"தமிழ்நாட்டில் போதை பொருள் பரவ மத்திய அரசே காரணம்" - அமைச்சர் பொன்முடி

பொன்முடி
படக்குறிப்பு, க. பொன்முடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவலுக்கு மத்திய அரசே காரணம். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மூலமாகவே போதைப் பொருட்கள் உள்ளே வருகின்றன. துறைமுகங்களைத் தனியார் மயமாக்கியதே இதற்குக் காரணம் என தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.கவின் தலைமையகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, போதைப் பொருள் பரவலைத் தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

"தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மாநாடு நடத்தி, ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. என்னதான் தமிழ்நாட்டில் முதல்வரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்தாலும், தமிழ்நாடு மட்டும் முயன்றால் அதை நிறுத்த முடியாது. மத்திய அரசும் இந்தத் திசையில் முழுமையாகச் செயல்பட வேண்டும்," என்று கூறினார்.

இதையடுத்து போதைப்பொருள் பரவலுக்கான மூல காரணமாக அவர் சில விவரங்களை பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:

தனியார்மயத்தால் விளைவு

தமிழ்நாடு குஜராத் போதைப்பொருள்

போதைப் பொருள் இந்த அளவுக்கு பரவியிருப்பதற்குக் காரணமே, மத்திய அரசுதான். குறிப்பாக பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகிறது. அங்கேதான் அதிக நடமாட்டம் இருக்கிறது. குஜராத்தில் உள்ள துறைமுகத்தை தனியார் மயமாக்கி விட்டார்கள். இந்தப் போதைப் பொருள்கள் வெளிநாட்டில் இருந்து வருகிறது. தற்போது அது பல மடங்கு அதிகரித்துவிட்டது. வெளிநாட்டில் இருந்து தனியார் வசம் உள்ள துறைமுகம் மூலமாகத்தான் கடத்தப்படுகிறது.

குறிப்பாக, முந்த்ரா துறைமுகம்தான் இதில் முதலிடத்தில் இருக்கிறது. அதில்தான் அதிகமாக கடத்தல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போதைப் பொருள்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் போதைப் பொருட்களைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைமுகங்களை தனியார் மயமாக்கியதன் மூலமாக பரவும் போதைப் பொருளைத் தடைசெய்ய வேண்டுமென எல்லா எதிர்க்கட்சிகளுமே எடுத்துச் சொன்னோம். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால்தான் தமிழ்நாட்டிலும் இந்தப் பழக்கம் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு விஜயவாடாவிலிருந்து போதைப் பொருள் இங்கே வருகிறது. முந்த்ரா துறைமுகத்திற்கும் விஜயவாடாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதி எழுப்பிய கேள்விகள்

தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பிற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டுதான் இங்கே கொண்டுவரப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மாவட்ட நீதிபதியான பவார் என்பவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். முந்த்ரா துறைமுக அதிகாரிகள் மூலம் இது நடைபெறுகிறதா என்பதை ஆய்வுசெய்யும்படி அந்த நீதிபதி சொல்லியுள்ளார். வெளிநாடுகளில் எப்படி இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து இந்தியாவிலும் அந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த விவகாரத்தில் விஜயவாடாவில் உள்ள ஒரு கப்பல் நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் ஒழுங்கான நிலையை உருவாக்க முடியும். அதனால்தான் துறைமுகங்களை தனியாருக்கு அளிக்கக்கூடாது, அரசே நடத்த வேண்டும் என்று கூறுகிறோம்.

போதைப்பொருள் தடுப்பு

தமிழ்நாட்டில், 2013-2022வரையில் 33.99 கோடி ரூபாய் மதிப்புள்ள 952.1 டன் போதைப் பொருள் இங்கே கைப்பற்றப்பட்டது. ஆனால், ஒரே ஆண்டில் தமிழக அரசின் நடவடிக்கையின் காரணமாக 9.19 கோடி மதிப்புள்ள 152.94 டன் போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2.88 கோடிதான் அபராதம்தான் விதிக்கப்பட்டது. ஆனால், இப்போதே ஒரே ஆண்டில், 2 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளை முடக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளால் 25.5 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அது தவிர, மாணவர்களை உறுதிமொழி எடுக்கச் செய்தோம். இந்திய அரசு இதற்கான முழுமையான நடவடிக்கை எடுக்கும்போது தமிழ்நாட்டில் போதைப் பொருள் நிச்சயம் தடைசெய்யப்படும்.

துறைமுகங்களை தனியாரிடம் கொடுக்கக்கூடாது. அரசிடம் இருந்தால்தான் இதைக் கட்டுப்படுத்தலாம்" என்று கூறியிருக்கிறார்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, டோலோ 650 மாத்திரைகளை விற்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: