குஜராத் கலவரத்தை என்சிஇஆர்டி புத்தகங்களில் இருந்து நீக்குவதன் மூலம் வரலாறு மாறுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராக்ஸி காக்டேகர் சாரா
- பதவி, பிபிசி குஜராத்தி
NCERT பாடத்திட்டத்தில், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இனி 2002 குஜராத் கலவரம் பற்றி எதையும் படிக்கமாட்டார்கள்.
2002 பிப்ரவரி 27 ஆம் தேதி அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸின் S-6 ரயில்பெட்டி, கோத்ரா ரயில் நிலையத்தில் தீயிடப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரம் குறித்து, NCERT பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் ஒன்பதாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குஜராத் கலவரம் மட்டுமன்றி, இந்தியாவில் எமர்ஜென்சி தொடர்பான அத்தியாயத்தையும் புத்தகத்திலிருந்து NCERT நீக்குகிறது என்று அறிவிப்பு வெளியானது.
NCERT புத்தகத்தில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றிய சரியான தகவலைப் பெற பிபிசி முயன்றது. ஆனால் இந்த விஷயத்தில் NCERT யிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
இப்படி பாடத்திட்டத்தை மாற்றுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் இந்த 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பிபிசி குஜராத்தி பேசியது. அதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பாக, NCERT அரசியல் அறிவியல் புத்தகத்தில் குஜராத் கலவரம் பற்றி இதுவரை என்ன கற்பிக்கப்பட்டது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
என்ன இருந்தது? என்ன மாற்றப்பட்டது?

பட மூலாதாரம், CHRISTIAN ENDER
புத்தகத்தின் 9வது அத்தியாயத்தில், 1990கள் மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்திய அரசியல் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டன. இந்தப் பாடத்தில், சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை, மண்டல் கமிஷன் குறித்த செய்திகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், அந்தக் காலகட்டத்தின் கூட்டணி அரசியல் குறித்த செய்திகளுடன் குஜராத் கலவரம் குறித்த விஷயங்களும் அதில் கூறப்பட்டன.
- இந்த அத்தியாயம், வகுப்புவாதம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டில் இந்துத்துவ அரசியலின் ஆரம்பம், அயோத்தி வழக்கு, பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதன் பிறகு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எஸ்-6 பெட்டியை எரித்தல் மற்றும் வகுப்புவாத கலவரங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
- மாணவர்கள் இந்த விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக இந்த அத்தியாயத்தில் அன்றைய ஆங்கில அச்சு ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் அடங்கிய பேப்பர் கட்டிங்குகள் கொடுக்கப்பட்டன. 'குஜராத் இஸ் பர்னிங்: என் ஐ பாஃர் என் ஐ ப்ளைண்ட்ஸ் காந்திநகர்', 'குஜராத் கலவரத்தில் எதுவும் விடப்படவில்லை', 'குஜராத் கலவரம்', 'எ ப்ளாட்-பிஎம்' போன்ற தலைப்புச் செய்தி கட்டிங்குகள் இதில் இடம்பெற்றன.
- அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியைப் பற்றி அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியதும் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் 'நல்லாட்சியைக் கடைப்பிடிப்பது' குறித்து அவர் முதலமைச்சரிடம் பேசினார்.
இப்போது இந்த விவரங்கள் அனைத்தும் இந்த ஆண்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது கோத்ரா சம்பவம் நடந்தது. அப்போது, அயோத்தியிலிருந்து ஆமதாபாத்துக்கு திரும்பிய சபர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 பெட்டிக்கு,கோத்ரா ரயில் நிலையத்தில் தீ வைக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் பரவலான வன்முறை ஏற்பட்டது.
இந்த ஒரு ஒளிப்படம்

பட மூலாதாரம், Arko Datta
இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்வரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதி மீதும் பல விமர்சனங்கள் எழுந்தன.
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறையில் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 223 பேர் காணாமல் போயினர், 2500 பேர் காயமடைந்தனர். இது தவிர கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கலவரத்தின் கொடூரத்தை நினைவுபடுத்தும் விதமாக இன்னும் மக்கள் மனதில் நிற்கும் ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் ஒரு நபர், கூப்பிய கைகளுடன் அழுது உதவி கேட்பார்.
இந்தப் படம் ஆமதாபாத்தில் வசிக்கும் குதுபுதீன் அன்சாரியின் படம். இந்த ஒரு படம் தான் உலகத்தின் கவனத்தை இந்த குஜராத் கலவரத்தின் பக்கம் ஈர்த்தது.
புத்தகங்களில் இருந்து நீக்கினால் என்ன?
பிபிசியிடம் பேசிய குதுபுதீன் அன்சாரி, "இந்த விஷயங்களை புத்தகத்தில் இருந்து நீக்கினால் என்ன? 2002 கலவரத்தை ஒவ்வொரு சமூகத்தினரும் இன்னும் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருப்பார்கள். ஏனென்றால் எங்களைப் போன்ற பலர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றார்.
"இந்த கலவரத்தையும் அதன் வலியையும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு, இந்த புத்தகங்கள் தேவையில்லை," என்றும் அவர் கூறினார்.

அன்சாரி தற்போது தனது குடும்பத்துடன் ஆமதாபாத்தில் வசித்து வருகிறார், மேலும் குஜராத் கலவரத்தின் மற்றொரு முகமான, இந்து நண்பர் அஷோக் மோச்சியுடன் இணைந்து வகுப்புவாத ஒற்றுமைக்காகப் பணியாற்றுகிறார்.
முத்தாய்ப்பாக, அடுத்த தலைமுறைக்கு இந்தக் கலவரம் குறித்த செய்திகளைக் கடத்தும் பாடப் புத்தகங்களில் செய்யப்படும் மாற்றங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.
அவர்கள்தான் இப்போது ஆள்கிறார்கள்
2002 குஜராத் கலவரத்தின் போது, ஆமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில் படுகொலைகள் நடந்தன. இந்தக் கலவரத்தில் சலீம் ஷேக்கின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இவர் முக்கியமான சாட்சியும் கூட.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய அவர், "நரோடா பாட்டியா வழக்கில் யாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தோமோ அவர்கள்தான் இப்போது ஆட்சியில் உள்ளனர்" என்றார்.

பட மூலாதாரம், ANDREW AITCHISON
"இந்த வழக்கில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் கையில் முழு அதிகாரம் உள்ளது. எனவே வரலாற்றை மாற்ற முயல்கிறார்கள். நரோடா பாட்டியா என்ன, தாஜ்மஹால் வரலாற்றையே மாற்ற நினைக்கிறார்கள். என்ன செய்வது?" என்றார்.
நரோடா பாட்டியா கலவரத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் மேலும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று சலீம் ஷேக் கூறுகிறார்.
வரலாற்று விவாதத்திற்கு அரசு பயப்படுகிறதா?
அத்தியாயங்களை நீக்குவது தொடர்பாக என்சிஇஆர்டியின் கருத்தை பிபிசி குஜராத்தி கோரியது. இது தொடர்பாக என்சிஇஆர்டிக்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது, ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை.
ஆனால் என்சிஇஆர்டியின் இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, "இந்த முழு செயல்முறையும் நான் பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்தது, எனவே எனக்கு விவரங்கள் தெரியாது," என்று நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆம். சக்லானி, 2022 பிப்ரவரியில் தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சக்லானிக்கு முன் என்சிஇஆர்டியின் இயக்குநராக இருந்த ஸ்ரீதர் ஸ்ரீவஸ்தவா 'இது என்சிஇஆர்டியின் முடிவு, இப்போது பகிரங்கமாகிவிட்டது. நான் சொல்ல விரும்புவது அவ்வளவுதான்" என்றார்.
"வரலாற்றின் தகவல்கள் ஆவணக் காப்பகத்தை அடையும் வரை கற்பிக்கப்படக்கூடாது என்றும் நிகழ்வு முடிந்து 30 ஆண்டுகள் நிறைவடைய வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்," என்று குஜராத் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் தலைவர் அருண் வாகேலா பிபிசியிடம் தெரிவித்தார்.
"எந்த ஒரு நிகழ்வானாலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அனைத்துத் தகவல்களும் அரசுப் புத்தகங்களில் இருந்து ஓப்பன் சோர்ஸுக்கு வருகிறது. குஜராத் கலவரம் குறித்து தற்போது கல்வி ரீதியாக விவாதிக்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அதன் தகவல் ஓபன் சோர்ஸாக இல்லை."
மதச்சார்பின்மை பிம்பத்துக்கு பிரச்னை
சமூகவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியரான கோராங் ஜானி, குஜராத்தில் நடந்த வன்முறைகள் உட்பட பல சமூகப் பிரச்சனைகள் குறித்துத் தனது மாணவர்களுக்கு கற்பித்துள்ளார்.
"2002 கலவரம் பற்றிய விவரங்கள் புத்தகத்தில் இல்லாவிட்டாலும் அதைப் பற்றி மாணவர்களிடம் பேசுவது ஆசிரியரின் பொறுப்பு," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
"பிரதமர் நரேந்திர மோதி கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் உருவாக்க நினைத்த மதச்சார்பற்ற பிம்பத்திற்கு இந்த என்சிஇஆர்டி அத்தியாயம் இடையூறாக இருந்ததால் அதை அகற்ற வேண்டியதாயிற்று," என்கிறார் ஜானி.
"இது என்சிஇஆர்டியின் விஷயம். ஆனால் குஜராத் பாடப் புத்தகங்களில் இது பற்றி எப்போதும் எந்தத் தகவலும் இருந்ததில்லை. இப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் கூட அனைவரும் குற்றமற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், அப்போது என்ன நடந்தது என்பதை மாணவர்களுக்குத் தெரிவிப்பதில் தவறில்லை,"என்று கோராங் ஜானி தெரிவித்தார்.
"குஜராத் கலவரம் போல் 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலையும் இனி கற்பிக்கப்படாது. ஆனால் இந்த விஷயத்தை யாரும் விவாதிக்கவில்லை, யாரும் எதிர்க்கவில்லை," என்று கோராங் ஜானி குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












