுகிழமையன்று நடக்கவிருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு பத்திரிகையாளர் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மைக்கேல் ஆண்டோஜீனியஸ், "இந்த அறிக்கை எங்களுக்கு 80 சதவீதம் நிம்மதியை அளித்திருக்கிறது. ஆனால், இது மக்களுக்கு சாதகமாக வந்த அறிக்கை என்பதால் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளோம். தமிழக அரசு இந்த அறிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்," என்றார்.
அதே வேளையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் அறிக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை குறித்த தெளிவான விவரம் இல்லை என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன். "இந்த அறிக்கை வெறும் கண் துடைப்பாக மட்டுமே தெரிகிறது. இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்கள் பரிசீலனைக்கு பின் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது அறிக்கை கூறுகிறது.
ஆனால், அருணா ஜெகதீசன் ஆணையம் என்ன கூறுகிறது?
முதலாவது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல்துறையினர் மீது, துறைரீதியான நடவடிக்கையுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இரண்டாவது, மாவட்ட ஆட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
மூன்றாவது, மூன்று துறை வட்டாட்சியர்கள் மீது துறை நடவடிக்கை மற்றும் சட்டத்திற்குட்பட்ட பிற நடவடிக்கைகளைத் தொடங்குமாறு ஆணையம் பரிந்துரைக்கிறது.
ஆனால், சட்டத்துறை அமைச்சரின் அறிக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை மட்டுமா அல்லது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுமா என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது," என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








