ஆர்எஸ்எஸ்-இல் உள்ளவர்கள் பற்றிய மமதா கருத்து - வலுக்கும் விமர்சனம்

பட மூலாதாரம், Getty Images
(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(02/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி "ஆர்.எஸ்.எஸ். உள்ள அனைவருமே மோசமானவர்கள் இல்லை, அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள்" என்று கூறியது, காங்கிரஸ், சிபிஎம், ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளின் விமர்சனங்களைப் பெற்றுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, "முன் காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அவ்வளவு மோசமாக இல்லை. அவர்கள் மோசமானவர்கள் என்று நான் நம்பவில்லை. இன்னமும் ஆர்.எஸ்.எஸ்ஸில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை," எனக் கூறினார்.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, 2003-இல் கூட ஆர்.எஸ்.எஸை 'தேசபக்தர்கள் என்று மமதா அழைத்ததாகவும் அதையொட்டி மம்தாவை ஆர்.எஸ்.எஸ் துர்கா என்று அழைத்ததாகவும் நேற்று கூறினார்.
கடந்த சட்டமன்ற தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகள் உட்பட ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத ஒவைசி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக நின்றார்.


மேலும், குஜராத் கலவரத்திற்குப் பிறகு மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்குப் பாதுகாப்பாகப் பேசி வந்தார் என்றும் திரிணாமுல் காங்கிரஸின் முஸ்லிம் முகங்கள் அவருடைய இந்த நேர்மைக்காகப் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் ஒவைசி கூறினார்.
"ஆர்.எஸ்.எஸ்ஸை மம்தா பானர்ஜி பாராட்டுவது இது முதல் முறையல்ல," என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியனார்.
ஒவைசி கூறிய கருத்தையே அவரும் வலியுறுத்தினார்.
"அவர் ஆர்.எஸ்.எஸ். நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இடது முன்னணி அரசை கவிழ்க்க அவர்களுடைய ஆதரவை அவர் கோரினார். அதற்கு முன்பே, பாஜகவின் கருத்தியல் மையமாகக் கருதப்படும் நாக்பூரை தளமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பானர்ஜி நன்றி தெரிவித்தார்," என்றார் அவர்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி
கர்நாடகாவில் மத மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ மக்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "சமீபகாலமாக கர்நாடகாவில் மத மோதல்கள் அதிகரித்துள்ளதால் பல இடங்களில் பொது அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. குடகு, ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் சாவர்க்கர் படம் வைக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது," எனக் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், சிக்மங்களூரு மாவட்டத்திலுள்ள என்.ஆர்.புரா அருகே இருக்கும் ராஜீவ் நகரில் இந்துக்களோடு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியுள்ளனர். சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்துப் பேசிய விநாயக சேவா சங்கத்தின் தலைவர் ஜூபேதா, "நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவன். கடந்த 13 ஆண்டுகளாக ஆர்.என்.புரா நகர பஞ்சாயத்து தலைவராக இருக்கிறேன். இங்கு நீண்ட காலமாக அனைத்து மதத்தினரும் இருப்பதால் நகர பஞ்சாயத்து சார்பில் அனைத்து மத விழாக்களையும் கொண்டாடி வருகிறோம்.
கடந்த 13 ஆண்டுகளாக நான் விநாயக சேவா சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். என் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவில் 3 முஸ்லிம் உறுப்பினர்கள், 2 கிறிஸ்தவ உறுப்பினர்கள் உள்ளனர். எங்களுடைய நகரத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை 3 நாட்கள் கொண்டாட முடிவெடுத்தோம். இதற்காக அனைத்து மதத்தைச் சேர்ந்த குடும்பத்தினரிடமும் நிதி வசூலித்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.
புதன்கிழமை விநாயகர் சிலை நிறுவப்பட்டு, பூஜை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை ஊர்வலமாகக் கொண்டு சென்று ஆர்.என்.புரா ஏரியில் கரைக்கவுள்ளோம். இந்த நிகழ்வில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். இதன்மூலம் எங்கள் நகரில் மட்டுமின்றி நாடு முழுவதும் சமூக நல்லிணக்கத்துடன் வாழலாம் என்ற செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்," என்று கூறினார்.
இதேபோல மண்டியா மாவட்டத்திலும் இந்துக்களோடு முஸ்லிம்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை நல்லிணக்கத்துடன் கொண்டாடினர். 18வது ஆண்டாக நடைபெறும் இந்த சமூக நல்லிணக்க விநாயகர் சதுர்த்து விழாவில் முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
5 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்த வேலைவாய்ப்பு சதவீதம் - பாஜக எம்பி கருத்து
இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு விகிதம் 20.9 சதவீதத்திலிருந்து 10.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தி கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அந்தச் செய்தியில், "பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தி, மத்திய அரசை அடிக்கடி விமர்சித்து வருகிறார். நேற்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு விகிதம் 20.9 சதவீதத்தில் இருந்து 10.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி. பிரதமர் மோதில் 10 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புமாறு அரசு துறைகளைக் கேட்டுக் கொண்டார். ஆனால், எந்தத் துறையாலும் திடமான திட்டத்தை வகுக்க முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இளைஞர்கள் காத்திருப்பார்கள்? என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளதாகஇச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













