யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

KARTHIK GOPINATH-Ilaya Bharatham

பட மூலாதாரம், KARTHIK GOPINATH-Ilaya Bharatham

கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ' கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மதுரகாளியம்மன் என்ற கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இங்குள்ள பெரியசாமி மலையில் துணைக் கோயில் எனக் கூறப்படும் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுடுமண்ணால் செய்யப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, சஞ்சீவி ஆஞ்சநேயர், நீலியம்மன், சப்த கன்னிகள் உள்பட ஏராளமான சிலைகள் இருந்தன.

கடந்த 2015ஆம் ஆண்டில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுடுமண் சிற்பங்களை உடைத்துவிட்டனர். குறிப்பாக, பெரியசாமி மலையில் உள்ள 20 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை, செங்கமல சாமி சிலை, சூரப்பிள்ளையான் சிலை என பத்துக்கும் மேற்பட்ட சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

'மாற்று மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கலாம்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், நாதன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அதேநேரம், பா.ஜ.க ஆதரவாளரும் 'இளையபாரதம்' என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் என்பவர், சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்க உள்ளதாக அறிவித்தார்.

இதற்காக செயலி ஒன்றின் மூலம் நிதி வசூலும் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், கார்த்திக் கோபிநாத் ஐம்பது லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. தனது வங்கிக் கணக்கு மூலம் அவர் நிதி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், ஊடகங்களுக்குப் பேட்டியும் கொடுத்தார்.

கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.

பட மூலாதாரம், @annamalai_k twitter

படக்குறிப்பு, கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே, ' இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தனி நபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது' என அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியிருந்தார். மேலும், ' சிறுவாச்சூர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்' எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சர்ச்சைக்கு தனது யூட்யூப் சேனல் மூலமாகவே விளக்கம் அளித்த கார்த்திக் கோபிநாத், ''சிறுவாச்சூர் கோயிலை சேதப்படுத்தியது கிறிஸ்துவ அமைப்பினர் என நான் தவறாகத் தகவல் பரப்பியதாகக் கூறுகின்றனர். அவ்வாறு எந்த இடத்திலும் நான் கூறவில்லை. சுடுமண் சிலையை தனி நபர் ஒருவர் மூன்று முறை அடித்து நொறுக்கியுள்ளார். இதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத்தான் கூறினேன். அதேபோல், எனது வங்கிக் கணக்கு மூலமாக பணத்தைப் பெறவில்லை. 'கோயில் புனரமைப்பு தொடர்பாக நான் செய்யக் கூடிய தேசியப் பணிக்கு உதவி செய்ய விரும்பினால் செய்யலாம்' எனக் கூறியிருந்தேன். ''

PKSekarbabu

பட மூலாதாரம், PKSekarbabu

படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு

இதற்காக செயலி மூலம் நன்கொடை பெறப்பட்டது. அவற்றுக்கெல்லாம் முறையான கணக்கு, வழக்குகள் உள்ளன. எனது தனிப்பட்ட கணக்குக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டியதில்லை எனக் கூறிவிட்டேன். கோயில் புனரமைப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை எதாவது செய்துள்ளதா? இதற்காக 33 லட்ச ரூபாய்தான் சேகரிக்கப்பட்டது. ஆனால், 41 லட்ச ரூபாய் வரையில் தேவைப்பட்டது. எனக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. வதந்தி கிளப்பாமல் இருந்தால் போதும்'' என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து, கோயில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகளை சந்தித்துப் பேசியது தொடர்பான புகைப்படங்களையும் பட்டியலிட்டு, ''இந்த நிதியை கொடுப்பதற்கு ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவரும், 'இதனை கவனிக்கச் சொல்கிறேன்' என உறுதியளித்துள்ளார். திருப்பணி கமிட்டியில் உள்ள முக்கிய நபர்களிடம் கலந்து பேசி, இந்தத் தொகையை எவ்வாறு கொண்டு செல்வது என விவாதித்தோம். திருப்பணி கமிட்டிக்கு எனத் தனியாக வங்கிக் கணக்கு இல்லை. கடந்த டிசம்பர் மாதமே அறநிலையத்துறையின் அனுமதியைக் கேட்டோம். அங்குள்ள நான்கு கோயில்களை சீரமைக்க வேண்டும். பெரிய கோயிலில் மட்டும் கவனம் செலுத்தினோம். ஊர் பெரியவர்களை எல்லாம் வரவழைத்து ஸ்தபதியை ஏற்பாடு செய்யும் பணிகளும் நடந்தன. அறநிலையத்துறை எந்தப் பணிகளையும் செய்யவில்லை. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்'' எனப் பேசியிருந்தார்.

கார்த்திக் கோபிநாத் நிதி திரட்டி புனரமைக்க இருப்பதாகக் கூறிய சிறுவாச்சூர் கோயில்

பட மூலாதாரம், Ilaya Bharatham-இளைய பாரதம் youtube channel

படக்குறிப்பு, கார்த்திக் கோபிநாத் நிதி திரட்டி புனரமைக்க இருப்பதாகக் கூறிய சிறுவாச்சூர் கோயில்

கார்த்திக் கோபிநாத் கைது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''மத்திய குற்றப்பிரிவில் மதுரகாளியம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் அரவிந்தன் அளித்துள்ள புகாரில், 'நான் மேற்கண்ட கோவிலில் செயல் அலுவலராக பணிபுரிவதாகவும் சென்னை முத்தாபுதுப்பேட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் என்பவர் 'இளையபாரதம்' என்ற பெயரில் யூட்டியூப் வலைதளத்தில் 'Milaap fund raiser' என்ற தளம் மூலமாக கோவிலில் பழுதடைந்துள்ள சிலைகளை புனரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதியைப் பெறாமல் பொதுமக்களை ஏமாற்றி நிதி திரட்டி தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார்' என்று கொடுத்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு குற்ற எண்: 4/2022 U/s 406, 420 IPC and 66 (D) OF I.T Act ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.''

''மேற்கண்ட வழக்கில் கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி, மிட்டனமல்லியில் உள்ள கார்த்திக் கோபிநாத்தின் அலுவலகத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஆவடியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'பொய்யான குற்றச்சாட்டுகளின்கீழ் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களுக்கு எதிரான குரல்களை தி.மு.க அரசு ஒடுக்க நினைக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் பேசினேன். இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, திமுக, பாஜக தொண்டர்கள் முழக்கப் போர், அண்ணாமலை ஆவேசம் - நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: