ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?

ஞானவாபி மசூதி
படக்குறிப்பு, ஞானவாபி மசூதி
    • எழுதியவர், வினீத் கரே
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, 1991-ல் காங்கிரஸ் கட்சியின் பி.வி.நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தல மசோதாவை (சிறப்பு விதிகள்) கொண்டு வந்தபோது, நாட்டில் ராமர் கோயில் இயக்கம் உச்சத்தில் இருந்தது.

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி மதம் சார்ந்த ஒரு இடத்தின் நிலை எப்படி இருந்ததோ, அதற்குப் பிறகும் அது அப்படியே பராமரிக்கப்படும் என்றும், அதன் தன்மையும், இயல்பும் மாறாது என்றும் அதே ஆண்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு நரசிம்மராவ் அரசில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதை நினைவு கூர்கிறார்.

"அயோத்தி பழைய வழக்கு, அது குறித்து பல ஆண்டுகளாக வழக்கு நடந்துவருகிறது. எனவே நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நரசிம்மராவ் முடிவு செய்தார். எல்லா தாவாக்களையும் ஒரே நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் இயற்றப்பட்டது. இந்த வழியில் சட்டத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டன."

சட்ட அமைச்சகத்துடன் இணைந்து இந்த சட்டத்தை வரையும்படி நரசிம்மராவ் தன்னை கேட்டுக் கொண்டார் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

ஆனால், இந்த சட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது நாடாளுமன்றத்தில் கஜுராஹோவில் இருந்து பாஜக எம்.பி.யாக இருந்த உமா பாரதி, இந்த சட்டத்திற்கு எதிராக கட்சியின் சார்பில் முக்கிய பேச்சாளராக இருந்தார்.

"நான் முதல் பேச்சாளராக இருந்தேன், அதனால் எனக்கு மிக அதிகமாக சுமார் 40 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டது"என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த விஷயம் பழையது. அதனால் பேச்சுக்களை நினைவு கூர்வது அவ்வளவு சுலபமில்லை. ஆனால், " இந்தச் சட்டம் கொண்டு வருவது சரியல்ல, இன்னும் பல இடங்களில் தாவாக்கள் தீர்க்கப்படாமல் உள்ளன' என்று கட்சி கூறியதாக உமாபாரதி தெரிவித்தார்.

"கட்சி வெளிநடப்பு செய்தது. அத்வானி எங்கள் தலைவராக இருந்தார்" என்று உமாபாரதி நினைவு கூர்ந்தார். 1991 செப்டம்பர் 10 ஆம் தேதியன்று, இந்த சட்டம் இயற்றப்பட்டபோது, மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் மக்களவையில் ஆற்றியஉரையில், "சுதந்திரத்திற்குப் பிறகு, கடந்த கால காயங்களை குணப்படுத்தவும், மத நல்லிணக்க பாரம்பரியத்தை புதுப்பிக்கவும் நட்பை நிலைநாட்டவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம்," என்றார்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சட்டம் மீண்டும் விவாதத்தின் மையத்தில் உள்ளது. ஞானவாபி மசூதி தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில், வழிபாட்டுத் தலச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று முஸ்லிம் தரப்பு கூறுகிறது.

மறுபுறம் இந்து தரப்பு அதை ஏற்றுகொள்ளவில்லை. இந்த சட்டத்தின் செல்லுபடியாக்கம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

"சட்டங்கள் நாட்டிற்காக உள்ளன. நாடு சட்டங்களுகாக இல்லை. இந்த நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது சட்டம் மூலமாக, அது அகற்றப்பட்டது," என்று உமா பாரதி குறிப்பிட்டார்.

"சட்டம் மாற்றங்களை கொண்டுவருகிறது. சட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பழைய சட்டங்கள் மாற்றப்படுகின்றன."

உமாபாரதி

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, உமாபாரதி

அப்போது சிபிஎம் எம்பியாக இருந்த மாலினி பட்டாச்சார்யா, இந்தச் சட்டத்தின் கட்-ஆஃப் தேதியான 1947 ஆகஸ்ட் 15 க்கு ஆதரவாகப் பேசுகையில், "அன்றைய தினம் இந்தியா நவீன ஜனநாயக நாடாகவும், இறையாண்மை கொண்ட நாடாகவும் உருவெடுத்தது. முந்தைய கொடுமைகள் என்றென்றைக்குமாக மறக்கப்பட்டன," என்று குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பிலும் மாலினி பட்டாச்சார்யாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து பேசிய முன்னாள் எம்பி மாலினி பட்டாச்சார்யா, "பாபர் மசூதி விஷயத்தில் சட்டம் பொருந்தாது என்பதால் மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தமல்ல. இந்த விஷயத்தில் மசூதியை பாதுகாப்பது என்ற வகையில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது," என்றார்.

'இந்த மசூதி முன்பு கோவிலாக இருந்தது' என்பதான விவாதம், நீதிமன்றங்கள் இது போன்ற மனுக்களால் நிரம்பி வழிவது ஆகியவை குறித்துப்பேசிய மாலினி பட்டாச்சார்யா, "இப்போது ஒருவர் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது."என்று குறிப்பிட்டார்.

1991 இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட வழிபாட்டு தலச் சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை பாதுகாக்கிறது என்று ராமர் கோவில்-பாபர் மசூதி சர்ச்சை மீதான தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்தத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான, தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். சர்ச்சை அதிகமாகாமல் தடுப்பது நீதிமன்றங்களின் பொறுப்பு என்று கூறிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி, இந்த சட்டத்தை அரசு மதிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

பாபர் மசூதிக்குப் பிறகு அடுத்த மசூதியை நாங்கள் இழக்க மாட்டோம் என்றார் அவர்.

நீதிபதி கோவிந்த் மாத்தூர்

பட மூலாதாரம், ALLAHABAD HIGH COURT

படக்குறிப்பு, நீதிபதி கோவிந்த் மாத்தூர்

சட்டம் தொடர்பான கேள்விகள் மீதான விவாதம்

வழிபாட்டுஅனுமதி கோரி சில பெண்கள் வாரணாசி கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலிக்கின்றன.

"இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் கடந்த காலத்தை தோண்டாமல் இருப்பதுதான். விசாரணை நீதிமன்றம் செயல்படும் விதத்தை பார்க்கும்போது, இந்த சட்டத்தின் உணர்வை அது முற்றிலும் புறக்கணிப்பதாக நான் நினைக்கிறேன்,"என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் குறிப்பிட்டார்.

ஆய்வு செய்வதற்கான உத்தரவு தவறானது, உயர் நீதிமன்றம் உடனடியாக தலையிட்டிருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

"ஆய்வறிக்கை சமர்பிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆயினும் இந்த சட்டத்தின் கீழ் நாங்கள் வரவில்லை, இந்த விஷயத்தில் எங்களால் முடிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டால், இது ஒரு உணர்வு பூர்வமான பிரச்னையாக ஆகிவிடும். பெரும்பான்மையினரின் பல்வேறு விதமான பேச்சு தொடங்கிவிடும். இது பற்றிய ஆதாரம் என்ன, அந்த ஆதாரத்தின் முக்கியத்துவம் என்ன, இதை முடிவு செய்யவே முடியாது,"என்று நீதிபதி மாத்தூர் சுட்டிக்காட்டினார்.

வாரணாசியின் கீழ் நீதிமன்றம் வழிபாட்டுத் தலச் சட்டத்தை மீறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா கருதுகிறார்.

"மீடியா கசிவுகளைச் செய்த கமிஷன் தலைவர் (அஜய் மிஸ்ரா) நீக்கப்பட்டார். நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லமுடியாது,"என்று அவர் கூறினார்.

வழிபாட்டுத் தலச் சட்டம் பிரிவு 4 இன் துணைப்பிரிவு 1ல், 1947 ஆகஸ்ட் 15 ல் மத தலத்தின் நிலை எதுவாக இருந்ததோ, அதற்குப் பிறகும் அப்படியே இருக்க வேண்டும் என்றும், அதன் தன்மை அல்லது இயல்பு மாறக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 5ல் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கிற்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் எழுதப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் மூன்று நிபந்தனைகளுக்கு சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு ஒரு மத தலத்தின் தன்மை அல்லது இயல்பு மாறியிருந்தால், இந்தச் சட்டம் இருந்தாலும் நீங்கள் வழக்குத் தொடரலாம் என்று சட்டம் கூறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு அந்த மத இடத்தின் தன்மை அல்லது இயல்பு மாறியதா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும்.

ஒரு மத இடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது, அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம், ஒரு தொல்பொருள் இடம் அல்லது 1958 ஆம் ஆண்டின் பழங்கால நினைவுச்சின்னம் மற்றும் தொல்பொருள் தல எச்சங்கள் சட்டத்தின் கீழ் வந்தால் இரண்டாவது சூழ்நிலை ஏற்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

அத்தகைய உரிமைகோரல்களை உறுதிப்படுத்த நீதிமன்றம் அந்த இடத்தை ஆய்வு செய்ய முடியும் என்று அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

சட்டம் அமல் செய்யப்படுவதற்கு முன்பாக, அனைத்து தரப்பினரும் இடையே சர்ச்சையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருந்தால், மூன்றாவது சூழ்நிலை ஏற்படலாம்.

ப சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப சிதம்பரம்

இந்த சட்டம் 1991 ஜூலை 11 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தில் ராமர் கோவில்-பாபர் மசூதி சர்ச்சையைத் தவிர வேறு எதற்கும் விதிவிலக்கு இல்லை என்று இந்த சட்டத்தை உருவாக்குவதில் பங்குபெற்றவரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.

"இந்த சட்டத்தில் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு விதிவிலக்கு கூட பொருந்தாது,"என்கிறார், ஓய்வுபெற்ற நீதிபதி மாத்தூர்.

சட்ட அமலாக்கம் பற்றிய கேள்விகள்

1947 ஆகஸ்ட் 15 இல் இருந்த எந்த ஒரு மத தலத்தின் இயல்பு அல்லது தன்மை அதன் பிறகும் அப்படியே இருக்கும் என்று இந்த சட்டத்தின் 4வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு, சட்டத்தின் தொடக்கம் வரை, எந்தவொரு மத இடத்தின் தன்மை அல்லது இயல்பு மாறியுள்ளது தொடர்பான ஏதேனும் வழக்கு, மேல்முறையீடு அல்லது மனு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அது ரத்து செய்யப்படும் என்றும் பிரிவு 4 கூறுகிறது.

எனவே கேள்வி என்னவென்றால், ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் 'சிவலிங்கம்' இருப்பது நிரூபிக்கப்பட்டால், அங்கு இந்துக்கள் பூஜைகளை தொடரும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியுமா?

இது நடக்கவே முடியாது என்கிறார் நீதிபதி மாத்தூர். ஏனென்றால் 1947 ஆகஸ்ட் 15 அன்று ஒரு மத ஸ்தலத்திற்கு இருக்கும் தன்மை தொடரும் என்று பிரிவு 4 கூறுகிறது என்கிறார் அவர்.

வழக்கறிஞர் அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா

பட மூலாதாரம், Twitter/Advocate Aashutosh Srivastava

படக்குறிப்பு, வழக்கறிஞர் அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா

அந்த இடத்திற்குச் சென்று வழிபட நீதிமன்றம் உத்தரவிட முடியும் என்று வழக்கறிஞர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

ஆனால் அது அந்த மதத்தலத்தின் (இந்த விஷயத்தில் ஞானவாபி மசூதி) தன்மை அல்லது இயல்பை பாதிக்காதா? மேலும் பூஜைக்கான அனுமதி கோரும் மனு மீதான ஆய்வு உத்தரவு, வழிபாட்டுத் தலச் சட்டத்தை மீறுவதாகவும்,மசூதியின் தன்மையை மாற்றும் நடவடிக்கையாகவும் கருதப்படாதா?

ஆய்வு செய்யும் முடிவு குறித்து முஸ்லிம் தரப்பில் அதிருதி நிலவுகிறது. பலர் இந்த கண்ணோட்டத்தில்தான் இந்த நடவடிக்கையை பார்க்கிறார்கள்.

'சிவலிங்கம்' இருக்கும் இடத்திற்கு சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவு பற்றிக்கருத்துத்தெரிவித்த அசாதுதீன் ஒவைசி, பாபர் மசூதி நாடகம் இங்கு மீண்டும் அரங்கேறுகிறது என்றார்.

"மனு தாக்கல் செய்துள்ள பெண்கள் வழிபாட்டிற்காக அங்கு செல்ல அனுமதி கோரியுள்ளனர், மசூதியை கோவிலாக மாற்றுவதற்கு அல்ல. வழிபாட்டு தலத்திற்கு செல்வது குறித்து பேச சட்டத்தில் தடை இல்லை.," என்கிறார் வழக்கறிஞர் அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா. .

அங்கு செல்லும் அனுமதி கொடுக்க எந்தக் காரணமும் இல்லை என்று முஸ்லிம் தரப்பு கூறினால், அதை சரிபார்க்க நீதிமன்றம் ஆய்வு மேற்கொள்வது போன்ற சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

ஞானவாபி

பட மூலாதாரம், Sameeratmaj Mishra

வரலாற்று ஆதாரங்களை சட்டத்தால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?

கேள்வி என்னவென்றால், ஞானவாபி மசூதியில் வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகள் கிடைத்தால், மசூதியை சிவன் கோவிலாக மாற்ற முடியுமா?

இந்த சட்டம் இருக்கும்வரை இது நடக்காது என்று நீதிபது மாத்தூர் கூறினார்.

இந்தச் சட்டத்தின் செல்லுபடியாக்கம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் இது குறித்து மத்திய அரசிடம் பதில் கேட்டிருப்பதாக வழக்கறிஞர் அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா நினைவுபடுத்துகிறார்.

"இன்று இந்த சட்டம் அமலில் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வழக்கில், சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கு பொருந்துமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். விலக்கு பொருந்தும் என்று நீதிமன்றம் கருதினால், விசாரணை நடவடிக்கை தொடரும்," என்றார் அவர்.

ஆனால் வாரணாசியில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் பெண்களின் வழிபாடு குறித்த மனுவின் அடிப்படையில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட முடியுமா?

"வெளியே சுவர்களில் மூன்று சிலைகள் இருப்பதாகவும், சில ஆண்டுகள் அதாவது அநேகமாக 1989 வரை, அங்கு வழிபாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது மசூதியை கோயிலாக மாற்றுவதற்கான வழக்கு அல்ல, மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள மூன்று சிலைகளின் வழிபாடு தொடர்பான வழக்கு என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், வீடியோ ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிடலாமா? இது உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருகிறது,"என்று நீதிபதி மாத்தூர் குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்வி என்னவென்றால், மசூதியில் 'சிவலிங்கம்' கண்டுபிடிக்கப்பட்டால், 1991 சட்டம் இருக்கும்போதிலும் நீதிமன்றத்தால் நடவடிக்கைகளை தொடர முடியுமா?

அங்கு 'சிவலிங்கம்' கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்துக்கொண்டாலும், "கோயில் இருந்ததை அது நிரூபிக்கவில்லை" என்பதால், 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் பொருந்தும் என்று நீதிபதி மாத்தூர் தெரிவித்தார்.

ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

இது பழங்கால நினைவுச்சின்னமாக இருந்தது என்றும் 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு இந்த இடத்தின் தன்மை மாறியது என்றும் சர்வே ரிப்போர்ட்டில் தெரிய வந்தால், நீதிமன்றம் தனது நடவடிக்கையைத் தொடரலாம் என்று அஷூதோஷ் குறிப்பிட்டார்.

'சிவலிங்கம்' இருக்கும் இடத்தை பாதுகாப்பதான உத்தரவு மூலம், உச்சநீதிமன்றம், மசூதியை ஓரளவு கோவிலாக மாற்றுவதற்கான பாதையை திறந்து வைத்துள்ளதா?

1991 சட்டம் இருக்கும்போது, எந்த வகையான விசாரணையும் தொடரலாமா என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று நீதிபதி மாத்தூர் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடரலாமா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற முஸ்லிம் தரப்பின் வாதம் சரிதான். இதில் முடிவெடுக்காமல் எதுவும் செய்யக் கூடாது என்கிறார் அவர்.

சட்ட நடவடிக்கைகளின் போது ஆதாரங்களை பாதுகாப்பதை அஷூதோஷ் ஸ்ரீவஸ்தவா வலியுறுத்துகிறார்.

"அது ஒரு சிவலிங்கம் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிவலிங்கத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், யாராவது அதை அகற்றினால் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் நிலையில் பொருள் அங்கிருந்து நீக்கப்பட்டால், மனுவின் முக்கிய நோக்கமே தொலைந்துபோய்விடும்," என்று அவர் கூறினார். .

"நீங்கள் ஆதாரம் அல்லது பொருளை பாதுகாத்தால், அது விலக்கின் கீழ் வருகிறதா என்பதை பின்னர் முடிவு செய்யலாம். அவ்வாறு நடந்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும். இல்லை என்றால் நாங்கள் மனுவைத் தொடர மாட்டோம்.'

நீதிமன்றங்களில் வரும் மனுக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த உமாபாரதி, "அயோத்தி, மதுரா, காசி மீது எனக்கு சமயநம்பிக்கை இருக்கிறது. அங்கே நான் வழிபட வேண்டும்…. வாரணாசியில் சிங்கார் கெளரி பூஜையை நானே செய்துள்ளேன்… கிருஷ்ண ஜென்ம பூமியில் முஸ்லிம்கள் வணங்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. எங்களை வழிபடவிடுங்கள். எங்களை பூஜை செய்ய அனுமதியுங்கள்," என்றார்.

ஆனால் இந்த விஷயம் வழிபாட்டுடன் மட்டுமே நிற்குமா? இதுகுறித்து அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார். "நான் மரியாதைக்குரிய நீதிமன்றத்தை மதிக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, மாசுபாடு இல்லாத நாடாக இந்தியா மாற என்ன தேவை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: