மனைவியின் ஆசைப்படி இறுதி ஊர்வலத்தை மேளதாளத்துடன் பிரமாண்டமாக நடத்திய கணவர்

பட மூலாதாரம், SRINATH SOLANKI
குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரில் வசிக்கும் ஸ்ரீநாத் சோலங்கி, தன் காதல் மனைவி மோனிகாவின் ஆசைக்காக, பிரமாண்டமாக மேள தாளங்களுடன் இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளார்.
"நான் உனக்கு முன்பே செல்வேன். நான் போகும்போது நீ அழக்கூடாது. திருமணத்தின்போது மேளதாளங்களோடும் வாத்தியங்களோடும் வந்ததைப் போலவே என்னை கல்லறைக்கும் நீ கொண்டு செல்ல வேண்டும்."
ஐந்து வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு அகால மரணமடைந்த ஜூனாகத்தை சேர்ந்த மோனிகா சோலங்கியின் வார்த்தைகள் இவை.
மனைவியின் மரணத்திற்குப் பிறகு, கணவர் மிகவும் ஆர்வத்துடன் தனது சத்தியத்தை நிறைவேற்றினார். மேள தாளங்களுடன் மனைவியின் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
ஜூனாகத்தில் வசிப்பவரும் ஒளிப்படக் கலைஞருமான 30 வயதான ஸ்ரீநாத் சோலங்கி, மேளதாள இசையோடு தனது மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்குப் பிரியாவிடை கொடுத்ததோடு, தனது மனைவியின் கண்களையும் தானம் செய்தார். அதோடு, ரத்த தான முகாம் ஒன்றையும் ஏற்பாடு செய்து 37 பாட்டில் ரத்தம் சேகரித்தார்.


மோனிகாவும் ஸ்ரீநாத்தும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்ற மோனிகா, வளைகாப்பு முடித்து தன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். 9 மாத கர்ப்பிணியான அவருக்குத் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின்போது, தாய் அல்லது சேய் இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆனால், பிரசவத்தின்போது தாய், சேய் இருவரையுமே காப்பாற்ற முடியவில்லை. ஸ்ரீநாத்தின் குடும்பத்திற்கு இது பேரிடியாக இருந்தது. இந்நிலையில், தன் இறுதி ஊர்வலம் பிரமாண்டமாக நடக்க வேண்டும் என்ற மோனிகாவின் வாழ்நாள் விருப்பத்தை ஸ்ரீநாத் நிறைவேற்றினார்.
அதுகுறித்துப் பேசிய ஸ்ரீநாத், "அந்த நிறைமாச கர்ப்பினிகிட்ட இருந்து ஒரு நல்ல செய்தியத்தான் எதிர்பார்த்தோம். ஆனா... அவளுக்கு உடம்பு சரியில்ல. ஹாஸ்பிட்டல் சேத்திருக்கோம்னு தான் செய்தி வந்துச்சு. அதுக்கு மேல ஏதும் தெரியலன்னு சொல்லிட்டாங்க," என்றார்.
உயிரிழந்த மோனிகாவின் கணவர் ஸ்ரீநாத் சோலங்கி, பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசுகையில், "ஒருமுறை நானும் மோனிகாவும் கேலியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, நான் போன பிறகு நீ அழுவாய் என்று கேலியாகச் சொன்னேன். அப்போது அவள், 'நான் உனக்கு முன்னாலேயே போகிறேன். ஆனால், நான் போகும்போது நீ அழக்கூடாது. திருமணத்தில் டிரம்ஸ், பேண்ட் வாசிப்பதைப் போல, நான் போகும்போதும் வாசித்துக் கொண்டு செல்ல வேண்டும்,' என்றாள்.
"மோனிகா மரணத்தின்போது எனக்கு அது நினைவுக்கு வந்தது. அதனால், என் மனைவி மோனிகா மற்றும் பிறந்து இறந்த பெண் குழந்தையின் இறுதிச் சடங்கை பேண்ட் வாத்தியங்களோடு நடத்துவது என்று முடிவெடுத்தேன். யாரையும் பொருட்படுத்தாமல் நானும் என் குடும்பத்தினரும் இந்த முடிவை எடுத்தோம்," என்றார்.

பட மூலாதாரம், SRINATH SOLANKI
அவர்களுடைய திருமணம் குறித்துப் பேசும்போது, "எனக்கும் மோனிகாவுக்கும் இடையேயான காதல் இறுதியில் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக நடைபெற்றது.
நான் திருமண ஒளிப்படங்கள் எடுக்கிறேன். அதனால், எனது பணியின் ஒரு பகுதியாக மோனிகாவின் உறவினர் திருமணத்தில் படமெடுக்கச் சென்றிருந்தேன்.
நாங்கள் சந்தித்த பிறகு,மோனிகா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டாள்.
சில காலம் பழகியபிறகு, திருமணம் குறித்த பேச்சு வந்தது. ஆனால், எனக்கு அப்போது வயது 20, மோனிகாவுக்கு 18 வயது. திருமண வயதுக்கு எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தன.

பட மூலாதாரம், SRINATH SOLANKI
எங்களுக்கு 2013ஆம் ஆண்டு அக்டோபரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாங்கள் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று திருமணம் செய்துகொண்டோம்," என்று கூறினார் ஸ்ரீநாத் சோலங்கி.
மேலும், "திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தைப் போலவே, கடவுள் எங்களுக்குப் பெண் குழந்தையைக் கொடுத்தார். ஆனால், அவளால் இந்தப் பூமியில் 3-4 நிமிடங்களே சுவாசிக்க முடிந்தது," என்கிறார்,
"அவள் மிகவும் மகிழ்ச்சியான, ஜாலியான சுபாவமுள்ளவள். எப்போதும் சிரிச்ச முகமாக இருப்பாள். நான் இருப்பதால் என் அருமை உனக்கு இப்போது தெரியவில்லை. நான் இல்லாமல் போனால் தான் உனக்குப் புரியும் என்று சொல்வாள். என்னால் அதைத் தாங்கவே முடியாது.
இந்த மாதிரி பேசுவதை நிறுத்தச் சொல்வேன். அப்போதுகூட ஒருமுறை, டியர் என்று கூப்பிட்டு, நான் இறந்தால் இசை வாத்தியங்களோடு, நீ ஆடிக் கொண்டே என் உடலைச் சுடுகாடு வரை எடுத்துப் போக வேண்டும் என்று கூறினாள்," என்கிறார் ஸ்ரீநாத்.

பட மூலாதாரம், SRINATH SOLANKI
"மோனிகாவுக்கு படம் பார்ப்பதில் அலாதிப் பிரியம். ஜூலை 16ஆம் தேதியன்று, மோனிகா ஒரு முழு திரையரங்கத்தின் டிக்கெட்டுகளையும் வாங்கியிருந்தாள். முழு திரையரங்கிலும் நாங்கள் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்த்தோம். கடந்த வாரம் என்னிடம் புதிதாக வெளியான குஜராத்தி படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டாள்," என்றார்.
"ஜூலை 21ஆம் தேதியன்று மதியம் 12:30 மணியளவில், என் மாமனார் என்னிடம் மோனிகாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறினார். நாங்கள் உடனடியாகக் கிளம்பிச் சென்றோம். அங்கு சென்றுகொண்டிருந்த போதே, மோனிகாவுக்கு அதீத ரத்த அழுத்தத்தால், மூளை ஸ்டிரோக் ஏற்பட்டதாகவும் மருத்துவர் குழந்தையையாவது காப்பாற்ற முயன்றார் என்றும் ஆனால் குழந்தையும் பிறந்து 3-4 நிமிடங்களிலேயே இறந்துவிட்டதாகவும் செய்தி வந்தது," என்றார்.
மோனிகா எப்போதும் பிறருக்கு உதவ விரும்புபவர். அவர் உயிரிழந்த பிறகும் அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. அவருடைய நினைவாக ரத்த தான முகாமும் நடத்தப்பட்டது என்கின்றனர் மோனிகாவின் குடும்பத்தினர்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














