தமிழ்நாட்டில் 'காப்பி பேஸ்ட்' செய்யப்படும் உடற்கூராய்வு அறிக்கைகள்? என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்த பிரேத பரிசோதனைகளில் குளறுபடி நடப்பதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் தற்போது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக 'காப்பி பேஸ்ட்' முறையில் பிரேத பரிசோதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை செய்யும் நடைமுறைகளில் குளறுபடி இருப்பதோடு, போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை எனவும் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின் பிரிவு 621-இன் படி குற்ற வழக்கில் மேற்கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனைச் சான்றிதழை, பிரேத பரிசோதனை முடிந்தவுடன், அதே நாளில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் பல சமயங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது.
இதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பரிந்துரைத்த வடிவத்தில் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. மேலும் அங்கீகாரம் இல்லாதவர்கள் கூட பிரேத பரிசோதனை மேற்கொள்கிறார்கள் என மனுதாரர் மனுவில் தெரிவித்திருந்தார்.
விஞ்ஞானபூர்வ அதிகாரிகளின் காலி பணியிடங்கள்
மேலும் மனுதாரர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பொழுது விஞ்ஞானபூர்வ அதிகாரிகளின் (Scientific Officers) பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். சமர்ப்பித்துள்ளார். மருத்துவ அதிகாரிக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையே தொடர்பு அதிகாரியாக இந்த விஞ்ஞான பூர்வ அதிகாரிகள் செயல்படுவார்கள்.
பிரேத பரிசோதனைக்கு முன்பு அவர் இறந்த விதத்தைக் கண்டறிந்து மருத்துவ அதிகாரிக்கு விஞ்ஞானப்பூர்வ அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அதேபோல் மருத்துவம் சார்ந்த அலுவல்பூர்வ விஞ்ஞான ரீதியான தடயங்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். விஞ்ஞானப்பூர்வ அதிகாரிகள் பங்களிப்புடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பட்சத்தில் சான்றிதழில் எந்தவித பிழையும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக கிடைக்க முழுமையாக உதவும்.
ஆனால் தமிழகத்தில் சுமார் 30 மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், மூன்று இடங்களில் மட்டுமே விஞ்ஞானப்பூர்வ அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் காலியிடங்களாக உள்ளன. இந்த விஞ்ஞானப்பூர்வ அதிகாரிகளின் பணியிடங்கள் வேண்டுமென்றே நிரப்பப்படாமல் உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
'கட் காப்பி பேஸ்டில்' பிரேத பரிசோதனை சான்றிதழ்
பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது அங்கே மருத்துவர்கள் இல்லாமல் அங்கீகாரம் இல்லாத நபர்களால் பல நேரங்களில் பிரேத பரிசோதனை நடைபெறுகின்றன. அத்தகைய பரிசோதனை அறிக்கைகளில் மருத்துவர்கள் கையெழுத்து மட்டும் இடுகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 01.04. 2019 முதல் 15.04.2019 வரை நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மேற்கண்ட இரண்டு வாரங்களில் கொலை, தற்கொலை, மற்றும் சாலை விபத்து போன்ற குற்ற வழக்கில் தொடர்புடைய 178 பிரேத பரிசோதனைகள் அரசு மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 57 பிரேத பரிசோதனை அறிக்கைகள் "கட் காப்பி பேஸ்ட்" வடிவில் இருந்ததை உயர் நீதிமன்ற மதுரை கிளை கவனித்தது.
குறிப்பாக, இந்த 57 பிரேத பரிசோதனை சான்றிதழ்களில் பெயர், வயது மற்றும் காவல் நிலையம் தவிர, எந்த மாற்றமும் இல்லாமல், இதய துடிப்பு, வயிற்றில் உள்ள திரவத்தின் அளவு, உடல் உறுப்புகளின் அளவு, அங்க அடையாளங்கள் என அனைத்துமே ஒரே மாதிரி 'கட் காப்பி பேஸ்ட்' செய்து இருப்பது கண்டறியப்பட்டது.

13 உத்தரவுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
மாநிலம் முழுவதும் இதே நிலைதான் யதார்த்தமாக இருக்க வேண்டும் எனக் கூறிய மதுரை உயர்நீதிமன்ற கிளை, பிரேத பரிசோதனையின் போது 13 உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதாவது,
- பிரேத பரிசோதனை முடிந்ததும் அதற்குரிய சான்றை அன்றே நீதிமன்ற நடுவரிடம், மருத்துவ துறைத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- இறந்தவரின் உறவினர்கள் கோரினால் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
- பிணவறைகளில் எந்நேரமும் கண்காணிப்புக் கேமராக்கள் செயல்பட வேண்டும்.
- அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் விஞ்ஞானபூர்வ அலுவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் முறையில் மருத்துவர்களின் வருகை பதிவு செய்ய வேண்டும்.
- அதன் அடிப்படையில்தான் மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
- மேற்கண்ட உத்தரவு அனைத்தையும் பிரேத பரிசோதனை நிலையங்களின் வாயில் முன்பு பொதுமக்கள் அறிந்து கொள்ளும்படி விளம்பர பலகை வைக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 13 உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது.
ஆனால், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்த நிலையில், கடந்த ஐந்து மாத காலமாக பிரேத பரிசோதனை சான்றிதழ் கொடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
மரணத்தில் சந்தேகம்
இது குறித்து கேட்டபோது, "தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி என்றால் தாமதமாக பிரேத பரிசோதனை சான்றுகளை வழங்குவதும் அநீதிதான் என்கிறார் உயிரிழந்த ராமரின் மகள் உமா.
மேலும் இவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, "விவசாயியான எனது தந்தை ராமர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த ஏப்ரல் மாதம் வழக்கம்போல் கூலி வேலைக்குச் சென்ற நிலையில், அவரது உடல் கிணற்றில் மிதப்பதாக என் தாயாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்றபின் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்தபின், எனது தந்தையின் சடலம் மீட்கப்பட்டது." என்றார்.

மேலும், "சந்தேகத்தின் அடிப்படையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு எனது தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மறுநாள் ஏப்ரல் 6ம் தேதி பிரேத பரிசோதனை முடிந்தபிறகு சடலத்தை எங்களிடம் ஒப்பந்ததனர். ஆனால், சான்றிதழ் தரவில்லை. ஒரு மாதம் கழித்து மாறனேரி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கேட்டபோது பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 6 மாதம் கழித்து வரும் என்று காவல் நிலையத்தில் கூறினார். மீண்டும் நான்கு மாதங்கள் கழித்து மாறனேரி காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்னும் வரவில்லை வந்தால் தகவல் தெரிவிக்கிறோம் என்று சொன்னார்கள்" என்று தெரிவிக்கிறார் உமா.
"பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் வழக்கு முறையாக விசாரிக்கப்படும் எனக் கூறுகிறார்கள். எனது தந்தைக்கு நன்றாக நீச்சல் தெரியும் இருப்பினும் கிணற்றில் அவர் எப்படி விழுந்து இறந்து போவார். எனவே எனது தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதால்தான் பிரேத பரிசோதனை அறிக்கை வேண்டும் என்று கேட்கிறோம். தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி என்றால் தாமதமாக பிரேத பரிசோதனை சான்றுகளை வழங்குவதும் அநீதிதான்" என்கிறார் உமா.
நாங்கள் என்ன செய்வது?
ஒரு நாளில் ஒரு மருத்துவர் ஒரு உடற்கூராய்வுசெய்ய குறைந்தது ஒன்றில் இருந்து மூன்று மணி நேரம் ஆகும், அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு மருத்துவர் அதே ஒரு நாளில் எப்படி பதினேழு உடற்கூராய்வுகள் வரை செய்திருக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "மதுரை அரசு மருத்துவமனையில் இரண்டு வாரங்களில் நடைபெற்ற 178 பிரேத பரிசோதனை சான்றிதழ்களை நீதிமன்ற உத்தரவோடு ஆய்வு செய்தபோது அதில் 57 பிரேத பரிசோதனை அறிக்கைகளும் ஒரே மாதிரியாக இருந்தது. 57 சான்றிதழ்களில் ஒரே மாதிரியான இதயம், கல்லீரல், நுரையீரல், அளவு, இரத்த அளவு மற்றும் அங்க அடையாளங்கள் என அனைத்தும் ஒரே மாதிரி 'கட் காப்பி பேஸ்ட்' முறையில் இருந்தது.
இதன் தொடர்ச்சியாக விசாரணை செய்த போது, மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என்கின்ற தகவல் கிடைத்தது. 10 நாட்களுக்கு ஒருமுறை வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர் என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தோம். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின்பற்ற வேண்டும் அதன் பெயரில் தான் சம்பளம் வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மருத்துவ கல்லூரிகள் அதை முறையாக கடைபிடிக்கவில்லை." என்கிறார்.

"குற்ற வழக்கில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது உறவினர்களோ அல்லது நண்பர்களோ பிரேத பரிசோதனையை அவர்களின் செலவில் வீடியோ பதிவு செய்ய விருப்பம் தெரிவித்தால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு. அதேபோல் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால் வழக்கறிஞர் மூலமாக மருத்துவ துறை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரலாம்" என தெரிவிக்கிறார் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன்.
நீதிக்கான வழிமுறைதான் உடற்கூராய்வு
ஒரு பிணத்தை கூராய்வு செய்வது என்பது நீதிக்கான வழிமுறை என்கிறார் எவிடன்ஸ் கதிர்.
மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஒரு மரணத்தின் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு பிணக்கூராய்வு அறிக்கை என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு சடலத்தின் அடையாளத்தை கண்டு பிடிப்பதற்காகவும், இறந்து போன நேரத்தைக் கண்டு பிடிப்பதற்காகவும், மரணம் இயற்கையானதா அல்லது கொலையா ஆகியவற்றை அறியவும் உடற்கூராய்வு என்பது மிக முக்கிய நிலையாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உடற்கூராய்வின் தரம் மிகவும் மோசமானதாக இருக்கிறது என்பது ஆழந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு உடலை கூராய்வு செய்வது என்பது நீதிக்கான வழிமுறை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மதுரையில் நடைபெற்ற ஒரு ஆய்வில் ஏற்கெனவே செய்த உடற்கூராய்வின் அறிக்கையை காப்பி பேஸ்டு செய்து அடுத்த அறிக்கைக்கு பயன்படுத்தியதை கண்டு நீதிமன்றமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இனி சிசிடிவி கேமரா முன்னிலையில்தான் உடற்கூராய்வு செய்ய வேண்டும், பிணக் கூறாய்வு முடிந்தவுடன் அந்த அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க தமிழக சுகாதாரத்துறை செயலரை தொடர்பு கொண்டது பிபிசி தமிழ். அப்போது, " அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விஞ்ஞானபூர்வ அலுவலர்கள் பணி நியமனம் மற்றும் பிரேத பரிசோதனையில் மருத்துவ சட்ட விதிகள் மீறப்படுவது குறித்து முறையாக விசாரிக்கப்படும்" என தமிழக சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













