நவ்னீத் கவுர் எம்.பி, எம்.எல்.ஏ. கணவருடன் கைது - உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடுத்த இந்த தம்பதி யார்?

பட மூலாதாரம், PTI
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீடு முன்பாக அனுமன் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்துவதாக எச்சரித்த சுயேச்சை பெண் எம்.பி. நவ்னீத் கவுர் மற்றும் அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணாவை மும்பை காவல்துறையினர் இன்று இரவு கைது செய்தனர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்கு வெளியே ஹனுமான் சாலிசாவை பாராயணம்செய்யும் அறிவிப்பை இந்த தம்பதி வெளியிட்ட பிறகு, ஆளும் சிவசேனை கட்சியின் தொண்டர்கள் நவ்னீத் ராணாவின் மும்பை வீடு முன்பாக பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்கு வெளியே ஹனுமான் சாலிசாவை ஓதும் திட்டத்தை ரத்து செய்வதாக இந்த தம்பதி இன்று மாலையில் அறிவித்தனர். இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களிலேயே நவ்னீத் கவுர் ராணா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ ரவி ராணாவை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
நவ்னீத் கவுர் ராணா, ரவி ராணா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை வளர்ப்பது தொடர்பானதாகும்.எம்பியும் எம்எல்ஏவும் மும்பையின் கர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
என்ன செய்தார் நவ்னீத் கவுர்?
இந்த வார தொடக்கத்தில் ரவி ராணா, "மகாராஷ்டிராவை நெருக்கடிகளிலிருந்து விடுவித்து, மாநிலத்திற்கு அமைதி கிடைக்க" இந்து பண்டிகையான ஹனுமன் ஜெயந்தி அன்று அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வலியறுத்த வேண்டும் என முதல்வர் தாக்கரேவிடம் கோரப் போவதாக அறிவித்தார். தாக்கரே குடும்பத்தின் வசிப்பிடமான மாடோஸ்ரீக்கு வெளியே இந்து பிரார்த்தனையை நடத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், RAVI RANA
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில், சிவசேனை கட்சித் தொண்டர்கள் நவ்னீத் ராணா, ரவி ராணா தம்பதி வசித்து வந்த வீட்டை முற்றுகையிட்டு, அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். அவர்களின் வீடு முன்பாக போலீஸார் தடுப்புகளை போட்டிருந்தனர். அதையும் மீறி சிலர் வீட்டிற்குள் நுழைய முயன்றதாகவும், ஆனால் போலீசார் பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு வருகை தரவுள்ளதால், ஹனுமன் சாலிசா பாராயணம் செய்யும் திட்டத்தை ரத்து செய்ததாக நவ்னீத் கவுர் ராணா மற்றும் ரவி ராணா தெரிவித்தனர்.இந்த நிலையில், தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக, அத்துமீறி தங்களுடைய வீட்டுக்கு வெளியே போராட்டம் நடத்தி வீட்டுக்குள் நுழைய சிவசேனை தொண்டர்களை தூண்டி விட்டதாகக் கூறி ஆளும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனை கட்சித் தலைவர் அனில் பராப் மற்றும் தங்கள் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மீது ராணா தம்பதி புகார் அளித்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரவி ராணா, "அமைதி வழியில் நாங்கள் போராட்டம் அறிவித்தோம். ஆனால், ஆளும் சிவசேனை கட்சியினர் வன்முறை போராட்டம் மூலம் எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இது ஜனநாயக விரோத செயல் ஆகும். அமராவதியில் உள்ள எங்கள் வீட்டின் முன்பும் சிவசேனை தொண்டர்கள் இருப்பதாக அறிகிறோம். அங்கு எங்கள் பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறினார்.
யார் இந்த ராணா தம்பதி?

தென்னிந்திய திரையுலக பிரபல நட்சத்திரங்களான விஜயகாந்த், மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி ஆகியோருடன் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தவர் நவ்னீத் கவுர். சிவசேனை எதிர்ப்பை தீவிரமாகக் கொண்டது முதல் அரசியலில் இவர் ஏற்படுத்திய சமீபத்திய பரபரப்பு வரை என நவ்னீத் ராணா, ரவி ராணா தம்பதி எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்களாக அரசியல் விமர்சகர்கள் கூறுவர்.கடந்த வாரம் ரமலான் பண்டிகையின்போது மசூதிகளில் ஓதப்படும் அறிவிப்புகளுக்கு ஒலிபெருக்கிகளை தொடர்ந்து பயன்படுத்தினால், பொது இடங்களில் ஹனுமான் சாலிசாவை ஓதுவோம் என்று இந்த தம்பதி அறிவித்தபோது மீண்டும் ஊடக வெளிச்சம் இவர்கள் மீது பட்டது.
அத்துடன் நிற்காமல் நவ்னீத், ரவி ராணா தம்பதி, சிவசேனா தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு வெளியே ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வோம் என்று அறிவித்த பிறகு அது சர்ச்சையாக மாறியது.
கட்டுப்பாடற்ற அரசியல் பயணம்
அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த, இந்த தம்பதியினருள் அரசியல் ஆதிக்கம் நிறைந்தவராக அறியப்படுபவர் ரவி ராணா. 43 வயதாகும் இவர், மூன்று முறை சுயேச்சை எம்.எல்.ஏ ஆக பத்னேரா தொகுதியில் இருந்து தேர்வானவர். 2009இல் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்ட போது ரவி ராணாவின் அரசியல் வெற்றி தொடங்கியது. இளைஞர்களிடையே ராணாவுக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக நம்பப்படுகிறது. அவரது போட்டியாளர்கள் அவரை "ஃப்ளெக்ஸ் குமார்" என்று அழைக்கும் அளவுக்கு செல்லும் நிகழ்ச்சிப் பாதையில் வழிநெடுகிலும் ஃப்ளெக்ஸ் பேனர்களை வைப்பது இவரது அடையாளமாக மகாராஷ்டிரா அரசியலில் வருணிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், NAVNEET KAUR
இவரது மனைவி நவ்நீத் ராணா, பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர். 36 வயதாகும் இவர் 2004இல், ஒரு கன்னட திரைப்படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்தார். தமிழில் நடிகர் விஜயகாந்த்துடன் அரசாங்கம், ஜூனியர் என்டிஆர் உடன் யமடோங்கா, மம்முட்டியுடன் லவ் இன் சிங்கப்பூர் போன்ற படங்களில் நடித்தவர். தனக்கு ஏழு மொழிகளில் புலமை உள்ளதாக நவ்னீத் கவுர் கூறுவதுண்டு. பாபா ராம்தேவ் உடனான ஒரு சந்திப்புக்குப் பிறகு அவரது திரை உலக பயணம், அரசியல் பொதுவாழ்க்கை பக்கம் திசை மாறியது. ரவி ராணா ஏற்கெனவே அமராவதியில் 'யோக் ஷிவிர்ஸ்' என்ற பெயரில் நிகழ்ச்சியொன்றை நடத்தியதன் மூலம் பாபா ராம் தேவின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில்தான் நவ்னீத் கவுரையும் ரவி ராணா சந்தித்தார். இந்த ஜோடி பாபா ராம் தேவின் ஆசிர்வாதத்துடன் 2011இல் 3,000 க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ராம்தேவ் நடத்தி வைத்த வெகுஜன திருமண விழாவில் இல்வாழ்க்கையில் இணைய கரம் பிடித்தனர்.

பட மூலாதாரம், RAVI RANA
அரசியல் வாழ்க்கையில் இருவரும் 'சுயேச்சை' ஆக இருக்க விரும்பியதால் கட்சி வரம்புகளின்றி அவர்கள் செயல்பட்டனர். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக ராம்தேவ் திட்டமிட்டு மகாராஷ்டிராவில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவற்றை ரவி ராணா முன்னின்று நடத்தினார். இதேவேளை அவரது மனைவி நவ்னீத் ராணா தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அதே ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், சிவசேனை எம்பி ஆனந்த்ராவ் அட்சுலிடம் அவர் தோல்வியடைந்தார். 2019இல் நவ்னீத் கவுர், சுயேச்சை வேட்பாளராக அமராவதி தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவருக்கு காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் ஆதரவு தெரிவித்தன. அரசியல் பொதுவாழ்வில் சிவசேனையுடன் மோதுவதை தங்களுடைய பலமாக ராணா தம்பதி கருதினர்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது மோச்சி பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று கூறி அவர் சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ் போலி என்று மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்ப்பில் நவ்னீத் கவுரின் எம்.பி தகுதி தொடர்பான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை. அந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












