காணாமல் போன கிரிப்டோ ராணி: டாக்டர் ருஜா இக்னடோவா தான் உலகில் அதிக கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறாரா?

காணாமல் போன கிரிப்டோராணி

கிரிப்டோ சந்தைகள் அசாதாரணமான சூழலில் இருப்பதால், பிட்காயின் முதலீட்டாளரான, "காணாமல் போன கிரிப்டோராணி" என்றழைக்கப்படும் டாக்டர் ருஜா இக்னாடோவாவும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கலாம் என்று பிபிசியால் பார்க்கப்பட்ட கோப்புகள் தெரிவிக்கின்றன.

2017-ஆம் ஆண்டில் அவருடைய கிரிப்டோகரன்சியான ஒன்காயின் அதன் உச்சத்தில் இருந்தநேரத்தில் பில்லியன்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து மோசடி செய்துவிட்டு அவர் காணாமல் போனார். இதன்மூலம், அமெரிக்காவில் மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளோடு மத்திய புலனாய்வுப் பிரிவின் மிகவும் தேடப்படும் 10 பேரில் ஒருவரானார்.

ஆக்ஸ்ஃபோர்டில் படித்த தொழில்முனைவோரான இவர், முதலீட்டாளர்களிடம் "பிட்காயினை அழிக்கக்கூடிய ஒன்றை" உருவாக்கியதாகக் கூறினார். ஆனால், அவர் காணாமல் போவதற்கு முன்பு பிட்காயினுக்கு போட்டியாக அவர் உருவாக்கிய நாணயத்தில் பல பில்லியன்களை ரகசியமாகச் சேகரித்ததாக கோப்புகள் தெரிவிக்கின்றன.

துபாய் நீதிமன்றங்களில் இருந்து கசிந்த ஆவணங்களின் விவரங்கள் முதன்முதலில் 2021-ஆம் ஆண்டு வெளிவந்தன. டாக்டர் ருஜாவை "வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான குற்றவாளி" என்று குறிப்பிட்டு ஒரு வழக்கறிஞர் ஆன்லைனில் பதிவிட்டார்.

எஃப்.பி.ஐ போஸ்டர்

பட மூலாதாரம், FBI

படக்குறிப்பு, டாக்டர் இக்னடோவா ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களோடு பயணிப்பதாக மத்திய புலனாய்வுப் பிரிவு நம்புகிறது

துபாய் கோப்புகள்

துபாய் கோப்புகளில் உள்ள சில தகவல்களை எங்களால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடிந்தது. ஆனால், அனைத்தையும் பார்க்க முடியவில்லை.

குறைந்தபட்சம், டாக்டர் ருஜாவிற்கு துபாய் ஒரு முக்கியமான நிதிசார் பாதை என்று கசிந்த கோப்புகளின் தகவல் தெரிவிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை அவர் தொடர்பு கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்றாக மத்திய புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டது.

"இங்கு உங்களுடைய நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் ஆபத்தில் இருக்கின்றன," என்று முதலில் கோப்புகளை ஆன்லைனில் வெளியிட்ட வழக்கறிஞர் ஜோனாதன் லெவி பதிவிட்டார். அவர், ஒன்காயின் கிரிப்டோகரன்சியால் பாதிக்கப்பட்டு இழப்பீடு கேட்பவர்களிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறார்.

ஒன்காயின் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இணைய டொமைனை ஹோஸ்ட் செய்ததால், பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தின் உச்சநீதிமன்றத்தில் இந்த இழப்பீடு உரிமைகோரல் தாக்கல் செய்யப்பட்டது.

டாக்டர் லெவி, பெரும்பாலும் அரபு மொழியில் இருந்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை, துபாயிலுள்ள மக்கள் "அநியாயமாக பணக்காரர்களாக்கப் படுகிறார்கள்" என்று நினைத்த ஓர் இடித்துரைப்பாளரிடம் இருந்துப் பெற்றார்.

2015-ஆம் ஆண்டு துபாயில் ஒரு ஒன்காயின் நிகழ்வின்போது மேடையில் பேசிய டாக்டர் ருஜா

பட மூலாதாரம், OneCoin/Youtube

படக்குறிப்பு, 2015-ஆம் ஆண்டு துபாயில் ஒரு ஒன்காயின் நிகழ்வின்போது மேடையில் பேசிய டாக்டர் ருஜா

'பிட்காயின் ஒப்பந்தம்'

ஒரு பணக்கார வணிக அதிபரின் மகனான ஷேக் சவுத் பின் பைசல் அல் காசிமி என்ற எமிரேட்டி அரச அதிகாரியுடன் ஒரு பெரிய பிட்காயின் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதுதான், டாக்டர் லெவியின் சட்ட வழக்கில் கூறப்பட்ட மிகவும் அதிர்ச்சியூட்டும் கூற்று.

2015-ஆம் ஆண்டில், ஷேக் சவுத் டாக்டர் ருஜாவுக்கு 230,000 பிட்காயின் இருந்த நான்கு யூஎஸ்பி மெமரி ஸ்டிக்குகளை வழங்கினார். அந்த நேரத்தில் அதன் மதிப்பு 48.5 மில்லியன் யூரோக்கள்.

பதிலுக்கு, டாக்டர் ருஜா மஷ்ரெக் வங்கியிலிருந்து ஷேக் சவுத்திடம் மொத்தமாக 210 மில்லியன் எமிரேட்டி திர்ஹாம்கள் மதிப்பிலான மூன்று காசோலைகளை வழங்கினார். அதாவது சுமார் 50 மில்லியன் யூரோ.

நடந்ததாகச் சொல்லப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு முன்னதாக, துபாயின் மஷ்ரெக் வங்கி பண மோசடி கவலைகளுக்கு மத்தியில் டாக்டர் ருஜாவின் கணக்குகளை மூடத் தொடங்கியது. எனவே காசோலைகளைப் பணமாக்க முடியவில்லை.

2020-ஆம் ஆண்டில், துபாய் அதிகாரிகள் டாக்டர் ருஜாவின் முடக்கி வைத்திருந்த நிதியைத் தளர்த்தினர். ஓராண்டுக்கு முன்பே அமெரிக்க நீதித்துறை அவர்மீது ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டது. "ஒன்காயின் ஒரு மோசடியான கிரிப்டோகரன்சி" என்று முத்திரை குத்தியது.

2px presentational grey line
2px presentational grey line

ருஜாவின் நிதியை முடக்குவதைத் தளர்த்தும் முடிவை எடுப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, டாக்டர் ருஜாவின் முன்னாள் நிதி மேலாளர் மார்க் ஸ்காட் நியூயார்க்கில் ஒன்காயின் வருமானத்தில் 400 மில்லியன் டாலர் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த முடிவு குறித்து பிபிசி கேட்டதற்கு, துபாய் அரசு வழக்கறிஞர் பதிலளிக்கவில்லை.

துபாய் நீதிமன்றத்தின் மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களின்படி, 28 ஏப்ரல் 2022 அன்று, ஷேக் சவுத் டாக்டர் ருஜாவின் நிதியை தன்னிடம் ஒப்படைக்க வைக்க முயன்றார். இவர்களுக்கு இடையே ஒருவித ஒப்பந்தம் முதலில் நடந்ததாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக பொதுவெளியில் பார்க்கப்படாவிட்டாலும், டாக்டர் ருஜாவும் ஒரு பிரதிவாதியாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

டாக்டர் ருஜா மற்றும் ஷேக்

ஷேக் சவுத் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள இவர் பொதுவெளியில் அரிதாகவே காணப்படுகிறார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்வி முயற்சிகளை ஆதரிப்பதாகக் கூறும் ஐ.சி.ஏ.எஃப்.இ (Intergovernmental Collaborative Action Fund for Excellence) என்ற அமைப்புக்கான 2017-ஆம் ஆண்டு யூட்யூப் வீடியோ ஒன்றில் அவர் இடம்பெற்றுள்ளார். ஆனால், துபாய் கோப்புகள் வெளியான பிறகு, ஐசிஏஎஃப்இ அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக் அல் காசிமியின் குறிப்புகள் அதன் இணையதளத்தில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன.

துபாயில் ஐசிஏஎஃப்இ நிகழ்வில் அதன் மற்றொரு நிறுவனரான ஷரியர் ரஹிமி உடன் ஷேக் சவுத் அல் கசிமி

பட மூலாதாரம், WFDP/Youtube

படக்குறிப்பு, துபாயில் ஐசிஏஎஃப்இ நிகழ்வில் அதன் மற்றொரு நிறுவனரான ஷரியர் ரஹிமி உடன் ஷேக் சவுத் அல் கசிமி

சமீபத்தில் தொடங்கப்பட்ட கிரிப்டோகரன்சியும் அதன் தலைவராக ஷேக்கை பட்டியலிட்டுள்ளது. துபாய் கோப்புகள் அல் காசிமி குடும்பத்திற்கும் டாக்டர் ருஜாவுக்கு இடையே ஒரு காலத்தில் நெருங்கிய உறவைக் காட்டுகின்றன.

3 செப்டம்பர் 2015 அன்று, துபாயின் மஷ்ரெக் வங்கி டாக்டர் ருஜாவின் தனிப்பட்ட கணக்குகளை முடக்குவதாகவும் அதற்கான காரணத்தை விளக்கியும் கடிதம் எழுதியது.

பதினொரு நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மின்னஞ்சல், ஒன்காயினின் சக ஊழியருக்கு மஷ்ரெக் வங்கியிலிருந்து 50 மில்லியன் யூரோக்களை அனுப்புவது குறித்து டாக்டர் ருஜா கடிதம் எழுதியதைக் காட்டுகிறது. அதற்கு அடுத்த வாரம் "துபாயிலுள்ள ஷேக்குகளில் ஒருவருடனான" சந்திப்பைக் குறிப்பிட்ட டாக்டர் ருஜா, "அவர் எங்களுக்காக ஏதாவது செய்ய முயல்வார்," என்று குறிப்பிடுகிறார்.

டாக்டர் ருஜா யாரைச் சந்திக்க விரும்பினார் அல்லது சந்திப்பு நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், கோப்புகள் இதில் ஒரு சாத்தியமான விளக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.

கோப்புகளில், ஷேக் சவுத்தின் தந்தை ஷேக் பைசல் அருகில் டாக்டர் ருஜா நிற்கின்ற ஒளிப்படம் ஒன்று இருந்தது. அது அக்டோபர் 8, 2015 தேதியில் எங்கு எனத் தெரியாத இடத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அல் காசிமி குடும்பம் ஷார்ஜாவை ஆட்சி செய்கிறது. இது துபாய் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய எல்லைகளைக் கொண்ட, வடகேயுள்ள எமிரேட் ஆகும். டாக்டர் ருஜாவுடனான அவருடைய குடும்ப உறவு குறித்து ஷேக் பைசல் எங்களிடம் பதிலளிக்கவில்லை.

ஷேக் சவுத்தின் தந்தை ஷேக் பைசல் அருகில் டாக்டர்.ருஜா இக்னடோவா

பட மூலாதாரம், Unknown

படக்குறிப்பு, ஷேக் சவுத்தின் தந்தை ஷேக் பைசல் அருகில் டாக்டர்.ருஜா இக்னடோவா

ஷேக் சவுத் ஒரு காலத்தில் மூத்த பொறுப்பிலிருந்த ஐசிஏஎஃப்இ அமைப்பின் "சிறப்பு ஆலோசகராக" ருஜாவுக்கு வழங்கப்பட்ட ராஜ்ஜியரீதியிலான அடையாள அட்டையும் கோப்புகளில் உள்ளன.

இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையோடு இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளரால் சாதாரண வழிகளில் இணைக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த அமைப்பின் மற்றொரு நிறுவனரான ஷரியார் ரஜிமி கூறுகையில், ஐசிஏஎஃப்இ அமைப்பு ஐ.நா-வில் "பதிவு செய்யப்பட்டுள்ளது," ஆனால் இதற்கான ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டது. டாக்டர் ருஜாவிடம் வழங்கப்பட்ட ஐசிஏஎஃப்இ ஆவணங்கள் ஷேக் சவுத் மூலமாகக் கிடைத்ததாகக் கூறினார்.

டாக்டர் ருஜாவின் பிட்காயின் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அவர்களுடைய உறவு மோசமடைந்ததாகத் தெரிகிறது. கசிந்த கோப்புகளில் ஒரு கடிதம் ஷேக் சவுத் டாக்டர் ருஜாவை ஐசிஏஎஃப்இ அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கியதைக் காட்டுகிறது.

இருவருக்கும் இடையிலான வழக்கு ஜூன் 28-ஆம் தேதியன்று துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.

குற்றம்சாட்டப்படும் பிட்காயின் ஒப்பந்தம், டாக்டர் ருஜாவுடனான அவருடைய உறவு மற்றும் ஐசிஏஎஃபி-இல் அவருடைய பங்கு குறித்துக் கேட்டதற்கு, ஷேக் சவுத்தின் வழக்கறினர் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால், "உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களும் ஆதாரமற்றவை," என்றார்.

டாக்டர் ருஜா இக்னடோவா

பட மூலாதாரம், unknown

படக்குறிப்பு, ஐசிஏஎஃப்இ அமைப்பின் "சிறப்பு ஆலோசகராக" ருஜாவுக்கு வழங்கப்பட்ட ராஜ்ஜியரீதியிலான அடையாள அட்டையும் கோப்புகளில் உள்ளன

சொல்லப்படும் பிட்காயின் பரிவர்த்தனை கோல்ட் ஸ்டோரேஜ் வால்லெட் என்று அழைப்படுவதைப் பயன்படுத்தி நடந்ததாகக் கூறப்படுகிறது இது உண்மையில் நடந்ததா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம்.

பிட்காயின் பரிவர்த்தனைகளைப் பெரும்பாலும் கண்டறிய முடியும். ஏனெனில் பணப்பைகளுக்கு இடையேயுள்ள மெய்நிகர் நாணயத்தின் அனைத்து பரிமாற்றங்களும் பொதுவில் பார்க்கக்கூடிய தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், நீதிமன்ற ஆவணங்களில் இந்த பிட்காயின்கள் எந்தெந்த பணப்பைகளில் எத்தனை முறை சேமிக்கப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை.

டாக்டர் ருஜாவிடம் இன்னும் அவை இருந்தால், இவ்வளவு பெரியளவிலான பிட்காயினை நகர்த்து அவருக்குக் கடினமாக இருக்கலாம்.

கிரிப்டோ ஆசிரியர் டேவிட் பிர்ச், பிட்காயினின் "அநாமதேய" நாணயம் என்ற பெயர் துல்லியமற்றது எனக் கருதுகிறார். ஏனெனில், சட்ட அமலாக்க முகமைகள் நாணயங்கள் கணினியில் பரிமாறப்படும்போது, அவற்றைக் கண்காணிக்க புத்திசாலித்தனமான அல்காரிதம்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

"சில பில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தைக் கையாள்வது நீங்கள் நினைப்பதைவிட மிகவும் கடினமானது," என்று அவர் கூறினார்.

டாக்டர் ருஜாவிடம் இன்னும் 230,000 பிட்காயின்கள் இருந்தால், அவர் மிகப்பெரிய அளவிலான கிரிப்டோ கரன்சி வைத்திருப்பவர்களில் ஒருவராக இருப்பார். நவம்பர் 2021-இல் அவருடைய பங்கு ஏறக்குறைய 15 பில்லியன் டாலர்களாக இருந்திருக்கும். ஆனால், இதை எழுதும் நேரத்தில் அது சுமார் 5 பில்லியனாக குறைந்துவிட்டது. இருப்பினும் அவர் மறைந்திருப்பதற்கு இதுவே போதுமானது.

2px presentational grey line
காணொளிக் குறிப்பு, அன்று ரிக்ஷா ஓட்டுநர்.. இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர்.. யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: