மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமிக்கும் ஷாஹி ஈத்கா மசூதிக்குமான இந்து - முஸ்லிம் தரப்பு ஒப்பந்தம் என்ன? - முழு விவரம்

மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மற்றும் ஈத்கா மசூதி

பட மூலாதாரம், SURESH SAINI/BBC

படக்குறிப்பு, மதுராவில் அருகருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மற்றும் ஈத்கா மசூதி
    • எழுதியவர், கமலேஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குப் பிறகு, இப்போது மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி-ஈத்கா மசூதி விவகாரமும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் (சீனியர் டிவிஷன்) விசாரிக்க, மதுரா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாஹி ஈத்கா மசூதி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை அகற்ற வேண்டும் என்றும் 1968ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலம் தொடர்பான ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்றும் கூறி, 2020 பிப்ரவரியில் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆயினும் இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிமன்றம், 2020 செப்டம்பர் 30ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது.மனுதாரரே அங்குள்ள கிருஷ்ண பகவானின் பக்தர். கிருஷ்ணர் வந்து வழக்கை தொடுக்க முடியாது என்பதால் மனுவை விசாரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் இந்து தரப்பு சீராய்வு மனு தாக்கல் செய்தது. தற்போது, மனுவை ஏற்றுக்கொண்டுள்ள மதுரா நீதிமன்றம், சிவில் நீதிமன்றமே இதை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆனால் இந்த விஷயம் 2020ஆம் ஆண்டு தொடங்கியது அல்ல. அதன் வேர்கள் பல ஆண்டுகள் பழைமையானது. இந்த முழு சர்ச்சையையும் தெரிந்து கொள்வதற்கு முன், தற்போதைய நிலை என்ன, மனுதாரர்களின் கோரிக்கை என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.

மதுராவின் 'கட்ரா கேசவ் தேவ்' பகுதி இந்துக் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்கு ஒரு கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதன் வளாகத்தை ஒட்டி ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது.

கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்று பல இந்துக்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பல முஸ்லிம் அமைப்புகள் இந்தக் கூற்றை நிராகரிக்கின்றன.

1968ஆம் ஆண்டில், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கத்திற்கும் டிரஸ்ட் ஷாஹி ஈத்கா மசூதிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் கீழ் இந்த நிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், சிவில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவில், இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என விவரிக்கப்பட்டுள்ளது.

சிவில் நீதிமன்ற மனுவில் என்ன உள்ளது?

"ஸ்ரீ கிருஷ்ணர், கம்ஸனின் சிறையில் அவதரித்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதுதான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடம். இந்தப் பகுதி முழுவதும் 'கட்ரா கேசவ் தேவ்' என்று அழைக்கப்படுகிறது. இது மதுரா மாவட்டத்தில் உள்ள மதுரா பஜார் பகுதியில் அமைந்துள்ளது. கிருஷ்ணரின் உண்மையான அவதார இடம் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் மசூதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது."

"ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கம் மற்றும் டிரஸ்ட் ஷாஹி ஈத்கா மசூதி இடையே 1968ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் சட்ட விரோதமானது, அதை நிராகரிக்க வேண்டும். கட்ரா கேசவ் தேவ் நிலத்தை மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வழங்க வேண்டும். முஸ்லிம்கள் அங்கு செல்வதைத் தடுக்க வேண்டும். அந்த நிலத்தில் உள்ள ஈத்கா மசூதியின் கட்டமைப்பை அகற்ற வேண்டும்," என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி, ஷாஹி ஈத்கா மசூதிக்குமான ஒப்பந்தம் என்ன?

பட மூலாதாரம், SURESH SAINI

மனுதாரர் யார்

  • பகவான் கிருஷ்ணர், சகி ரஞ்சனா அக்னிஹோத்ரி மூலம்
  • ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி, சகி ரஞ்சனா அக்னிஹோத்ரி மூலம்
  • ரஞ்சனா அக்னிஹோத்ரி
  • பிரவேஷ் குமார்
  • ராஜேஷ் மணி திரிபாதி
  • கருணேஷ் குமார் சுக்லா
  • சிவாஜி சிங்
  • திரிபுராரி திவாரி

எதிர்தரப்பு யார்

  • உத்தர பிரதேச சுன்னி மத்திய வக்ஃப் வாரியம்
  • ஈத்கா மஸ்ஜித் குழு
  • ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை
  • ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான்
மதுராவில் கொடுக்கப்பட்ட மனு

பட மூலாதாரம், Ranjana Agnihotri

படக்குறிப்பு, மதுராவில் கொடுக்கப்பட்ட மனு

சர்ச்சை எப்படி தொடங்கியது

1968ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கம் மற்றும் டிரஸ்ட் ஷாஹி மஸ்ஜித் ஈத்காவும் நிலப் பிரச்னையைத் தீர்த்து, கோயில் மற்றும் மசூதிக்கான நிலம் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டின. இந்த ஒப்பந்தம் சர்ச்சையின் மையத்தில் உள்ளது.

ஆனால், யாருக்கு முழு உரிமை, கோயில் அல்லது மசூதி எது முதலில் கட்டப்பட்டது என்பது குறித்தும் சர்ச்சை உள்ளது. இந்த விவகாரம் 1618ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்றும் இது தொடர்பாக பல வழக்குகள் நடந்துவிட்டதாகவும் இந்து தரப்பு கூறுகிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளவை

  • கிருஷ்ணரின் பிறந்த இடம் மதுரா என்றும் இங்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதாகவும் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்து தரப்பு கூறுகிறது. இந்து மன்னர்கள் கட்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அவ்வப்போது புனரமைத்து பழுது பார்த்தனர். 1618ஆம் ஆண்டில், ஓர்ச்சாவைச் சேர்ந்த ராஜா வீர் சிங் தேவ் புந்தேலா, கட்ரா கேசவ் தேவ்வில் ஸ்ரீ கிருஷ்ணரின் கோயிலைக் கட்டினார் அல்லது பழுதுபார்த்தார். இதற்காக 33 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
சிவில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனு

பட மூலாதாரம், Ranjana Agnihotri

படக்குறிப்பு, சிவில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனு
  • முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் (1658-1707) இந்து மத இடங்கள் மற்றும் கோயில்களை அழிக்க உத்தரவிட்டதாக சில புத்தகங்களை மேற்கோள் காட்டி இந்து தரப்பு கூறுகிறது. 1669-70ல் மதுராவின் கட்ரா கேசவ் தேவ் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கோயில் இடிக்கப்பட்டு ஈத்கா மசூதி என்ற பெயரில் ஒரு மசூதி கட்டப்பட்டது.
  • இதற்குப் பிறகு, கோவர்தனில் முகலாய ஆட்சியாளர்களுடன் போரில் வெற்றி பெற்ற மராட்டியர்கள் 1770இல் இங்கு கோயிலை மீண்டும் கட்டினார்கள். ஆனால், கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்குப் பிறகு, மதுரா பகுதி அவர்களின் கீழ் வந்தது. அது நசுல் நிலம் என்று அறிவிக்கப்பட்டது. நசுல் நிலம் என்பது யாருக்கும் சொந்தமில்லாதது. அத்தகைய நிலத்தை அரசு தன் வசம் எடுத்துக்கொண்டு பயன்படுத்தும்.
  • 1815ல் கட்ரா கேசவ் தேவின் 13.37 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டது. அப்போது ராஜா பட்னிமல் அதிக விலை கொடுத்து நிலத்தை வாங்கினார். இதற்குப் பிறகு இந்த நிலம் ராஜா பட்னிமலின் பரம்பரையில் வந்த ராஜா நரசிம்ம தாஸுக்குச் சென்றது. அப்போது ராஜா பட்னிமலின் நில உரிமை தொடர்பாக முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
  • இதற்குப் பிறகு, 1944 பிப்ரவரி 8ஆம் தேதி ராஜா பட்னிமலின் வழித்தோன்றல்களான ராய் கிஷன் தாஸ் மற்றும் ராய் ஆனந்த் தாஸ் ஆகியோர் இந்த 13.37 ஏக்கர் நிலத்தை மதன் மோகன் மாளவியா, கோஸ்வாமி கணேஷ் தத் மற்றும் பிக்கேன் லால் ஜி அத்ரேயின் பெயருக்கு மாற்றினார்கள். அதற்காக ஜுகல் கிஷோர் பிட்லா 13,400 ரூபாய் செலுத்தினார். இதற்குப் பிறகும் 1946ல் இந்த விற்பனை குறித்து முஸ்லிம் தரப்பு கேள்விகளை எழுப்பியது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. முந்தைய உத்தரவு செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
  • இதற்குப் பிறகு ஜுகல் கிஷோர் பிட்லா இந்த நிலத்தின் வளர்ச்சிக்காகவும் பிரமாண்டமான கிருஷ்ணர் கோயிலைக் கட்டுவதற்காகவும் 1951, பிப்ரவரி 21ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளையை உருவாக்கினார். அவர் 13.37 ஏக்கர் நிலத்தை 'பகவான் ஸ்ரீ கிருஷ்ண விராஜ்மானுக்கு' அர்ப்பணித்தார். இருப்பினும் கிருஷ்ணர் கோயிலை முழு நிலத்திலும் கட்ட முடியவில்லை. மேலும் அறக்கட்டளை 1958 இல் செயலிழந்தது.
  • இதற்குப் பிறகு, 1958 மே 1 அன்று, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அதன் பெயர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் என மாற்றப்பட்டது. சங்கம், அறக்கட்டளையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் எனவே அறக்கட்டளை சார்பில் செயல்பட அதற்கு உரிமை இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • இதன் பின்னர் முஸ்லிம் தரப்பு நிலம் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கத்துக்கும் டிரஸ்ட் ஷாஹி ஈத்கா மசூதிக்கும் இடையே தாவா இருந்தது. பின்னர் 1968ல் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஷாஹி ஈத்கா மசூதி அறக்கட்டளைக்கு நிலத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. அதே நேரம் நிலத்தின் வேறொரு பகுதியில் குடியமர்ந்திருந்த கோசி முஸ்லிம்கள் முதலியோர் அங்கிருந்து நீக்கப்பட்டு, அந்த நிலம் கோயில் தரப்பிற்கு அளிக்கப்பட்டது.

ஒப்பந்தம் செய்ய சங்கத்திற்கு உரிமை இல்லை என்றும் இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி, ஷாஹி ஈத்கா மசூதிக்குமான ஒப்பந்தம் என்ன?

மசூதி தரப்பு வாதங்கள்

ஈத்கா மசூதி கமிட்டியின் வழக்கறிஞரும் செயலாளருமான தன்வீர் அகமது, மனுதாரர்களின் இந்தக் கூற்றை நிராகரிக்கிறார்.

"இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது, ஒப்பந்தம் செய்துகொள்ள சங்கத்திற்கு உரிமை இல்லை என்றால், அறக்கட்டளை தரப்பில் இருந்து யாரும் ஏன் முன்வரவில்லை. மனு தாக்கல் செய்துள்ளவர்கள் வெளியாட்கள். ஒப்பந்தத்தை கேள்வி கேட்க அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது," என்று அவர் வினவுகிறார்.

"இங்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம். ஒரு பக்கம் ஆரத்தி நடக்கிறது. மறுபுறம் ஆஜான் (தொழுகைக்கான அழைப்பு) ஒலி கேட்கிறது. இங்குள்ள மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நடந்தது அனைத்துமே கடந்த காலத்தின் ஒரு பகுதி. ஆனால் இப்போது வேண்டுமென்றே இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். நிலம் எங்கு வரை இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது," என்கிறார் அவர்.

கோயில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து தன்வீர் அகமது கேள்வி எழுப்புகிறார். "ஔரங்கசீப் 1658ல் கட்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் ஒரு மசூதியை கட்டினார். ஆனால் அதற்கு முன் இங்கு கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரம் இல்லை. ஒளரங்கசீப் கோயிலை இடித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்த ஒரு எழுத்துபூர்வமான ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை. எனவே கோயிலை இடிக்க உத்தரவிட்ட எந்த ஆதாரமும் இல்லை. மசூதி 1658 முதல் இங்கு உள்ளது.1968இல் ஒப்பந்தத்தின் மூலம் சர்ச்சை தீர்க்கப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

"1968 ஒப்பந்தம் அந்தப் பகுதியை தெளிவாகப் பிரித்தது. அதில் சர்ச்சைக்கு இடமில்லை. சட்டம் கையில் இருந்தால் எதையும் செய்யலாம். ஆனால் இங்கு இந்து-முஸ்லிம்கள் மிகுந்த அன்புடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். எந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரும் இதைப் பற்றி வாதிடுவதை நான் பார்த்ததில்லை. மதுராவில் அமைதி காக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்," என்று ஈத்கா மஸ்ஜித் கமிட்டியின் தலைவர் டாக்டர் இசட்.ஹசன் கூறுகிறார்.

மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி

பட மூலாதாரம், Ranjana Agnihotri

படக்குறிப்பு, மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி

மனுதாரரின் வாதங்கள்

"ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தரான நாங்கள், இந்த முறையீட்டை செய்துள்ளோம். தனது இறைவனின் நிலம் பாதுகாப்பாக இல்லை என்றும் நிலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் பக்தர் உணர்ந்தால், ஆட்சேபம் தாக்கல் செய்ய அரசியலமைப்பு உரிமை அளிக்கிறது," என்று வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி குறிப்பிடுகிறார்.

மேலும், "பழைய விஷயங்களை எழுப்புவதாகக் கூறுவது சரியல்ல. சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இன்றும் இந்து கடவுள்களின் சிலைகள், மசூதிகள் அல்லது நினைவுச் சின்னங்களில் காலடி படும் இடங்களில் உள்ளன. கலாசாரத்தோடு கூடவே இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் விஷயம் இது," என்று அவர் கூறினார்.

மசூதி கட்டப்பட்டது தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. "1815ல் நிலம் ஏலம் விடப்பட்ட போது, அங்கு மசூதி இல்லை. கட்ரா கேசவ் தேவ் கரையில் ஒரு பாழடைந்த கட்டட அமைப்பு மட்டுமே இருந்தது. சட்டவிரோத ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஷாஹி ஈத்கா என்று அழைக்கப்படும் மசூதி இங்குக் கட்டப்பட்டது," என்று இந்து தரப்பு மனுவில் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த நிலத்தில் 1658ம் ஆண்டு முதல் மசூதி உள்ளதாக செயலாளர் தன்வீர் அகமது கூறுகிறார்.

மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி, ஷாஹி ஈத்கா மசூதிக்குமான ஒப்பந்தம் என்ன?

இந்த விவகாரம் வழிபாட்டு தல சட்டத்தின் கீழ் வருமா?

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி- ஈத்கா மஸ்ஜித் விவகாரத்தில், வழிபாட்டு இடங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991, கண்டிப்பாக வருகிறது. இந்த சட்டத்தின்படி, இந்தியாவில் எந்த ஒரு வழிபாட்டுத்தலமும் 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த அதே வடிவத்திலேயே தொடர்ந்து இருக்கும். அயோத்தி சர்ச்சைக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சையில் விசாரணை நடந்தால், அது வழிபாட்டு தலச் சட்டத்தின் கீழ் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது.

சட்டத்தின் பிரிவு 4 (3) (b) காரணமாக, இந்த விஷயம் இந்த சட்டத்தின் கீழ் வராது என்று ரஞ்சனா அக்னிஹோத்ரி கூறுகிறார். இந்தப் பிரிவின்படி, இந்தச் சட்டம் அமலாவதற்கு முன், நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார அமைப்பு ஆகியவற்றில் தீர்க்கப்பட்ட வழக்கு, மேல்முறையீடு அல்லது பிற நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விவகாரத்தில், 1968ல் இரு குழுக்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, 1973 மற்றும் 1974ல் அது தொடர்பான உத்தரவு வெளியாகிவிட்டது.

எனினும், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் போவதாக தன்வீர் அகமது கூறுகிறார்.

அயோத்தி வழக்கிற்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை ரஞ்சனா அக்னிஹோத்ரி சுட்டிக்காட்டுகிறார். "அயோத்தி வழக்கில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நிலம் எப்போது யாரிடம் இருந்தது, அடுத்து யாருக்கு வழங்கப்பட்டது என்பது இதில் தெளிவாக உள்ளது. இது மிகவும் நேரடியான விஷயம்," என்று அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் கோயிலின் எச்சங்கள் மசூதி நிலத்தில் இருப்பதாகவும் இரண்டு விவகாரங்களிலும் கூறப்படுகிறது.

காணொளிக் குறிப்பு, மோனிகா தேவேந்திரன்: இங்கிலாந்தில் துணைமேயரான முதல் தமிழ்ப்பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: