உணர்ச்சிக் கதை: வன்கொடுமையால் பிறந்த மகன், தாய்க்கு நீதி வாங்கித் தந்த சம்பவம்

கோப்புப்படம்
படக்குறிப்பு, சித்தரிப்பு படம்
    • எழுதியவர், ஆனந்த் ஜனானே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவிருக்கிறது. தன் தாயின் 12 வயதில் நடந்த அநீதிக்காக 28 ஆண்டுகள் கழித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார், 13 ஆண்டுகளுக்கு முன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகன்.

இதில் நடந்ததும் நடப்பதும் என்ன?

ஆறு மாதங்கள் பாலியல் தொல்லை

28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த வேதனையான சம்பவத்தைப் பற்றி அறிய, பிபிசி, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது வீட்டிலேயே சந்தித்தது. அவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மருமகளுடன் ஒரு எளிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் அவர் விவரித்தார்.

1994 இல் அவருக்கு வெறும் 12 வயதுதான். நடந்ததை நினைவு கூர்ந்த அவர்,"சுமார் 6 மாதங்களாக நான் அவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட நாகி மற்றும் ராசி) நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லை தாண்டுவார்கள். இதெல்லாம் என்னவென்றும் எனக்கு என்ன நடக்கிறதென்றும் ஏன் என்றும் கூட தெரியவில்லை" என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது சகோதரி அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அந்தப் பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

"மருத்துவர் என்னிடம் இதை யார் செய்தார்கள் என்று கேட்டார், நான் பெயர் தெரியாது என்றும் ஆனால் இரண்டு பேர் வந்து என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் சொன்னேன்" என்று அவர் கூறுகிறார்.

"கருக்கலைப்பு செய்து விடலாம் என்று என் அக்கா சொன்னார்கள். ஆனால் நான் மிகவும் இளம் வயதில் இருந்ததால் கருக்கலைப்பு செய்ய முடியவில்லை. இந்தப் பெண் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்று கூறிவிட்டார்கள். எனவே அந்த முயற்சியை கைவிட்டோம்" என்று அவர் நினைவு கூர்கிறார்.

சின்னஞ்சிறு வயதில்…

"அவர்கள் என் இதயத்தில் பயத்தை விதைத்தனர். அவர்கள் என்னை அடித்து, அறைந்து, மிரட்டி மிகவும் பயமுறுத்தினார்கள். இவ்வளவு வருடங்கள் கழித்தும் கூட நான் ஷாஜஹான்பூருக்கு செல்ல விரும்பவில்லை. அவர்கள் என் அக்கா, அவள் கணவர் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதால் நான் மிகவும் பயந்திருந்தேன்."

"வாயைத் திறந்தால் நொடியில் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிடுவதாகவும் எல்லாரும் எரிந்து போய் விடுவோம் என்றும் பயமுறுத்தினார்கள். அந்தச் சிறு வயதில் இப்படி பயம் வந்து விட்டால் என்ன செய்ய முடியும்?

காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கனவு கண்டதாகக் கூறும் இவர், தனக்கு நேர்ந்த இந்தத் துன்பச் சம்பவத்தால், அது கனவாகவே போய்விட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

சித்தரிப்பு படம்

பட மூலாதாரம், ANDRE VALENTE/BBC BRAZIL

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

​​"நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, மிகவும் மெலிந்த தேகத்துடன் இருப்பேன். அப்போது எனக்கு நிறைய கனவுகள் இருந்தன. ஆனால் அந்த இரண்டு நபர்களால், என் கனவுகள் அனைத்தும் பொசுங்கிப் போயின. நான் பள்ளிப்படிப்பைக்கூட தொடரவில்லை."

குழந்தை பிறந்தது; ஆனால் நான் பார்க்கவில்லை

இந்த பீதியான சூழலைத் தவிர்க்கவே, உடனடியாக தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் ராம்பூரில் குடியேறியதாக அவர் கூறுகிறார். வேறு வழியின்றி ராம்பூரில், 13 வயதில், அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

ஆனால் நடந்தது வேறு.

"நான் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேனோ, நான் இவ்வளவு துன்புறுத்தப்பட்டேனோ, நான் அவன் முகத்தை கூட பார்க்கவில்லை. எனக்கு நினைவு வந்ததும், நான் குழந்தை எங்கே என்று கேட்டேன், அதற்கு, வாழ்க்கையில் அந்தக் குழந்தை உனக்கு எப்போதும் கிடைக்காது என்று என் அம்மா சொன்னார்"

அதன் பிறகு 2000-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டது. அவர் திருமணம் செய்து கொண்டார். அதன் மூலம் அவருக்கு மற்றொரு மகன் பிறந்தான். "எனக்கு திருமணமான பிறகு, நான் என் மாமியார் வீட்டிற்குச் சென்றேன். என் வாழ்க்கையில் எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. அந்தச் சம்பவத்தை முழுவதுமாக மறக்க விரும்பினேன். மீண்டும் நினைக்க நான் விரும்பவேயில்லை."

ஆனால் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில், அவருக்கு நடந்த ஒரு சம்பவம் மீண்டும் அவரது வாழ்க்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது என் கணவருக்கு எப்படித் தெரிந்தது என்று எனக்குத் தெரியவில்லை, அவர் என் மீது எல்லா பழிகளையும் போட்டு சண்டையிட ஆரம்பித்தார், நான் சொன்னது எதையும் அவர் கேட்கவில்லை, பின்னர் ஒரு நாள் நான் வீட்டை விட்டு விரட்டப்பட்டேன். நானும் எனது இரண்டாவது குழந்தையும் என் சகோதரியிடம் திரும்பினோம்."

சித்தரிப்பு படம்

13 ஆண்டுகள் கழித்து முதன்முறை சந்தித்த தாயும் மகனும்

இதற்கிடையில், அவரது முதல் மகன் ஒரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் எப்படியோ தன் வளர்ப்பு பெற்றோர் குறித்த உண்மை அவருக்கு தெரிய வந்தது.

"உன்னுடைய அம்மா, அப்பா உன் சொந்தப் பெற்றோர் அல்லர் என்று கிராமவாசிகள் அவனிடம் கூறியுள்ளனர். அப்படித்தான் விஷயம் அவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவனது பிறப்பைப் பற்றிப் பரவலாகப்பேசப்பட்டது.

இதன்பிறகு, (13 ஆண்டுகளுக்குப் பிறகு) ஒரு நாள், பிரிந்த தாயும் மகனும் மீண்டும் மருத்துவமனையில் சந்தித்தனர். குழந்தையைத் தத்தெடுத்த குடும்பத்தினர் குழந்தையை தாயிடமே திருப்பி அனுப்பினர்.

அந்த தருணத்தை நினைவு கூர்ந்த அவர், "என் குழந்தை என்னிடம் திரும்பிய போதுதான் நான் அவனை முதன்முதலில் பார்த்தேன். அதன்பிறகு என்னுடனே வாழத் தொடங்கினான்." என்றார்.

மன உளைச்சலில் மகன்

ஆனால் தாயைச் சந்தித்த பிறகும் மகனது வாழ்க்கை ஏமாற்றமும் வருத்தமுமாகவே தொடர்ந்தது.

காரணம், "அந்தச் சிறுவன் மிகவும் மனச்சோர்வடைந்தான், பள்ளியில் குழந்தைகள் கிண்டல் செய்வதால் அவன் பள்ளிக்குச் செல்லவில்லை, தத்தெடுத்த தந்தையும் தனது பெயரைத் தந்தை பெயராகப் பதிவேட்டில் அளிக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் எவ்வளவு போராட்டத்தையும் கொடுமையையும் அனுபவித்தோம் என்று சொல்ல முடியாது." என்கிறார் இந்த தாய்.

இந்த நிலையில், தன் தந்தை யார் என்பதை அறிய விரும்பினார் மகன்.

"நான் இந்த உலகுக்கு எப்படி வந்தேன், நான் இந்த உலகத்திற்குத் தேவையில்லாமல் வந்தேனா? எனக்குத் தந்தை இல்லை, எனக்கு அடையாளம் இல்லை, இப்படி ஒரு நிலையில், நான் என்ன செய்வேன்?" என்று அவன் வருந்தியதாக அந்தத் தாய் கூறினார்.

இந்நிலையில் இச்சமுதாயத்தில் தாயும் மகனும் மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது.

மகனின் கேள்வி

மகன் விடுவதாயில்லை. தன் பிறப்பு குறித்தும் தனது தந்தை குறித்தும் தாயிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

"சிறுவயதில் நான் அவனைத் திட்டுவேன். ஆனால் படிப்படியாக அவன் வளர வளர மன உளைச்சலுக்கு ஆளாக ஆரம்பித்தான். இந்தப் பெயரற்ற வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. நீங்கள் தெளிவாகச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றான். அவன் தற்கொலை செய்ய முயலும்போது, ​​நான் அவனைக் காப்பாற்றி, விளக்கி, முழு சம்பவத்தையும் சொன்னேன்."

எல்லாவற்றையும் அறிந்த மகன், "இதில் உங்கள் தவறு என்ன? என் தவறு என்ன? நீங்கள் தண்டனையை அனுபவித்தீர்கள். இத்தனை வருடங்களாக இந்தக் களங்கத்தோடு வாழ்ந்து என் வாழ்க்கையையும் அழித்துவிட்டீர்கள். யார் இதைச் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நாம் ஏன் உலகத்திற்கு அஞ்சி வாழ வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினான்.

சித்தரிப்பு படம்

பட மூலாதாரம், ANDRE VALENTE/BBC BRAZIL

மகன் தந்த ஊக்கம்

"என்ன நடந்தாலும் அம்மா, இந்தப் போரில் நாம் போராட வேண்டும், அவர்களுக்கு நான் பாடம் கற்பிக்க வேண்டும் என்று மகன் என்னிடம் சொன்னான், அவர்கள் இதையே வேறு யாருக்காவது செய்திருக்கலாம், நாங்கள் முன்வந்தால், ஒருவேளை, மற்றவர்களும் முன்வராலாம். அது நம் வழக்கை வலுப்படுத்தும், அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். குற்றம் செய்த பிறகு யாரையும் காப்பாற்ற முடியாது என்ற செய்தி சமுதாயத்திற்கு அனுப்பப்படும்." என்று தன் மகன் கூறியதாக அந்தத் தாய் தெரிவித்தார்.

"எஃப்.ஐ.ஆர் போட நிறைய முயற்சி செய்தும், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நேரடியாகச் செய்ய முடியவில்லை. கோர்ட்டுக்குப் போக வழக்கறிஞரை சந்தித்தோம்.

அவர், "இது அவ்வளவு பழைய வழக்கு ஆதாரங்கள் எங்கே கிடைக்கும்." என்றார். அதுவும், அந்த வருடம் நான் அங்கு வாழ்ந்தேன் என்பதை எப்படி நிரூபிக்க முடியும் என்ற பல சிக்கல்கள் இருந்தன. நான் வாழ்ந்த வீட்டைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

வழக்கு பதிவு செய்வதில் சிக்கல்

"குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாம் மாறிவிட்டது. காவல்துறை வழக்கு கூட பதிவு செய்ய மறுத்தது.

பின்னர் ஷாஜஹான்பூரின் தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில், மார்ச் 2021 இல், சதர் பஜார் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதில் ஹசன் மற்றும் அவனது சகோதரர் குட்டு ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஆனால் அப்போதும் கூட 28 ஆண்டுகால வழக்கில் புதிதாக விசாரணையைத் தொடங்குவது எளிதன்று.

"காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கச் சொன்னார்கள், எனவே நாங்களே அவர்களைத் தேடிச் சென்றோம். நான் அவர்களைக் கண்டுபிடித்தேன், நானும் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்களும் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். நீயா பேசுகிறாய்? நீ இன்னும் உயிருடனா இருக்கிறாய்? சாகவில்லையா? என்று கேட்டார்கள். நான் சாகவில்லை, நீங்கள் தான் சாகப் போகிறீர்கள் என்று நான் கூறினேன்"

சித்தரிப்பு படம்

மரபணு சோதனையில் சிக்கிய குற்றவாளிகள்

காவல்துறையும் பாதிக்கப்பட்டவரும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர், ஆனால் அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட டிஎன்ஏ சோதனை அவசியம்.

"எப்ஐஆர் பதிவு செய்யப்படவிருந்தபோது நான் காவல்துறைக்கு தொடர்பு எண்களைக் கொடுத்தேன், அதன் பிறகு நான் டிஎன்ஏ சோதனைக்கு அழைத்தேன். பின்னர் ஹசனின் மரபணு முடிவுகள் என் மகனுடன் ஒத்துப்போயின. அது யாருடைய (மகன்) என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அப்போது இருவரும் மாறி மாறி என்னை துன்புறுத்தி வந்தனர்."

இந்த விவகாரம் குறித்து ஷாஜஹான்பூர் எஸ்எஸ்பி எஸ் ஆனந்த் பிபிசியிடம் கூறுகையில், "இந்த வழக்கு முற்றிலும் எதிர்பாராதது. அந்தப் பெண் முன் வந்து வழக்குப் பதிவு செய்தபோது நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். ஆனால் நாங்கள் ஒரு வாய்ப்பைப் பெற்றோம். முதலில் மகனின் டிஎன்ஏ மூலம் தொடங்கினோம்."

இந்த வழக்கை கடந்த ஓராண்டாக விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் தர்மேந்திர குமார் குப்தா கூறுகையில், "முதலில் குற்றவாளிகள் நோட்டீஸ் கொடுத்து காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை அழைத்து டிஎன்ஏ மாதிரி எடுக்கப்பட்டது. சாம்பிள் எடுத்த பின் மாதிரி டிஎன்ஏ பொருத்தத்திற்கு அனுப்பப்பட்டது. அதனால் பிப்ரவரி 2022ல் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது. மேட்ச் செய்து மாதிரி வந்தது. அவ்வளவு பழைய சம்பவம் என்பதால் நேரடியாக சிறைக்கு அனுப்பியிருக்க முடியாது. அந்தப் பெண்ணும் மருத்துவத்துக்கு மறுத்துவிட்டார்." என்றார்.

'அவர்கள் என் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள்'

இறுதியாக, 31 ஜூலை 2021 அன்று, குற்றம் சாட்டப்பட்டவரைப் போலீசார் கைது செய்தனர்.

எஸ்.எஸ்.பி, எஸ்.ஆனந்த் கூறுகையில், "ராஸி கைது செய்யப்பட்டபோது, ​​எங்களைப் போலவே, அவரும் இந்த பழைய வழக்கு எங்கிருந்து வெளிப்பட்டது என்று ஆச்சரியப்பட்டார்.

"அப்படியானால் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டாரா?" என்று கேட்தற்கு எஸ்.எஸ்.பி எஸ்.ஆனந்த், "ஆம்" என்கிறார்.

முதல் கைதுக்குப் பிறகு, மகன் தாயிடம், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அந்த இரண்டாவது குற்றவாளியும் பிடிபட்டால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்." என்றார்.

ஒருவேளை வரும் காலங்களில் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நேருக்கு நேர் வரலாம்.

"நீதிமன்றத்தில் நான் அவர்களை நேருக்கு நேர் சந்தித்தால், இருவரையும் இரண்டு அறை அறைய வேண்டும் என்பது எனக்கு ஒரே ஒரு ஆசை. அவர்கள் கெடுத்த என் வாழ்க்கைக்கு ஈடாக, எந்தத் தண்டனையும் குறைவு. நான் கடினமான தண்டனை பெற்றுத் தர முயற்சிப்பேன்." என்று அந்தத்தாய் ஆதங்கப்பட்டார்.

சித்தரிப்பு படம்

குடும்பத்தின் நிலை என்ன?

"இப்போது கைதுகள் நடக்கின்றன, நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தோன்றியுள்ளது. "நான் வேலை செய்கிறேன், என் மகனும் வேலை செய்கிறான், இளையவன் இப்போது படிக்கிறான், அவனை ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்பது என் ஆசை. பெரியவன் படிக்கவில்லை. சின்ன வயதிலிருந்தே அடையாளம் ஒரு சிக்கலானதால் அவனைப் பள்ளியில் சேர்க்க முடியவில்லை. குடும்பத்தைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால், எங்கள் குடும்பம் ஒரு நல்ல குடும்பம், இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். உழைத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறோம்."

"என் மூத்த மகன் என்னை மிகவும் வலிமையாக்கிவிட்டான். அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். என் மகன் எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தான், நீங்கள் போராடுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றான்" என்று கூறினார்.

ஆனால், இந்தக் குடும்பம் அந்தச் சம்பவத்திலிருந்தும், பல வருடங்களாக அனுபவித்த சித்திரவதைகளிலிருந்து மீளுமா?

இது குறித்து அவர் கூறுகையில், "இது மிகவும் பழைய விஷயம் தான். ஆனால் அவர்கள் கொடுத்த காயங்கள் இன்னும் ஆறவில்லை. இன்றும் எங்கள் வாழ்க்கை இயல்பானதாக இல்லை. அந்த தருணத்தை மீண்டும் மீண்டும் நினைவுகூர்கிறேன். தங்கள் சுய நலத்துக்காக ஒரு குழந்தையைச் சிதைக்கத் துணியும் ஓநாய்களும் நம்மிடையே இருப்பது என்பது உண்மை தான். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை உள்ளது. இறைவன் அனைவருக்கும் வாழும் உரிமையைக் கொடுத்துள்ளான். மக்கள் பாடம் கற்க வேண்டும் என்பதற்காக மீண்டும் வந்துள்ளேன்." என்கிறார்.

"28 வருடங்களுக்கு முன்பு எனக்கு இதெல்லாம் நடந்தபோது ஊடகம், மொபைல் எதுவுமில்லை. நாமே காவல் நிலையம் செல்ல வேண்டியிருந்தது. இப்போது நீங்கள் வீட்டில் உட்கார்ந்து அழைக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.

அவர் தன் போராட்டத்தால் மற்ற பெண்களையும் ஊக்குவிக்க விரும்புகிறார், "நீங்கள் அவர்களுக்கு எதிராகப் போராடுங்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுங்கள். பிற தாய் மற்றும் சகோதரிகளுக்கு இதுபோன்ற பாலியல் வல்லுறவு அநீதி நடக்கக்கூடாது. மக்கள் அமைதியாக ஒடுங்கிவிடுகிறார்கள். நானும் அமைதியாக ஒடுங்கியிருந்தேன். ஒருவேளை இது நம் விதி என்று நானும் நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. யாராவது உங்களை வேண்டுமென்றே இப்படிச் செய்தால் அது விதியில் எழுதப்படவில்லை. வேறொருவருடன் இதுபோன்ற ஒன்றைச் செய்ய தைரியம் வராமல் இருக்கும் என்பதற்காகவாவது காவல்துறையை நாட வேண்டியது அவசியம்."

இறுதியில், "காவல்துறை நிர்வாகத்தின் முழு ஆதரவும் கிடைத்துள்ளது. ஒருவன் பிடிபட்டான், மற்றவன் கண்டிப்பாகப் பிடிபடுவான்" என்று கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு, மருமகளுக்கு மறுமணம் செய்து அழகு பார்த்த மாமியார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: