ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறதா இந்தியா? இதனால் என்ன ஆகும்?

இந்திய ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள, வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைநகர் டெல்லி வரை ஓடியிருக்கிறார், 23 வயதான இளைஞர் சுரேஷ் பிச்சார்.

இந்த 350 கி.மீ. தூர ஓட்டத்தின்போது அவர் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். ராணுவத்தில் சேர்வது தான் தன்னுடைய "விருப்பம்" எனக் கூறும் அவர், ஆனால், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நின்றுவிட்டதாகவும் ராணுவத்தில் சேர்வதற்கு ஆர்வம் கொண்டவர்களுக்கு "வயதாகி வருவதாகவும்" தெரிவித்தார். (ஆயுதப்படையில் சேருவதற்கு அதிகபட்ச வயது 21).

இந்திய ராணுவத்தின் பலம் என்ன?

14 லட்சம் பேர் பணிபுரியும் இந்திய ராணுவம், இந்திய அளவிலும் உலக அளவிலும் அதிகளவு வேலை வழங்கும் அமைப்புகளுள் ஒன்றாக உள்ளது. ராணுவத்தில் சேருவதை இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர், அதனை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ராணுவத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேர் ஓய்வுபெறுகின்றனர். மேலும், அவர்களுக்கு மாற்றாக புதிதாக 100 பேர் வரை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் காரணமாக ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், இது முழு உண்மை அல்ல என, ஆய்வாளர்கள் நம்புகின்றனர். படையினரின் எண்ணிக்கையை குறைக்க நரேந்திர மோதி அரசாங்கம் வழிகளை தேடிவருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ராணுவ பலத்தைக் குறைக்க திட்டமா?

ராணுவத்தினருக்கான அதிகப்படியான சம்பளம் மற்றும் ஓய்வூதியமானது, அத்துறைக்கான 70 பில்லியன் டாலர்கள் (53 பில்லியன் பவுண்ட்) பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான தொகையை எடுத்துக்கொள்வது ஒரு காரணம். இதனால், ராணுவத்தை நவீனமயமாக்கவும் கருவிகளின் பற்றாக்குறையை போக்குவதற்கும் குறைவான பணமே மீதமுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக, ராணுவத்தில் அதிக பணத்தை செலவிடும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. மேலும், அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. (பாதுகாப்பு ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்க பில்லியன் கணக்கிலான டாலர்களை மோதி அரசாங்கம் செலவழிக்கிறது.) மேலும், இந்தியா, அணு ஆயுத ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாராளமாக கொண்டுள்ளது.

தற்காலிகமாக ராணுவத்தில் வேலை வழங்க திட்டமா?

பாதுகாப்பு துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியான சமீபத்திய தகவலில், குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டும் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கான அல்லது "மூன்று ஆண்டுகள் வரையிலான பணி" (Tour of duty) திட்டம் குறித்து அரசாங்கம் தீவிரமாக சிந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தத்தின் ஆதரவாளராக மோதி உள்ளார். "மனித வீரத்தை மட்டும் சார்ந்திருக்காமல், தொழில்நுட்பம் சார்ந்ததாக ராணுவம் இருக்க வேண்டும்" என நரேந்திர மோதி கடந்த காலத்தில் பேசியுள்ளார். மேலும், "வேகமாக போரில் வெல்வதற்கான திறன்களை இந்தியா கொண்டிருக்க வேண்டும், நீண்ட கால போர்களில் ஈடுபடுவதற்கான வசதி இல்லை" என அவர் தெரிவித்திருந்தார்.

இந்திய ராணுவம்

பட மூலாதாரம், AFP

படையினரின் எண்ணிக்கையை குறைக்கும் யோசனை, மிகவும் மதிக்கத்தக்க ஓய்வுபெற்ற அதிகாரியிடமிருந்து வந்திருக்கிறது. சமீபத்தில் கருத்து கூறிய லெப்டினென்ட் ஜெனரல் பனாக், ராணுவத்தில் தற்போது உள்ள 1,00,000க்கும் அதிகமான ஆள்பற்றாக்குறை, சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ராணுவ பலம் குறைப்புக்காக முன்வைக்கப்படும் காரணம் என்ன?

"21ஆம் நூற்றாண்டின் ராணுவத்திற்கு, வழக்கமான பெரிய அளவிலான போர்களை தடுக்கும் வகையிலான, வேகமாக எதிர்வினையாற்றக்கூடிய சுறுசுறுப்பான, துணைக்கண்ட அணுகுமுறையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதப்படை தேவை," என பனாக் தெரிவித்தார்.

"பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள இந்தியா, படையின் தரத்தை அதன் அளவை கொண்டு ஈடுசெய்ய நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம்," என அவர் தெரிவித்தார். வளர்ந்துவரும் பொருளாதாரமான இந்தியாவில், பாதுகாப்பு துறையில் "செலவுகளை அதிவேகமாக அதிகரிக்க முடியாது" எனவும், எனவே படையினரின் எண்ணிக்கையை குறைக்கும் தேவை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

"தற்போது உள்ள படையினரின் எண்ணிக்கையைவிட குறைவான எண்ணிக்கையில் செயலாற்றும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது. எனவே, ராணுவ பலத்தைக் குறைக்க வேண்டும்," என முன்னாள் அதிகாரியும் தற்போது பாதுகாப்பு துறை குறித்து எழுதிவருபவருமான அஜய் சுக்லா தெரிவித்தார்.

இந்திய ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

உதாரணமாக, தனது பாதுகாப்பு துறை பட்ஜெட் ஒதுக்கீட்டில், மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே படையினரின் செலவுகளுக்கு சீனா பயன்படுத்துகிறது. இந்தியாவில் அந்த செலவு 60 சதவீதமாக உள்ளது என, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆய்வுகள் துறை பேராசிரியராக லக்ஷ்மண் குமார் பெஹேரா தெரிவித்தார். சீனாவை தடுப்பதற்கு, "தொழில்நுட்ப ரீதியிலான ராணுவ நவீனமயமாக்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்", இதற்கு படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என, அவர் தெரிவித்தார்.

ராணுவ பலத்தைக் குறைக்க இது சரியான நேரமா?

ஆனால், எண்ணிக்கையை குறைப்பதற்கான சரியான நேரம் இதுவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியாவின் எல்லைகளில் நிலவும் விரோதமான சூழ்நிலை காரணமாக, அணு ஆயுத போட்டி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் ஒரே நேரத்தில் சண்டையிடும் வகையில் இந்திய ராணுவம் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

சீனாவுடனான சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் பல்லாயிரக்கணக்கான இந்திய படையினர் இன்னும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் சுமார் 5 லட்சம் துருப்புகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எல்லைகளில் தீவிரவாத தாக்குதல்களுக்கான எச்சரிக்கைகளும் உள்ளன.

இந்திய ராணுவம் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

"நம் நிலப்பகுதியில் தீர்க்கப்படாத எல்லை பிரச்னைகள் இருக்கும் நிலையில், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டிருப்பது, உடனடியாக வினையாற்றக்கூடிய சூழல்களில் ஆட்பலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என, சிங்கப்பூரில் உள்ள எஸ் ராஜரத்னம் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் அனித் முகர்ஜி தெரிவிக்கிறார்.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவத்தில் பணியாற்றும் திட்டம் குறித்த யோசனையிலும் (Tour of duty) தீவிரமான கவலைகள் எழுகின்றன. இது, "தொழில்முறை வீரர்களுக்குப் பதிலாக குறுகிய கால, தற்காலிக படையினரைக் கொண்டு, ராணுவத்தை பலவீனப்படுத்துவதற்கான மிகவும் தீவிரமான அச்சுறுத்தல்" பற்றிய பல அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது என்று முகர்ஜி நம்புகிறார்.

டெல்லியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் சிந்தனை மையமான கொள்கை ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளரான சுஷாந்த் சிங் கூறுகையில், இந்த யோசனை தன்னை அசௌகரியமாக உணரச்செய்வதாக கூறினார். இதனால், வேலையின்மை அதிகரித்துள்ள இந்தியாவில், இளம் ராணுவத்தினர், தங்களின் 20-களின் ஆரம்பத்திலேயே ராணுவத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

"ஏற்கெனவே வன்முறை அதிக அளவில் உள்ள ஒரு சமூகத்தில், வேலைக்காக ஆயுதப் பயிற்சி பெற்ற பலரையும் ராணுவத்திலிருந்து வெளியேற்ற உண்மையில் நீங்கள் விரும்புகிறீர்களா? முன்னாள் படையினரான அவர்கள் காவல் துறையிலோ அல்லது காவலர்களாவோ (security guard) பணியாற்ற வேண்டும் என நினைக்கிறீர்களா? ஆயுதப் பயிற்சி பெற்ற, வேலையற்ற போராளிகளை இது உருவாக்கிவிடும் என்ற அச்சம் எனக்கு உள்ளது," என சுஷாந்த் சிங் தெரிவித்தார்.

மோதி அரசாங்கம் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனக்கூறும் லெப்டினென்ட் ஜெனரல், ஆனால், அரசு "வழக்கத்திற்கு கட்டுப்பட்ட ராணுவமாக, தற்போதிருக்கும் நிலையிலேயே திருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது" என அவர் தெரிவித்தார். ஆனால், சுஷாந்த் சிங் போன்ற விமர்சகர்கள் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றனர்.

ராணுவத்தில் ஆண்டுக்கணக்கில் நிரப்பப்படாத காலியிடங்களின் நிலைமை என்ன? "தற்காலிகமாக" ராணுவத்தில் சேர்க்கப்படுபவர்களுக்கு எவ்வளவு வேகமாக பயிற்சி அளிப்பீர்கள்? ஆட்சேர்ப்பை தொடர வலியுறுத்தி நடத்தப்படும் தவிர்க்க முடியா மக்கள் போராட்டங்கள் காரணமாக ஏற்படும் அரசியல் எதிர்வினை என்ன? முக்கியமாக, என்ன மாதிரியான பணியிடங்கள் குறைக்கப்படும்? வான் பாதுகாப்பு துப்பாக்கியை இயக்கும் படையினரையா அல்லது ராணுவத்தில் உணவுப்பொருட்கள் விநியோகத்தைக் கவனிப்பவரையா?

"இதுகுறித்த எந்த வியூகமோ அல்லது திட்டமோ பொதுதளத்தில் வைக்கப்பட்டதாக தெரியவில்லை. இது எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய சீர்திருத்தம்," என சுஷாந்த் சிங் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :