மஞ்சு ஒரான்: ஜார்கண்டில் விவசாயம் செய்யும் பெண் - ஊர்மக்களின் கோபத்திற்கு ஆளானது ஏன்?

பட மூலாதாரம், Md SARTAJ ALAM/BBC
- எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்
- பதவி, கும்லாவிலிருந்து பிபிசி இந்திக்காக
ஜார்க்கண்டின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான கும்லா மாவட்டத்தில் உள்ள தஹுடோலி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு ஒரான் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.
இதற்கான காரணத்தை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். மஞ்சு ஓரான் தானே டிராக்டரை ஓட்டி தனது வயல்களை உழுது, தற்சார்புடன் திகழ்கிறார். இதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ள கிராம மக்கள், பல நூற்றாண்டுகள் பழமையான ஓரான் சமூகத்தின் பாரம்பரியத்தை அவர் உடைப்பதாக குற்றம் சாட்டினர்.
ஆட்சேபம் தெரிவித்தவர்களில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அதிக அளவில் இருந்தனர்.
ஆனால் மஞ்சு டிராக்டர் மூலம் வயலை உழுவது குறித்து கிராம மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆட்சேபம் தெரிவிக்கும் சில கிராமவாசிகள் ஓரான் சமூகத்தின் கடந்த கால பாரம்பரியத்தை அதற்கான காரணமாக குறிப்பிடுகின்றனர்.
முப்பத்து மூன்று வயதான சுக்ரு ஓரான், மஞ்சுவின் ஒன்றுவிட்ட சகோதரர். இதுபற்றிப்பேசிய அவர், "மஞ்சு ஒரு பெண். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஓரான் சமூகத்தில் பெண்கள் நிலத்தை உழுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வயல்கள் தரிசாக கிடந்தாலும் இங்குள்ள வழக்கப்படி பெண்கள் நிலத்தை உழ முடியாது. ஆனால் மஞ்சு டிராக்டர் மூலம் வயலை உழுததால், ஊர் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பெண்கள் செய்யும் வேலையை பெண்கள் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யும் வேலையை ஆண்கள் செய்ய வேண்டும்."என்றார்.

பட மூலாதாரம், Md SARTAJ ALAM/BBC
'இது அபசகுனம்!'
பெண் வயலை உழுவது கெட்ட சகுனமா? இந்த கேள்விக்கு பதிலளித்த அவரது உறவினரான தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சுக்ரு ஓரான், "பழங்குடி சமூகத்தில் இதுபோன்ற சில நடைமுறைகள் இருப்பதால், மஞ்சு ஓரானின் செயல் மக்களால் எதிர்க்கப்படுகிறது. இது துரதிருஷ்டவசமானது ஆனால் மஞ்சு வயலை எருது கொண்டு உழவில்லை, இயந்திரம் அதாவது டிராக்டர் மூலம் வயலை உழுதார் என்பதை ஊர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அது கெட்ட சகுனம் அல்ல."என்று கூறினார்.
" பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி, நாட்டின் குடியரசுத் தலைவராக ஆகமுடியும்போது, மஞ்சுவும் தற்சார்பு பெற வேண்டும் என்று கனவு காண்கிறார். அதனால் டிராக்டர் வாங்கி அதன்மூலம் விவசாயம் செய்ய விரும்புகிறார். பெண்கள் தற்சார்பு பெற கல்வி கற்கிறார்கள். பெண்கள் எல்லா வேலைகளிலும் முன்னேறிச் செல்கிறார்கள். பெண்கள் ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் போன்றவற்றை ஓட்டுகிறார்கள்."
ஆட்சேபம் தெரிவிப்பவர்களில் ஒருவரான நாற்பத்தைந்து வயது பெண்மணி கந்தாயின் ஓரான் ஒரு சமூக சுகாதாரப் பணியாளர் ஆவார். பிபிசி உடனான உரையாடலின் போது இந்த சர்ச்சையை மற்றொரு கோணத்தில் விவரித்தார்.
"கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரவீன் மின்ஜ் என்ற கிராமவாசி, தஹுடோலி கிராமத்தின் ஓரான் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களை மதம் மாற்றினார். இது தொடர்பாக கிராம மக்கள் ஜூலை 2ம் தேதி கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். பிரவீன் மின்ஜ் மற்றும் மதம் மாறிய இரு குடும்பங்களும் சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்டனர்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Md SARTAJ ALAM/BBC
கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?
"பிரவீன் மின்ஜின் வயல்களில் கிராம மக்கள் யாரும் விவசாயம் செய்யக்கூடாது என கிராம சபையில் முடிவு செய்யப்பட்டது. இருந்த போதிலும், சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட பிரவீன் மின்ஜின் வயல்களை மஞ்சு உழுதுள்ளார். இதில் எங்களுக்கு ஆட்சேபம் உள்ளது," என்றார்.
சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்டுள்ள பங்கஜ் மிஞ்சை தொடர்பு கொண்டு பேசியபோது அவர், "கிராமத்தைச் சேர்ந்த பந்தன் ஓரானின் மனைவி பந்தின் ஓரானுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கிறிஸ்தவ மத பிரார்த்தனைக்குச் செல்லத் தொடங்கினார். மேலும் பலன் கிடைத்த பிறகு பிரிஸ்முனி ஓரானும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளத் தொடங்கினார்."என்று கூறினார்.


"இந்த விஷயம் கிராம மக்களுக்கு தெரியவந்தது. அதனால் கிராம மக்கள் நான் அவர்களை மதம் மாற்றியதாக குற்றம் சாட்டினார்கள். காவல் நிலையத்தில் என் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு நிர்வாகத்திடம் பேசினேன், ஆனால் கிராமத்தில் உள்ள ஓரான் சமூகத்தினரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நிர்வாகத்தால் உதவ முடியவில்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.
" இரண்டு தலைமுறைகளாக என் குடும்பம் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறது. அதே சமயம் பந்தன் ஓரானோ அல்லது பிரிஸ்முனி ஓரானின் குடும்பமோ கிறிஸ்துவத்தை ஏற்கவில்லை. ஆனால் சமூகப் புறக்கணிப்பிற்குப் பிறகு இந்த இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த பதினான்கு உறுப்பினர்களும் கிராமத்தை விட்டு வெளியேறினர்,"என்று பிரவீன் மின்ஜ் தெரிவித்தார்.
தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மஞ்சு விவசாயத்திற்காக குத்தகைக்கு எடுத்ததை பிரவீன் மின்ஜ் ஒப்புக்கொண்டார். இந்த வயலை மஞ்சு டிராக்டர் மூலம் உழுததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
" விவசாயம் செய்யவேண்டும் என்ற என் கனவு, என் குடும்பத்திடம் உள்ள வயல் மூலம் நிறைவேறாது. அதனால் நான் பிரவீன் மின்ஜின் வயல்களை குத்தகைக்கு எடுத்துள்ளேன். ஆனால் பிரவீன் மின்ஜ் சமூக புறக்கணிப்புக்கு ஆளாவதற்கு முன்பே இதை நான் செய்தேன்," என்று மஞ்சு ஓரான் கூறினார்.

பட மூலாதாரம், Ms SARTAJ ALAM/BBC
ஆத்திரமடைந்த கிராமப்பெண்கள் ஏற்பாடு செய்த கூட்டம் பற்றிக்குறிப்பிட்ட மஞ்சு, "கிராமத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட பிரவீன் மின்ஜின் வயலை நீ ஏன் குத்தகைக்கு எடுத்திருக்கிறாய் என்று அவர்கள் என்னிடம் கேட்டனர். பிரவீன் மின்ஜ் கிராமத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட பிறகும் கிராமத்தின் மளிகைக் கடை அவருக்குப் பொருட்களை விற்று வியாபாரம் செய்யும்போது, நான் ஏன் அவருடன் வியாபாரம் செய்யக்கூடாது என்று கிராம மக்களிடம் நான் கேட்டேன்," என்றார்.
"மஞ்சு, பிரவீன் மின்ஜின் வயலை குத்தகைக்கு எடுத்து உழுதுள்ளார். அதை தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் கூறுகிறார். இதனால் கிராம மக்கள் வருந்துகிறார்கள். ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரவீனின் நிலத்தை மஞ்சு விட்டுவிட்டால் சமூகத்தின் மானம் காப்பாற்றப்படும்," என்று மற்றொரு எதிப்பாளரான கரம்சந்த் ஓரான் குறிப்பிட்டார்.
"கிராம மக்கள் கேட்டுக்கொண்டபிறகும் மஞ்சு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இந்த விஷயம் பழங்குடியினரின் 'பாட்ஹா' சமூகத்திடம் செல்லும். அதன் கீழ் தண்டனை வழங்கப்படலாம்."என்று கரம்சந்த் மேலும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Md SARTAJ ALAM/BBC
மஞ்சு என்ன சொல்கிறார்?
58 வயதான மஞ்சுவின் தாய் அங்கனி பகத், ஒரு நோயாளி. அவரது தந்தை, 'லால்தேவ் பகத்', 65 வயதான முதியவர். இளைய சகோதரர் சங்கர் பகத் மனநலம் குன்றியவர். 33 வயதான வினோத் பகத் மஞ்சுவின் மூத்த சகோதரர். அவருடன் சேர்ந்து மஞ்சு விவசாயம் செய்கிறார்.
மஞ்சு விவசாயத்தை தொழிலாக செய்ய விரும்புகிறார். அதனால் கடந்த ஆண்டு சில வயல்களை அவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். மஞ்சு இந்த ஆண்டும் பத்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அவரது தந்தைக்கு 6 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஆண்டு விவசாயம் செய்து கிடைத்த வருமானம், சிறிது கடன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் பழைய டிராக்டர் ஒன்றை மஞ்சு வாங்கினார்.
"வேறு வழியில்லாமல் கடன் வாங்கினேன். கிசான் கிரெடிட் கார்ட் மூலம் கடன் வாங்க விரும்பினேன். ஆனால் கடன் கிடைக்கவில்லை. ஆண், பெண் என்ற பாகுபாடு இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்படவேண்டும் என்று நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவரிடம் கூற விரும்புகிறேன். ஆண்களைப் போலவே பெண்களும் கடன் வசதியைப் பெற வேண்டும். அதனால் அவர்கள் தற்சார்புடன் சிறப்பாகச் செயல்பட முடியும்,"என்று அவர் மேலும் கூறினார்..
''மஞ்சுவுக்கு கடன் கிடைக்காத விவகாரம், என் கவனத்திற்கு வந்துள்ளது. பழங்குடியின பெண்களுக்கு, அவர்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி, திருமணமாகாதவராக இருந்தாலும் சரி, நிலத்தில் உரிமை இல்லை. அதனால் தான் வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றன. தந்தை பெயரில் கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று வங்கிகள் கூறுகின்றன," என்று வட்டார வளர்ச்சி அதிகாரி சுனிலா கால்கோ கூறினார்.
மஞ்சு விவகாரம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகக்கூறிய பிடிஓ, "நாங்கள் கிராமத்தில் ஒரு கூட்டம் நடத்த உள்ளோம். அதில் மக்கள் மஞ்சுவுக்கு அபராதம் அல்லது சமூகப் புறக்கணிப்பு பற்றி பேசினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் தெளிவாகக் கூறுவேன். இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகமும் பிறப்பித்துள்ளது,"என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Md SARTAJ ALAM
பழங்குடி சமூகத்தின் எதிர்வினை
"தஹுடோலியில் நடந்த மத மாற்ற விவகாரம் எனது கவனத்தின் கீழ் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இந்தத் துறையில் நான் பணியாற்றுகிறேன். இப்போது மஞ்சு ஓரான் சம்பவம் தெரிய வந்தது," என்று கும்லா துணை கோட்ட ஆட்சியர் ரவிகுமார் ஆனந்த் தெரிவித்தார்.
"நான் இந்தப்பகுதியில் இரண்டு வருடங்களாக பணியாற்றுகிறேன். மஞ்சு விவகாரம் இந்தப்பகுதியில் நடந்துள்ள முதல் சம்பவம். ஆகவே இதை பொதுவாக நடப்பது என்று வகைப்படுத்தமுடியாது. எனவே இதுதொடர்பாக வட்டார சிஓவிடம் அறிக்கையை கோரியுள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
பழங்குடி சமூகம் 'ராஜி பாட்ஹா' நாடு முழுவதிலும் பழங்குடியினர் மத்தியில் செயல்படுகிறது.
அதன் பொறுப்பாளர் கேப்டன் லோஹ்ரா ஓரான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் பிரச்னைகளை தீர்க்க சமூக சேவகராக பணியாற்றி வருகிறார்.

பட மூலாதாரம், Md SARTAJ ALAM/BBC
"மஞ்சு, பிரவீன் மிஞ்சிடம் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்கிறார். அது தவறில்லை. அதேசமயம், பிரவீன் மிஞ்ஜை ஒதுக்கி வைத்தது சரிதான். அவரால் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட இரண்டு குடும்பங்களும் அந்த மதத்தை விட்டுவிட்டு ஓரான் சமுதாயத்திற்கு திரும்பும்வரை அவர்களுக்கு வயல்கள் அளிக்கப்படாது."
"ஏனென்றால் எங்கள் ஐந்தாவது அட்டவணையின்படி, எந்த வெளி குடும்பமும் பழங்குடி சமூகத்தின் நிலத்தைப் பயன்படுத்த முடியாது,"என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Md SARTAJ ALAM/BBC
படப்படிப்பை தொடரும் மஞ்சு
"டெல்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்கள் என்னைப் போல தங்கள் கிராமங்களில் விவசாயம் செய்து முன்னேற வேண்டும் என்று சமூகத்தின் எல்லா பெண்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்,"என்று இருபத்தி இரண்டு வயதான மஞ்சு ஓரான் தெரிவித்தார்.
விவசாயத்துடன் கூடவே மஞ்சு தனது படிப்பையும் தொடர்கிறார். அவர் 2017 ஆம் ஆண்டில் சிசாய் தொகுதியின் பர்ரி பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 58% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
அவரது பள்ளி வீட்டிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இண்டர் படிப்பிற்காக, 45 கிமீ தொலைவில் உள்ள லோஹர்டகா நகரில் உள்ள தனது தாய்வழிப் பாட்டியிடம் அவர் சென்றார். 2019 ஆம் ஆண்டில் அவர் லோஹர்டகா மகளிர் கல்லூரியில் இருந்து இண்டர் தேர்வில் 46% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவர் தனது கிராமமான தஹுடோலியில் மூன்று ஆண்டுகள் இருந்தார்.
இந்த நேரத்தில் மஞ்சு தன் சகோதரனுடன் சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார். விவசாயத்தின் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட அவர் கடந்த ஆண்டு சில வயல்களை குத்தகைக்கு எடுத்தார். இதில் விவசாயம் செய்ய கடன் வாங்கினார்.
இதன் போது அவருக்கு சில பயிர்களில் இருந்து லாபம் கிடைத்தது. பொதுமுடக்கம் காரணமாக சிறிது நஷ்டமும் ஏற்பட்டது. குத்தகைக்கு எடுத்த வயல்களில் இந்த ஆண்டு உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை பயிரிட அவர் விரும்புகிறார். விவசாயத்துடன் கூடவே மஞ்சு பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
இந்த ஆண்டு மஞ்சு கும்லாவில் உள்ள இக்னோ மையத்தில் சமஸ்கிருத ஹானர்ஸில் அட்மிஷன் பெற்றுள்ளார். தற்போது, பிஏ முதலாம் ஆண்டு மாணவியான மஞ்சு, விவசாயத்தில் அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால் கல்லூரிக்குச்சென்று இளங்கலைப் படிப்பை படிக்க முடியவில்லை என்று கூறினார். இதற்காக 40 கி.மீ. தொலைவில் உள்ள கும்லாவில் இருக்கும் இக்னோ மையத்தில் சேர்ந்தார். தேர்வெழுத மட்டுமே அவர் அங்கு செல்லவேண்டியிருக்கும்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













