30 வருட கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டது எப்படி? ஹரியாணாவில் நடிகனாக வாழ்ந்த முதியவர்

- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
மேலே காணப்படும் ஒளிப்படத்தில் இருப்பவர், ஓம் பிரகாஷ் என்கிற பாஷா. இவர், வட இந்திய மாநிலமான ஹரியாணாவின் காவல்துறையால், "மிகவும் தேடப்படும் குற்றவாளி" பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இப்போது அவருக்கு வயது 65.
இந்திய ராணுவத்தின் முன்னாள் ஊழியரான இவர், 30 ஆண்டுகளாக கொள்ளை மற்றும் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாகத் தேடப்பட்டு வருகிறார். ஆனால், அவர் அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் வெளிப்படையான வாழ்க்கையின் கீழ் புதிய அடையாளத்தோடு மறைந்திருந்தார். அங்கு, அவர் அதிகாரபூர்வ ஆவணங்களைப் பெற்று, ஓர் உள்ளூர் பெண்ணை மணந்து கொண்டு, மூன்று குழந்தைகளோடு ஒரு புத்தம் புதிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஆனால், கடந்த ஆகஸ்டில் காசியாபாத் நகரிலுள்ள ஒரு நகர்ப்புற குடிசைப்பகுதியில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
டிரக் ஓட்டுவது, மத நிகழ்வுகளில் பக்திப் பாடல்களைப் பாடுவதற்கான ஒரு குழுவில் ஒருவராக அருகிலுள்ள கிராமங்களுக்குச் செல்வது, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 28 உள்ளூர் படங்களில் நடித்தது என்று அவர் கைது செய்யப்படும் வரை, ஓம் பிரகாஷ் பல முகங்களைக் கொண்டிருந்தார்.
தற்போது ஓம் பிரகாஷ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவரைக் கைது செய்த குழுவிலிருந்த ஹரியாணா சிறப்பு அதிரடிப்படையின் உதவி ஆய்வாளர் விவேக் குமார் பிபிசியிடம் பேசியபோது, அவர் 1992ஆம் நடந்த கொலை சம்பவத்தில் ஓம் பிரகாஷ் உடந்தையாக இருந்தாக கூறினார்.
ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தினரின் தரப்பு கதையைக் கேட்க நான் அவர்களைத் தேடினேன்.
பரந்து விரிந்து கிடக்கும் ஹர்பன்ஸ் நகர் குடிசைப்பகுதியில், குறுகிய சிக்கலான பாதையில், வீட்டு எண்கள் வரிசையாக இல்லாததால், அவர்களுடைய வீட்டைக் கண்டுபிடிக்க எனக்கு மூன்றரை மணிநேரம் ஆனது.
நான் ராஜ்குமாரி, அவருடைய 25 ஆண்டுகால மனைவி மற்றும் அவருடைய மூன்று குழந்தைகளில் 21 வயதான ஒரு மகனையும் 14 வயதான ஒரு மகளையும் சந்தித்தேன்.
ராஜ்குமாரி, தனது கணவர் மீதான குற்றச்சாட்டுகளின் விவரங்களுடன் ஒரு ஹிந்தி செய்தித்தாளை எடுத்துக் காட்டி, தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவருடைய "குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கடந்த காலம்" பற்றி தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் விஷயங்களை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முயல்வதாகவும் கூறுகிறார்.
ஓம் பிரகாஷ் தரப்பு நியாயத்தைக் கேட்க நான் அவருடைய குடும்பத்தைத் தேடிச் சென்றது வீண் முயற்சி. அவரைப் பற்றிச் சொல்ல அவர்களிடம் எதுவுமில்லை.
அவர் தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். "அவர் ஏற்கெனவே திருமணமாகி, ஹரியானாவில் குடும்பம் நடத்தி வருகிறார் என்று தெரியாமல், 1997-ஆம் ஆண்டில் அவரை திருமணம் செய்து கொண்டேன்," என்று ராஜ்குமாரி குற்றம் சாட்டியுள்ளார்.

ஓம் பிரகாஷ் யார்? அவர் மீதுள்ள குற்றச்சாட்டு என்ன?
அவர், ஹரியாணா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் இருக்கும் நரைனா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். "இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் 12 ஆண்டுகள் டிரக் ஓட்டுநராகப் பணியாற்றினார். பிறகு, நான்கு ஆண்டுகள் பணியில் இல்லாததால், அவர் 1988-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார்," என்கிறார் உதவி ஆய்வாளர் விவேக் குமார்.
கொலை குற்றத்திற்கும் முன்பாகவே, ஓம் பிரகாஷ் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அவர் கூறுகிறார். 1986ஆம் ஆண்டில் கார் ஒன்றையும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மோட்டார் பைக் ஒன்றையும், அவற்றோடு தையல் இயந்திரம் மற்றும் ஸ்கூட்டரையும் திருடியதாகக் கூறப்படுகிறது. குற்றங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளன. அவற்றில் சில வழக்குகளில், அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று போலீசார் கூறுகிறார்கள்.
1992ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஓம் பிரகாஷும் மற்றொரு நபரும் பைக்கில் பயணித்த ஒருவரிடம் திருட முயன்றதாக விவேக் குமார் கூறுகிறார்.
மேலும், "அந்த நபர் எதிர்த்தபோது, அவர்கள் அவரை கத்தியால் குத்தினார்கள். கிராம மக்கள் குழு ஒன்று தங்களை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும், அவர்கள் தங்கள் ஸ்கூட்டரை கைவிட்டுவிட்டு, ஓட்டிவிட்டனர்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
இரண்டாவது நபர் பிடிபட்டு, ஏழு-எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறார் உதவி ஆய்வாளர் விவேக் குமார்.
ஆனால், ஓம் பிரகாஷ் தலைமறைவானார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறை அவரை "பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி" என்று அறிவித்தது. அவர் சம்பந்தப்பட்ட கோப்பு மீது தூசு படரத் தொடங்கியது.

அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து, கொலை நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தின் முதல் வருடத்தை, அவர் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றிலுள்ள கோயில்களில் தஞ்சம் புகுந்ததாக ஓம் பிரகாஷ் தங்களிடம் கூறியதாக போலீசார் கூறுகின்றனர்.
ஓராண்டு கழித்து, அவர் வட இந்தியாவுக்குத் திரும்பினார். ஆனால், வீட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக, 180 கிமீ தொலைவிலுள்ள காசியாபாத்தில் தங்கினார். அங்கு அவர் லாரி ஓட்டும் வேலை பார்த்தார்.
1997ஆ, ஆண்டில் அவரைத் திருமணம் செய்துகொண்ட ராஜ்குமாரி, ஓம் பிரகாஷ், 1990களில் திரைப்படங்களின் வீடியோ கேசட் ரெக்கார்டர்கள் விற்பனை மற்றும் கடனாகக் கொடுக்கக்கூடிய கடையை நடத்தி வந்ததாகவும் அதனால், அவர் பஜ்ரங் பாலி அல்லது பஜ்ரங்கி என்று அறியப்பட்டதாகவும் கூறுகிறார். அவர் ராணுவத்தில் பணியாற்றிய காரணத்தால், "ஃபவுஜி டாவ்" என்று, அதாவது சிப்பாய் மாமா என்றும் அறியப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு முதல் அவர் உள்ளூர் ஹிந்தி மொழித் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார். கிராமத் தலைவராக, வில்லனாக, போலீஸ் கான்ஸ்டபிளாகக் கூட நடித்துள்ளார். அவர் நடித்துள்ள திரைப்படங்களில் ஒன்றான தக்ரவ், யூட்யூபில் 7.6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. அந்தப் படத்தின் காட்சிகள் தனித்தனியாகவே இன்னும் பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றன.
"வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற புதிய அதிகாரபூர்வ ஆவணங்களை அவர் பெற்றுள்ளார்," என்று விவேக் குமார் கூறுகிறார்.
ஆனால், ஓம் பிரகாஷ், ஓர் அபாயகரமான தவறைச் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அவருடைய புதிய ஆவணங்கள் அனைத்திலும் அவருடைய மற்றும் அவருடைய உண்மையான பெயர்களை அவர் மாற்றவில்லை. இதுதான் அவரைச் சிக்க வைத்தது.

ராஜ்குமாரியின் கதை
ஓம் பிரகாஷின் புதிய குடும்பத்திற்கோ அவருடைய அண்டை வீட்டாருக்கோ அவரது குற்றச் செயல்கள் பற்றி எதுவும் தெரியாது என்று போலீசார் ஒப்புக்கொள்கின்றனர்.திருமணத்திற்குப் பிறகு, ஓம் பிரகாஷ் எதையோ மறைக்கிறார் என்பதை உணர்ந்ததாக ராஜ்குமாரி கூறுகிறார்.
ஓம் பிரகாஷ் அவரை நரெய்னா கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் தனது சகோதரர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினார். மேலும், அவர்கள் தனது நண்பர்கள் என்று ராஜ்குமாரியிடம் கூறியுள்ளார்.
சில ஆண்டுகள் கழித்து, "ஒரு நாள் அவருடைய முதல் மனைவி வந்து எங்கள் வீட்டிற்கு வெளியே சலசலப்பை ஏற்படுத்தியபோது தான் அவருடைய முந்தைய திருமணத்தைப் பற்றி அறிந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
"அப்போது தான் நானும் எங்கள் அண்டை வீட்டாரும் அவருக்கு இன்னொரு வாழ்க்கை இருப்பதைக் கண்டுபிடித்தோம். ஒரு மனைவி, ஒரு மகனை அவர் மறைத்து வைத்திருந்தார். நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தோம்," என்கிறார்.
அவர்களுடைய உறவு மோசமடைந்தது. இருவரும் தொடர்ந்து சண்டையிட்டனர். 2007ஆம் ஆண்டில் அவர் மீண்டும் காணாமல் போனார்.

"நான் மிகவும் சோர்வாக இருந்தேன். அவருடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். நான் ஓர் உள்ளூர் அரசாங்க அலுவலகத்திற்குச் சென்று அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்தேன். ஆனால், அவர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தார்," என்கிறார் அவர்.
"அவர் எங்களைப் பலவாறாகப் பேசுகிறார். இருந்தாலும், அவர் வரும்போதெல்லாம், அப்பா என்பதாலும் ஒரு வயதானவர் என்பதாலும் பரிதாபப்ப்ட்டு அவருக்கு உணவளிக்கிறோம்," என்று அவருடைய 14 வயது மகள் கூறுகிறார்.
முன்பு ஒருமுறை போலீசார் திருட்டு வழக்குக்காக அவரை அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் ராஜ்குமாரி.
"அவர் ஆறு-ஏழு மாதங்கள் சிறையில் கழித்தார். ஆனால், திரும்பி வந்து அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக எங்களிடம் கூறினார்," என்கிறார் ராஜ்குமாரி.
கைது செய்யப்பட்ட போதிலும், கொலை வழக்கில் தலைமறைவானவர்களின் பட்டியலில் அவர் தொடர்ந்து இருந்தார். இருப்பினும் போலீஸ் பதிவுகள் பெரும்பாலும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. அத்துடன் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கும் போலீசார் ஒருவருக்கொருவர் பேசுவது அல்லது தகவல்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கமானதல்ல.
எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்?
2020ஆம் ஆண்டில் ஹரியாணா சிறப்புப் படையை அமைத்து ஓராண்டுக்குப் பிறகு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப் பொருள் பறிமுதல், பயங்கரவாதம் மற்றும் மாநில எல்லைகளைக் கடப்பதை உள்ளடக்கிய வழக்குகளை முக்கியமாக கவனித்தது. அதன் ஒரு பகுதியாக, ஓம் பிரகாஷின் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
சிறப்புத் தனிப்படை அவரை "மிகவும் தேடப்படும்" பட்டியலில் சேர்த்தது. அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களுக்கு 25,000 ரூபாய் பரிசாக அறிவித்தது.
கடந்த காலங்களிலும், மிக நீண்ட காலமாக, சிலநேரங்களில் பல்லாண்டுக் காலமாகத் தப்பியோடிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வழக்குகள் உள்ளன. காசியாபாத்தில் பல ஆண்டுகளாக குற்றச் சம்பவங்களைக் கண்காணித்த மூத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் அமில் பட்நாகர், "பொதுவாக பயங்கரவாதம், தொடர் கொலைகளில் ஈடுபடும்போது அல்லது அவர்களுக்குத் தகவல் கிடைத்தால் மட்டுமே போலீசார் பழைய வழக்குகளை மீண்டும் எடுக்கிறார்கள்," என்கிறார். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஏன் சிறப்புத் தனிப் படை முடிவெடுத்தது என்பது முழுமையாகத் தெரியவில்லை.
ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு, போலீசார் நரைனா கிராமத்திற்குச் சென்று "ஓம் பிரகாஷின் நினைவாற்றல் கொண்ட 50 மற்றும் 60 வயதானவர்களிடம் பேசினர்."
அங்குதான், ஓம் பிரகாஷ் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தார் என்றும் அவர் உத்தர பிரதேசத்தில் எங்காவது வசிக்கலாம் என்றும் அவர்களுக்கு முதல் தடயங்கள் கிடைத்தன.
அவர்களுடைய இரண்டாவது பயணத்தில், ஓம் பிரகாஷின் பெயரில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து, இறுதியாக அவருடைய புதிய முகவரியைக் கண்டுபிடிக்க முடிந்தது.
காவல்துறையினர் ஒரு வாரமாக அந்தப் பகுதியில் தங்கியிருந்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்களிடம் அவருடைய 30 வயது படம் மட்டுமே இருந்ததால், அவர்களும் அடையாளம் காண சிரமப்பட்டதாகவும் இப்போது அவர் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறார் என்றும் கூறுகின்றனர்.

"எங்களுக்குச் சரியான நபர் கிடைத்துவிட்டதை உறுதி செய்ய விரும்பினோம். ஒரு தவறான நடவடிக்கை, அவர் இன்னும் 30 ஆண்டுகளுக்குத் தப்ப வழிவகுத்துவிடும் என்று நாங்கள் கவலைப்பட்டதால், இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது," என்று விவேக் குமார் கூறினார்.
அடுத்து என்ன நடக்கும்?
நீண்டகாலமாகத் தப்பி ஓடிய ஒருவரைக் கைது செய்தது சிறப்பு அதிரடிப் படைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், காவல்துறையின் உண்மையான கடின உழைப்பு இப்போதுதான் தொடங்குகிறது என்கிறார் பட்நாகர்.
மேலும், "தங்களுக்குச் சரியான நபர் கிடைத்துள்ளார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மேலும் அவர் சரியான நபரா என்பதையும் அவர் மீது சாட்டப்பட்ட குற்றத்தை அவர் செய்தாரா என்பதையும் நீதிமன்றங்கள் ஆழமாக ஆராய வேண்டும்," என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தைக் கருத்தில் கொண்டு ஆதாரங்களின் தரம் மீது கவனம் செலுத்தப்படும் என்கிறார் பட்நாகர்.
"ஆதாரங்கள் தேய்ந்து கிடப்பது குற்ற வழக்குகளில் மிகவும் உறுதியான அம்சமாகும். கச்சிதமான வழக்கை உருவாக்குவது காவல்துறைக்கும் வழக்கு தொடுப்பவர்களுக்கும் சவாலான பணியாக இருக்கும்," என்றும் கூறுகிறார் பட்நாகர்.
நான் ஓம் பிரகாஷின் வீட்டை விட்டு வெளியேறும் முன்பாக, ராஜ்குமாரியிடம் அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரைச் சந்திக்க முயன்றீர்களா என்று கேட்டேன்.
அதற்கு அவர், "நாங்கள் அவரைச் சந்திக்க வேண்டுமானால் எங்கள் அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர். ஆனால், நான் அதைச் செய்ய விரும்பவில்லை. அதனால் என்ன நன்மை கிடைக்கும்?" என்றார்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













