காமன்வெல்த் பளுதூக்குதல் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி உட்பட 4 பதக்கங்கள்

பிந்த்யாராணி தேவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிந்த்யாராணி தேவி

(தமிழ்நாட்டில் இன்று (31.07.2022) வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களின் செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறித்து இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் நான்காவது பதக்கம் இது.

பிந்த்யாராணி தேவி சொரோகைபம் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளார் என்று இந்து தமிழ்திசை நாளேடு கூறுகிறது.

ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியிலேயே 81 கிலோ எடையை தூக்கிய பிந்த்யாராணி தேவி, இரண்டாம் முயற்சியில் 84 கிலோவும் இறுதி முயற்சியில் 86 கிலோவும் தூக்கி அசத்தினார்.

பின்னர், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியில் 110 கிலோ எடையை தூக்கியவர், இரண்டாம் முயற்சியில் 114 கிலோ எடையை தூங்குவதில் தோல்வி கண்டார். என்றாலும் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

முன்னதாக, ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில்இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அடுத்தபடியாக 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜ் பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதேபோல் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியுள்ளது பாராட்டுகளை பெற்றுவருகிறது.

சசிகலாவோடு இணையுங்கள் என்ற கோரிக்கையோடு ஓபிஎஸ்-சுக்கு ஆதரவளிக்கும் சாதி அமைப்புகள்

EPS OPS

அதிமுகவில் வெடித்த ஒற்றை தலைமை விவகாரம், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கி இருக்கும் அதிமுகவை மீட்க ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் கைகோர்க்க வேண்டும் என்று தேவர் சாதி அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவி உள்ள 100க்கும் மேற்பட்ட தேவர் சமூக அமைப்புகள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உதவியாளர் வி.கே.சசிகலா ஆகியோருக்குப் பின்னால் அணி திரண்டுள்ளன. இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் கட்சியை மீட்க ஒரு அணியாக சேர வேண்டும் என்று வலியுறுத்தி, பல அமைப்புகளைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட தேவர் சமூக தலைவர்கள், 'ரகசிய' கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன், இரு தலைவர்களுக்கும் அளித்த கடிதத்தில், "அ.தி.மு.க.வுக்கும், தலைமைக்கும் உயிர் கொடுத்த ஒரு சமூகத்தின் கோரிக்கை இது. பெருங்காமநல்லூரிலிருந்து (குற்றப் பழங்குடியினர் சட்டம் 1911-க்கு எதிரான போராட்டத்தில் பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு) கள்ளக்குறிச்சி வரை தொடர்ந்து போராடும் சமூகம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சாதியின் நிறத்தை வெளிப்படையாகக் காட்டி போட்டியாளரை தோற்கடிக்க வேண்டும். நமது போட்டியாளர்கள் நமது துரோகிகளை பயன்படுத்தி நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள்.

பொதுச்செயலாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் கைகோர்த்து கட்சியை கைப்பற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. வேறொரு தாயிடமிருந்து பிறந்த ஜெயலலிதாவின் சகோதரியும், ராமனுக்கு மிகவும் நம்பிக்கையான பரதனும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். இதுவே ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்" என்று கூறப்பட்டு இருந்தது.

அதிமுகவை மீட்க ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் கைகோர்க்க வேண்டும் என்று தேவர் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள, கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான தேவரின கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.அழகர்சாமி, "ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டதும், அவர் அவமானப்படுத்தப்பட்ட விதமும் சமூகத்தை நேரடியாக அவமதிக்கும் செயல்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "திறந்த மனதுடன்" எழுதிய கடிதம் என்று கூறியுள்ள சில தலைவர்கள், இருவரும் அரசியலில் ஒன்றாகச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உங்கள் மீதான குற்றச்சாட்டு. அதை உண்மையாக்குங்கள். இருவரின் கரங்களும் நலனுக்காக இணையட்டும். கட்சி மற்றும் சமூகத்திற்கு, இது காலத்தின் தேவை என்று அவர் கடிதம் எழுதியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இணையவசதியில்லாத 534 தமிழக கிராமங்களுக்கு 4ஜி சேவை

எல்.முருகன்

நாடு முழுவதும் 24 ஆயிரம் கிராமங்களில் 4 ஜி அலைவரிசையை கொடுக்க இருக்கிறோம் என்று இந்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதில், தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களும் அடக்கம். அவற்றுக்கும் 4ஜி இணைய சேவை வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் 4 ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே இனி கிராமங்கள் தோறும் இணைய வசதி கிடைக்க உள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது. அத்துடன், தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தையும் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது மேலும் 75 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று எல்.முருகன் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மதத்தின் பெயரால் பிரிவினை தூண்டப்படுகிறது: தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்து, முஸ்லிம்

பட மூலாதாரம், Getty Images

நாட்டில் மதத்தின் பெயரால் சிலர் பிரிவினையைத் தூண்டுகின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குற்றம்சாட்டியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

டெல்லியில் நேற்று சர்வமத தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உட்பட பல்வேறு மதங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியபோது, "நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் மதத்தின் பெயரால் பிரிவினையை தூண்டிவருகின்றனர். மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை தூண்டும் நபர்கள், அமைப்புகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினார்.

மேலும், "நாட்டில் அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக மக்கள் துணிச்சலாக குரல் கொடுக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நாட்டில் அமைதி நிலவினால்தான் இந்தியா வலுவான நாடாக உருவெடுக்க முடியும்" என்றும் அவர் பேசியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

காணொளிக் குறிப்பு, நெகிழியின் வரலாறு என்ன? அதன் பயன்பாட்டை தவிர்ப்பது சாத்தியமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: