திருமண உறவில் பாலியல் வன்புணர்வு: நேபாளம், பிரிட்டனிடம் இருந்து இந்தியா என்ன கற்கலாம்?

திருமண உறவில் கட்டாய பாலியல் உறவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

திருமண உறவில் பாலியல் வன்கொடுமை இருக்கலாமா? இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்ந்து, 'திருமண பாலியல் வன்கொடுமையை' சட்டவிரோதமாக்குவதற்கான கோரிக்கை மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் என்பது இரண்டு நபர்கள், இரண்டு குடும்பங்களின் ஒப்புதலுடன் நடக்கிறது. உடலுறவு என்பது இதன் ஒரு பகுதி. ஆனால், வன்புணர்வு என்பது சம்மதம் இல்லாமல் செய்யப்படும் உடலுறவு ஆகும்.

திருமணம் என்பது ஒரு அழகான, அன்பான உறவாக இருக்கலாம் . ஆனால், சில சமயங்களில் மனம், உடல், நிதி சித்திரவதைகளால் இதில் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும்.

இதுபோன்ற குடும்ப வன்முறைகள் பாலியல் உறவில் இருந்தாலும், மனைவி மறுத்த பின்னரும் கணவன் உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தினால், அது 'மெரைட்டல் ரேப்' (Marital rape) எனப்படும்.

உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் திருமண உறவில் வன்புணர்வு ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்கான தண்டனை, அவற்றின் சட்டத்தில் உள்ளன.

அரசின் நிலைப்பாடு என்ன?

2012 ஆம் ஆண்டு இந்தியாவில் ஓடும் பேருந்தில் ஜோதிபாண்டே, கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த நீதிபதி வர்மா கமிட்டி அமைக்கப்பட்டது. அது 'திருமண பாலியல் வன்புணர்வை' சட்டவிரோதமாக்க பரிந்துரைத்தது. ஆனால், அரசு இதை ஏற்கவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள மனுக்கள் மீது அரசு தனது கருத்தை தெளிவுபடுத்தவில்லை. ஆனால் விவாதத்தின் போது பல வாதங்கள் வந்துள்ளன.

உதாரணமாக, 'தாம்பத்திய வன்புணர்வை ஒரு குற்றமாகக் கருதுவது திருமண முறிவுக்கு வழிவகுக்கும்', 'பெண்கள் தங்கள் கணவரைத் துன்புறுத்துவதற்காக இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள்' மற்றும் 'குடும்ப வன்முறைக்காக ஏற்கெனவே ஒரு சட்டம் உள்ளது' என்பதோடு கூடவே மேலும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அச்சங்கள் மற்றும் சந்தேகங்களை நன்கு புரிந்துகொள்ள, 'திருமண உறவில் வன்புணர்வு' சட்டவிரோதமாக உள்ள நாடுகளின் அனுபவத்தை நான் படித்தேன்.

இரண்டு நாடுகளையும் நான்கு கேள்விகளையும் நான் தேர்வு செய்தேன்.

நேபாளம் - திருமணத்தில் கட்டாய உறவை சட்டவிரோதமாக்கியுள்ள ஒரே தெற்காசிய நாடு. பண்பாட்டுரீதியாக இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானது.

பிரிட்டன் - அதன் காலனித்துவ வரலாற்றின் காரணமான சட்டங்களின் அடிப்படையில் இந்தியாவில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சட்டம் ஏன் தேவை?

திருமண உறவில் கட்டாய பாலியல் உறவு

பட மூலாதாரம், AFP

லிசா லாங்ஸ்டாஃப் 1991 ஆம் ஆண்டின் குளிர்ந்த அக்டோபர் காலையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். லண்டனின் 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்'இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவு, மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவரை குற்றவாளியாக அறிவித்தது. "பாலியல் வன்புணர்வு செய்பவர், பாதிக்கப்பட்டவருடனான அவரது உறவு என்னவாக இருந்தாலும், அந்தக்குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றப்பிரிவு கூறியது.

"நாங்கள் ஹவுஸின் மேல் பகுதியில் உள்ள பொது கேலரியில் அமர்ந்திருந்தோம். தீர்ப்பைக் கேட்டதும், நாங்கள் துள்ளிக் குதித்து கொண்டாட ஆரம்பித்தோம். உடனே காவலர்கள் வந்து எங்களை வெளியேற்றினர். ஆனால், அடுத்த நாள் எல்லா நாளேடுகளிலும் முதல் பக்கச்செய்தி இதுவாகவே இருந்தது," என்று லிசா என்னிடம் கூறினார்.

லிசாவிற்கும், 'வார்' (WAR - Women against rape) அதாவது 'விமன் அகெய்ன்ஸ்ட் ரேப்' என்ற அமைப்பில் அவருடன் பணிபுரியும் பெண்களுக்கும், 15 ஆண்டுகாலப் போராட்டத்தின் வெற்றி இது.

பெண்களுக்கு எதிரான வன்முறை, அவர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம் போன்ற பல விஷயங்கள் தொடர்பாக பிரிட்டனில் இயக்கம் தீவிரமடைந்த 1970களில் இது தொடங்கியது.

அந்நிய ஆணின் வன்கொடுமைக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கும்போது திருமணத்திற்குள் நிகழும் வற்புறுத்தல்களுக்கு ஏன் நியாயம் கேட்கக்கூடாது என்று பெண்கள் வினவினர். அதுவும் கணவரை பொருளாதார ரீதியாக நம்பியிருப்பதால் மனைவி அவருக்கு எதிராக குரல் எழுப்புவது மேலும் கடினமாகிவிடுகிறது.

மெல்ல மெல்ல இந்தக் குரல்கள் சேர்ந்து 'வார்' உருவானது. 1985 ஆம் ஆண்டில், 'வார்' லண்டனில் 2,000 பெண்களிடம் ஆய்வு செய்தது. அதில் ஏழு பெண்களில் ஒருவர் தாங்கள் திருமண உறவில் வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறினார்கள்.

பின்னர் அந்த அமைப்பு நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தியது, 'கிரிமினல் லா ரிவிஷன் கமிட்டி'க்கு மனுக்களை அளித்தது. ஊடகங்களில் பேசியது, கையெழுத்து பிரச்சாரங்களை நடத்தியது மற்றும் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தது.

திருமண உறவில் கட்டாய பாலியல் உறவு

பட மூலாதாரம், Thinkstock

இதேபோல், நேபாளத்தில் உள்ள ஒரு அமைப்பும் இந்த முயற்சியை மேற்கொண்டது. 2000ஆம் ஆண்டில், பாலியல் வன்புணர்வு வழக்குகளில் திருமணமான பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரவும், திருமண பலாத்காரத்தை குற்றமாகக் கருதவும் கோரி, ஃபோரம் ஃபார் வுமன் இன் லா அண்ட் டெவலப்மென்ட்யைச் (FWLD) சேர்ந்த மீரா டூங்கானா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

"நம் சமூகத்தில் ஆணின் குடும்பத்திற்கு ஒரு பெண் தனியாகச் செல்கிறாள். இதுவே ஒரு வகையான சித்திரவதை என்று நான் நினைக்கிறேன். ஆண் ஆதிக்கச் சமூகத்தில் பெண் ஒரு பொருளாகப் பார்க்கப்பட்டு, அவள் மீதான அதிகாரத்தை நிலைநாட்ட வன்புணர்வு பயன்படுத்தப்படுகிறது. திருமணத்தில் கூட பாலியல் வன்முறையை அவர்களது உரிமையாக கருதுகின்றனர்," என்று மீரா குறிப்பிட்டார்.

2001 ஆம் ஆண்டில் நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. ஆனால், நாடாளுமன்றம் அதை சட்டமாக்குவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆனது.

2006 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டபோது, அதில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையே இருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தீர்ப்பு சாதகமாக வந்தது. ஆனால், அது நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2017இல், 'திருமண கட்டாய பாலியல் உறவுக்கு' அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க நாடாளுமன்றம், சட்டத்தில் வகை செய்தது.

சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

திருமண உறவில் பாலியல் வன்புணர்வு / டெல்லி உயர் நீதிமன்றம்

திருமண உறவில் வன்புணர்வை குற்றமாக்குவதற்கான சட்டப் போராட்டங்கள், இவ்வளவு நீண்டதாக இருப்பதற்கு அச்சம் மற்றும் சந்தேகங்கள்தான் காரணம். அதாவது, திருமண அமைப்பில் பின்னடைவு, ஆண்களுக்கு எதிரான பாகுபாடு, சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.

தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற பயத்தை ஒரு கட்டுக்கதை என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், திருமண அமைப்பு எந்த சட்டத்தினாலும் உடைக்கப்படவில்லை என்பதையும், ஆண் செய்யும் வன்முறையால் மனைவி அதிர்ச்சியடைகிறார் என்பதையும் அவர்கள் அடிக்கோடிட்டு காட்டினர்.

ஒரு பெண் தன் குடும்பத்தை உடைக்க விரும்புவதில்லை, துன்புறுத்தல்கள் மிகவும் தீவிரமடையாத வரை அதை பொறுத்துக் கொள்கிறாள் என்று நேபாளத்தில் உள்ள 'சட்ட உதவி மற்றும் ஆலோசனை மையத்தின்' (LACC) மூத்த சட்ட அதிகாரி புண்யாஷீலா தாவாடி, தனது 21 வருட அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்தார்.

"பெண்கள் எங்களிடம் பேசக்கூட தயங்குவார்கள். ஆனால், வெட்கத்தை விட்டு மனம் திறந்து பேசும்போது, இரவு முழுவதும் ஆடையின்றி இருக்குமாறு கணவர்கள் வற்புறுத்துகிறார்கள் என்றும் புளூ ஃபிலிம் காட்டி அதுபோன்ற செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்துவார்கள் என்றும் மனிதாபிமானமற்ற முறையில் உறவு கொள்வார்கள் என்றும் சொல்வார்கள்," என்று புண்யஷீலா தெரிவித்தார்.

நேபாளத்தில் திருமணத்திற்குள் நடக்கும் வன்முறைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இன்றும் கடினமாகவே உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும், படித்த மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது சவாலாக இருந்தது.

LACCக்கு நேபாளத்தில் நான்கு மையங்கள் உள்ளன. இங்கு வரும் பெரும்பாலான வழக்குகள் குடும்ப வன்முறை தொடர்பானவை.

"ஆரம்பத்தில் எங்கள் சக வழக்கறிஞர், இப்போது வீட்டுக்குச் சென்று மனைவியை தொடுவதற்கு முன் அனுமதி கேட்க வேண்டும், இல்லையெனில் அவர் சிறைக்கு அனுப்பிவிடுவார் என்று கூறுவார். ஆனால், இப்போது பல பெண்களின் வேதனையான, திருமண ரீதியான வன்புணர்வை பார்க்கும்போது, அவர் கேலி செய்வதை நிறுத்திவிட்டார். பெண்ணை அடக்குவது சரியல்ல என்பதையும் இப்போது ஏற்றுக்கொண்டுவிட்டார்," என்று புண்யஷீலா கூறினார்.

திருமண உறவில் பாலியல் வன்புணர்வு / டெல்லி உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Thinkstock

துஷ்பிரயோகத்தைக் காட்டிலும், பெண்கள் சட்டத்தை அணுகுவதுதான் பிரச்னையாக உள்ளது.

ஆண்டுதோறும் வன்முறையால் பாதிக்கப்பட்ட 1,000 பெண்கள் தன்னிடம் வருவதாகவும், ஆனால், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் போலீஸ்-நீதிமன்ற வழியை எடுக்க விரும்பவில்லை என்றும் வடகிழக்கு பிரிட்டனில் 'ஏவா விமன் எயிட் அண்ட் ரேப் க்ரைஸிஸ் சென்டர்' (EVA Women aid and rape crisis centre) நடத்தும் ரிச்சிண்டா டெய்லர் கூறுகிறார்.

தங்குவதற்கு இடம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள மற்றும் அவர்களின் செலவுகளைச் சமாளிக்க, வேலை தேடுவதற்கு அவர்களுக்கு உதவி தேவை.

"கடந்த சில தசாப்தங்களாக பிரிட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் தண்டனை விகிதம் குறைந்துள்ளது. மேலும், குடும்ப வன்முறை குறித்த போலீஸ் புகார்கள் பெரும்பாலும் நீதிமன்றங்கள் வரை செல்வதில்லை. இந்த நிலையில் பெண்கள் நீதிமன்றம் அல்லது பொது இடத்திற்கு சென்று தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஏன் பேசுவார்கள்," என்று ரிச்சிண்டா கேள்வி எழுப்பினார்.

வன்புணர்வு மற்றும் குடும்ப வன்முறை பற்றிய தவறான புகார்கள் அரிதானவை. ஆனால், பிரிட்டனில், காப்பீடு மற்றும் மொபைல் போன் திருட்டு போன்றவற்றில் பெரும்பாலான பொய் வழக்குகள் காணப்படுகின்றன என்று லிசா லாங்ஸ்டாஃப் கூறினார்.

திருமண உறவில் வன்புணர்வு குறித்து எந்தப் பெண்கள் புகார் கூறுகிறார்கள்?

நேபாளம் மற்றும் பிரிட்டன் இரண்டிலும், திருமணத்தில் வன்புணர்வு வழக்குகள் தனியாக அடையாளம் காணப்படுவதில்லை. மொத்த பாலியல் வன்புணர்வு வழக்குகளின் புள்ளிவிவரங்கள் மட்டுமே காவல்துறை மற்றும் நீதித்துறையால் அளிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 'திருமண உறவில் வன்புணர்வு' தொடர்பான எத்தனை வழக்குகள் காவல்துறையிடம் பதிவு செய்யப்படுகின்றன, அவற்றின் தண்டனை விகிதம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.

வளர்ந்த நாடுகளில் பெண்களின் அதிகாரம் காரணமாக, 'திருமண பாலியல் வன்புணர்வு' சட்டம் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது என்று பிரிட்டனில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை எதிர்த்துப் போராடும் பிரபல வழக்கறிஞர் டாக்டர் ஆன் ஓலிவார்ஸ் குறிப்பிடுகிறார்.

"இங்கு விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் வன்முறைத் திருமணங்களில் வாழ வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் சரியான நேரத்தில் வெளியேறுகிறார்கள். விவாகரத்துக்குப் பிறகு தனியாக வாழும் பெண் குழந்தைகளை வளர்ப்பது குறித்து யாரும் புருவத்தை உயர்த்துவதில்லை. புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் சுதந்திரமும் அவர்களுக்கு உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

இதனுடன், பிரிட்டனில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 'பாதுகாப்பான வீடுகள்' கட்டப்பட்டுள்ளன. அவர் கணவர் வீட்டை விட்டு வெளியேற விரும்பினால், இங்கே அடைக்கலம் கிடைக்கும்.

திருமண உறவில் கட்டாய பாலியல் உறவு

பட மூலாதாரம், SPL

குற்றங்களைப்பற்றி புகாரளிக்கும் பெண்கள் பெரும்பாலும் வசதியானவர்கள் என்று லிசா லாங்ஸ்டாஃப் குறிப்பிட்டார்.

"அதிக பணம் சம்பாதிக்கும் அல்லது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ள பெண்கள் மட்டுமே காவல்துறையிடம் செல்கிறார்கள். அவர்களின் வழக்குகளில் மட்டுமே மேம்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கிடைக்கும் நம்பிக்கை உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்களே தன்னிடமும் 'திருமண பாலியல் வன்புணர்வு' பற்றி புகார் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், காவல்துறைக்கு செல்லும் நடவடிக்கையை எடுப்பதில்லை என்று நேபாளத்தில் FWLDயில் சட்ட அதிகாரியாக பணிபுரியும் சுஷ்மா கௌதம் கூறினார்.

பிரிட்டனுடன் ஒப்பிடும்போது, நேபாளத்தில் பெண்களுக்கு 'பாதுகாப்பான வீடு' மற்றும் இலவச சட்ட உதவி குறைவாக உள்ளது. கூடவே குடும்ப கெளரவத்தைத் தக்கவைக்க நிறைய சமூக அழுத்தமும் உள்ளது.

"அவர்களுக்கு சட்டம் தெரியும். ஆனால், எங்களிடம் வந்த பிறகும், போலீஸ்-நீதிமன்றம் இல்லாமல் ஏதாவது ஒரு வழியைத்தேடுவதே அவர்களது முயற்சியாக உள்ளது," என்று சுஷ்மா குறிப்பிட்டார்.

பல பெண்கள் வன்முறை பற்றி புகாரளிப்பதற்கு முன் குழந்தைகள் வளரும் வரை காத்திருக்கிறார்கள். மிகக் கொடூரமான வன்முறை தொடர்பான புகார்கள் மட்டுமே நீதிமன்றத்தை அடைகின்றன.

சட்டத்தின் பலன் என்ன?

திருமண வன்புணர்வு தடுப்புச் சட்டம் இல்லையென்றால், திருமணத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மட்டுமே புகார் அளிக்க முடியும்.

குடும்ப வன்முறைக்கான தண்டனை காலம் குறுகியது மற்றும் வன்முறை மீண்டும் மீண்டும் நிகழும் என்ற அச்சம் உள்ளது.

திருமண பலாத்காரத்திற்கு எதிராக தனி சட்டம் உருவாக்குவது முதல் படி மட்டுமே. பெரும்பாலான வன்புணர்வு வழக்குகளைப் போலவே, நான்கு சுவருக்குள் நடக்கும் 'திருமண பலாத்காரத்தையும்' நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினம்.

மருத்துவ சான்றுகள் பெரும்பாலும் கிடைக்காமல் போவதால், பெண்ணின் தனிப்பட்ட அறிக்கை மிகவும் முக்கியமானது.

"பெரும்பாலும் சம்மதம் இல்லாதபோதிலும் கணவர் உடலுறவு கொள்ள பெண்கள் அனுமதிக்கிறார்கள். ஏனெனில் அவளை கொல்லப்போவதாகவும், பிறப்புறுப்பை காயப்படுத்தப்போவதாகவும் கணவர் மிரட்டுகிறார். அவள் தைரியத்தை சேகரித்து காவல்துறைக்கு செல்லத்துணிவதற்குள், துணிகள் துவைக்கப்பட்டுவிடுகின்றன. காயங்களின் வடுக்கள் லேசாகிவிடுகின்றன,"என்று சுஷ்மா கெளதம் கூறினார்.

பிரிட்டனில் 'திருமண பாலியல் வன்புணர்வு' என்ற புகாரின் மீதான விசாரணைகளில், பெண்ணின் மொபைல் ஃபோனை பெறுவது, மருத்துவ மற்றும் தனிப்பட்ட பதிவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவையும் அடக்கம்.

பெண்கள் இதனால் அசௌகரியமாக உணர்கிறார்கள். இது இரண்டாவது பாலியல் வன்புணர்வு போன்றது, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பகிரங்கமாகிவிடுகிறது என்று கருதுகிறார்கள் என்று லிசா குறிப்பிடுகிறார்.

அதே சமயம் ஆதாரங்களை சேகரிக்க பல வழிகள் இருப்பதாக ரிச்சிண்டா கூறுகிறார். மீண்டும் மீண்டும் வன்முறை நடக்கும் தேதி மற்றும் நேரத்தை நாட்குறிப்பில் வைத்திருப்பது, நண்பரிடம் தொடர்ந்து சொல்வது, காயங்களைப் படம் எடுப்பது, தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

இது போன்ற வன்முறைகள் தவறு என்ற செய்திதான் சட்டத்தின் மிகப்பெரிய சாதனை என்று இவர்கள் கருதுகின்றனர்.

திருமண உறவில் கட்டாய பாலியல் உறவு

பட மூலாதாரம், Getty Images

"திருமணத்தில் பாலியல் வன்முறை ஒரு குற்றம் என்பதை பிரிட்டன் குழந்தைகள் அறிவார்கள்," என்கிறார் டாக்டர் ஆன் ஓலிவார்ஸ்.

இந்தியா, நேபாளம் போன்ற வளரும் நாடுகளில் இது இன்னும் விவாதப் பொருளாக உள்ளது.

திருமணத்தில் பெண்ணின் பங்கின் மீது கட்டமைக்கப்பட்ட சமூக சிந்தனை பெண்ணை கட்டுப்படுத்துகிறது. கணவர் வற்புறுத்தும்போது 'இல்லை' என்று சொல்ல உரிமை உண்டு என்று பெண்களுக்கு அறிவுரை கூறி விளக்க வேண்டியிருப்பதாக புண்யஷீலா கூறுகிறார்.

இது எந்த ஒரு உரிமைக்கான போராட்டமும் அல்ல.

2011இல் FWLD, சொத்தில் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவுக்குப் பிறகு இப்போது நேபாளத்தில் மூதாதையர் சொத்தில் திருமணமான மகள்களுக்கு மகன்களைப்போலவே சம உரிமை உள்ளது.

"உடலுறவு வேண்டுமா வேண்டாமா என்பதில் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமூக அழுத்தத்தில் இருந்து சுதந்திரம், இவையனைத்தும் கிடைத்தால் மட்டுமே ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண் சுதந்திரமாக இருக்க முடியும்," என்று இந்த மனுவை தாக்கல் செய்த மீரா டுங்கன் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: