மாணவர்கள், மாணவிகள் கோ-எட் பள்ளிகளில் படிப்பது வாழ்வியல்ரீதியாக நன்மை பயக்குமா?

ஆண்,பெண் பள்ளிகள் தனித்தனியாக இருப்பது சரியா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்
    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

(இன்று சர்வதேச மாணவர்கள் தினத்தை முன்னிட்டு இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.

"பெண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு ஆண்- பெண் சேர்ந்து படிக்கும் கோ-எட் கல்லூரியில் சேர்ந்தபோது, ஆண்கள் இருந்த இடத்தில் பேசுவதற்கே எனக்கு தன்னம்பிக்கை வரவில்லை.

நான் நன்றாகவே பேசினாலும் அவர்கள் கேலிதான் செய்வார்கள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டிருந்தேன். அது வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளவிடாமல் என்னைத் தடுத்தது," என்கிறார் பெண்கள் பள்ளியிலேயே முழுவதுமாக தனது பள்ளிப் படிப்பை முடித்த கீதாஞ்சலி.

"பள்ளிப் படிப்பைத் தொடங்கியது முதல் 12-ஆம் வகுப்பு வரை நான் படித்தது முழுக்கவே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான். கல்லூரியும் பெண்கள் கல்லூரியாகப் பார்த்துதான் சேர்க்க வேண்டுமென்று குடும்பத்தினர் கூறினார்கள். ஆனால், என் அம்மாவின் வலியுறுத்தலின் பேரில் இருபாலரும் படிக்கக்கூடிய கோ-எட் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன்.

பெண்கள் வட்டத்திலேயே இருந்துவிட்டு வெளியே வந்தபோது, ஆண்களிடம் பேசவே மிகவும் தயங்கினேன். கல்லூரியில் சேர்ந்த புதிதில், ஒரு கூட்டத்தின் முன்னால் பேசுவதிலோ, படிப்பு சார்ந்து ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுவதிலோ எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தது.

ஆண்களே வந்து பேசினாலும், அவர்களிடம் எப்படிப் பேசுவது என்று தயங்கினேன். ஆண்களிடம் நேருக்கு நேராக கண்களைப் பார்த்துப் பேசவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. கல்லூரியின் இறுதி ஆண்டுக்கு வந்தபோது தான், ஓர் ஆண் என்ன மாதிரியான அணுகுமுறையில் என்னிடம் பேசவோ பழகவோ வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்," என்கிறார்.

"முன்பு ஆண்கள் அனைவருமே தவறானவர்கள் என்று நினைத்தேன். பிறகு, பெண்களிடம் பேச வரும் அனைத்து ஆண்களுமே தவறானவர்கள் இல்லை. அனைவருமே காதலிக்கும் எண்ணத்தோடு அணுகுவதில்லை. நட்போடும் பழகுவார்கள். அனைவருமே கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள், பண்பாகவும் பழகுவார்கள் என்பதை நான் புரிந்துகொள்ள வருடங்கள் ஆனது.

குறிப்பாக, பணியிடத்தில் ஏதோவொரு விஷயத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கும்போதோ அல்லது மாற்றுக் கருத்து இருக்கும்போதோ அதை ஆண்களிடம் எடுத்துச் சொல்வதற்கு நீண்ட நேரமும் சிரமமும் ஆனது. இதுவே, இருபாலர் கல்வி நிலையத்தில் தொடக்கத்தில் இருந்தே படித்து, எங்களுக்கு ஆண்களோடு சமமாகப் பழகுவதற்கான, கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தால், அந்த சிக்கல்கள் இருந்திருக்காது. பாலின சமத்துவம் என்றால் என்னவென்று எனக்குத் தெரிந்திருக்கும். ஆரோக்கியமான போட்டியை என்னால் வழங்கியிருக்க முடியும்," என்கிறார் கீதாஞ்சலி.

இயல்பாகப் பழகுவதில் சிக்கல்

இந்த சமுதாயத்தில் ஒரு விஷயத்தைச் செய்வதில் நம் மீது நமக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது குறித்து நாமே சுய மதிப்பீடு செய்து கொள்ளவேண்டும் என்று கூறும் கீதாஞ்சலி, "இந்தச் சமுதாயத்தில் அனைத்து பாலினத்தவர்களும் இருக்கிறார்கள். இருந்தும் நான் பெண்களிடையே தான் இருப்பேன், ஆண்களிடையே நம்பிக்கையுடன் என்னால் செயல்பட முடியாது என்று நாம் தவிர்த்துவிட முடியாது. இருபாலர் கல்வி நிலையங்கள் இந்தத் தடைகளைத் தாண்டுவதை மிகவும் எளிதாக்கும்," என்கிறார்.

ஆண்,பெண் பள்ளிகள் தனித்தனியாக இருப்பது சரியா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

கல்லூரியில் தொடங்கி பணியிடம் வரை நீண்ட காலமாகப் பல்வேறு முயற்சிகள், தயக்கங்கள் ஆகியவற்றைக் கடந்து இன்று தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக இருக்கிறார் கீதாஞ்சலி. ஆனால், இவரைப் போலவே அனைத்து பெண்களும் இருப்பதில்லை. இன்றளவும் பெண்கள் பள்ளியிலேயே, கல்லூரியிலேயே படிப்பை முடித்த பல பெண்கள், பணியிடங்களிலும் வெளியுலகிலும் இன்னமும் ஆண்களிடம் பழகுவதில், தங்களுக்கான வாய்ப்புகளை தன்னம்பிக்கையோடு பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அது அவர்களது வளர்ச்சியில் ஒரு பெரிய சவாலாகவே கூட இருந்து வருகிறது.

கேரள மாநிலத்தின் முடிவு

அத்தகைய தாக்கங்களைத் தவிர்க்க வேண்டும், பாலின சமத்துவம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, கேரள மாநிலத்தின் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு வாரியம் அடுத்த கல்வியாண்டில் இருந்து கேரளா முழுக்க மாணவர்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக கல்வி நிலையங்கள் இயங்கத் தடை விதித்து, அனைத்து கல்வி நிலையங்களையும் கோ-எட் பள்ளிகளாக மாற்ற உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் இந்த முடிவு குறித்துப் பேசியபோது, "பாலினரீதியாக தனித்தனியாக பள்ளிகள் மட்டுமின்றி பல கல்லூரிகளும் இருக்கவே செய்கின்றன. இன்னும் பல கோ-எட் கல்வி நிலையங்களிலும் கூட ஆண்களும் பெண்களும் பேசிக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், இப்படி தனித்தனிப் பள்ளிகளில் படிக்கும்போது, அவர்களுக்கு உள்ளாகவே இந்த பாலினத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் என்ற தவறான பார்வைகளை உடைப்பதற்கு இது உதவும்" என்கிறார் கீதாஞ்சலி.

ஆண்,பெண் பள்ளிகள் தனித்தனியாக இருப்பது சரியா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

"அதோடு மாணவர்களை வெளியுலகுக்குத் தயார் செய்ய உதவும், கருத்துப் பரிமாற்றம், தொடர்புத் திறன் ஆகியவற்றை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான, சமமான போட்டியை உருவாக்க முடியும்.

சிறு வயதிலிருந்து ஆண்கள் பள்ளியிலேயே படித்து வளரக்கூடிய மாணவர்களிடையே, பெண்கள் என்றால் இப்படித்தான் என்றொரு விதமான பார்வைகளும் ஆண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண்கள் அழவே கூடாது என்பன போன்ற சிந்தனைகளும் இருக்கும். அவர்கள் வளர்ந்து வெளியுலகுக்குள் வந்த பிறகு இவற்றிலிருந்து வெளியேறி, நடைமுறையைப் புரிந்துகொள்ள தனியாக நேரம் எடுக்கும்.

பாலியல் கல்வி எந்தளவுக்கு முக்கியம் என்று பேசுகிறோமோ, அதே அளவுக்கு வாழ்வியல் கல்வியை, அதிலும் குறிப்பாக இருபாலின மாணவர்களையும் ஒன்றாக வைத்துக் கற்றுத் தருவதும் முக்கியம். அது பல நன்மைகளை விளைவிக்கும். யார், யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது போன்ற சமூகத் திறன்களை மட்டுமின்றி எதிர் பாலினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் எதிர்பாலினத்தவர்களோடு பேசுவதற்கான நம்பிக்கையையும் அவர்களுக்கு இதன்மூலம் வழங்க முடியும்," என்கிறார்.

"பேசக்கூடாது எனத் தடுத்தால், சிந்தனை அதைச் சுற்றியே சுழலும்"

கல்வி நிலையங்களில் மாணவர்களை பாலினரீதியாகப் பிரித்து வைப்பது குறித்துப் பேசிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியரான ரகுராஜ், "சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவன் நடித்த ஸ்கூட்டர் விளம்பரம் ஒன்று வெளியானது. அந்த விளம்பரத்தில் பெண் ஒருவர் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருப்பார். ஆனால், அதைப் படிக்காமல் அனைவரும் அப்படியே எறிந்துவிடுவார்கள்.

அதைப் பார்த்த மாதவன், அந்த நோட்டீஸை வாங்கி, அனைவருக்கும் சுருட்டிக் கொடுப்பார். அப்போது, மக்கள் அதைப் பிரித்துப் படித்துக் கொண்டிருப்பார்கள். இதைப் போலத்தான் இந்த விஷயத்தையும் நாம் அணுக வேண்டும். ஆண்கள், பெண்களை தனித்தனியாகப் படிக்க வைக்கும்போது தான் அவர்களுடைய சிந்தனையில் எதிர்பாலினத்தின் மீதான சிந்தனை அதிகமாகிறது.

அதேபோல், இருபாலர் கல்வி நிலையங்களாக இருந்தாலும், அதில் அவர்களை நாம் இயல்பாக இருக்க விடுகிறோமோ அந்தளவுக்கு அவர்களுடைய மனதும் சிந்தனையும் இயல்பாக இருக்கும். மாணவர்களையும் மாணவிகளையும் சரிசமமாக நாம் பார்க்கும்போது, அவர்களுக்கும் பாலின வேறுபாடு தெரியாது. இருபாலர் பள்ளிளிலும் ஆண்- பெண் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது வீண். நாம் எதைச் செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறோமோ அதன் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாகும். ஏன் பேசக்கூடாது என்ற கேள்வி எழும். அவர்களுடைய சிந்தனை முழுக்க அதைச் சுற்றியோ சுழலும்," என்கிறார்.

பருவமெய்தும் காலகட்டத்தில் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்ன மாதிரியானது என்பதைப் புரிந்துகொள்வதில், இதுபோல் தனித்தனி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாகக் கூறுகிறார் திவ்யபிரபா. இதுமட்டுமின்றி, "அந்த ஈர்ப்பு கட்டுப்படுத்தப்படும்போது, அது மறைக்கப்படும். அப்படி மறைத்து வைத்திருக்கும்போது, எது உண்மை என்பதை அவர்கள் தெரிந்துகொள்வது தடுக்கப்படுகிறது. அது சிக்கலைத்தான் பெரிதாக்கும். இதுவே இருபாலினத்தவரும் ஒன்றாகப் பயிலும் கல்வி நிலையங்களில் இருதரப்புக்குமான தொடர்பு இயல்பானதாகவும் வெளிப்படையாக அணுகும் வாய்ப்பும் இருக்கும். அது எதிர்பாலினத்தின் மீதான புரிதலை எளிதாக்கும்," என்கிறார்.

"பெண்கள் பேசினால் தலையைக் குனிந்து கொள்வேன்"

ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு வரும் ஆண்கள் பணியிடத்தில் தன் மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது அதை ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதாகவும் பெண்கள் தங்களுடைய ஆண் மேலதிகாரியிடம் வெளிப்படையாகப் பேசி தங்களுக்கான வாய்ப்புகளை முழுதாக எடுத்துக்கொள்ள சிரமப்படுவதாகவும் திவ்யபிரபா கூறுகிறார்.

ஆண்,பெண் பள்ளிகள் தனித்தனியாக இருப்பது சரியா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

அதோடு, "இந்த பாலின ஏற்றத்தாழ்வை பலரும் எதிர்கொள்கிறார்கள். இதுவே சிறுவயதிலிருந்து அனைத்து பாலினத்தவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் கல்வி நிலையங்கள் அமைவது, இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கும்," என்று கூறுபவர், "சிறு வயதிலிருந்தே எதிர்பாலினத்தவரோடு பேசிப் பழகுவதில் எந்தத் தவறும் இல்லை, எதிர்பாலினத்தவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதலை வழங்குவதற்கும் இதன்மூலம் சமுதாயத்தில் ஆண்-பெண் சமம் என்ற கருத்து உருவாகவும் இது உதவும்," என்றார்.

ஆண்-பெண் ஒன்றாகப் பயின்ற பள்ளியாக இருந்தாலும், நியூஆல் என்ற ஆண் மாணவர் படித்த பள்ளியில் ஆண்களும் பெண்களும் பேசிக் கொள்ளக்கூடாது என்ற விதி இருந்தது. இதனால், மாணவிகளுடன் நட்பு கொள்ளவோ, குறைந்தபட்சம் பேசுவதற்கான வாய்ப்போகூட அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றபோது அவர் சிரமங்களை எதிர்கொண்டார்.

"நான் படித்த பள்ளியில், பெண்களோடு பேசினாலே திட்டுவார்கள். அதனால் அதுகுறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. பெண்கள் என்றால் மரியாதையும் பயமும் தான் ஏற்படும், பேசவே தயக்கமாக இருக்கும்.

ஆண் நண்பர்களுடனேயே பழகியபோது அனைவரும் விளையாட்டாக கேலி பேசிச் சிரித்துக் கொண்டு, கொண்டாட்ட மனநிலையுடனேயே இருப்போம். பெண் நண்பர்களுடன் பழகத் தொடங்கியபோது, அவர்கள் ஆண் நண்பர்களைப் போலன்றி, அக்கறையோடு நடந்து கொண்டது புதிய உணர்வாக இருந்தது.

ஆண்,பெண் பள்ளிகள் தனித்தனியாக இருப்பது சரியா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

பள்ளிக் காலத்தின்போது பெண்களிடம் பேசாமல் இருப்பது நல்ல பழக்கம் என்பது போன்ற எண்ணம் தான் இருந்தது. கல்லூரியில் சேர்ந்தபோது சக பெண் நண்பர்களிடம் இயல்பாகப் பேசுவதற்கு இது பெரிய தடையாக இருந்தது. பெண்கள் யாராவது என்னிடம் வந்து பேசினால் தலையைக் குனிந்து கொள்வேன், சரியாக பதில் சொல்லமாட்டேன். ஏன் இப்படிச் செய்தேன் என்று என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படிச் செய்யக் கூடாது என்று நினைப்பேன். ஆனால், தானாகவே அப்படிச் செய்துவிடுவேன். இது மாறுவதற்கு மிக அதிகமான காலம் எடுத்தது," என்றார்.

"தமிழ்நாட்டு பள்ளிகளில் பாலின பாகுபாடு இல்லை"

இதுமட்டுமின்றி, "பள்ளிப் பருவத்தின்போது அம்மாவைத் தாண்டி வேறு எந்த பெண்ணிடமும் பேசியிருக்காத காலகட்டத்தில், பெண்கள் என்றாலே நல்ல குணமுடையவர்கள், எந்தத் தவறுமே செய்யமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெளியுலகத்திற்கு வந்து இயல்பாக இருபாலினத்தினரிடமும் பழகத் தொடங்கிய பிறகுதான், ஆண்களில் எப்படி அனைத்து விதமானவர்களும் இருக்கிறார்களோ, அதேபோல் பெண்களிலும் இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

அப்போதும்கூட, பெண்களாக என்னிடம் வந்து பேசினால் மட்டுமே நான் பேசினேன். நானாகச் சென்று பேசுவதற்கு நீண்ட காலம் எடுத்தது," என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டிலுள்ள கல்விமுறையிலும், கேரளாவைப் போன்ற முன்னெடுப்பு சாத்தியமாகுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் பேசினோம். அவர், "தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை, ஆண்கள், பெண்கள் என்ற பாலின பாகுபாடு என்பதே இல்லை. அனைவரையும் சமமாகத்தான் நடத்துகிறோம்.

கேரளாவில் எடுத்த நடவடிக்கையைப் போல் இங்கும் செய்ய வேண்டிய தேவை உள்ளதா என்பது கல்விக் கொள்கை அளவில் எடுக்க வேண்டிய முடிவு. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவருடைய அறிவுரையின்படி செயல்படுவோம்," என்று கூறினார்.

காணொளிக் குறிப்பு, மரபணு குறையால் மாறிய முகம் - சவாலை சாதனையாக மாற்றிய யுவராஜ் டீச்சர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: