நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை

டிசம்பர் 2021இல் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பலருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு நடந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 2021இல் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பலருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு நடந்தது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு தவறான ராணுவ நடவடிக்கையில் குடிமக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாக ராணுவத்தினர் 30 பேர் மீது நாகலாந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு மேஜரும் அடக்கம்.

மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத்தில் இந்திய ராணுவத்தின் 21 'பாரா' சிறப்புப் படையினர் மீது நாகாலாந்து மாநில காவல்துறை டிசம்பர் 5ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தது.

நாகாலாந்து காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை கடந்த மே 30ஆம் தேதி மோன் மாவாட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோன் மாவட்டத்தில் கிளர்ச்சிக்குழுக்கள்

மியான்மர் எல்லை அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

என்.எஸ்.சி.என் (கே) மற்றும் உல்ஃபா ஆகிய கிளர்ச்சிக்குழுக்கள் மோன் மாவட்டத்தில் பலம் பொருந்தியவர்களாக உள்ளனர். அப்போது, பணி முடித்துவிட்டு வேனில் வந்த சுரங்க தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை

பட மூலாதாரம், Getty Images

இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அங்கிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக போராட்டம் நடத்திய போது உண்டான வன்முறையில் மேலும் எட்டு குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதன்போது நடந்த வன்முறையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார்.

உள்ளூர் தீவிரவாத குழுக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பல ஆண்டு காலமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நிலவி வருகின்றன.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்

Indian soldiers. File photo

பட மூலாதாரம், Getty Images

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அம்மாநிலம் சமீப ஆண்டுகளில் எதிர்கொண்ட வன்முறைகளில் மிகவும் மோசமானதாக இருந்தது.

குடிமக்கள் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு மன்னிப்பு கேட்ட இந்திய ராணுவம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அப்போது தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் இந்திய அரசின் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த மத்திய சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு அதீதமான அதிகாரங்கள் உள்ளன.

தவறுதலாக பொதுமக்களைக் கொலை செய்யும் இந்தியப் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது எனும் சரத்தும் இந்த சட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது.

நாகாலாந்து, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தச் சட்டம் இந்திய அரசால் விலக்கிக்கொள்ளப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: