20 வருடங்களுக்கு முன்பு தொலைந்த இந்திய பெண் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

வலியுல்லா மரூஃப் (வலது) ஹமீதா பானுவை அவரது குடும்பத்துடன் மீண்டும் சேர்க்க உதவினார்

பட மூலாதாரம், WALIULLAH MAROOF

படக்குறிப்பு, வலியுல்லா மரூஃப் (வலது) ஹமீதா பானுவை அவரது குடும்பத்துடன் மீண்டும் சேர்க்க உதவினார்.
    • எழுதியவர், இஸ்லாமாபாத்திலிருந்து ஷுமைலா ஜாஃபரி மற்றும் மும்பையில் இருந்து அம்ருதா துர்வே
    • பதவி, பிபிசி நியூஸ்

கடந்த 20 ஆண்டுகளாக காணாமல் போன இந்தியப் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ மூலம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் சமையல்காரராக வேலை வாங்கித் தருவதாக ஆட்சேர்ப்பு முகவர் ஒருவர் உறுதியளித்ததை அடுத்து, ஹமீதா பானு 2002ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். ஆனால், தான் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இந்தியாவின் மும்பையில் உள்ள பானுவின் குடும்பத்தினர் பிபிசி மராத்தி சேவையிடம், தாங்கள் இருபது ஆண்டுகளாக அவரை தேடி வந்ததாக கூறினார்கள்.

இறுதியாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொருவரும் அவரை கண்டுபிடிக்க உதவி செய்தனர்.

அண்டை நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பதட்டமான உறவைக் கொண்டுள்ளன. இதனால், பெரும்பாலும் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் எல்லையைத் தாண்டி பயணிப்பது கடினமாக உள்ளது. பானுவின் விஷயத்திலும், பொருளாதார நிலை காரணமாகவும், எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் இருந்ததாலும் அவர் தடுமாறினார்.

ஆனால், பல ஆண்டுகளாக, அவருக்கு தன் குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. இறுதியாக, இந்த ஆண்டு ஜூலை மாதம், சமூக ஊடக ஆர்வலரான வலியுல்லா மரூஃப், பானுவை பேட்டி எடுத்து, அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றினார்.

பானு தனது வளர்ப்பு மகனுடன் கராச்சியில் வசிக்கிறார்.

பட மூலாதாரம், WALIULLAH MAROOF

படக்குறிப்பு, பானு தனது வளர்ப்பு மகனுடன் கராச்சியில் வசிக்கிறார்.

மும்பையில் வசிக்கும் கல்பான் ஷேக் என்ற இந்தியப் பத்திரிகையாளர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் , தன்னை பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்துள்ளார். இது பானுவின் குடும்பத்தினர் அவரைக் கண்டுபிடிக்க உதவியது.

பின்னர் இருவரும் பானுவிற்கும் அவரது மகள் யாஸ்மின் ஷேக்கிற்கும் இடையே வீடியோ அழைப்பை ஏற்படுத்த உதவினார்கள்.

"எப்படி இருக்கிறாய்? என்னை அடையாளம் தெரிகிறதா? இத்தனை வருடங்களாக எங்கே இருந்தாய்?," என்று யாஸ்மின் உணர்ச்சிவசப்பட்டு அந்த வீடியோ அழைப்பில் கேட்கிறார்.

"நான் எங்கே இருந்தேன், எப்படி இருந்தேன் என்று என்னிடம் கேட்காதே. நான் உங்கள் அனைவரையும் காணாமல் மிகவும் வருந்தினேன். நான் விருப்பத்துடன் இங்கு இருக்கவில்லை. எனக்கு வேறு வழியில்லை," என்று பானு பதிலளித்தார்.

பானுவின் பயணம்

மரூஃப் உடனான பேட்டியின்போது, பானு தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு இந்தியாவில் தனது நான்கு குழந்தைகளை வளர்க்க, பொருளாதார ரீதியாக குடும்பத்தைப் பார்த்துக்கொண்டார். முன்னதாக, தோஹா, கத்தார், துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் எந்த பிரச்னையும் இல்லாமல் சமையல்காரராக பணிபுரிந்துள்ளார்.

2002ஆம் ஆண்டு, துபாயில் தனக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்ய ஆட்சேர்ப்பு முகவரை அணுகினார். அந்தப் பெண் 20,000 ரூபாய் கொடுக்குமாறு கேட்டார்.

ஆனால், துபாய்க்கு பதிலாக, பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகருக்கு தான் அழைத்து செல்லப்பட்டதாக பானு வீடியோவில் கூறுகிறார். அங்கு, மூன்று மாதங்கள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

பானு காணாமல் போவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், AMAN SHAIKH

படக்குறிப்பு, பானு காணாமல் போவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்

சில ஆண்டுகளுக்கு பிறகு, அவர் கராச்சி நகரில் வாழ்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் கோவிட் -19 தொற்றுநோயில் இறந்தார். பானு இப்போது தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வருகிறார்.

இதுகுறித்து யாஸ்மின் கூறுகையில், மற்ற இடங்களில் பணிபுரியும்போது, தனது தாய், அவர்களிடம் அடிக்கடி அழைத்து பேசுவார். ஆனால் 2002ஆம் ஆண்டு, அவர் வெளிநாட்டு சென்றபோது, அவர்கள் பானுவின் அழைப்பிற்காக பல மாதங்கள் காத்திருந்தனர்.

இறுதியாக, பானுவின் பயணத்தை ஏற்பாடு செய்த முகவரை அணுகினர்.

"எங்கள் அம்மா நலமுடன் இருப்பதாகவும், எங்களுடன் பேச விரும்பவில்லை என்றும் அவர் எங்களிடம் கூறினார். நாங்கள் எங்கள் தாயைப் பற்றி கேள்விகளை தொடர்ந்து கேட்டோம். பின்னர் அவர் [ஏஜென்ட்] திடீரென காணாமல் போனார்," என யாஸ்மின் மேலும் கூறுகிறார்.

பானு எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்?

கராச்சியில் உள்ள ஓர் உள்ளூர் மசூதியில் உள்ள தலைமை பொறுப்புள்ள மரூஃப், பானுவை 15 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் சந்தித்தாக கூறுகிறார்.

அப்போது, அவர் அந்த பகுதிக்கு வந்து ஒரு சிறிய கடையைத் திறந்ததாக மரூஃப் கூறுகிறார்.

"சிறுவயதில் இருந்தே நான் அவரைப் பார்க்கிறேன். அவர் எப்பொழுதும் மன உளைச்சலில் இருப்பார்," என்று அவர் கூறுகிறார்.

பல ஆண்டுகளாக, மரூஃப் தனது சமூக ஊடக கணக்குகள் வழியாக வங்காளதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட பெண்கள், அவர்களின் குடும்பங்களைக் கண்டறிய உதவிக்கொண்டிருக்கிறார்.

பானுவின் இரண்டாவது கணவர் இறந்த பிறகு, அவர் அடிக்கடி மரூஃப்பின் தாயிடம் தனக்கு உதவுமாறு அவரை கேட்டும்படி கேட்டுக் கொண்டார்.

மரூஃப் அவர் மீது அனுதாபம் காட்டினார். ஆனால் நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவுகளால் தயங்கினார்.

"இந்தியாவை விட்டு விலகி இருக்குமாறு என் நண்பர்கள் என்னை அறிவுறுத்தினர். அது என்னை சிக்கலில் மாட்டிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இனியும் பொறுக்க முடியாது என்று உதவினேன்," என்று அவர் கூறினார். அவரது இந்த முயற்சிகளுக்கு பணம் எதுவும் பெறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அவரது தாய் காணாமல் போனபோது , யாஸ்மினுக்கு (குழந்தையைப் பிடித்துக் கொண்டு இருப்பவர்) வயது 27.

பட மூலாதாரம், AMAN SHAIKH

படக்குறிப்பு, அவரது தாய் காணாமல் போனபோது, யாஸ்மினுக்கு (குழந்தையைப் பிடித்துக் கொண்டு இருப்பவர்) வயது 27.

அந்த பேட்டியில், பானு தனது மும்பை முகவரி மற்றும் குழந்தைகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஷேக் அந்த வீடியோவைப் பகிர்ந்தபோது, அதை யாஸ்மினின் மகன் அமான் பார்த்தார்.

18 வயதான அவர், தனது பாட்டியை சந்தித்ததில்லை. ஏனெனில், பானு காணாமல் போன பிறகே, அவர் பிறந்தார். ஆனால் யாஸ்மின் சட்டென்று பானுவை அடையாளம் கண்டுகொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு, வழக்கின் விவரங்களுடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு பானுவிடம் கேட்டுக் கொண்டதாக மரூஃப் கூறுகிறார். இதனால் அவர்கள் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை தொடங்க முடியும். ஆனால் அது எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியாது.

இதற்கிடையில், பானு தான் வீடு திரும்புவதற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். தன் குழந்தைகளை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

உணர்ச்சிகள் என்பது எல்லைக்கு அப்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன என்கிறார் யாஸ்மின்.

"நாங்கள் அவருக்காக 20 வருடங்கள் காத்திருந்தோம். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த வீடியோவைப் பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. இது ஒரு விசித்திரமான உணர்வு."

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: