குஜராத் கலவரம்: டீஸ்டா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமாரிடம் தனிப்படை விசாரணை

பட மூலாதாரம், Getty Images
மும்பையில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டீஸ்டா சீதல்வாட், மருத்துவ பரிசோதனைக்காக ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவர வழக்குகளில் பிரதமர் மோதி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. இதையடுத்து பிரதமர் மோதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஆரம்பத்தில் வழக்கு தொடர்ந்த சமூக செயல்பாட்டாளரும் சிட்டிசன்ஸ் ஃபார் பீஸ் அண்ட் ஜஸ்டிஸ் என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான டீஸ்டா சீதல்வாட் மற்றும் இந்த வழக்கில் ஆவணங்களை ஜோடித்ததாக முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார் ஆகியோரையும் குஜராத் தனிப்படையினர் கைது செய்தனர். இந்த திடீர் கைதுக்கு என்ன பின்னணி?
2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவர வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் 63 பேருக்கு தொடர்பில்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூன் 24ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
அந்த கலவர சம்பவத்தில் ஜகியா ஜாஃப்ரி என்பவரின் கணவர் இஷான் ஜாஃப்ரி கொல்லப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஜகியா ஜாஃப்ரியை மனுதாரராகக் கொண்டு மோதி உள்ளிட்ட பலருக்கு எதிராக வழக்கு தொடர டீஸ்டா சீதல்வாட் என்ற சமூக செயல்பாட்டாளரின் அமைப்பு நிதி மற்றும் வழக்கு தொடர்வதற்கான ஆதரவை வழங்கியிருந்தது. டீஸ்டா சீதல்வாட்டும் இந்த வழக்கில் இணை மனுதாரராக இருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த நிலையில், கலவர சம்பவத்தில் நரேந்திர மோதி உள்ளிட்டோருக்குத் தொடர்பு இல்லை என்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்று அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய சில மணிநேரத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏஎன்ஐ செய்தி முகமைக்குப் பேட்டி கொடுத்தார்.
அமித் ஷாவின் நேர்காணல் ஏஎன்ஐ சந்தாதாரர் தொலைக்காட்சிகளில் சனிக்கிழமை பிற்பகலில் ஒளிபரப்பான அடுத்த சில நிமிடங்களில் டீஸ்டா சீதல்வாட்டை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் மும்பையில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலையில் தடுத்து வைத்தனர். இதைத்தொடர்ந்து சான்டா குரூஸ் காவல் நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக டீஸ்டா சீதல்வாட்டை தொடர்பு கொண்டு பேச பிபிசி முயன்றது. அப்போது அவர், அடுத்த இரு தினங்களில் தமது நிலைப்பாடு பற்றி தெளிவுபடுத்துவதாகக் கூறினார்.
தீர்ப்பை வரவேற்கும் பாஜக தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள இந்திய முன்னாள் சட்ட அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத், நரேந்திர மோதியை கடந்த 20 ஆண்டுகளாக கலவர சம்பவத்தில் தொடர்புபடுத்தி அவரை களங்கப்படுத்தியவர்களின் கடை தற்போது மூடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
இதேபோல, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நரேந்திர மோதியின் பெயருக்குக் களங்கம் கற்பிக்க முயன்றவர்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை இதுநாள் வரை சுமத்தி வந்தனர். இப்போது அவர்களின் கூற்று பொய் என்று உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டதால் அவர்கள் அனைவரும் நரேந்திர மோதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நான் படித்து விட்டேன். அதில் மிகத் தெளிவாக டீஸ்டா சீதல்வாட் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் நடத்தி வந்த என்ஜிஓ தான் போலீஸுக்கு கலவரம் பற்றிய தகவல்களைப் போதிய ஆதாரங்களின்றித் தெரிவித்தது. அந்த என்ஜிஓ-வின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. கலவரத்தில் இறந்தவரின் மனைவி ஜகியா ஜாஃப்ரியை யாரோ பின்னாலிருந்து இயக்கினர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறி பலர் மனுவில் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், அப்படியொரு மனு தங்கள் பெயரில் கையெழுத்திட்டிருந்ததை அவர்களே அறிந்திருக்கவில்லை. எல்லோருக்குமே இந்த வேலையைச் செய்தது டீஸ்டா சீதல்வாட்தான் என்பது தெரியும். அவருக்கும் அவரது என்ஜிஓவுக்கும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உதவியது. நரேந்திர மோதியை களங்கப்படுத்தும் எண்ணத்துடனேயே இவை எல்லாம் செய்யப்பட்டன," என்று அமித் ஷா ஏஎன்ஐ பேட்டியில் கூறியிருக்கிறார்.
சட்டப்படி விசாரிப்போம்: குஜராத் போலீஸ்
இதற்கிடையே, டீஸ்டா சீதல்வாட்டை கைது செய்யும் குழுவில் இடம்பெற்றிருந்த குஜராத் காவல்துறையின் குற்றப்பிரிவு ஆய்வாளர் தார்சின்ஹ் பார்டே, "இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆறு பிரிவுகளின்படி டீஸ்டா சீதல்வாட் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைப்படி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படும்," என்று கூறினார்.
இந்த நிலையில், மும்பை நீதிமன்றத்தில் டீஸ்டாவை ஆஜர்படுத்திய பிறகு அவரை ஆமதாபாதுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, தம்மை சட்டவிரோதமாக குஜராத் போலீஸார் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறி மும்பை சான்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் போலீஸார் தம்மை குஜராத்துக்கு அழைத்துச் சென்றால் தமது உயிருக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்று கூறப்பட்டிருந்தது.
தன்னைக் கைது செய்ய வந்தபோது எவ்வித முதல் தகவல் அறிக்கையும் காண்பிக்காமல் அத்துமீறி வீட்டுக்குள் போலீஸார் பிரவேசித்ததாகவும் போலீஸார் இழுத்துச் சென்றதில் தமது கையில் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும் டீஸ்டா தமது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
டீஸ்டா மற்றும் பிறர் மீதான புகார் என்ன?

பட மூலாதாரம், Gujarat Police
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து குஜராத் காவல்துறையின் குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் தீவிரவாத தடுப்புப்பிரிவு, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதிலுள்ள குற்றப்பிரிவு அதிகாரி, தங்களுடைய பிரிவின் பழைய வழக்கு தொடர்புடைய புகாரை உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக வைத்து பதிவு செய்யக் கோரி புகார் மனுவை தயாரித்தார். அதன்பேரில் புகார் பதிவு செய்யப்ப்டடது.
இதைத்தொடர்ந்து டீஸ்டா சீதல்ாட்டை ஆமதாபாதுக்கு குஜராத் தனிப்படை போலீஸார் மும்பையில் இருந்து அழைத்து வந்த சில நிமிடங்களில், அவருக்கு உதவியதாகக் கூறி அப்போது குஜராத் காவல்துறையில் டிஜிபி ஆக இருந்த ஆர்.பி. ஸ்ரீகுமாரை அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அவருடன் சேர்த்து ஏற்கெனவே கைதான சஞ்சீவ் பட் என்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீது, போலி ஆவணங்களை நிஜ ஆவணங்கள் போல ஜோடித்து சட்ட நடைமுறைகளை தங்களுக்குச் சாதமாக்க முயன்றதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
டீஸ்டா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து போலி ஆதாரங்களை ஜோடித்து வழக்கில் தொடர்பில் இல்லாதவர்களை சேர்த்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

ஜகியா ஜாப்ரி வழக்கில் நீதிமன்றம் என்ன கூறியது?

பட மூலாதாரம், Getty Images
ஒட்டுமொத்த இந்த வழக்கும், பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை துருப்புச் சீட்டாகக் கொண்டு பிறரால் தூண்டப்பட்டு தொடரப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் ஜகியா ஜாஃப்ரி பற்றி தீர்ப்பில் குறிப்பிடும்போது தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களை எஸ்ஐடி விடுவித்த நடவடிக்கையை எதிர்க்கும் மனு என்ற போர்வையில் நீதித்துறை முன்பாக பல கேள்விகளை மனுதாரர் எழுப்பியிருந்தார். அவர், யாருடைய பின்னணியிலோ இயங்குகிறார் என்பது எங்களுக்குத் தெரிய வருகிறது. எஸ்ஐடி குழுவில் இடம்பெற்றவர்களின் நேர்மை, நெறிமுறைகள் பற்றி மனுதாரரான ஜகியா கேள்வி எழுப்பியிருந்தார். உள்நோக்கத்துடன் கூடிய மிகப்பெரிய ஆவணங்களின் தொகுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவை புகார்தாரரான ஜகியாவால் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

அடிப்படையில் இந்த கலவர வழக்கு என்பது என்ன?

பட மூலாதாரம், THE INDIA TODAY GROUP
2002 பிப்ரவரி 28 அன்று, அதாவது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த இரண்டாவது நாள், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஆமதாபாத் குல்பர்க் சொசைட்டியை பெரும் கும்பல் தாக்கியது. அதில் கொல்லப்பட்ட 69 நபர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்பி-யான இஹெசன் ஜஃபரி-யும் ஒருவர்.
தன் கணவர் காவல்துறையை அழைக்க முயன்றதாகவும் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்ததாகவும் ஜகியா கூறுகிறார். அப்போது முதலமைச்சராக இருந்த மோதியையும் அவர் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2006 ஜூன் மாதம், மோதி உள்ளிட்ட 63 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கோரி அம்மாநில டிஜிபி-ஐ அணுகினார் ஜகியா. வேண்டுமென்றே மோதியும் மற்ற பொறுப்புகளில் இருந்த நபர்களும் கலவரங்களில் தாக்கப்பட்ட மக்களுக்கு உதவ முயலவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு.
இதை டிஜிபி தள்ளுபடி செய்ய, ஜகியா குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2007ல் உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
குல்பர்க் சொசைட்டி சம்பவம்

பட மூலாதாரம், SEBASTIAN D'SOUZA
மார்ச் 2008ல் ஜகியா ஜாஃப்ரியும் அமைதி மற்றும் நீதி என்ற அரசு சாரா அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கு விசாரணைக்கு வழிநடத்துவதற்காக பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் 2009ல் குஜராத் கலவரத்தை விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை, இந்த வழக்கையும் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
2010ஆம் ஆண்டு தொடக்கத்தில் நரேந்திர மோதியை இது தொடர்பாக விசாரிக்க அழைத்த அந்தக் குழு, அதே ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
2010ஆம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து பிரசாந்த் பூஷண் தன்னை விலக்கிக் கொண்டார். பிறகு உச்சநீதிமன்றம் ராஜூ ராமசந்திரனை நியமித்தது. அவர் தனது அறிக்கையை 2011 ஜனவரி மாதம் தாக்கல் செய்தார்.
மார்ச் 2011 - சிறப்புப் புலனாய்வுக் குழு வழங்கிய ஆதாரங்களில் முரண்பாடுகள் இருந்ததால் உச்சநீதிமன்றம் இதை மேலும் விசாரிக்க உத்தரவிட்டது.
செப்டம்பர் 2011 - மோதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. ஆனால், சிறப்புப் புலனாய்வுக்குழு அறிக்கையை குஜராத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. இதன் பிறகு நீடித்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நரேந்திர மோதி உள்ளிட்டோருக்கு கலவர சம்பவத்தில் தொடர்பில்லை என்று எஸ்ஐடி அறிக்கை தாக்கல் செய்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












