குஜராத் கலவர வழக்கு: மோதிக்கு எதிரான மனு தள்ளுபடி - முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுசித்ரா மொகந்தி
- பதவி, பிபிசி நியூசுக்காக
2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியை சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றமற்றவர் என்று கூறியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏசான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையில் நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், தினேஷ் மகேஸ்வரி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஜாகியா, சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் பிறரின் விரிவான வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
2022 குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியை சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றமற்றவர் என்று கூறியதை எதிர்த்து கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏசான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
"சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்று மாஜிஸ்திரேட் எடுத்த முடிவையும் எதிர்ப்பு மனுவை நிராகரிக்கும் முடிவையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த மேல்முறையீடு தகுதியற்றது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
குஜராத் கலவரத்தின்போது அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஏசான் ஜாஃப்ரி கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கு குல்பர்க் சொசைட்டி படுகொலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்று மாஜிஸ்திரேட் எடுத்த முடிவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2017-ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இப்போது தள்ளுபடி செய்துள்ளது.
ஜாகியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கணவரை இழந்த பெண்ணுக்கு உதவுவது சட்ட விரோதமா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு முன்பாகப் பேசினார்.
"நீதியை நாடும் கணவரை இழந்த ஜாகியா ஜாஃப்ரிக்கு உதவுவது சட்டவிரோதமா? உண்மையில் குற்றவியல் சட்டப்பிரிவு 39 அதைக் கடமையாக்குகிறது," என்று ஜாகியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்ற அமர்வில் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், "சாட்சிக்கு வழிகாட்டுதல் என்பது, சாட்சியை வழிநடத்துவதைப் போன்றதல்ல. காயமடைந்த சாட்சிகள் தங்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படும் மனநிலையில் இருந்தனர்," என்று விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் சிபல் தெரிவித்திருந்தார்.
"அரசு தங்களுக்கு நியாயம் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கருதினால், அதில் என்ன தவறு என்று சிபல் கூறியிருந்தார். அதாவது, அரசுக்கு எதிராகச் செயல்படும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் இந்த பாணியில் வகைப்படுத்தப்படுவார்கள். இதில் என்ன தீய திட்டம் உள்ளது?
டேப்களில் பதிவு செய்யப்பட்டிருப்பவை சதி செய்திருப்பதைக் காட்டுகிறது. விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது இன்னும் மிகப்பெரிய சதிக்கு வழிவகுத்திருக்கலாம்.
எனவே, சிறப்புப் புலனாய்வுக் குழு பதிவில் உள்ளவற்றை விசாரிக்கவில்லை என்றால், அவர்கள் சதி செய்ததாக மேலும் வழக்கு தொடரலாம். தனி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்," என்று கபில் சிபல் உச்சநீதிமன்ற அமர்வில் தெரிவித்தார்.
குஜராத் கலவர வழக்குகளை சிறப்புப் புலனாவுக் குழு விசாரித்த விதம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பிய கபில் சிபல், அவர் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிரான அனைத்து வகையான ஆதாரங்களும் ஆவணங்களும் இருந்தும் சிறப்புப் புலனாய்வுக் குழு என்ன செய்தது என்று உச்சநீதிமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
குஜராத்தில் நடந்த கலவர வழக்குகளை விரிவாகவும் முறையாகவும் விசாரித்ததாக, கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏசான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியின் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்தது.
"நாங்கள் அனைத்து கலவர வழக்குகளையும் முறையாகவும் விரிவாகவும் விசாரித்துள்ளோம்," என்று மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து, சிறப்புப் புலனாய்வுக் குழு சரியாக விசாரிக்கவில்லை, வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களைக் கைது செய்ய முடியவில்லை என்ற ஜாகியா ஜாஃப்ரியின் வழக்கறிஞர் கபில் சிபலின் வாதங்களை நிராகரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சிபலின் வாதங்களைக் கடுமையாக எதிர்த்த ரோஹத்கி, உரிய முழுமையான பரிசீலனைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தவிர, 2006-ஆம் ஆண்டு வழக்கில் எந்த ஆதாரமும் இல்லையென்ற முடிவுக்கு சிறப்புப் புலனாவுக் குழு வந்ததாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2002 குஜராத் கலவர வழக்குகளில் அப்போதைய குஜராத் முதல்வரும் இந்திய பிரதமருமான நரேந்திர மோதியை சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றமற்றவற்ற என்று கூறியதை எதிர்த்து ஜாகியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நிலுவையில் 9 வழக்குகள்
குல்பர்க்கில் ஜாகியா ஜாஃப்ரியின் கணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உட்பட ஒன்பது முக்கிய வழக்குகள், ஒன்பது முதல் தகவல் அறிக்கைகள் பதிவானதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு அதற்குப் பிறகு 2008-09-இல் தான் வந்தது என்றும் ரோஹத்கி கூறினார்.
"சிறப்புப் புலனாய்வுக் குழு அனைத்து முக்கிய வழக்குகளையும் எடுத்து, அந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பல துணை குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஜாகியா ஜாஃப்ரியின் புகார் முதல் தகவல் அறிக்கையாக மாற்றப்படவில்லை. பிறகு அவர் குஜராத் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றார். உயர்நீதிமன்றம் புகார் கொடுக்கச் சொன்னது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்துக்கு வந்தார்," என்று ரோஜத்கி கூறினார்.
மேலும், "ஏற்கெனவே விசாரணையிலுள்ள வழக்குகளைத் தவிர வேறு எந்த சதியும் இருப்பதாக முடிவு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று ரோஹத்கி உச்ச்நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்த போது தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"2007-08 ஆம் ஆண்டில் ஜாகியா நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தால், அவர் தனது புகாரை மேம்படுத்தியிருக்கலாமே" என்றும் கேள்வியெழுப்பினார். ஆனால், அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சென்றார். தேசிய மனித உரிமை வாரியத்தின் மனுவைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டாலும், 9 வழக்குகளையும் அந்தக் குழு விசாரிக்கும் என்று கூறப்பட்டது.
புகாரளித்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தெஹல்கா டேப்கள் வெளிவந்தன என்றும் ரோஹத்கி கூறியிருந்தார். டேப்பின் உண்மைத்தன்மையில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், டேப்பில் உள்ள உள்ளடக்கங்கள், ஸ்டிங் ஆபரேஷன் போன்றவையாக இருந்ததையும் கேத்தனுக்கு முன்பு கூறப்பட்ட வாக்குமூலங்கள் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தைத் தூண்டியதையும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்தது.
"உண்மையில், இது ஸ்க்ரிப்டின் ஒரு பகுதியை போல் இருப்பதாக சிலர் கூறியதாக ரோஹத்கி கூறினார். இதில் முதல் தகவல் அறிக்கையோ குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் கண்டறிந்தது. கலவர வழக்குகளில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய விதத்தைப் பாதுகாத்து, ஏற்கெனவே குற்றம் சாட்டப்படாதவர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதா அல்லது மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமா என்று பார்ப்பதே எங்கள் வேலை," என்று ரோஹத்கி கூறினார்.
ஜாகியாவின் புகாரைப் பார்த்து, ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பது தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வேலை என்றும் ரோஹத்கி தெளிவுபடுத்தினார்.
அதோடு, நாங்கள் செய்தது மிக அதிகம் என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக அறமற்ற கருத்துகள் கூறப்படுகின்றன என்றும் ரோஹத்கி கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













