18 வயதில் 13 மொழிகள்: போஜ்புரியில் பேசி காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
18 வயதில் 13 மொழிகள் கற்ற சென்னை கல்லூரி மாணவி ஒருவர், திருப்பூரில் காணாமல் போன வடமாநில இளைஞரை கண்டறிய போஜ்புரி மொழியில் பேசி, ரயில்வே காவல்துறைக்கு உதவி, அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார்.
பிறப்பால் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்ரா, தனது தாயாரின் பணி இடமாற்றம் காரணமாக இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் பேசும் மொழிகளை கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
சிறு வயதில் இருந்து பல்வேறு மொழிகளின் பரிச்சயம், இவரது மொழி ஆர்வத்தைத் தூண்டவே, தனது சொந்த முயற்சியால், 13 மொழிகளில் பேசும் திறனை வளர்த்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனது பன்மொழித் திறமைக்காக படிக்கும் வாய்ப்பை பெற்ற மாணவி ஆர்த்ரா, காணாமல் போன உத்தர பிரதேச இளைஞர் ஒருவரை கண்டறிய அவரது குடும்பத்துடன் போஜ்புரி மொழியில் பேசி காவல்துறைக்கு தகவல் கொடுத்து உதவியுள்ளார்.
ஆர்த்ரா தயார் விமலாவிடம் பேசி போஜ்புரியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தகவல்களுடன், காணாமல் போன பங்கஜ்ஜின் புகைப்படத்தை இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
உபி இளைஞரை கண்டுபிடிக்க உதவி
கோவை ரயில் நிலையத்தில் உத்தர பிரதேசம் செல்லும் ரயிலை தவறவிட்டு, வேறு ரயிலில் ஏறிய பங்கஜ், புதுடெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியதும், அங்குள்ள காவல்துறையினர் அவரது புகைப்படத்தை வைத்து அடையாளம் கண்டனர். விசாரணைக்கு பின்னர், பங்கஜ் அவரது ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
பங்கஜ்ஜை மீட்கும் பணியில் ஈடுபட்டது குறித்து பேசிய ஆர்த்ரா ''எனக்கு 13 மொழிகள் தெரியும் என கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தேன். காணாமல் போன பங்கஜ் கெளதமின் தாயார் விமலா தேவிக்கு போஜ்புரி மொழிமட்டும்தான் பேச தெரியும். எனது கல்லூரியில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மன்றம் மூலமாக போஜ்புரி பேச தெரிந்தவர்கள் யார் என விசாரித்தபோது, நான் முன்வந்தேன்.
ரயில்வே காவல்துறையிடம் மொழி தெரியாமல் சிரமப்பட்ட விமலாவிடம் பேசி தேவையான தகவல்களை மொழிபெயர்த்து உதவினேன். எனது மொழிபெயர்ப்பு திறன் ஒருவரை மீட்க உதவியது என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. என் தாயார் பெருமை அடைந்துள்ளார்,'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்த்ரா பேசும் மொழிகளின் பட்டியலை கேட்டோம்.
''மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கோர்ட்டா, போஜ்புரி மகி, இந்தி, ஆங்கிலம், மார்வாடி போன்ற மொழிகளை பேசுவேன். நாக்புரி, சந்தாளி, பிகாரி ஆகிய மொழிகளில் சரளமாக பேசமுடியாது என்றாலும் அந்த மொழிகளில் பரிச்சயம் உண்டு. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நன்றாக எழுதுவேன். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எழுத்து பயிற்சி எடுத்துவருகிறேன்,''என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆர்த்ரா.
பலமொழிகளை கற்பதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, ''எனது பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால், தாய்மொழி மலையாளம். ஐந்து வயது வரை நான் கேராளாவில்தான் இருந்தேன். மலையாளம் எனக்கு நன்றாக பேச தெரியும். அதோடு, அவ்வப்போது நாங்கள் கேரளாவுக்கு வந்து தங்கி செல்வது வழக்கம். மூணார் பகுதியில் நான் வளர்ந்ததால், அங்கு பணியாற்றும் பலரும் தமிழர்கள் என்பதால் தமிழ் மக்களிடம் பேசி தமிழ் கற்றுக் கொண்டேன்.
அடுத்ததாக, என் தயார் ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா ஆகிய பகுதிகளில் பணியாற்றினார். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை திருப்பதி மற்றும் ராமகுண்டம் பகுதியில்தான் நாங்கள் வாசித்தோம். அங்கு தெலுங்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழியை கற்றார்
என் சகோதரி தெலுங்கு பேசுபவரை திருமணம் செய்துள்ளார் என்பதால்,நாங்கள் தெலுங்கு பேசுவதில் சிரமம் இருந்ததில்லை,''என தென்னிந்திய மொழிகளை கற்ற அனுபவத்தை பகிர்ந்தார்.
அடுத்ததாக அவர் சென்றது மத்திய பிரதேசம். ''மத்திய பிரதேசத்தில் சிவபுரி பகுதியில் மூன்று ஆண்டுகள் அங்கிருந்தோம். நான் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தேன். அங்குதான் நான் இந்தி மொழியை நன்றாக கற்றேன்.
இடையில் சில காலம் பெங்களுருவில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு கன்னடம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், நாங்கள் ஜார்கண்ட்டில் மூன்று ஆண்டுகள் வசித்தோம். நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன் என்பதால், ஜார்கண்ட்டில் பேசப்படும் கோர்ட்டா மொழியை பேசக்கற்றுக்கொண்டேன். அதோடு, இந்தியின் தழுவலாக இருக்கும் நாக்புரி, சந்தாலி மொழியில் பேசும் திறனை வளர்த்தேன். ஆனால் பெரும்பாலான வடஇந்திய மொழிகளில் எழுத்து நடை இல்லை என்பதால், இந்த மொழிகளை பேசுபவர்களோடு தொடர்பில் இருந்தால்தான் கோர்வையாக பேசமுடியும். அதனால் நாக்புரி மற்றும் சந்தாளியில் முழுமையாக பேசமுடியாது.
10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் வரை நாங்கள் பிகாரில் இருந்தோம். அங்கு போஜ்பூரி,மகி மொழிகளை கற்றுக்கொண்டேன்,''என வட இந்திய மொழிகள் கற்றுக்கொண்டதன் பின்னணி பற்றி குறிப்பிட்டார்.
''என் தாயார் பல மாநிலங்களில் பணியாற்றினார். அவருடன் நானும் செல்லவேண்டிய கட்டாயம், அங்குள்ள பள்ளிகளில்தான் படித்தேன் என்பதால், அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போதுதான் அந்த மொழிகளை கற்றுக்கொண்டதன் பயனை தெரிந்து கொள்கிறேன். மேலும் மொழிகளை கற்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என் பட்டப்படிப்பு பயில மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் இருப்பேன். அதனால் தமிழ் மொழியை பேச மட்டும் தெரிந்த நான், இனி அதை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொள்வேன்,'' என்கிறார் ஆர்த்ரா.
ஆர்த்ராவின் திறமையை மேம்படுத்தும் வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அவர் பயிலும், செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி நிர்வாகமும் தெரிவித்துள்ளது. ''ஆர்த்ராவின் மொழி புலமையை அதிகரிக்க நாங்கள் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவோம்.
மேலும் ஆள் கடத்தல் தடுப்பு கிளப்பின் செயல்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்கிறார் கல்லூரியின் தலைவர் ஸ்ரீதேவி.
ஆள் கடத்தலை தடுப்பதற்காக தமிழகத்தில் 80 கல்லூரிகளில் மாணவர்களின் பங்களிப்புடன் கிளப் செயல்பட்டு வருவதாக கூறும் சமூகஆர்வலர் ஹரிஹரன், ''ஆர்த்ரா போல பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து தங்கி படிக்கும் மாணவ,மாணவிகள் மூலம் வடமாநில மொழிபெயர்ப்பு செய்யும் வசதி மேம்படும். அவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கியுள்ளோம்.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பணியாளர்கள், கடத்தப்பட்டு வரும் சிறுவர், சிறுமிகள், பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் நபர்களை மீட்பதற்கு இந்த மாணவ மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் உதவுவார்கள்,'' என்கிறார் ஹரிஹரன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












