'தேச துரோக சட்டப்பிரிவு 124ஏ' 75 வருடங்களுக்குப் பிறகும் அவசியமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

கருத்து சுதந்திரம்

பட மூலாதாரம், Getty Images

தேச விரோத குற்றச்சாட்டை சுமத்த பயன்படுத்தப்படும் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு, நாடு சுதந்திரம் அடைந்த 75 பிறகும் அவசியமாகிறதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வொம்பாட்கெரே தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு, விடுதலை உணர்வை ஒடுக்கவும் காந்தி, பாலகங்காதர் திலக் போன்றோருக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட காலனிய கால சட்டப்பிரிவு இன்னும் தேவையா என்று இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரிடம் (அட்டர்னி ஜெனரல்) கேள்வி எழுப்பியது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை, இதே விவகாரத்துடன் தொடர்புடைய எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்த வழக்குடன் சேர்த்து ஒரே விவகாரமாக விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், "இந்த விவகாரம் தங்களுடைய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள அதே அம்சத்தை கொண்டுள்ளது. சட்டப்பிரிவை பயன்படுத்துவதில் சில வழிகாட்டுதல்கள் இருந்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் 124ஏ பிரிவு அரசியலமைப்புக்கு எதிராகவும் அது அப்பட்டமாக தவறாக பயன்படுத்தப்படுவது பற்றியும் நாங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அரசின் தலைமை ஆலோசகரிடம் தலைமை நீதிபதி ரமணா கேள்விகளை எழுப்பினார்.

"தேச விரோத சட்டப்பிரிவின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே இருந்துள்ளதை அறியலாம். இந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படும் விதத்தை, ஒரு மரத்தை அறுக்க கொடுக்கப்பட்ட ரம்பத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த காட்டையே அழிப்பதற்கு இணையாக ஒப்பிடலாம்," என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின்படியும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் எப்படி அந்த பிரிவை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்றும் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

OBHAN ASSOCIATES

பட மூலாதாரம், OBHAN ASSOCIATES

"தவறாக சட்டப்பிரிவு பயன்படுத்தப்படும் போது அதற்கு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடைமை ஆக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பிற வழக்குகளையும் ஆராய்ந்து நிலுவையில் உள்ள அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே விவகாரமாக விசாரிக்கப்படும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, எப்படி இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் மாற்ற பரிசீலிக்காமல் போனது என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கே.கே. வேணுகோபால், "இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அதன் நோக்கம் சட்டபூர்வமாக அமல்படுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கலாம்," என்று கூறினார்.

இருப்பினும், ஒரு தரப்பால் எதிர் தரப்பு குரலை கேட்க முடியாமல் போனால் பிறகு எதிர் தரப்புக்கு எதிராக இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படலாம் அல்லது தவறாக ஒரு குற்றச்சாட்டில் சேர்க்கப்படலாம். தனி நபர்களைப் பொருத்தவரை இது மிகவும் தீவிர பிரச்னை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கின் மனுதாரர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல். இந்த நாட்டுக்காக தமது மொத்த வாழ்வையும் அவர் அர்ப்பணித்துள்ளார். எனவே இதை உள்நோக்கம் கொண்ட மனுவாக கருதி விட முடியாது என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதைத்தொடர்ந்து எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா மனுவுடன் வொம்பாட்கெரே மனுவையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட அறிவுறுத்திய நீதிபதி, அதன் பிறகு மனுதாரர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரிட்டார்.

124ஏ சட்டப்பிரிவுக்கு எதிரான வாதம்

FREEDOM

பட மூலாதாரம், Getty Images

1962ஆம் ஆண்டில் கேதார்நாத் சிங்குக்கும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் வொம்பட்கெரே.

இந்திய அரசியலமைப்பின் 19(1) விதியில் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரிமையின்படி ஒருவர் தெரிவிக்கும் கருத்தை ஏற்க முடியாமல், அதை அரசுக்கு எதிரான செயல்பாடு போல குற்றம்சாட்டி கிரிமினல் குற்றமாக்க முற்படுவது, குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது என்று மனுவில் பொம்பட்கெரே கூறியிருந்தார்.

எனவே, அரசியலமைப்பின் 14, 21 ஆகியவற்றை பின்பற்றும் வகையில், அவற்றுக்கு எதிரான சட்டப்பிரிவு அவசியத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தும் தேவை எழுகிறது என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு, கேதார்நாத் வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டது என்பதற்காக அதே அளவுகோலை வைத்து அந்த சட்டப்பிரிவை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்றும் அதுவே அந்த சட்டப்பிரிவை ஏன் மறுஆய்வு செய்யக்கூடாது என்ற கேள்வியின் அவசியத்தை நீதிமன்றத்துக்கு உணர்த்துவதாகவும் பொம்பாட்கெரே மனுவில் கூறியுள்ளார்.

இதே 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிராக மணிப்பூரை சேர்ந்த கிஷோர் சந்திரா வாங்கெம்சா, சத்தீஸ்கரை சேர்ந்த கன்னையா லால் ஷுக்லா ஆகிய இரு செய்தியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு யு.யு.லலித், இந்திரா பானர்ஜி, கே.எம். ஜோசஃப் ஆகிய நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு என்ன சொல்கிறது?

எவரேனும், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால் அல்லது மற்றபடி இந்தியாவில் சட்டபூர்வமாக அமைந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அது குற்றமாக கருதப்படும்.

இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை அல்லது அபாரதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.

இதில்,"அவநம்பிக்கை" என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது.

இந்தியாவில் விடுதலை முழகத்தை எதிரொலிப்பவர்களை ஒடுக்க இந்த தேச துரோக சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியது. ஆனால், அதே பிரிட்டன் நாட்டில் இந்த சட்டம் 2009இல் நீக்கப்பட்டது. இந்தியாவில் இன்னும் தொடருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :