இந்தியாவில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்து வருகிறது?

தனியாக வாழும் பெண்கள் அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அலமுரு சௌமியா
    • பதவி, பிபிசி தெலுங்கு சேவை

"சிறுவயதில் இருந்தே, என் அம்மா படும் கஷ்டங்களை நான் பார்த்திருக்கிறேன். குழந்தை பிறப்பது நம் கையில் இல்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழக்கூடாது என்று முடிவு செய்தேன். ஒருமுறை கூட திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் என் மனதில் தோன்றவில்லை. எனக்கு சுதந்திரம் வேண்டும். நான் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாக தேநீர் பருக வேண்டும்," ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்தும் பரணி என்ற 39 வயது பெண் கூறிய வார்த்தைகள் இவை.

"திருமணம் வேண்டாம் என்று நான் முடிவு செய்யவில்லை. இருந்தாலும், எனக்குப் பிடித்த ஒருவர் கிடைத்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என்று முடிவு செய்தேன். யாரென்று தெரியாத ஒருவரை திருமணம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. எனது தனிமையான வாழ்க்கையில் நான் நிம்மதியாக இருக்கிறேன்," ஐடி துறையில் பணிபுரியும் 39 வயதான பூர்ணிமா இவ்வாறு கூறுகிறார்.

"எனக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. என் கணவர் என்னை சித்ரவதை செய்தார். அந்தத் திருமணத்திலிருந்து நான் வெளியேறினேன். அன்றிலிருந்து நான் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை. என் படிப்பு, வேலையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்காக நான் திருமணத்தை எதிர்ப்பவள் அல்ல. என்னைப் புரிந்துகொள்ளும் ஒருவர் கிடைத்தால், நான் திருமணம் செய்துக்கொள்ளவோ அல்லது லிவ்-இன் வாழ்க்கையில் இருக்கவோ தயாராக இருக்கிறேன். இல்லையெனில், இப்போது வாழும் வாழ்க்கையே மிகவும் நிம்மதியாக இருக்கிறது," என்று 37 வயதான பெண் ஷரோன் கூறினார்.

தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சமீபத்திய அரசு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இளம் தலைமுறையினர் திருமணம் செய்யாமல் தனியாக வாழ விரும்புகின்றனர். புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள 'யூத் இன் இந்தியா 2022' அறிக்கையின்படி, திருமணம் செய்யாமல் தனிமையில் இருக்கும் ஆண்களும் பெண்களும் அனைத்து வயதினரிடமும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 25-29 வயதுக்குட்பட்டவர்கள்கூட திருமணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் 2011 முதல் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே திருமணமாகாத பெண்களின் சதவீதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆண்களிடையே 12% அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் வெளியிடப்பட்ட 'மாதிரி பதிவு ஆய்வு அறிக்கை, 2019' படி, இந்தியாவில் தனியாக வாழும் ஆண்களின் சதவீதம் 1.5% ஆகவும், தனியாக வாழும் பெண்களின் சதவீதம் 5.2% ஆகவும் இருந்தது. தனியாக வாழும் பெண்கள் என்பது விவாகரத்து பெற்ற அல்லது கணவனைப் பிரிந்த அல்லது கைம்பெண் பெண்களைக் குறிக்கிறது.

மாநில வாரியாகப் பார்க்கும்போது, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தனித்து வாழும் பெண்களின் சதவீதம் அதிகம். இது கேரளாவில் 9.2% ஆகவும், தமிழ்நாட்டில் 8.9% ஆகவும் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 7.6% மற்றும் 7.0% ஆகவும் உள்ளது.

ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை தனியாக வாழும் ஆண்களை விட அதிகமாக உள்ளது.

"திருமண வாழ்க்கையில் பெண்கள் பல வரைமுறைகளையும், நிபந்தனைகளையும் சந்திக்க வேண்டும்"

நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் பெண்கள் பல வரைமுறைகளையும் நிபந்தனைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் பரணி. பெரிய நகரங்களில் நிலைமை மாறியிருந்தாலும், கிராமங்களில் இன்றும் இதே நிலைதான், என்றார்.

"எனது பெற்றோர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அவர்கள் இளம்வயதிலேயே திருமணம் செய்து கொண்டனர். எனது தந்தை நன்றாக படித்தவர், நல்ல வேலையில் இருந்தார். அவர் குடிபோதையில் தினமும் என் அம்மாவை அடிப்பார். என் அம்மா தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்காக மட்டுமே வாழவேண்டிய நிலை.

மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஓர் ஆண் குழந்தைக்காக முயற்சித்தனர். என் தங்கையை என் கைகளில் பிடித்துக் கொண்டு, 7 மாத கர்ப்பிணித் தாயை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்," என்று பரணி தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"என் அம்மாவுக்கு 9-10 பிரசவங்கள் ஆகியிருக்கின்றன. அதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நான் மூத்த குழந்தை என்பதால் நான் அவருடைய பிரசவத்தின்போது அவருடன் தங்குவேன்.

தனியாக வாழும் பெண்கள் அதிகரிப்பு

எங்களுடையது பெரிய குடும்பமாக இருந்ததால் அம்மா சரியாக ஓய்வெடுத்ததில்லை. பிரசவம் முடிந்து மறுநாள் வயிற்றில் துணி கட்டிக்கொண்டு வீட்டு வேலை செய்வார். இதையெல்லாம் பார்த்து நான் நோந்துப்போனேன். நான் இளம் பருவத்தில் இருந்தபோதுகூட திருமணம் பற்றிய எண்ணம் இருந்ததில்லை. ஒரு நாள்கூட ஆண் துணைப் பற்றி நான் கனவிலும் நினைத்ததில்லை."

"எனக்கு ஒரே ஒரு குறிக்கோள் இருந்தது. நன்றாகப் படிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், என் அம்மாவையும் சகோதரிகளையும் இந்தக் கூண்டிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும். குடும்ப வன்முறையுடன், பெண்களுக்கு சுதந்திரமும் உரிமைகளும் இல்லாதது, குழந்தை பிறப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், ஆண் குழந்தையை குடும்பத்தின் பெருமையாக நினைப்பது ஆகியவற்றால் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன்," என்றார் பரணி.

குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் தனக்கு ஒருவித பயம் இருப்பதாகவும், பாலியல் உறவுக்கு பயப்படுவதாகவும் அவர் கூறுகிறார். வீட்டில் உள்ள பெரியவர்கள் திருமண பொருத்தம் கொண்டு வருவார்கள். ஆனால், எனக்கு குழந்தை வேண்டாம் என்று சொன்ன கணமே அவர்கள் திரும்பி சென்று விடுவார்கள்.

"எனக்கு அன்பு தேவை. அதற்கு மேல் எனக்கு எதுவும் வேண்டாம். தனிமையான வாழ்க்கை வாழ்வதே சிறந்தது. இது நானே சொந்தமாக எடுத்த முடிவு. இப்போது மகிழ்ச்சியாக வாழ்கிறேன்," என்றார் பரணி.

"பகல் முழுவதும் படபடக்கும் வண்ணத்துப்பூச்சியாக இருப்பேன் - இரவில் பயத்தில் நடுங்கினேன்"

திருமணமாகி விவாகரத்தான 37 வயது தலித் பெண்ணான ஷரோனின் வாழ்க்கை பயணம் வேறு. கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷரோன் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். அது காதல் திருமணம்தான். இருப்பினும், அவர் தினமும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதையை அனுபவித்தார்.

"நான் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தேன், அந்த கிராமத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி கற்பது மிகவும் அரிது. ஆனால், எங்கள் பெற்றோர் என்னையும் என் சகோதரிகளையும் படிக்க வைத்தனர். இருப்பினும், அவர்கள் எப்போதும் தங்கள் மகள்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்தனர். அதனால் எனக்கு சிறுவயதில் திருமணம் நடந்தது. என்னை காதலிப்பதாக ஒருவர் என் பின்னால் சுற்றினார். என் பெற்றோரிடம் பேச சொன்னேன்.அவர் வேற சாதி. ஆனால் அவை எல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை என்றார்.

எல்லாம் ஒழுங்காக இருந்த எனக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால், அவருடன் என்னால் பாலியல் உறவில் ஈடுபட முடியவில்லை. நான் இனம் புரியாத பயத்தில் மூழ்கினேன். அதனால் அவர் என்னை பாலியல வல்லுறவு செய்ய ஆரம்பித்தார். தினமும் என்னை பாலியல் வல்லுறவு செய்து வந்தார். நான் ஒரு நாள் கர்ப்பமானேன்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அவருக்கு மது பழக்கம் இருந்தது. தினமும் இரவு என்னை அடிப்பது வழக்கம். என் குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை ஒரு நாள் கூட என்னை அடிக்காமல் இருந்ததில்லை. என் உடம்பில் இருந்த தழும்புகள் எல்லோருக்கும் தெரியும், அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். இவையனைத்தும் எனக்கு ஏற்படுத்திய உளவியல் ரீதியான பாதிப்புடன் இன்றும் நான் வாழ்கிறேன்.

பள்ளியில் பணிபுரியும் காலமெல்லாம் நான் பட்டாம்பூச்சி போல இருந்தேன். வீட்டுக்குள் நுழைந்த கணமே பயத்தில் நடுங்குவேன். நான் நிறைய உளவியல் அதிர்ச்சிகளை சந்தித்தேன்.

"ஷரோன் தனது குழந்தைப் பருவத்தில் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் மற்றும் சிவில் சேவையில் சேர வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், அந்த கனவுகள் எதுவும் நிறைவேறாமல் திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத் சென்றவுடன் அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்தார். பி.எட் படிப்பில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி முடித்தார். இதழியல் துறையிலும் பயிற்சி பெற்றார். அதே நேரத்தில், அவர் சிவில் சர்வீசஸ்ஸுக்குத் தயாராக ஆரம்பித்தார்.

'தனிமை சில நேரங்களில் வலிக்கும்'

நிதிச் சிக்கல்கள், உடல்நலப் பிரச்னைகள் அல்லது மனரீதியாக சோர்வடைந்த போதெல்லாம் தனக்கு ஒரு துணை தேவை என்று உணர்வதாக ஷரோன் கூறுகிறார்.

ஷரோன் தனது குழந்தையே தனக்கு மிகப்பெரிய சொத்து என்றும் தன் மகன் தன்னை நன்கு புரிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

"அவன் இன்னும் சிறுவன்தான். அதனால், அப்பா இல்லாமல் பள்ளியில் அவன் சங்கடத்தை எதிர்கொள்வானோ என்று பயந்தேன். ஆனால், என் குழந்தை மிகவும் தைரியமானவன். 'அம்மா விவாகரத்து பெற்றதாக சொல்கிறேன். விவாகரத்து பெறுவதில் என்ன தப்பு?'', என்று கூறுவான்

தனியாக வாழும் பெண்கள் அதிகரிப்பு

இருப்பினும், ஒரு பெண்ணாக தனக்கு பாலியல் உரிமைகள் இருப்பதாகவும், சில சமயங்களில் அதை ஏன் தவறவிட வேண்டும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறுகிறார்.

"எனக்கு பிடித்த ஒருவர் கிடைத்தால், நான் திருமணம் செய்துகொள்ளவோ அல்லது லிவ்-இன் வாழ்க்கையில் இருக்கவோ தயாராக இருக்கிறேன். இல்லையெனில், இப்போது வாழும் வாழ்க்கையே மிகவும் நிம்மதியாக இருக்கிறது," என்று ஷரோன் கூறினார்.

'இது வேண்டுமென்றே எடுத்த முடிவு அல்ல...அப்படி நடந்தது'

ஐ.டி துறையில் பணிபுரியும் பூர்ணிமா தனக்கு விருப்பமான ஒருவரைக் கண்டுபிடிக்க முடியாததாலும், பெற்றோர்கள் பார்த்த வரன் எதுவும் பிடிக்கவில்லை என்பதாலும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

தனியாக வாழும் பெண்கள் அதிகரிப்பு

"தாமதமாகிறது என்பதற்காக, பழக்கமில்லாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. 36 வயதில் என்னைச் சுற்றியிருந்தவர்கள் நான் எப்படியாவது திருமணம் செய்துகொள்வேன் என்ற எண்ணத்தில் இருந்தனர். அவர்கள் தங்கள் வழிகளில் முயற்சித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை." என்கிறார் பூர்ணிமா.

"திருமணமாகாத பெண்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பது கடினம்"

திருமணமாகாத பெண்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்று என்றார் பரணி. ஹைதராபாத், பெயருக்காக ஒரு பெரிய நகரமாக இருந்தாலும், இங்குள்ள மக்களின் எண்ணம் மாறவில்லை என்றும், திருமணமாகாதவள் என்று ஒரு பெண் சொன்னால் அவர்கள் சந்தேகப் பார்வையை வீசுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற அனுபவங்களை தானும் எதிர்கொண்டதாக பூர்ணிமா கூறியுள்ளார். பெங்களூரில் பணிபுரியும் பூர்ணிமா 3-4 மாதங்கள் வீடு தேட வேண்டியிருந்தது. இவ்வளவு பெரிய நகரத்தில் இருந்தாலும், பணக்காரர்கள் வசிக்கும் இடங்களில்கூட, தனியாக இருக்கும் பெண்களுக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை என்று முகத்தில் அடித்தாற் போல் கூறுவார்கள் என்றார் பூர்ணிமா.

'என் ஒவ்வொரு சிரிப்பையும் நான் ஏன் நியாயப்படுத்த வேண்டும்?'

பூர்ணிமா தனது தொழிலை மிகவும் விரும்புகிறார். அதோடு, கதைகள் எழுதுவது, ஓவியம் தீட்டுவது, புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது போன்றவற்றை விரும்புகிறார். அவர் தன்னை எப்போதும் ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்கிறார்.

"நான் என் வேலையில் மும்முரமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில சமயங்களில் சோகமாக இருக்கும் போது அழுவேன், அதன் பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டு புன்னகையுடன் வெளிவருவேன். பலருக்கு என் புன்னகையில் பல கேள்விகள் இருக்கும். திருமணமாகாமல் நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கேட்கிறார்கள். என்னுடைய ஒவ்வொரு சிரிப்புக்கும் நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?" என்று பூர்ணிமா கேள்வி எழுப்பினார்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சில வாழ்வு முறைகள் சமூகத்தில் மிகவும் வேரூன்றியுள்ளதாக அவர் கூறுகிறார்.

அதேபோல, எனது வயதைக் கணக்கிட்டு எங்களை 'திருமணமானவர்களாக' பதிவு செய்கிறார்கள். நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இத்தகைய சூழ்நிலையை சந்தித்திருக்கிறேன்." என்று பூர்ணிமா கூறினார்.

கோவிட் ஊரடங்கு கருத்துகளை மாற்றியதா?

கோவிட் ஊரடங்கு தனக்கு எந்த குறிப்பிட்ட பிரச்னையையும் உருவாக்கவில்லை என்றும், தனது மகன், சகோதரி மற்றும் சகோதரர் தன்னுடன் இருந்ததால் தான் தனிமையில் இருக்கவில்லை என்றும் ஷரோன் கூறினார்.

ஆனால், ஊரடங்கு சற்றே கடினமாக இருந்ததாக உணர்தேன் என்று பரணி கூறினார். அந்த நேரத்தில் அவர் மிகவும் தனிமையாக உணர்ந்தார்.

"நான் பயந்தால், நான் சுவாசிக்க சிரமப்பட்டால், எனக்கு தண்ணீர் கூட கொடுக்க ஆள் இல்லை, ஆனால், மறுபுறம், இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் சிரமத்துடன் வாழ வேண்டுமா என்ற உணர்வு. தனிமையை விட நான் என் சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ என்று பயப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.

தனியாக வாழும் பெண்கள் அதிகரிப்பு

கோவிட் சமயத்தில் பூர்ணிமா தன்னார்வப் பணிகளைச் செய்தார். உண்மையில், ஊரடங்கு காரணமாக அவரது பார்வை நேர்மறையாக மாறியுள்ளது.

"நான் தன்னார்வப் பணி செய்யும் போது நிறைய விஷயங்களை கவனித்தேன். பலர் தங்கள் உறவுகளை இழந்தனர். நாளை இருப்போம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இன்றுதான் முக்கியம். இந்த அனுபவம் எனது நேர்மறையான பார்வையை மேம்படுத்தியது,' என்கிறார்.

'ஸ்டேட்டஸ் சிங்கிள்' குழு

கடந்த ஒரு தசாப்தமாக தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இன்றைய நிலவரப்படி நாட்டில் 7 கோடிக்கும் அதிகமாக தனியாக வாழும் பெண்கள் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அப்படிப்பட்ட பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் 'ஸ்டேட்டஸ் சிங்கிள்' என்ற பெயரில் ஒரு குழு உள்ளது. இது 2020இல் உருவாக்கப்பட்டது. இந்த குழுவை உருவாக்கியவர்கள் 7.4 கோடி பேர் தனியாக வாழும் பெண்களின் கதைகளுக்கு குரல் கொடுப்பதற்காக குழுவை உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.

"இது திருமணமாகாத, கைம்பெண்கள், விவாகரத்து பெற்ற, கணவரை பிரிந்த வாழும், கைவிடப்பட்ட, LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளியாக உள்ள தனியாக வாழும் பெண்களுக்கான சமூகமாகும். அவர்கள் தங்கள் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தற்போதைய வாழ்க்கை நிலைகளிலிருந்து தீர்வுகளைத் தேடவும் மற்றும் அந்தப் பயணத்தில் மற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கவும் தயாராக உள்ளனர்," என்று அவர்கள் குழுவின் முகப்பில் எழுதியுள்ளனர்.

இது தனியாக வாழும் பெண்களுக்கு மட்டுமே. இந்த குழுவில் 2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

சில நம்பிக்கைகள் சமூகத்தில் வேரூன்றியிருக்கின்றன. தனிமையில் இருக்கும் பெண்கள் பல்வேறு வகையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் அவர்களின் மனதை விட்டு பேசவும் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் இந்த குழு உதவியாக உள்ளது என்று பூர்ணிமா கூறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: