இந்து ராஷ்டிரா: இந்துக்களை வலிமையானவர்களாக உணரவைக்கும் பெருமிதமா?

இந்து ராஷ்டிரா
    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆனது. அதே நேரம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது. ஆனால் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தை இந்தியாவில் ஒரு இழிவான வார்த்தையாக கருதப்பட தொடங்கியுள்ளது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை இந்தியா ஒரு 'இந்து நாடு'.

சமீப காலமாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் இதுபோன்ற பல அறிக்கைகளை தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கமுடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் தனிப்பட்ட உரையாடல்களில் கூட இதுபோன்ற வாக்கியங்களை பயன்படுத்தியதில்லை.

இந்த அறிக்கைகள் எல்லாவற்றிலுமே முஸ்லிம்கள் அவர்களுடைய உணவு, வாழ்க்கை முறை மற்றும் மத நிகழ்வுகளுக்காக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய அறிக்கைகளின் நீண்ட பட்டியல் உள்ளது. இதுபோன்ற அறிக்கைகள் தேர்தல் நேரத்தை ஒட்டி அதிகமாக வெளியிடப்படுகின்றன. ஆனால் அவற்றின் ஆரவாரம் ஒருபோதும் முழுவதுமாக நிற்பதில்லை. இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவு நிலவுகிறது. இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது கலவர வடிவில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. 2020 இல் நடந்த டெல்லி கலவரத்தைத் தவிர கடந்த சில ஆண்டுகளில் கான்பூர்-மும்பை (1992), மீரட் (1987), ராஞ்சி (1967), பாகல்பூர் (1989), ஆமதாபாத் (2002) தவிர வேறு பயங்கரமான கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதும் உண்மை.

ஆனால் இரண்டு சமூகங்களுக்கிடையிலான விரிசல் முன்பை விட ஆழமடைந்து வருவதாகத் தெரிகிறது. நாட்டில் முஸ்லிம்களுடன் நேரடியாக தொடர்புடைய விஷயங்கள் பற்றி ஒவ்வொரு நாளும் பேசப்படுவதுதான் இதற்குப்பின்னால் இருக்கும் முக்கிய காரணம். இடைவெளியைக் குறைப்பதற்கு பதிலாக, அதை ஆழமாக்கும் நடவடிக்கைகளை இங்கே நாம் பார்க்கிறோம்.

இந்த அறிக்கைகள் அனைத்தும் அரசியல் பிரிவினரிடமிருந்து மட்டுமே வருகிறது என்று சொல்லமுடியாது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும், சமூக ஊடகங்களிலும், கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் முதல் வாட்ஸ்-ஆப் குழுவின் உறவினர்கள் வரை இந்து-முஸ்லிம் மோதல் தொடர்பான பிரச்னைகள் குறித்த விவாதமும் சர்ச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சிலசமயம் மத நாடாளுமன்றங்கள் என்ற பெயரில், ஆத்திரமூட்டும் பேச்சுக்களால், சிலசமயம் இறைச்சிக் கடைகளைப் பற்றி, சில சமயம் பார்க் அல்லது மாலில் தொழுகை நடத்துவதற்காக, சில சமயம் ஹிஜாப் அணிவதால் சலசலப்பை ஏற்படுத்தி, சில சமயங்களில் ஒலிப்பெருக்கி மூலம் 'அஜான்' ஒலி வருவதால் என்று இந்த செயல்முறை ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடர்கிறது.

இந்து ராஷ்டிரா

கூர்ந்து கவனித்தால், இந்தியா இந்துக்களின் நாடு என்றும் அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்பவே எல்லாம் முடிவு செய்யப்படும் என்றும் நம்புபவர்கள்தான் இதற்குப்பின்னால் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் நீங்கள் வந்தே மாதரம் சொல்ல வேண்டும் அல்லது 'ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்' என்று சில ஆண்டுகளுக்கு முன் முழங்கியவர்கள் இவர்கள். இது போன்ற கோஷங்கள் ராஜஸ்தானின் உதய்பூர், கரௌலி தொடங்கி கர்நாடகாவின் ஹூப்ளி வரை ஒலித்தன.

இந்த செயல்முறை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் இந்தியாவை இந்து தேசமாக பார்க்கும் பிரிவு. மறுபுறம், நாட்டின் முஸ்லிம் குடிமக்கள்.

உத்தர பிரதேச தேர்தலுக்கு முன் முதல்வர் யோகி ஆதித்யநாத், 80 சதவிகிதத்திற்கும் 20 சதவிகிதத்திற்கும் இடையிலான மோதல் இது என்று பேசியது நினைவிருக்கலாம்.

ஆயினும், 80 மற்றும் 20 சதவிகிதம் என்று தான் கூறியது இந்து மற்றும் முஸ்லிம்களைக் குறிக்கவில்லை, மாறாக தேசபக்தி மற்றும் தேச விரோத சக்திகளைக் குறிப்பிட்டது என்று அவர் பின்னர் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும், இதுபோன்ற பிரச்னைகள் திட்டமிட்ட முறையில் எழுப்பப்படுகின்றன. 80 சதவிகித இந்துக்களை சக்திவாய்ந்தவர்களாகவும், 20 சதவிகித முஸ்லிம்களை அந்நியமாகவும் உணரச்செய்வதற்காகவே இவை செய்யப்படுகின்றன.

இந்து ராஷ்டிரம்

இந்துத்துவத்தை அரசியலின் மையத்திற்குக் கொண்டுவரும் முயற்சியில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் 'இந்துத்துவா' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 1923 இல் வெளியிடப்பட்ட 'எசென்ஷியல்ஸ் ஆஃப் ஹிந்துத்வா' என்ற புத்தகத்தில் முதன்முறையாக இருதேசியம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்பதை அவர் நிரூபிக்க முயன்றார்.

இந்தியா இந்துக்களின் தாய்நாடு மற்றும் புண்ணிய பூமி என்று சாவர்க்கர் கூறினார். இந்தியா முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி அல்ல, ஏனெனில் அவர்களின் புனித யாத்திரை தலங்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ளது என்று அவர் கூறினார். இந்துத்துவா என்ற வார்த்தை சாவர்க்கரால் உருவாக்கப்படவில்லை என்றும் ஆனால் அவர் அந்த சொல்லுக்கு இன்னும் விரிவாக புதிய விளக்கத்தை அளித்தார் என்றும் சிலர் கருதுகின்றனர்.

இந்து ராஷ்டிரா

ஆர்எஸ்எஸ்ஸின் 'இந்து ராஷ்டிரா'வும் சாவர்க்கரின் 'இந்து ராஷ்டிரமும்' ஒன்றல்ல என்று பல வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்துக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் என்ன நினைக்கிறது என்பதன் விரிவான விளக்கம் ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகிறது. 1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று நாக்பூரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நிறுவப்பட்டது. ஆனால் இந்த கருத்தாக்கத்திற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

1925க்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நாக்பூரின் காற்றில் இந்து-முஸ்லிம் மோதல்கள் பொதுவாக காணப்பட்டன.

ஆர்எஸ்எஸ் இணையதளத்தில் உள்ள 'நாக்பூர் கலவரக் கதை'யில் இது பற்றிய குறிப்பு உள்ளது.

"1924 ஆம் ஆண்டு முதல், நாக்பூரில் உள்ள முஸ்லிம்கள் மீதான பொருளாதாரப் புறக்கணிப்பு காரணமாக அவர்களின் கோபம் அதிகரித்தது. அவர்களின் நிலையைப்பற்றி கவலைப்படாமல், சத்ராஞ்சிபுரா, ஹன்சாபுரி மற்றும் ஜும்மா மசூதிக்கு முன்னால் இந்து ஊர்வலங்கள் பெரும் ஆடம்பரத்துடன் சென்றன.

இன்று ஹனுமன் ஜெயந்தி, ராம நவமி ஊர்வலங்களில் வன்முறைகள் நடப்பதாக இந்தியாவில் செய்திகள் வெளிவரும்போது, கடந்த நூற்றாண்டிலிருந்து இதுபோன்ற ஊர்வலங்கள் நடந்து வருவது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக்காலத்திலும் இந்த ஊர்வலங்கள் மசூதிகளின் பகுதிகள் வழியாகவே சென்றன. இவற்றில் அப்போதும் மக்கள் தடிகள், கம்புகளை ஏந்திச்சென்றனர்.

இந்து ராஷ்டிரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்றைக்கு இந்தியாவில் இந்துக்களின் தொகை 95 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் நிறுவனர், இந்துக்கள் மத்தியில் எந்த வகையான பயத்தைப் பற்றி பேசுகிறாரோ, அதே பயத்தை தாங்கள் உணர்வதாக இப்போது பல முஸ்லிம்கள் புகார் செய்யத் தொடங்கியுள்ளனர்.

"இதன் காரணமாக, முஸ்லிம்கள் இந்துக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்த முயற்சிக்கத் தொடங்கினர். ஒரு இந்து தனியாக சிக்கினால் அவரைப் பிடித்து அடிப்பார்கள். இந்து பகுதிகளிலிருந்து பெண்களை மயக்கி அவர்களை தங்களுடன் ஓடிவரச்செய்வார்கள்," என்று ஆவண காப்பகத்தில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட இரண்டு முஸ்லிம்களுக்கு பயந்து ஓடும் ஒரு இந்துவைத் தடுத்து நிறுத்தி, "ஏன் ஓடுகிறாய்?" என்று டாக்டர் ஹெட்கேவார் கேட்டார். அவர் மூச்சுவாங்க பதிலளித்தார். "இரண்டு முஸ்லிம்கள் கொல்ல வந்துள்ளனர். தனியாக இருந்தேன். நான் என்ன செய்ய முடியும்? ஓடி என் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறேன்."

இதுபோன்ற சம்பவங்களை விவரிக்கும் போது, மக்கள் மனதில் இருந்து தாழ்வு மனப்பான்மை மற்றும் பயம் நீங்க வேண்டும் என்று டாக்டர் ஹெட்கேவார் கூறுவார். தன்னம்பிக்கையிலிருந்து தாழ்வு மனப்பான்மையை அகற்றி, இந்துக்களின் மனதில் 'நான்' என்பதற்குப் பதிலாக, 'நாம் முப்பத்தைந்து கோடி பேர்' என்ற தேசியப் பெருமித உணர்வு உருவாக வேண்டும் என்று அவர் குறிப்பிடுவார்.

சுருக்கமாகச் சொன்னால், இந்துக்களிடையே காணப்பட்ட இந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கி, இந்த 'கர்வ' உணர்வை நிரப்புவதற்கான கதையின் பெயர்தான் 'இந்து ராஷ்டிரா'. இது முஸ்லிம்களை விட இந்துக்களை வலிமையானவர்களாக உணர வைக்கும் நோக்கம் கொண்டது. ஆர்எஸ்எஸ்ஸின் 'இந்து ராஷ்டிரா'வின் பார்வையும் இதுதான்.

முஸ்லிம்கள் மத்தியில் அச்சம்

இன்றைக்கு இந்தியாவில் இந்துக்களின் தொகை 95 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் நிறுவனர், இந்துக்கள் மத்தியில் எந்த வகையான பயத்தைப் பற்றி பேசுகிறாரோ, அதே பயத்தை தாங்கள் உணர்வதாக இப்போது பல முஸ்லிம்கள் புகார் செய்யத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இந்த 'பயம்' எழுந்துள்ளது. அச்சத்தின் வடிவம் வெவ்வேறானவை.

முஸ்லிம்கள் அச்சம்

பட மூலாதாரம், Getty Images

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை குறித்துப்பேச வந்த முஸ்கானும் பிபிசி உடனான உரையாடலில் இந்த பயத்தைப்பற்றி குறிப்பிட்டார். அப்போது முஸ்கான், "நான் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றேன், ஹிஜாபை கழற்றச் சொன்னார்கள். அந்த நபர்கள் என்னை மிரட்டினார்கள். அவர்கள் எனக்கு முன்பே நான்கு பெண்களை உள்ளே அடைத்து வைத்திருந்தனர். எனக்கு பயம் ஏற்படும்போது நான் அல்லாஹ்வின் பெயரை மனதில் நினைத்துக்கொள்கிறேன்," என்று கூறினார்.

இதேபோன்ற அச்சம் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி முஸ்லிம்களிடையேயும் காணப்படுகிறது. ஜஹாங்கிர்புரியில், அனுமன் ஜெயந்தி அன்று நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. அதன்பிறகு அங்கே ஒரு வீடு பூட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அந்த வீட்டில் வசிக்கும் முஸ்லிம் நபர் பற்றிய விவரமே தெரியவில்லை.

அவர் எங்கு சென்றார், எப்போது திரும்புவார் என்பது யாருக்கும் தெரியவில்லை. தெரிய வந்தது அவருடைய கதை மட்டுமே. ''இங்கு 'அவர்' வாடகைக்கு வசித்து வந்தார். வண்டியில் சிக்கன் சூப் விற்றுவந்தார். பயந்து ஓடிவிட்டார்," என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு, பலரது வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. கர்கோனின் கஸ்கஸ் வாடியில் இடிக்கப்பட்ட ஹசீனா ஃபக்ருவின் வீடு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டது. "நிர்வாகம் ஏன் வீட்டை மட்டும் உடைத்தது. எங்களையும் கொன்றிருக்கலாமே," என்று பயத்துடனும் கோபத்துடனும் அவர் சொன்னார்.

நவராத்திரி காலங்களில் இறைச்சிக் கடையை வலுக்கட்டாயமாக மூடியபோது வியாபாரிகள் தெரிவித்த அதே அச்சத்தை, ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படும் பனாரஸில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தியவர்களும் உணர்ந்ததாக கூறினர்.

நூபுர் ஷர்மாவின் முகமது நபி பற்றிய அறிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மோதல் அதிகரித்தபோதும், பல நகரங்களில் ஜூன் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வன்முறை ஏற்பட்டது, அதன் அடுத்த நாள், உத்தர பிரதேசத்தின் பல நகரங்களில் வீடுகள் புல்டோசர்களால் உடைக்கப்பட்டன.

பிரயாக்ராஜ் வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாவேத் வீடும் புல்டோசர்களால் அழிக்கப்பட்டது. ஜாவேத் என்பவரின் மகளும், மனைவியும் இதே 'பயம்' பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பெயர்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது சில பொதுவான விஷயங்கள் உள்ளன. இந்த 'பயத்தில்' இருப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த அச்சச் சூழல் பெரும்பாலும் நிலவுகிறது.

முஸ்லிம்கள் அச்சம்

பட மூலாதாரம், Getty Images

ஆயினும், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும்கூட அச்சச் சூழல் நிலவுகிறது என்பதும் உண்மைதான்.

முஸ்லிம்களின் வீடுகள் மட்டும் புல்டோசர்களால் தகர்க்கப்படவில்லை என்பது இன்னொரு உண்மை. பல இந்துக்களின் வீடுகளும் கடைகளும் குறிவைக்கப்பட்டன.

இந்த விவகாரங்களில் எல்லா விஷயங்களும் மதத்துடன் இணைக்கப்பட்டு முழு விஷயமும் வகுப்புவாதமாக மாறியது. இந்த வழக்கு பல்வேறு மாநிலங்களின் உள்ளூர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மனுதாரர்களுக்கு (பெரும்பாலும் முஸ்லிம்கள்) சாதகமாக வரவில்லை.

"இந்து ராஷ்டிராவின் முழு கருத்தும் 'முஸ்லிம் வெறுப்பில்' அடங்கியுள்ளது. முஸ்லிம் மற்றும் கம்யூனிஸ்ட் தனது இரண்டு எதிரிகள் என்று சங்கம் எப்போதுமே கூறிவந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் அவ்வளவாக எதையும் செய்யும் நிலையில் இல்லை. முஸ்லிம்கள் இலகுவான இலக்குகள். அவர்கள் எளிதாக அடையாளம் காணப்படுகின்றனர்," என்று காஷ்மீர் மற்றும் சாவர்க்கர் பற்றிய பிரபலமான புத்தகங்களை எழுதிய அசோக் குமார் பாண்டே கூறுகிறார்.

"இந்த அச்சத்தின் காரணமாக, முஸ்லிம் சமூகம் ஒருபுறம் ஒன்றுபட்டுள்ளது. மறுபுறம் வாக்கு வங்கியான இந்து ஒற்றுமை பற்றியும் பேசப்படுகிறது. இது தேர்தல் லாபத்திற்காக செய்யப்படும் ஒருமுனைப்படுத்தல். இனவாத விவகாரங்களில் முஸ்லிம்கள்தான் இலக்காக உள்ளனர். மக்களுக்கு எதிராக மக்கள் திருப்பப்பட்டுள்ளனர். இந்துக்களில் பழிவாங்கும் மனப்பான்மை உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் கூறினார்.

இந்து ராஷ்டிரா மாநாடு

"முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அல்லது பழிவாங்கும் அரசியல், சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காலம் அல்லது அதற்கு முன்னரும் கூட நடந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வேலையை திட்டமிட்ட முறையில் செய்ய அதிகாரத்தில் இருப்பது அவசியம். நீங்கள் ஆட்சியில் இல்லை என்றால் இதை எப்படிச் செய்ய முடியும்? அதிகாரத்தின் துணையில்லாமல் புல்டோசர் எப்படி இயங்கும்? அரசு உங்களை தடுத்து நிறுத்தும். எனவே அவர்களுக்கு எண்ணம் முன்கூட்டியே இருந்திருக்கலாம், ஆனால் அதிகாரம் இருக்கும் போதுதான் அதை செயல்படுத்த முடியும்," என்று அசோக் குமார் பாண்டே குறிப்பிட்டார்.

அசோக் குமார் பாண்டேயின் வாக்கு வங்கி தர்க்கத்தை பகுப்பாய்வு செய்வோம். ஆனால் முதலில் அச்சத்தின் அறிகுறிகளைப்பாருங்கள்.

ஓர் இந்து என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துதல்

முஸ்லிம்களின் பயத்தைத் தவிர, இந்தச் சம்பவங்களை இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். அதுதான் இந்துவாக இருப்பதில் பெருமை அடையும் உணர்வு.

இன்று, இந்தியாவின் இந்துக்களில் ஒரு பிரிவினர் தங்கள் இந்துத்துவத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இது புதிதல்ல, 1990களின் முற்பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் - 'பெருமிதத்துடன் சொல்லுங்கள் நாங்கள் இந்துக்கள் என்று' என்ற முழக்கத்தை வழங்கியது.

சமய மாநாடுகள், பண்டிகைகளின்போது ஊர்வலங்கள், உணவின் மீதான சலசலப்புகள், ஹிஜாப் பற்றிய கேள்வி, வரலாற்றை மாற்றியது மற்றும் கோவில்-மசூதி தகராறு என இந்தப் பட்டியல் நீண்டது.

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தாக்கத்தால் இதெல்லாம் நடக்கிறதா?

மே 5, 2022 அன்று புது தில்லியில் உள்ள டால்கேட்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்து ராஷ்டிர மாநாட்டின் போது கூடியிருந்த காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2022ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி டெல்லியில் உள்ள தால்கடோரா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்து ராஷ்டிர மாநாடு

"எங்கள் இந்து ராஷ்டிரம் பற்றிய கருத்து கலாசாரம் சார்ந்தது. எந்த இடம் தொடர்பானதும் அல்ல. இந்தியா இந்து நாடாக மாறவேண்டும் என்றோ இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்களின் சிவில் உரிமைகள் குறைக்கப்படவேண்டும் என்றோ VHP விரும்பவில்லை. இந்தியாவின் பாரம்பரியம், இந்தியாவின் சிந்தனை, இந்தியாவின் வரலாறு- இவை அனைத்திலும் இருந்து எழுந்த தனித்துவம், அதுதான் 'இந்து'. இது அனைத்தையும் உள்ளடக்கியது. அது யாரையும் விடாது, விலக்கிவைக்காது. இதன்படி இந்தியா 'இந்து நாடு'தான், அது அப்படித்தான் இருந்தது, இருக்கும்," என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் ஆலோக் குமார், பிபிசி உடனான உரையாடலில் தெரிவித்தார்.

உடுப்பியில் ஹிஜாப் அணிந்த முஸ்கான், கர்கோனின் ஹசீனா ஃபக்ரு, ஜஹாங்கிர்புரியின் சாஹிபா அல்லது பிரயாக்ராஜைச் சேர்ந்த ஜாவேத்தின் மகள் ஆகியோரின் பயம் குறித்த அறிக்கையை, ஆலோக் குமாரின் இந்த அறிக்கையுடன் ஒப்பிட்டால், இந்த 'உள்ளடக்கிய' இந்து தேசத்தின் கருத்தில் அவர்களின் இடம் எங்கே என்ற கேள்வி எழுகிறது.

புல்டோசர் பயன்பாடு, கோவில்-மசூதி தகராறு, ஹிஜாப் குறித்த கேள்வி, நவராத்திரியின் போது இறைச்சி உண்பதற்கு தடை, ஊர்வலங்களில் வன்முறை என பட்டியல் இத்துடன் முடிவடையவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான உதாரணங்களாக அவை மாறிவிட்டன.

கடந்த ஒரு வருட காலச் செய்திகள் இந்த சம்பவங்களால் நிரம்பி வழிகின்றன.

இந்து ராஷ்டிரா மாநாடு

டிசம்பரில் ஹரித்வாரில் நடந்த மத நாடாளுமன்ற மாநாடு, பிப்ரவரியில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பெண்ணுடன் கல்லூரியில் தகராறு, மார்ச் மாதம் உத்தர பிரதேசத்தில் புல்டோசர் விஷயத்தில் யோகி ஆதித்யநாத்தின் வரலாற்று வெற்றி கொண்டாட்டம், ஏப்ரலில் டெல்லியில் இறைச்சி தடை பற்றிய பேச்சு. மே மாதம் ஒலிபெருக்கி சர்ச்சை மற்றும் ராம நவமி, அனுமன் ஜெயந்தி. ஈத் பண்டிகையின்போது ஊர்வலங்களில் சலசலப்பு மற்றும், நூபுர் ஷர்மாவின் அறிக்கை, ஜூன் மாதத்தில் ஞானவாபி ஆய்வு மற்றும் நீரூற்று- சிவலிங்கம் சர்ச்சை, பின்னர் வெள்ளிக்கிழமை வன்முறை மற்றும் போராட்டக்காரர்கள் மீது புல்டோசர்களின் நடவடிக்கை, ஜூலை மாதம் உதய்பூரில் இந்து தையல்காரரின் கழுத்தை அறுத்த சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து மா காளி போஸ்டர் சர்ச்சை என கடந்த ஓராண்டாக ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் ஏதாவது ஒரு ஊரில் இருந்து இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்து ராஷ்டிரா

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவங்கள் அனைத்தின் விளைவும் ஒன்றுதான், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அதிகரித்துவரும் பிரிவினை.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாகும். விஹெச்பி அதன் துணை அமைப்பாகும். இந்தியாவின் தற்போதைய மத்திய அரசின் தலைவரான நரேந்திர மோதி உட்பட பல அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்கள்.

இதன்காரணமாக, தற்போதைய பாஜக அரசு இந்த இரு அமைப்புகளின் கலாசார லட்சியத்தை அரசியல் வழியில் முன்னெடுத்துச்செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விஹெச்பி மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டுமே இந்த கூற்றை ஏற்றுக்கொள்கின்றன. 'இந்து ராஷ்டிரா' மற்றும் 'இந்து அடையாளத்தை' இணைப்பதன் மூலம் நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு அரசு மற்றும் சங்கத்தின் பாதுகாப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.

"தற்போதைய இந்திய அரசின் மனதில் இந்துத்துவா மீது காதல் உள்ளது" என்று ஆலோக் குமார் பிபிசியிடம் கூறினார்.

அதே இந்துத்துவாதான் 'முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்களுக்கு' அடிப்படைக் காரணம் என்று ஓவைசி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் கூறுகின்றனர். எனவே விஹெச்பி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் 'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தியலில் முஸ்லிம்களின் இடம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்து ராஷ்டிரா மாநாடு

"இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எங்கு சென்றாலும், அங்குள்ள நிலைமைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்கிறார்கள். கிறிஸ்துவம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை. ஆகவே இந்த இரண்டு மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவிலும் அதையே செய்ய வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்," என்று ஆலோக் குமார் குறிப்பிட்டார்.

"எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் யார் மீதும் கருத்து திணிப்பு இல்லை என்ற இந்த 'திருத்தம்' மூலம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் குடிமக்களாக சம உரிமை உள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் உள்ளது, நம் மனதிலும் உள்ளது, நம் சம்மதத்துடனும் உள்ளது." என்று அவர் மேலும் கூறினார்.

இந்த 'திருத்தங்களை' அடைவதற்கான வழி மத மாநாடுகளும், ஆவேச பேச்சுக்களுமா? முஸ்லிம்களின் வீட்டை 'புல்டோசர்' மூலம் இடித்து 'திருத்தம்' செய்ய முடியுமா? முஸ்லிம்களின் 'உணவு மற்றும் உடை' தொடர்பான கண்காணிப்பு அல்லது 'கோயில் மசூதி தகராறுகளை' உருவாக்குவதன் மூலம் அந்த திருத்தங்களைச் செய்ய முடியுமா?

கடந்த வருடத்தின் சில நிகழ்வுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மத நாடாளுமன்ற மாநாடு

இந்து ராஷ்டிரா மாநாடு

கடந்த ஆண்டு டிசம்பரில், ஹரித்வாரில் ஒரு மத நாடாளுமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முஸ்லிம்களைப் பற்றி மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் பேசப்பட்டது.

ஹரித்வாருக்குப் பிறகு, இந்த ஆண்டு டெல்லி, ராய்ப்பூர், ரூர்க்கி ஆகிய இடங்களில் நடைபெற்ற மத மாநாடுகளில் மற்ற மதங்களுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துக்கள் பேசப்பட்டன.

ஹரித்வார் மாநாட்டின் வீடியோவில், மதத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்துங்கள், எந்த முஸ்லிமையும் பிரதமராக்க விடக்கூடாது, முஸ்லிம் மக்கள்தொகை பெருக விடக்கூடாது என மதத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதை பார்க்க முடிந்தது.

மத மாநாட்டின் உள்ளூர் அமைப்பாளரும், பரசுராம் அகாராவின் தலைவருமான பண்டிட் ஆதிர் கௌசிக், "கடந்த ஏழு ஆண்டுகளாக இதுபோன்ற தரம் சன்சத் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு டெல்லி, காஜியாபாத்திலும் இதுபோன்ற மதமாநாடு நடத்தப்பட்டது. 'இந்து நாட்டை' உருவாக்க ஏற்பாடுகளை செய்வதே இதன் நோக்கம். இதற்காக ஆயுதங்களை ஏந்தவேண்டிவந்தால் அதற்கும் தயார்," என்று கூறினார்.

இந்த சர்ச்சைக்குரிய மதக்கூட்டங்கள் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் (VHP) ஏற்பாடு செய்யப்படவில்லை என்றாலும், இந்தியாவில் இதை தொடங்கிவைத்த பெருமை வி.ஹெச்.பி.யையே சாரும்.

இந்து சமுதாயத்தை அமைப்பதும், இந்து மதத்தைப் பாதுகாப்பதும், சமுதாயத்துக்குச் சேவை செய்வதும்தான் தன் நோக்கம் என்று விஹெச்பி கூறுகிறது.

நீலாஞ்சன் முகோபாத்யாயின், 'Demolition and verdict'' என்ற புத்தகத்தில், முதல் சமய மாநாடு பற்றி எழுதப்பட்டுள்ளது. "இந்த மாநாடுகளின் வரலாற்றைப் பார்த்தால், இதுபோன்ற முதல் குறிப்பு 1981 ஆம் ஆண்டில் காணப்படுகிறது."

1981 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மீனாட்சிபுரத்தில் 200 தலித் குடும்பங்கள் கூட்டாக பிப்ரவரி மாதத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறின. அந்த ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள், இந்து மதத்தின் 39 மதத் தலைவர்களை உள்ளடக்கிய மத்திய வழிகாட்டி வாரியத்தை நிறுவினர். பின்னர் VHP இந்த வட்டத்தை விரிவுபடுத்தியது, அதன் முதல் கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது, அதற்கு 'தரம் சன்சத்' (மத நாடாளுமன்றம்) என்று பெயரிடப்பட்டது.

"பெயரில் உள்ள நாடாளுமன்றம் என்ற வார்த்தை இந்திய நாடாளுமன்றத்தின் வழியில் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய நாடாளுமன்றத்தின் நோக்கம் இந்து சமுதாயத்திற்கு மத தலைமையை வழங்குவதாகும்." என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் எழுதுகிறார்.

1983ல் அயோத்தி இயக்கத்தின் கடிவாளத்தை விஹெச்பி தன் கையில் எடுத்தது. 1984 வாக்கில், கேந்திரிய மார்க்கதர்ஷக் மண்டலின் (மத்திய வழிகாட்டி வாரியம்) உறுப்பினர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது. இவர்களின் முதல் சந்திப்பு ஏப்ரல் மாதம் டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த மத-நாடாளுமன்றம் வரலாற்று சிறப்புமிக்கது. இதில் ராம ஜென்மபூமி இயக்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இந்து ராஷ்டிரா மாநாடு

இதற்குப் பிறகு, 1985 அக்டோபர் 31 முதல் நவம்பர் 1 வரை உடுப்பியில் இரண்டாவது மத நாடாளுமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. ராமஜென்மபூமி, கிருஷ்ண ஜென்மஇடம், காசி விஸ்வநாத் வளாகத்தை உடனடியாக இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இம்முறை முன்மொழியப்பட்டது.

விஹெச்பி 2007 வரை 11 சமய நாடாளுமன்றங்களை ஏற்பாடு செய்தது. அதன்பிறகு இவற்றின் ஆத்திரமூட்டும் பேச்சு செயல்முறை சிறிது நிறுத்தப்பட்டது.

2019 பிப்ரவரியில் விஹெச்பி கடைசியாக மாநாட்டை ஏற்பாடு செய்தபோதுதான் அதன் குரல் உரத்து ஒலித்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் கலந்துகொண்டு ராமர் கோவில் கட்டுவது குறித்து பேசினார்.

2019 ஆம் ஆண்டிலேயே அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. கோவில் கட்டுவதற்கான வழி திறக்கப்பட்டது.

"சமூகத்தில் ஒரு முக்கியப் பிரச்னை வரும்போது, மத நாடாளுமன்றத்தை கூட்டுகிறோம். இல்லையெனில் வழிகாட்டி வாரியம் ஆண்டுக்கு இரண்டு முறை கூடி முடிவெடுக்கிறது" என்கிறார் அலோக் குமார்.

ஊர்வலங்கள்

பல சமயங்களில், மத நாடாளுமன்றத்தைத் தவிர, பிற மத நிகழ்வுகளிலும் விஷயங்கள் சிக்கலாகின்றன. இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் பல பகுதிகளில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி மற்றும் ராஜஸ்தானில் ஈத் விழாவின் போது நடந்த ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டது.

ராம நவமி ஊர்வலம் மீது தாக்குதல்

இந்தியாவில் உள்ள சில எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தியின் போது நடந்த வன்முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சதியைப் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் VHP அதில் முஸ்லிம்களின் சதி இருப்பதாகக்கூறுகிறது.

"ராம நவமியின் போது, நாட்டின் பல நகரங்களில் ஒரே போல ஊர்வலங்கள் தாக்கப்பட்டன. அவை நடத்தப்பட்ட விதம் மற்றும் வகையும் ஒரேபோல இருந்ததால் அவற்றில் ஒரு உரு அமைப்பை நான் காண்கிறேன். மசூதிகளில் செங்கல் துண்டுகள், கற்கள், பாட்டில்கள், ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றைக்கொண்டு அந்த வழியாகச்சென்ற ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது துரதிர்ஷ்டவசமானது." என்று விஹெச்பியின் ஆலோக் குமார் கூறினார்.

ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் முஸ்லிம்கள் இவற்றை மறுத்துள்ளனர். ஊர்வலம் மசூதிக்கு முன்னால் திரும்பத் திரும்ப கொண்டுவரப்பட்டதாகவும், ஆத்திரமூட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை டெல்லி ஜஹாங்கிர்புரியில் விஹெச்பி ஏற்பாடு செய்தது.

ஊர்வலத்தின் வரலாற்றைப் பார்த்தால், 1920களில், நாக்பூரில் உள்ள மசூதிகளுக்கு முன்னால் இதுபோன்ற யாத்திரைகள் செல்வது வழக்கம். அந்தக் காலத்திலும் ஊர்வலத்தில் தடி, குச்சிகளை ஏந்திச் செல்லும் போக்கு இருந்தது. இன்று வாள்களும் இவற்றில் இடம் பெற்றுள்ளன.

ஊர்வலங்களில் வன்முறையை ஒரு புதிய போக்காக பல மத வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அஜான், ஒலிபெருக்கி மற்றும் அனுமான் சாலிசா

பனாரஸில் உள்ள சங்கட் மோசன் கோவிலின் பூசாரி டாக்டர் விஷம்பர் நாத் மிஷ்ரா கூறுகிறார்.

"தற்போதைய ஊர்வலத்தின் வடிவம் முற்றிலும் புதியது. தற்போது ஒவ்வொருவரும் தன்னை மதவாதியாகக் காட்ட போட்டி போடுகின்றனர். இதுபோன்ற ஊர்வலங்களின் போக்கு அதிகரித்து வருகிறது. நீங்கள் உண்மையிலேயே மதவாதியாகவும், வழிபாட்டாளராகவும் இருந்தால், நீங்கள் சத்தம் போட்டு வழிபடத் தேவையில்லை. கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையிலான உரையாடல் மிகவும் தனிப்பட்ட விஷயம். இது வெளியே காட்டிக்கொள்ளவேண்டிய விஷயம் அல்ல."

இந்துக்களிடையே மட்டும்தான் இந்த 'காட்டிக்கொள்ளல்' நடக்கிறது என்று சொல்லமுடியாது. ஈத் பண்டிகையிலும் இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.

இந்து ராஷ்டிரா மாநாடு

ஈத் பண்டிகையையொட்டி பாஜக ஆட்சியில் இல்லாத ராஜஸ்தானில் உள்ள கரௌலியிலும் வன்முறை நடந்தது. ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகரம் எப்போதும் அமைதியானதாக கருதப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு, நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் வகுப்புவாத வன்முறை பரவியபோது, ஜோத்பூரில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், இந்த முறை ஈத் விழாவில் சிலை மற்றும் கொடி அலங்காரத்தில் தொடங்கிய தகராறு வகுப்புவாத வன்முறையாக மாறியது. விஷயம் ஊரடங்கு உத்தரவு வரை சென்றது.

பனாரஸிலேயே, ஸ்ரீகாசி ஞானவாபி விடுதலை இயக்கம் ஒவ்வொரு முறையும் சரியாக அஜான் (தொழுகை) நேரத்தில் ஒலிபெருக்கியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஹனுமன் சாலிசாவை ஓதப்போவதாக அறிவித்தது.

ஈத் பண்டிகைக்கு முன் மகாராஷ்டிராவிலும் தகராறு நடந்து வந்தது. இங்கு ஒலிபெருக்கியில் இருந்து தொழுகை சத்தம் வருவது குறித்து சர்ச்சை தொடங்கியது. அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தில் ஒலிபெருக்கிகளுக்கு எதிரான நடவடிக்கையால் ஊக்கம் பெற்ற மகாராஷ்டிராவிலும் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தொழுகை ஒலிபெருக்கி தொடர்பான சர்ச்சை அனுமன் சாலிசா வரை சென்றது. அங்கு மகாராஷ்டிரா எம்.பி ஒருவர் சிறைக்கு செல்ல வேண்டியியதாயிற்று.

"இந்த நடப்புகள் மற்றும் அறிகுறிகள் அனைத்தையும் சரியாக பகுப்பாய்வு செய்தால், அவை அனைத்தும் ராம ஜென்மபூமி இயக்கத்தில் இருந்து தொடங்குகின்றன என்பதை நீங்கள் காண்பீர்கள். முஸ்லிம்கள் இந்தியாவை தங்கள் தாய்நாடு என்று நினைக்கவில்லை என்று கூறப்படுவதே இதன் அடித்தளம். இது அவர்களின் நாடு அல்ல. அவர்கள் வாழ விரும்பினால், அவர்கள் இந்துக்களைப்போல வாழ வேண்டும்," என்று மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.

ராம ஜென்மபூமி இயக்கத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.ஹெச்.பி ஆகிய இரு அமைப்புகளும் கைகோர்த்து இருந்தன. இன்றும் இவ்விரு அமைப்புகளும் இதற்காக பெருமிதம் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புல்டோசர் நடவடிக்கை

பிபிசி உடனான உரையாடலில் நீலாஞ்சன் இந்த சின்னங்கள் மற்றும் அவை தெரிவிக்கும் செய்திகள் குறித்தும் பேசுகிறார்.

"இந்து பிரிவினரால் விரும்பப்படும் புதிய சின்னங்கள் உருவாக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது. இந்த சின்னங்களில் பசு, வந்தே மாதரம், கோவில், ஒலிபெருக்கிகளில் அனுமன் சாலிசா ஆகியன அடங்கும்.

புல்டோசர் நடவடிக்கை

அதேபோல புல்டோசர்கள் இன்றைய தேதியில் சக்திவாய்ந்த ஆளுமைக்கு ஒத்ததாக மாறிவிட்டன. இப்போது நமக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தச் சட்டத்தின் ஆதரவும் தேவையில்லை என்ற செய்தி வழங்கப்படுகிறது. இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் புல்டோசரின் வரலாற்றைப் பார்த்தால், இரண்டாம் உலகப் போரின் போதும் புல்டோசர் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவரும்.

அமெரிக்க ராணுவ அதிகாரி கர்னல் கே.எஸ். ஆண்டர்சன் 'Bulldozer- An Appreciation' என்ற தலைப்பிலான கட்டுரையில், இரண்டாம் உலகப் போரின் போது இது பயன்படுத்தப்பட்டதைப் பற்றி எழுதியுள்ளார். போருக்குப் பயன்படுத்தப்பட்ட எல்லா ஆயுதங்களிலும் இது முன்னணியில் நிறுத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் புல்டோசர்கள் ஒருவித 'போரில்' மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு எதிரிகள் மாறிவிட்டனர்.

அவுட்லுக் இதழில் மூத்த பத்திரிகையாளர் அஷூதோஷ் பரத்வாஜ் சமீபத்தில் இந்தியாவில் புல்டோசர்களின் பயன்பாடு குறித்து ஒரு கட்டுரை எழுதினார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் என்ற வார்த்தையைப் பயன்படுத்திய 58 பேரணிகள் நடந்த எல்லா இடங்களிலும் கட்சி வெற்றி பெற்றதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

"குறிப்பிட்ட சிலரின் வீடுகளையும் கடைகளையும் புல்டோசர் மூலம் தகர்க்கும் அரசாணை தொடர்பாக இந்துக்களின் ஒரு பிரிவினரின் உற்சாகத்தை பார்க்கமுடிகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெற்றி ஊர்வலத்தில் பலர் பொம்மை புல்டோசர்களுடன் நடனமாடுவதையும், யோகி ஆதித்யநாத் 'புல்டோசர் பாபா' என்று அழைக்கப்படுவதையும் நாம் பார்க்கலாம்.

"இன்று புல்டோசர் சக்திவாய்ந்த நிர்வாகத்தின் அடையாளமாக மாறிவிட்டது, அங்கு அதன் பயன்பாட்டிற்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லை." என்று நீலாலஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.

ஹிஜாப் சர்ச்சை

இருப்பினும் சின்னங்களின் உதவியுடன் முஸ்லிம்களிடையே பயம் மற்றும் இந்து என்ற கர்வம் குறித்து சர்ச்சை எழுந்த போதெல்லாம், இந்த விஷயம் நீதிமன்றத்தையும் எட்டியது.

நீதிமன்ற விவகாரம் குறித்துப்பேசிய ஆலோக் குமார், "ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டுக்கு போனது யார்? முஸ்லிம் தரப்பு போனது. நீதிமன்றத்தில் நிவாரணம் கேட்கிறீர்கள், நீதிமன்றம் நிவாரணம் கொடுத்தால் சந்தோஷப்படுங்கள், நீதிமன்றம் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறீர்கள், இது தர்க்கம் செய்யவேண்டிய விவகாரம் அல்ல.

இந்தியா இறைச்சிக்கடை

வாரணாசியில் ஞானவாபி மசூதி சர்ச்சையில் நடந்தது என்ன? ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. ஏற்பாடு கமிட்டி உயர் நீதிமன்றம் சென்றது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆவேச பேச்சு வழக்கும் நீதிமன்றத்தையும் எட்டியது. நான் வெறுப்பு பேச்சுக்கு எதிரானவன். வெறுப்பு பேச்சு முற்றிலும் இந்து தர்மத்திற்கு எதிரானது. மேலும் வெறுப்புப் பேச்சு வழக்கில், எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. ரிஸ்வியின் ஜாமீனுக்கும் மூன்று மாதங்கள் எடுத்தது. சட்டம் என்பது ஒரு செயல்முறை. நூபுர் ஷர்மா குற்றம் செய்துவிட்டார் என்று வைத்துக் கொண்டால், அந்தக் குற்றத்துக்கான தண்டனை என்ன? எப்ஐஆர் போடவேண்டும், பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும், விசாரணை நடத்தப்படும். நீதிமன்றம் தண்டிக்கும்," என்றார்.

ஆனால் முஸ்லிம் தரப்பு ஒவ்வொரு விஷயத்திலும் அதன் சொந்த வாதங்களைக் கொண்டுள்ளது.

ஞானவாபி மசூதி தகராறில் 'சிவலிங்கம்' கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கூற்று குறித்து அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித்தின் வழக்கறிஞர் ரயீஸ் அகமது, "அவர்கள் சிவலிங்கம் என்று அழைப்பது பசூகானா (கை கால்களை சுத்தம் செய்யும் இடம்) நடுவில் உள்ள நீரூற்று. இது கீழே அகலமாகவும், மேல் புறம் குறுகலாகவும் இருக்கும். அதன் வடிவம் சிவலிங்கம் போன்றது. அந்த நீரூற்றை சிவலிங்கம் என்று சொல்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் எல்லா குழப்பங்களையும்உருவாக்கியுள்ளனர்," என்றார்.

ஹிஜாப் சர்ச்சையில், அது தங்களின் அரசியலமைப்பு உரிமை என்று பெண்கள் கூறுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என முஸ்லிம் தரப்பு எதிர்பார்க்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

"எந்த முஸ்லிமும் ராமரையோ, சீதையையோ எதுவும் சொல்வதில்லை. பிறகு ஏன் மக்களுக்கு இஸ்லாம் மீது கோபம் வருகிறது. அத்தகையவர்களுக்கு எதிராக நாட்டின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம்," என்று ஹரித்வார் தர்ம சன்சத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆற்றப்பட்ட உரை குறித்து ஜமியத் உலேமா உத்தராகண்ட் தலைவர் மௌலவி முகமது ஆஃரிப் கூறுகிறார்.

நவராத்திரியில் இறைச்சி தடை குறித்து ஏறக்குறைய இதே கருத்தை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவும் கூறுகிறார்.

இறைச்சி தடை

இந்தியாவில் இதுவரை உணவு தொடர்பான மோதல் மாட்டிறைச்சியுடன் நின்றிருந்தது. இந்துக்கள் பசுவை மரியாதைக்குரியதாகக் கருதுகின்றனர். அதனால்தான் பெரும்பாலான மாநிலங்களில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்துக்கள். அவர்களில் பெரும்பாலானோர் பசுவின் மீது மரியாதை கொண்டவர்கள். ஆனால் இந்தியாவின் பல பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது என்பதும் உண்மை.

இந்தியாவில் மாட்டிறைச்சி தடை சட்டம் நாடு முழுவதும் ஒரே சீராக அமலில் இல்லை. எனவே, கேரளா முதல் வடகிழக்கு வரையிலான பல மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனை வழக்கம் போல் நடந்து வருகிறது. RSS தலைவர்கள் உள்ளூர் உணவு கலாசாரத்தை கருத்தில் கொண்டு, பல மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பதை ஒரு பிரச்னையாக மாற்றவில்லை.

மக்கள் தங்கள் மனசாட்சிப்படி மாட்டிறைச்சி உண்பதை நிறுத்திவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் வட இந்திய மாநிலங்களில் இத்தகைய மென்மைப்போக்கை எப்போதுமே பார்க்க முடிவதில்லை.

இந்தி மொழி மாநிலங்களில், மாட்டிறைச்சி பற்றிய உணர்வுகள் முன்னெப்போதையும் விட வலுப்பெற்றுள்ளன, பல மாநிலங்களில் இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன, தோல் வியாபாரிகள் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்து ராஷ்டிரா மாநாடு

பல மாநிலங்களில் பசுக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கால்நடை வளர்ப்பவர்களை இந்து வலதுசாரிக் குழுக்கள் அடித்தே கொன்ற பல சம்பவங்கள் தெரியவந்துள்ளன.

நரேந்திர மோதி அரசு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, 1955ல், 24 மாநிலங்களில் பசு வதையை காங்கிரஸ் தடை செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு குஜராத்தில் உள்ள சில மாநகராட்சிகள் சாலைகளில் இறைச்சிக் கடைகளை அமைப்பதற்கு எதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தன.

பல மாநிலங்களில், மதிய உணவில் முட்டை வழங்கலாமா, வேண்டாமா என்ற சர்ச்சையும் நிலவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில், மதிய உணவில் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது.

ஆனால் சமீப காலமாக மாட்டிறைச்சிக்கு தடை என்று தொடங்கிய இந்த உணவுச்சண்டை தற்போது மெல்ல மெல்ல இறைச்சி தடை வடிவத்தை எடுத்து வருகிறது.

2022 ஆம் ஆண்டில், சைத்ர நவராத்திரி மற்றும் ரமலான் மாதம் இரண்டும் ஒன்றாக வந்தன.

இந்தியா இறைச்சிக்கடை

பட மூலாதாரம், Getty Images

தில்லியைச் சேர்ந்த பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, நவராத்திரியின் ஒன்பது நாட்களில் இந்தியா முழுவதும் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். இதை டெல்லியின் இரண்டு மாநகராட்சிகள் (கிழக்கு மற்றும் தெற்கு டெல்லி) செயல்படுத்த முடிவு செய்தன. இது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது.

ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எம்பிக்கள், தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கடைக்காரர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது. சட்டரீதியாக, கடைகள் மூடப்படாவிட்டாலும், பல இடங்களில் தாக்குதல் மற்றும் நாசவேலைகள் நடக்கக்கூடும் என்று அஞ்சி மக்கள் கடைகளை திறக்கவில்லை.

ஹலால் மற்றும் ஜாட்கா இறைச்சி தொடர்பாகவும் இதேபோன்ற சர்ச்சை நடந்து வருகிறது, ஹலால் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

அசைவ உணவு இந்திய உணவின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. இந்திய உணவு மரபுகளை ஆராய்ச்சி செய்யும் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் மனோஷி பட்டாச்சார்யா இதை உறுதிசெய்கிறார்.

பிபிசி உடனான உரையாடலில், "முகலாய ஆட்சியாளர்கள் இறைச்சி உண்ணும் பாரம்பரியத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர் என்று நினைப்பது தவறானது. புதிய சாம்ராஜ்யங்கள், வணிகம் மற்றும் விவசாயம் காரணமாக மக்களின் உணவு பழக்கம் கண்டிப்பாக மாறியது. முதலில் மாட்டிறைச்சி மற்றும் பிற்காலத்தில் இறைச்சியும் பிராமணர்களின் உணவில் இருந்து மறைந்தது. ஆனால் மதம் மட்டுமே இதற்கு ஒரே காரணம் அல்ல," என்று அவர் குறிப்பிட்டார்.

"இன்றும் காஷ்மீர் முதல் வங்காளம் வரை பல பிராமண சமூகங்களில் இறைச்சி உண்ணும் பாரம்பரியம் உள்ளது. காஷ்மீரி பண்டிட்டுகள் ரோகன் ஜோஷ் (ஆட்டிறைச்சி உணவு வகை) சாப்பிடும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இதேபோல், மேற்கு வங்கத்தில் பிராமணர்களின் வீடுகளில் இன்றும் இறைச்சி உண்ணப்படுகிறது," என்று டாக்டர் பட்டாச்சார்யா கூறுகிறார்.

சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, 16 மாநிலங்களில் கிட்டத்தட்ட 90 சதவிகித மக்கள் இறைச்சி, மீன் அல்லது கோழியை சாப்பிடுகிறார்கள். அதே நேரத்தில், நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த எண்ணிக்கை 75-90 சதவிகிதம் வரை உள்ளது.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு அசைவம் சாப்பிடுகிறார்கள் என்பதையும் பியூ ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வு காட்டுகிறது. இந்து சமூகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களில் 44 சதவிகிதம் பேர் சைவ உணவு உண்பவர்கள். மீதமுள்ள 56 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுபவர்கள். அதே சமயம், பல்வேறு காரணங்களால் அசைவம் சாப்பிடாத எட்டு சதவிகித முஸ்லிம்களும் உள்ளனர் என்று இந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

இறைச்சிக்கடை

பட மூலாதாரம், Getty Images

அதாவது இந்த முழு பிரச்னையும் அசைவம் சாப்பிடும் 92 சதவிகித முஸ்லிம்களுக்கும், சைவம் சாப்பிடும் 44 சதவிகித சைவ இந்துக்களுக்கும் இடையில்தான் நடக்கிறது. இறைச்சித் தடையை ஆதரிப்பவர்களில் இந்த 44 சதவிகித இந்துக்கள்தான் இருக்கிறார்களா?

நஜிமா பிரவீன், இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் பிரச்னைகள் குறித்து பெருமளவில் ஆராய்ச்சி செய்துள்ளார். "இறைச்சி தடை முடிவில் பல அம்சங்கள் உள்ளன. ஒன்று அரசியல் அம்சம். அதை கலாசார தேசியவாதத்துடன் இணைக்கிறது. மற்றொன்று பொருளாதார அம்சம். அரசியல் அம்சம் தெளிவாகத் தெரிகிறது, அதன் கீழ் அரசின் 'உணவு மீதான கட்டுப்பாடுகள்' இப்போது காணப்படுகின்றன," என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

"இரண்டாவது இந்த இறைச்சி வர்த்தகத்தின் பொருளாதாரம். இறைச்சி வியாபாரம் செய்யும் பெரும்பாலான முஸ்லிம்கள் குரேஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் 2017க்குப் பிறகு மூடப்பட்ட பெரும்பாலான சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் அரசு (நகராட்சி, மாநகராட்சி) இறைச்சிக் கூடங்கள். குரேஷி சமூகத்தைச் சேர்ந்த வணிகர்கள் தங்கள் கால்நடைகளை இந்த இறைச்சிக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று, ஒரு கால்நடைக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி, அவற்றை வெட்டி, கடைகளில் தினமும் விற்று, தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தனர். சட்டவிரோத அரசு இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டபோது, குரேஷி சமூகத்தைச் சேர்ந்த சிறு வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் வியாபாரத்தை விட்டு வெளியேறினர். பல கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. இப்போது இறைச்சி வியாபாரிகள் குரேஷிகளுக்குப் பதிலாக பெரிய தனியார் இறைச்சிக் கூடங்களிலிருந்து இறைச்சியை வாங்கத்தொடங்கியுள்ளனர். இந்த இறைச்சிக்கூடங்களின் உரிமையாளர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்களும் உள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தர பிரதேசத்தில் சில இறைச்சி வியாபாரிகள் மாநில அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றக் கதவைத் தட்டியுள்ளனர். இது விசாரிக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டும் சாவன் மாதத்தில், காவடி யாத்திரை செல்லும் வழியில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இறைச்சி தடை குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு எந்த நிலைப்பாடும் இல்லை என்று ஆலோக் குமார் கூறுகிறார். "காஷ்மீரின் எல்லா பிராமணர்களும் இறைச்சி உண்பதும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இறைச்சி உண்பவர்கள் என்பதும் எனக்குத் தெரியும்," என்கிறார் அவர்.

வெள்ளிக்கிழமை தொழுகை

இந்து ராஷ்டிரா வெள்ளிக்கிழமை தொழுகை

பட மூலாதாரம், Getty Images

"முன்பே சில இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சமூக பாரபட்சங்களைக் கொண்டிருந்தனர். சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்தின் போதும், சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட இது உள்ளது. ஆனால் அந்த நாட்களில் இந்த உணர்வுகள் அரசியல் ரீதியாக சரியானதாக கருதப்படவில்லை. இதற்கிடையில் வித்தியாசம் என்னவென்றால், இப்போது இவை அனைத்தும் அரசியல் ரீதியாக சரி என்று கருதப்படுகின்றன. இந்த உணர்வுகள் மேடையில் நின்று பேசப்படுகின்றன. ஏனென்றால் இப்போது அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். அவர்களின் தலைவர்கள் இந்த மொழியை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தி வந்துள்ளனர்," என்று நீலாஞ்சன் கூறுகிறார்.

"நூபுர் ஷர்மா 2008-09ல் அரசியலில் நுழைந்தார். மியான் முஷாரஃப், தகனம்-கல்லறை மற்றும் அப்பாஜான் போன்ற வார்த்தைகளை பிரதமர்- முதலமைச்சர் போன்றவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த முழு விவகாரத்திலும் இஸ்லாமிய வெறுப்பு தன்மை ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது."

இங்கு நீலாஞ்சன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கையை நினைவுபடுத்துகிறார்.

2021 அக்டோபர் 30 ஆம் தேதி உத்தராகண்டில் நடந்த பேரணியில் உரையாற்றியபோது அமித் ஷா ஒரு சம்பவத்தை விவரித்தார்.

"நேற்று நான் வந்துகொண்டிருந்தேன். என் வாகன அணி நின்றுவிட்டது. என்ன ஆயிற்று என்று நான் கேட்டேன். சார், இன்று வெள்ளிக்கிழமை என்று உங்களுக்குத் தெரியாதா என்று பதில் வந்தது. நான் வெள்ளிக்கிழமை தான், அதனால் என்ன என்று கேட்டேன். என் பொது அறிவு பலவீனமாகிவிட்டதோ என்று நினைத்தேன். வெள்ளிக்கிழமை என்ன நடக்கும்?. வெள்ளிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையை மூடி முஸ்லிம்கள் அதில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதில் கிடைத்தது. வெள்ளிக்கிழமை விடுமுறை கொடுக்க நினைப்பவர்கள், திருப்திப்படுத்தும் அரசியல் செய்பவர்கள், தேவபூமிக்கு நல்லது செய்வது பற்றி எப்போதுமே நினைக்கமாட்டார்கள்."

இது இந்து என்ற கர்வமா அல்லது முஸ்லிம்களை அச்சுறுத்தும் அறிகுறியா என்று மட்டுமே சொல்லப்படவில்லை.

கஜாலா வஹாப் 'பார்ன் எ முஸ்லிம்' என்ற புத்தகத்தை எழுதியவர். 'முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் மற்றும் அவர்களை பயமுறுத்தும் அறிகுறிகள் குறித்துப்பேசிய அவர், "இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் போது, இந்தியாவில் 'இந்துமயமாக்கல்' ஏற்படக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இருந்தபோதிலும், அரசியலமைப்பில் சில குறைபாடுகள் உள்ளன. இது படிப்படியாக இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை சாத்தியமாக்கியது. இதற்கு மிகப்பெரிய உதாரணம், இந்து என்பது ஒரு மதம் அல்ல, வாழ்க்கை முறை என்று நீதிமன்றம் கூறியதுதான்," என்று கூறினார்.

இந்துத்துவாவை வாழ்க்கை முறையுடன் இணைக்கும் விஷயத்தை முதன்முதலில் 1994 இல் நீதிபதி எஸ்.பி.பரூச் குறிப்பிட்டார். அதை 1996 இல் நீதிபதி ஜே.எஸ். வர்மா மீண்டும் கூறினார்.

பிரதமர் மோதியும் தனது வெளிநாட்டு பயணங்களில் இதனை குறிப்பிட்டுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

"இந்திய நாடு, 'தாய்' 'தேவி' என்று அழைக்கப்படும்போது, அது ஒரு வகையில் இந்தியாவை இந்து மதத்துடன் இணைக்கும் விஷயம். சுதந்திரத்திற்குப் பிறகு, நாடு 'தாய்' என்றும் 'தேவி' என்றும் வணங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டபோது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் அங்கிருந்து தொடங்கியது. அதை ஏற்க மறுப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று அழைக்கப்பட்டனர். அதேசமயம் இஸ்லாத்தில் ஒரே ஒரு கடவுள் வழிபாடு பற்றி மட்டுமே பேசப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இத்தகைய பதற்றம் ஒரு சில 'விளிம்பு கூறுகளுக்கு' மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் தேசபக்தியைக் காட்டும் போக்கு அதிகரித்துள்ளது. இன்று 'விளிம்பு' என்பது 'பிரதான நீரோட்டமாக' மாறி வருகிறது. அரசு இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவர்களின் மன உறுதியை அதிகரிக்கிறது." என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த பதற்றம் எப்படி ஒவ்வொருவரையும் மொபைல் போன் மூலம் சென்றடைகிறது என்ற ஒரு சம்பவத்தை அவர் விவரிக்கிறார்.

மோதி வாரணாசி

பட மூலாதாரம், Getty Images

"நான் ஏதோ வேலையாக வாரணாசிக்கு போயிருந்தேன். என் டாக்சி ஓட்டுநருக்கு நான் ஒரு முஸ்லிம் என்று தெரியாது. ஒருவரை சந்தித்துவிட்டு காருக்குத் திரும்பியபோது, மத நாடாளுமன்ற கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆற்றப்பட்ட உரையின் வீடியோவை மொபைலில் அவர் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவருடன் காரில் பயணிக்கும் போது, என் மனதில் ஒரே ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ஓட்டுநரின் மனதில் என்ன இருக்கும், நான் முஸ்லிம் என்று அவருக்குத் தெரிந்தால், அவர் என்னை எப்படி நடத்துவார் என்று நான் நினைத்தேன். நான் பயந்துவிட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்னுடன் இருக்கப்போகும் இந்த ஓட்டுநருக்கு முஸ்லிம்கள் மீது என்ன உணர்வு இருக்கிறது என்பது எனக்குத்தெரியவில்லை."

மொபைலில் இதுபோன்ற வீடியோ கிளிப்புகள் மூலம் மக்கள் வன்முறையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்தப்போக்கு முன்பு இருக்கவில்லை. இப்போது ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே இதுபோன்ற விஷயங்கள் முயற்சிக்கப்படுகின்றன. இதனால் பதற்றம் நிரந்தரமாக உள்ளது.

இந்தியா உண்மையிலேயே கலாசார ரீதியாக 'இந்து நாடு', மத அடிப்படையில் அல்ல என்றால், முஸ்கான், ஹசீனா ஃபக்ரு மற்றும் ஜாவேத் ஆகியோரை இந்த 'பயம்' மற்றும் 'கர்வம்' என்ற அறிகுறிகளில் இருந்து பாதுகாப்பாக உணரச்செய்ய நாட்டின் இந்துக்கள் என்ன செய்ய வேண்டும்?

இதற்கு பதிலளித்த ஆலோக் குமார், "இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன். அப்படி இல்லாவிட்டாலும் முஸ்லிம்களை வாக்கு வங்கியாகக் கருதுபவர்கள்தான் அதற்குக்காரணம். தேர்தலுடன் மதத்தை இணைப்பது எப்போது நிற்குமோ, அந்த நாளில் இந்துக்களின் வாக்கு வங்கி உருவாக்கம் நின்றுவிடும். முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மாற்ற நடந்த முயற்சியால்தான் இந்து வாக்கு வங்கி உருவானது. ஆனால் கேள்வி என்னவென்றால், முதலில் எது மூடப்படும், யார் மூடுவார்கள் என்பதுதான்," என்று தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: