தேச துரோக வழக்கு: 124ஏ பிரிவை மறுபரிசீலனை செய்ய இந்திய அரசு முடிவு

பட மூலாதாரம், Getty Images
நாட்டில் உள்ள தேச துரோக சட்டங்களின் விதிகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை அரசு பரிசீலிக்கும் நடைமுறைகள் முடிவடையும் வரை தேச துரோக சட்டப்பிரிவுகள் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேச துரோக சட்டத்த்தின் 124ஏ பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 2021ஆம் ஆண்டை ஜூலை மாதம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த தேச துரோக சட்டம் அவசியம்தானா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் உதவிடும்படியும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், "நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், காலனித்துவ கால சுமைகளை அகற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பல்வேறு காலனித்துவ சட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
தேச துரோகத்தை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவு தொடர்பாக நாட்டில் உள்ள சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் பொது தளத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1,500 பிரிவுகள் நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
காலனித்துவ கால சுமையை தவிர்க்கும் வகையில் ஏற்கெனவே 2014-15 முதல் இத்தகைய 1,500 பிரிவுகளை நீக்கியிருப்பதாகவும் மக்களுக்கு தேவையற்ற தடங்கலை ஏற்படுத்தும் சுமார் 25,00 வழக்குகள் இதன் மூலம் முடிக்கப்பட்டதாகவும் சில வகை செயல்பாடுகள் குற்றமற்றதாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.
"இது ஓர் தொடர்ச்சியான நடைமுறை. இந்த சட்டங்களும் அவற்றுக்குக் கீழ்படிதலும் காலனித்துவ கால மனப்பான்மை. அவற்றுக்கு இன்றைய இந்தியாவில் இடமில்லை. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே 124ஏ சட்டப்பிரிவை மறுஆய்வு செய்ய விரும்புகிறோம்," என்று இந்திய அரசு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இதே விவகாரத்தில் கடந்த சனிக்கிழமை விசாரணை நடந்தது. அப்போது தேச துரோக சட்டத்தையும், 1962ஆம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் அது செல்லுபடியாக இருக்க வேண்டிய நிலையையும் வலியுறுத்தி இந்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அறுபது ஆண்டுகளாக "சோதனையான காலகட்டத்தை" இந்த சட்டப்பிரிவு எதிர்கொண்டுள்ளது. அது தவறாகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுவதை வைத்து அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்த முடியாது என்றும் இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த கருத்தை தெரிவித்த இரண்டே நாட்களில் தமது நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றிக் கொண்டு 124ஏ சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.
மனுதாரர்கள் தரப்பு வாதம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கில் மூத்த பத்திரிகையாளர்கள், முக்கிய அமைப்புகளுக்காக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் ,விபின் நாயர் உள்ளிட்டோர் ஆஜராயினர்.
வாழ்க்கையின் அடிப்படை உரிமைகள், கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் எதிர் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரங்களை கட்டுப்படுத்த தேச துரோகச் சட்டப்பிரிவை அரசாங்கம் பரவலாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
1962 வழக்குக்குப் பிறகு நீதித்துறயில் கடலளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய கபில் சிபல், "ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். நாம் இப்போது ஜனநாயக நாடு. சொந்த தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய எஜமானர்கள் நாம். எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கும் உரிமை உள்ளது," என்று தெரிவித்தார்.19(1)(அ) வில் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமையை தேசத்துரோகம் எவ்வாறு பாதித்தது என்பதை மட்டுமே கேதார்நாத் தீர்ப்பு உள்ளடக்கியதாக சிபல் வாதிட்டார். அரசியலமைப்பின் 21ஆவது விதி கூறும் வாழ்வுரிமை 14ஆவது விதி கூறும் சம உரிமை பற்றி அந்த வழக்கில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது அரசியலமைப்பு விதிகள் 14,19,21 ஆகியவற்றை கவனத்தில் கொண்டே 124ஏ சட்டப்பரிவை எப்படி பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னோடி வழக்கு
1962ஆம் ஆண்டில் கேதார் நாத் சிங்குக்கும் பிகார் அரசுக்கும் இடையிலான வழக்கு ஒன்றை விசாரித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற அமர்வு ஒரு தீர்ப்பளித்தது. அதில், 124ஏ சட்டப்பிரிவை வன்முறைக்கு அழைப்பு விடுப்பது அல்லது தூண்டுவது, பொது ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது அல்லது பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்றவற்றில் மட்டும் இந்தப் பிரிவை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
ஐந்து நீதிபதிகள் அளித்த அந்தத் தீர்ப்பே தேச துரோக வழக்கு விவகாரத்தில் 'முன்னுதாரண தீர்ப்பு' போல இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளாக இந்த சட்டப்பிரிவை அரசு எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்களை உளைச்சலுக்கு உள்ளாக்குதல், செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை இலக்கு வைக்க பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
இந்த நிலையில், இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்ற குரல் முன்னெப்போதுமில்லாத வகையில் இம்முறை மிக அதிகமாக ஒலித்து வருகிறது. இந்திய அரசு கடைப்பிடித்து வரும் 124ஏ சட்டப்பிரிவின்படி ஒருவர் குற்றவாளி ஆக தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். அவரது செயல் குற்றமாக கருதப்படும்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












